Monday 31 December 2012

Catholic News in Tamil - 28/12/12

1. 2013ம் ஆண்டில் திருத்தந்தை கலந்து கொள்ளவிருக்கும் முக்கிய நிகழ்வுகள்

2. கர்தினால் கிரேசியஸ் :  இந்தியச் சமூகத்தில் பெண்கள் புறக்கணிக்கப்படுவது பரவலாகக் காணப்படுகின்றது

3. இந்தியாவில் பாலியல் வன்கொடுமைச் சட்டம் மறுபரிசீலனை

4. நேபாளத்தில் கிறிஸ்தவர்கள், இந்துக்கள் மற்றும் புத்தமதத்தினர் சேர்ந்து கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

5. மாஸ்கோ பேராயர் : கடவுள் நம் வாழ்வைப் புதுப்பிக்க அனுமதிக்க வேண்டும்

6. 2012ம் ஆண்டில் ஒரு இலட்சத்து ஐந்தாயிரம் கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்

7. நாற்பதாயிரம் ஐரோப்பிய இளையோர் திருத்தந்தையுடன் செபம்

8. பெண் உறுப்புகள் முடமாக்கப்படுவதை நிறுத்துவதற்கு ஐ.நா.பொது அவை தீர்மானம்

9. சீனாவில் உலகின் அதிவேக இரயில் சேவை ஆரம்பம்


------------------------------------------------------------------------------------------------------

1. 2013ம் ஆண்டில் திருத்தந்தை கலந்து கொள்ளவிருக்கும் முக்கிய நிகழ்வுகள்

டிச.28,2012. பிறக்கவிருக்கும் 2013ம் ஆண்டில் அனைத்துலக இளையோர் தினம் உட்பட பத்து முக்கிய நிகழ்வுகளில் திருத்தந்தை கலந்து கொள்ளவிருக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டு ரியோ டி ஜெனிரோவில் 2013ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இடம்பெறவிருக்கும் அனைத்துலக இளையோர் தினக் கொண்டாட்டங்கள் அவ்வாண்டின் மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்று எனக் கூறும் திருப்பீடம், இந்த இளையோர் தினக் கொண்டாட்டங்களில் ஏறக்குறைய இருபது இலட்சம் இளையோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளது.
நம்பிக்கை குறித்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் புதிய அப்போஸ்தலிக்கத் திருமடல் வருகிற சனவரியில் வெளியிடப்படும் எனவும், இது அவரின் நான்காவது அப்போஸ்தலிக்கத் திருமடலாக அமையும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
மேலும், நம்பிக்கை ஆண்டைக் கொண்டாடும் விதமாக, 2013ம் ஆண்டில் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் எனவும், இதன் ஒரு கட்டமாக, பல்வேறு கத்தோலிக்கப் பொதுநிலை இயக்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்களை, வருகிற மே 18ம் தேதி வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் திருத்தந்தை சந்திப்பார் எனவும் கூறப்பட்டுள்ளது.
வருகிற ஜூன் 2ம் தேதியன்று இடம்பெறும் திருநற்கருணை ஆராதனை திருவழிபாட்டில் திருத்தந்தை கலந்து கொள்வார் என்றும், அச்சமயம் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் இந்தத் திருவழிபாடு இடம்பெறும் என்றும், இத்தகைய நிகழ்வு வரலாற்றில் முதன்முறையாக இடம்பெறவுள்ளது என்றும் சொல்லப்பட்டுள்ளது.
மனித வாழ்வை, தாயின் கருவறை முதல் அது இயல்பான மரணம் அடையும்வரைப் பாதுகாக்கும் நோக்கத்தில், வாழ்வதற்கான உரிமை குறித்த உலக மாநாடு வருகிற ஜூன் மாதம் 15ம் தேதி வத்திக்கானில் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற அக்டோபர் 26, 27 தேதிகளில் அனைத்துலக குடும்ப மாநாடு உரோமையில் இடம்பெறும் என்றும், அன்றாட வாழ்வின் சவால்களைச் சந்திப்பதற்கு விசுவாசம் எந்த அளவுக்கு உதவும் என்பது பற்றிச் சிந்திக்கவும் இம்மாநாட்டில் திருத்தந்தை குடும்பங்களை அழைப்பார் என்றும் திருப்பீடம் கூறியுள்ளது.
2012ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதியன்று தொடங்கிய நம்பிக்கை ஆண்டு 2013ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதியன்று நிறைவடையும்.

2. கர்தினால் கிரேசியஸ் :  இந்தியச் சமூகத்தில் பெண்கள் புறக்கணிக்கப்படுவது பரவலாகக் காணப்படுகின்றது

டிச.28,2012. மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் புதுடெல்லியில் கொடூரக் கும்பல் ஒன்றால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருப்பது, இந்தியாவின் நலமற்ற நிலைக்குப் பயங்கரமான எடுத்துக்காட்டாய் இருக்கின்றது என்று மும்பை கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியஸ் கூறினார்.
இந்தியச் சமுதாயத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள இந்தப் பாலியல் வன்கொடுமை, மனிதர் தங்கள் வாழ்விலிருந்து கடவுளை ஓரங்கட்டியுள்ளனர் என்பதற்கு எடுத்துக்காட்டாயும் இருக்கின்றது என்று ஆசியச் செய்தி நிறுவனத்திடம் கூறினார் கர்தினால் கிரேசியஸ்.
இந்தப் பாலியல் வன்கொடுமை குறித்து கிறிஸ்மஸ் திருப்பலியிலும் வன்மையாய்க் கண்டித்த கர்தினால் கிரேசியஸ், இந்தியச் சமூகத்தில் பெண்கள் புறக்கணிக்கப்படுவது பரவலாகக் காணப்படுவதை இந்நிகழ்வு காட்டுகின்றது என்று கூறினார்.
தங்கள் வாழ்விலிருந்து கடவுளை ஓரங்கட்டுவோர் அமைதியின் எதிரிகள் என்றும், பிறருக்கென வாழ்வது குறித்து நோக்கும்போது கிறிஸ்தவர்கள்கூட தங்கள் இதயங்களைப் அடைத்துக் கொள்கிறார்கள் என்றும், இந்த நம்பிக்கை ஆண்டில் பிறருக்கென நம் இதயங்களைத் திறப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.  
இம்மாதம் 16ம் தேதி, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 23 வயதாகும் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் தற்போது சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வருகிறார்.

3. இந்தியாவில் பாலியல் வன்கொடுமைச் சட்டம் மறுபரிசீலனை

டிச.28,2012. புதுடெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர், கொடூரக் கும்பல் ஒன்றால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியதை முன்னிட்டு இடம்பெற்ற நாடு தழுவிய கடும் போராட்டங்களினால், பாலியல் வன்கொடுமைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்கு மூன்று பேர் அடங்கிய குழுவை உருவாக்கியுள்ளது மத்திய அரசு.
இந்தப் பரிசீலனை குழு வருகிற சனவரியில் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும். இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படி தற்போது இத்தகைய குற்றவாளிகளுக்கு குறைந்தது ஏழாண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.
இந்தியாவில்  பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக 1971ம் ஆண்டில் 2,487 பேர் வழக்குப் பதிவு செய்தனர், அவ்வெண்ணிக்கை 2011ம் ஆண்டில் 24,206 ஆக உயர்ந்துள்ளது என தேசியக் குற்றப்பதிவு அலுவலகம் கூறியுள்ளது.

4. நேபாளத்தில் கிறிஸ்தவர்கள், இந்துக்கள் மற்றும் புத்தமதத்தினர் சேர்ந்து கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

டிச.28,2012. திருமுழுக்கு என்ற திருவருட்சாதனத்தைப் பெற்றுள்ளவர்கள் என்பதாலேயே கிறிஸ்தவர்கள் நேபாளம் முழுவதும் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பரப்புவதற்கு உரிமையையும் கடமையையும் கொண்டுள்ளார்கள் என்று காட்மண்டு ஆயர் அந்தோணி ஷர்மா கூறினார்.
காட்மண்டு விண்ணேற்பு அன்னைப் பேராலயத்தில் கிறிஸ்மஸ் நள்ளிரவுத் திருப்பலியில் மறையுரையாற்றிய ஆயர் ஷர்மா, நேபாளக் கிறிஸ்தவர்கள், கிறிஸ்து இவ்வுலகில் பிறந்ததற்குச் சாட்சிகளாக வாழவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
நேபாள அரசியல் தலைவர்களும் சமயத் தலைவர்களும் இன, வகுப்பு வேறுபாடுகளைக் களைந்து, நாட்டின் நலனுக்காக ஒன்றுசேர்ந்து உழைப்பதற்கு நல்ல வாய்ப்பாக, இந்தக் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவை நோக்குமாறும் பேராயர் கேட்டுக் கொண்டார்.
இக்கிறிஸ்மஸ் பெருவிழாத் திருப்பலியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள், இந்துக்கள் மற்றும் புத்தமதத்தினர் கலந்து கொண்டனர். 
நேபாளம் 2008ம் ஆண்டுமுதல் கடும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் 2006ம் ஆண்டில் முடியாட்சி வீழ்ந்த பின்னர் இவ்வாண்டில் முதன்முறையாக கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் விழாக் கோலத்தில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

5. மாஸ்கோ பேராயர் : கடவுள் நம் வாழ்வைப் புதுப்பிக்க அனுமதிக்க வேண்டும்

டிச.28,2012. நமது வாழ்வில் கடவுள் நுழைவதற்கு அனுமதிப்பதன் மூலம் நாம் ஒரு புதிய தொடக்கத்திற்கு வித்திடுகிறோம் என்று மாஸ்கோ கத்தோலிக்கச் சமுதாயத்திடம் கூறினார் மாஸ்கோ பேராயர் Paolo Pezzi.
வானதூதர் கபிரியேல் அன்னைமரியாவுக்கு மங்களச் செய்தி சொன்னது போல, கடவுளால் எல்லாம் இயலும் என்று கிறிஸ்மஸ் செய்தியில் கூறிய பேராயர் Pezzi, நாம் அவருக்கு விசுவாசமாக இல்லாவிடினும், அவர் நமது சுதந்திரத்தை மதித்து நமக்காகக் காத்திருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.
நூற்றுக்கணக்கான விசுவாசிகள் கலந்து கொண்ட கிறிஸ்மஸ் திருப்பலியில் இவ்வாறு கூறிய மாஸ்கோ பேராயர் Pezzi, கிறிஸ்மஸ் நள்ளிரவின் அமைதியும் மகிழ்ச்சியும் நமது வீடுகளை நிரப்பட்டும் என்றும் தெரிவித்தார்.

6. 2012ம் ஆண்டில் ஒரு இலட்சத்து ஐந்தாயிரம் கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்

டிச.28,2012. 2012ம் ஆண்டில் ஒரு இலட்சத்து ஐந்தாயிரம் கிறிஸ்தவர்கள் தங்களது விசுவாசத்திற்காகக் கொல்லப்பட்டுள்ளனர், அதாவது ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கு ஒருவர் வீதம் கொல்லப்பட்டுள்ளனர் என்று சமய சுதந்திரத்தைக் கண்காணிக்கும் இத்தாலிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்   Massimo Introvigne கூறினார்.
இசுலாமிய அடிப்படைவாதக் குழுக்கள் தீவிரமாகச் செயல்படும் இடங்களில் கிறிஸ்தவர்கள் அதிகமாகக் கொல்லப்படுகின்றனர் என்றுரைத்த Introvigne, இதற்கு எடுத்துக்காட்டாக, நைஜீரியா, பாகிஸ்தான், எகிப்து, மாலி, சொமாலியா போன்ற நாடுகளைக் குறிப்பிட்டுப் பேசினார்.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் போக்கோ ஹாராம் என்ற இசுலாமியத் தீவிர அமைப்பின் வன்முறையால் திருப்பலிக்குக்கூடச் செல்ல முடியாத அளவுக்குக் கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவதையும் அவர் விளக்கினார்.
கம்யூனிச சர்வாதிகாரம் இன்னும் இடம்பெறும் வட கொரியா போன்ற நாடுகளிலும் கிறிஸ்தவர்கள் அதிகமாகத் துன்புறுகின்றனர் என்றும் Introvigne தெரிவித்தார்.
2012ம் ஆண்டில் தங்களது விசுவாசத்திற்காகக் கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டது குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த Introvigne, இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் கந்தமால் பகுதியையும் குறிப்பிட்டார்.

7. நாற்பதாயிரம் ஐரோப்பிய இளையோர் திருத்தந்தையுடன் செபம்

டிச.28,2012. பிரான்ஸ் நாட்டின் டேஜே கிறிஸ்தவ ஒன்றிப்புத் துறவு சபையினர் நடத்தும் ஐரோப்பிய இளையோர் மாநாடு இவ்வெள்ளிக்கிழமையன்று உரோமையில் தொடங்கியுள்ளது.
ஏறக்குறைய நாற்பதாயிரம் இளையோர் கலந்து கொள்ளும் இம்மாநாட்டின் ஒரு நிகழ்வாக, இவ்விளையோர் இச்சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் திருத்தந்தையைச் சந்தித்து அவருடன் சேர்ந்து செபம் செய்வார்கள்.
வருகிற சனவரி 2ம் தேதிவரை நடைபெறவிருக்கும் இந்த 35வது டேஜே இளையோர் மாநாட்டில் கலந்து கொள்ளும் இவ்விளையோருக்கு உரோம் பங்குத்தளங்களும் குடும்பங்களும் வரவேற்பு கொடுத்துள்ளன.
பிரிந்த கிறிஸ்தவ சபையைச் சேர்ந்த அருள்சகோதரர் Roger Schutz என்பவரால் 1940ம் ஆண்டு Taizé கிறிஸ்தவ ஒன்றிப்பு துறவு சபை உருவாக்கப்பட்டது. இதில்  கத்தோலிக்கர் உட்பட பல கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த ஏறக்குறைய நூறு பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

8. பெண் உறுப்புகள் முடமாக்கப்படுவதை நிறுத்துவதற்கு ஐ.நா.பொது அவை தீர்மானம்

டிச.28,2012. பெண் உறுப்புகள் முடமாக்கப்படும் நடவடிக்கையை ஒழிப்பதற்கு அனைத்து நாடுகளுக்கும் ஐ.நா.பொது அவை முதன்முறையாக விடுத்துள்ள அழைப்பு வரலாற்று சிறப்புமிக்கது, இது, உலகில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிக்கப்படுவதை நிறுத்தவதற்கான முக்கியமான முயற்சியாகும் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
பெண் உறுப்புகள் முடமாக்கப்படும் வன்செயல், உலகில் இலட்சக்கணக்கான பெண்கள் மற்றும் சிறுமிகளின் நலவாழ்வுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது மற்றும் இது அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக இருக்கின்றது என்றும் கூறினார் பான் கி மூன்.
பெண் உறுப்புகள் முடமாக்கப்படும் வன்செயலால் உலகில் 14 கோடிப் பெண்களும் சிறுமிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனம் கூறியது.

9. சீனாவில் உலகின் அதிவேக இரயில் சேவை ஆரம்பம்

டிச.28,2012. உலகிலேயே அதிவேக இரயில் சேவை சீனாவில் தொடங்கப்பட்டுள்ளது.
எட்டு மணி நேரத்தில் 2,298 கி.மீ. தூரம் செல்லும் இந்த இரயில் சேவையினால் அந்நாட்டின் பொருளாதாரம் உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சீனாவின் தென் பகுதியில் உள்ள குவாங்ஸு வர்த்தக நகரத்திற்கும் பீஜிங்கிக்கும் இடையேயுள்ள 2,298 கி.மீ. தூரத்தை 20 மணி நேரம் இரயிலில் பயணம் செய்த மக்கள், தற்போது 8 மணிநேரத்தில் பயணம் செய்வதற்கு இந்த அதிவேக இரயில் சேவை உதவியுள்ளது.
இந்த இரயில் 2,298 கி.மீ தூரத்தை 300 கி.மீ. வேகத்தில் 8 மணி நேரத்தில் சென்றடையும். மேலும், வழியில் 20 முக்கிய இரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

No comments:

Post a Comment