1. அனைத்துக் குழந்தைகளும் தகுதியான கல்வியறிவு பெற ஒவ்வோர் அரசும் உழைக்க வேண்டும் - திருத்தந்தை
2. திருத்தந்தையர்கள் உகாண்டா நாட்டின் மீது அதிகப் பாசம் கொண்டுள்ளனர் - கர்தினால் Filoni
3. அமெரிக்கத் திருஅவையின் அனைத்துலக மாநாட்டின் இறுதித் திருப்பலியில் கர்தினால் Marc Ouellet வழங்கிய மறையுரை
4. ஈராக்கில் கர்தினால் Leonardo Sandri மேற்கொண்டுள்ள மேய்ப்புப் பணி பயணம்
5. பழங்குடி மக்கள் எழுப்பும் குரல்கள், பிலிப்பின்ஸ் நாட்டின் மனசாட்சியைத் தட்டி எழுப்பும் குரல்கள் - பிலிப்பின்ஸ் நாட்டு கர்தினால்
6. காப்டிக் ரீதி கத்தோலிக்கர்களைத் தாக்கும்படி மக்களைத் தூண்டிவிடுவது, எகிப்தில் நடைபெறும் போராட்டங்களைத் திசைதிருப்பும் ஒரு முயற்சி - ஆயர் Hanna
7. நேபாளத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு, 2012ம் ஆண்டுக்கான CNN நாயகர் விருது
8. மனித வர்த்தகத்தில் 27 விழுக்காட்டினர் குழந்தைகள் - ஐ.நா. வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்
9. உலக அமைதி வேண்டி, நீலகிரி மாவட்டத்தின் 600 கிராமங்களில் தீபப்பயணம்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. அனைத்துக் குழந்தைகளும் தகுதியான கல்வியறிவு பெற ஒவ்வோர் அரசும் உழைக்க வேண்டும் - திருத்தந்தை
டிச.13,2012.
இன்றைய உலகில் நாம் சந்திக்கும் பல பிரச்சனைகளில் மிகவும் முக்கியமான
ஒன்று நமது கல்வி நிலை என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
Guinea குடியரசு, Saint Vincent மற்றும் Grenadines, Niger, Zambia, தாய்லாந்து, இலங்கை
ஆகிய ஆறு நாடுகளின் சார்பில் திருப்பீடத் தூதர்களாக புதிதாக
நியமிக்கப்பட்டவர்களை இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்தத்
திருத்தந்தை, வளரும் தலைமுறையினருக்கு குடும்பம், பள்ளி ஆகிய அமைப்புக்கள் புகட்டவேண்டிய கல்வியைக் குறித்துப் பேசினார்.
குடும்பமும், பள்ளியும் தங்கள் கடமைகளைச் செய்யத் தவறும்போது, வளரும்
குழந்தைகள் அங்கு பெறமுடியாத அறிவை வேற்று இடங்களில் தேடிச் செல்வது
வருங்காலத்திற்கு நல்வழிகளைக் காட்டாது என்று திருத்தந்தை வலியுறுத்திக்
கூறினார்.
'மனிதர்களின் உண்மையான மாண்பு அவர்கள் பழகும் விதம், அவர்கள் பின்பற்றும் நன்னெறி விழுமியங்கள் இவற்றை வைத்தே கணிக்கப்படும்' என்று முன்னாள் திருத்தந்தை 13ம் லியோ கூறிய சொற்களைத் தன் உரையில் சுட்டிக் காட்டியத் திருத்தந்தை, நல்ல பழக்கங்களை வளர்க்கும் ஒரு சிறந்த வழி கல்வியே என்பதை எடுத்துரைத்தார்.
அனைத்துக் குழந்தைகளும் தகுதியான கல்வியறிவு பெறுவதற்கு ஒவ்வோர் அரசும் தீவிரமாக உழைக்க வேண்டும் என்ற அழைப்பை விடுத்தத் திருத்தந்தை, அதே நேரம், அரசுப் பொறுப்பில் இருப்பவர்களும் நன்னெறி வழிகளில் நடப்பது, இளையோருக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் என்றும் எடுத்துரைத்தார்.
Guinea குடியரசு, Saint Vincent மற்றும் Grenadines, Niger, Zambia, தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளின் சார்பில் பணியாற்றும் தூதர்கள், வத்திக்கானில் தாங்காமல், வேற்று நாடுகளில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.
2. திருத்தந்தையர்கள் உகாண்டா நாட்டின் மீது அதிகப் பாசம் கொண்டுள்ளனர் - கர்தினால் Filoni
டிச.13,2012. ‘கடவுள் வருகிறார், இதனை உலகுக்குச் சொல்லுங்கள்’
என்ற மையக் கருத்துடன் நாம் கொண்டாடிவரும் திருவருகைக் காலம் நமக்கு
நம்பிக்கை அளிக்கிறது என்று திருப்பீடத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஆப்ரிக்காவின் உகாண்டா நாட்டில் உள்ள Arua மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள சென்றுள்ள திருப்பீட மறைபரப்புப் பேராயத்தின் தலைவர் கர்தினால் Fernando Filoni, இவ்வியாழனன்று, நூற்றாண்டு விழா திருப்பலியில் மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.
திருத்தந்தையர்கள் ஆறாம் பவுல், அருளாளர் இரண்டாம் ஜான்பால், ஆகியோர் அதிக அன்பு காட்டிய உகாண்டா நாட்டின் மீது, தற்போதையத் திருத்தந்தையும் அதிகப் பாசம் கொண்டுள்ளார் என்பதைத் தன் மறையுரையில் சுட்டிக் காட்டினார் கர்தினால் Filoni.
கிறிஸ்துவின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் நாம், அவர் உலகிற்குக் கொணர்ந்த அன்பு, ஒப்புரவு, நீதி, அமைதி
என்ற அனைத்து அம்சங்களையும் நம் ஒவ்வொருவர் வாழ்விலும் செயல்படுத்துவதே
இவ்விழாவுக்கு நாம் செய்யக்கூடிய ஒரு சிறந்த தயாரிப்பு என்று கர்தினால் Filoni எடுத்துரைத்தார்.
3. அமெரிக்கத் திருஅவையின் அனைத்துலக மாநாட்டின் இறுதித் திருப்பலியில் கர்தினால் Marc Ouellet வழங்கிய மறையுரை
டிச.13,2012. வட மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களில் 500 ஆண்டுகளுக்கு முன் நாம் பெற்ற விசுவாசத்திற்கு 'ஆம்' என்று விடை பகர்ந்ததோடு, அதனைப் பிறருக்கும் பகிர்ந்தளித்து வந்துள்ளோம் என்பது பெருமைக்குரிய வரலாறு என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
டிசம்பர் 9, இஞ்ஞாயிறு
முதல் இப்புதன் முடிய வத்திக்கானில் நடைபெற்ற அமெரிக்கத் திருஅவையின்
அனைத்துலக மாநாட்டின் இறுதித் திருப்பலியை நிறைவேற்றி மறையுரை வழங்கிய, திருப்பீட ஆயர்கள் பேராயத்தின் தலைவர் கர்தினால் Marc Ouellet இவ்வாறு கூறினார்.
வானத்தூதர் கபிரியேல் வழியாக நற்செய்தியைப் பெற்ற அன்னை மரியா, உடனே விரைந்து சென்று எலிசபெத்தைச் சந்தித்த நிகழ்வைத் தன் மறையுரையில் சுட்டிக் காட்டிப் பேசிய கர்தினால் Ouellet,
அமெரிக்காவின் பல நாடுகளிலும் நற்செய்தியைப் பெற்ற கிறிஸ்தவர்கள் பலர்
மரியாவைப் போல் நற்செய்தியைப் பரப்பும் கருவிகளாக வாழ்ந்தனர் என்று
கூறினார்.
17ம்
நூற்றாண்டில் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்ட லீமா ரோஸ் முதல் இவ்வாண்டு
அக்டோபர் மாதம் புனிதராக உயர்த்தப்பட்ட கத்தேரி தெக்கக்விதா வரை அனைத்துப்
புனிதர்களும் நற்செய்தியின் பாதையில் நம்மை வழிநடத்தும் ஒளிவிளக்குகள்
என்று இலத்தீன் அமெரிக்கத் திருப்பீட அவையின் தலைவராகவும் பணியாற்றும்
கர்தினால் Ouellet எடுத்துரைத்தார்.
சுயநலம், ஏழைகளைப் புறக்கணித்தல், நகரங்களில் வளரும் வன்முறைகள், புலம்பெயர்தல், போதைப்
பொருள் வர்த்தகம் மற்றும் பயன்பாடு என்ற பல்வேறு பிரச்சனைகளால்
பாதிக்கப்பட்டிருக்கும் அமெரிக்க நாடுகள் குவாதலுபே அன்னைமரியாவின்
பரிந்துரையால் இப்பிரச்சனைகளிலிருந்து மீள்வதற்கு செபங்களை எழுப்புமாறு
வேண்டுகோள் விடுத்தார் கர்தினால் Ouellet.
4. ஈராக்கில் கர்தினால் Leonardo Sandri மேற்கொண்டுள்ள மேய்ப்புப் பணி பயணம்
டிச.13,2012. கீழைரீதி திருஅவைத் திருப்பீடப் பேராயத்தின் தலைவராகப் பணியாற்றும் கர்தினால் Leonardo Sandri, இவ்வியாழன் முதல் டிசம்பர் 17, வருகிற திங்கள் முடிய ஈராக் நாட்டில் மேய்ப்புப் பணி பயணம் செய்து வருகிறார்.
2010ம்
ஆண்டு அக்டோபர் 31ம் தேதி பாக்தாத் நகரில் இருந்த மீட்பின் அன்னை மரியா
சிரியன் ரீதி பேராலயம் இஸ்லாமிய அடிப்படைவாத வன்முறையாளர்களால்
தாக்கப்பட்டது. இத்தாக்குதலில் 58 பேர் உயிரிழந்தனர், மேலும் 100க்கும் அதிகமானோர் பிணையக் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டனர்.
வன்முறைத் தாக்குதல்களுக்கு உள்ளான இவ்வாலயம் புதுப்பிக்கப்பட்டு, டிசம்பர் 14 இவ்வெள்ளியன்று மீண்டும் திறக்கப்படுகிறது. இந்நிகழ்விலும், இதைத் தொடர்ந்து, சனிக்கிழமையன்று இப்பேராலயம் அர்ச்சிக்கப்படும் திருநிகழ்விலும் கலந்து கொள்ள கர்தினால் Sandri ஈராக் சென்றுள்ளார்.
இந்நிகழ்வுகளைத் தொடர்ந்து, டிசம்பர் 16, இஞ்ஞாயிறன்று கல்தேய ரீதி கத்தோலிக்கர்கள் கொண்டாடும் திருமுழுக்கு யோவான் பிறப்பு விழாவன்று, கிர்குக் நகரில் உள்ள கல்தேய ரீதி கத்தோலிக்கப் பேராலயத்தில் நிகழும் திருச்சடங்குகளிலும் கர்தினால் Sandri கலந்து கொள்வார்.
5. பழங்குடி மக்கள் எழுப்பும் குரல்கள், பிலிப்பின்ஸ் நாட்டின் மனசாட்சியைத் தட்டி எழுப்பும் குரல்கள் - பிலிப்பின்ஸ் நாட்டு கர்தினால்
டிச.13,2012.
மனித குலத்திற்குத் தீமை விளைவிக்கும் வகையில் நாம் மேற்கொள்ளும்
முன்னேற்ற முயற்சிகள் உண்மையான முன்னேற்றமாக அமையாது என்று பிலிப்பின்ஸ்
நாட்டு கர்தினால் Luis Antonio Tagle கூறினார்.
பிலிப்பின்ஸ் நாட்டில் வாழும் Casiguran என்ற
பழங்குடியைச் சார்ந்த மீனவர்களும் ஏனையத் தொழிலாளிகளும் அப்பகுதியில்
பிலிப்பின்ஸ் அரசுத் தலைவர் அனுமதியுடன் மேற்கொள்ளப்படும் முன்னேற்றத்
திட்டங்களை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.
இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக இம்மக்களின் பிரதிநிதிகள் 120 பேர் பதினைந்து நாட்கள் நடைபயணம் மேற்கொண்டு, மணிலா பெருநகரை அண்மையில் வந்து சேர்ந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சந்தித்த மணிலாப் பேராயர் கர்தினால் Tagle, பழங்குடி மக்கள் எழுப்பும் குரல்கள் பிலிப்பின்ஸ் நாட்டின் மனசாட்சியைத் தட்டி எழுப்பும் குரல்கள் என்று கூறினார்.
அமைதி வழியில் போராடும் இம்மக்களுக்குத் தன்னால் இயன்ற அளவு முழு உதவிகளையும் செய்வதாக வாக்களித்த கர்தினால் Tagle, இம்மக்களின் விண்ணப்பங்களை அரசுத் தலைவர் கேட்க மறுத்தால், நாட்டில் உள்ள அனைவரும் இவர்கள் குரலைக் கேட்கும் வழிகளைப் பின்பற்ற வேண்டும் என்று எடுத்துரைத்தார்.
Casiguran பகுதியில் வாழும் 3000 குடும்பங்களின் பாரம்பரியத் தொழிலுக்கும், அவர்கள் வாழும் நிலங்களுக்கும் ஆபத்து விளைவிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் அரசின் இப்புதிய முயற்சியை, கத்தோலிக்க அமைப்புக்களும், ஏனைய மனித உரிமை அமைப்புக்களும் எதிர்த்து வருகின்றன.
6. காப்டிக் ரீதி கத்தோலிக்கர்களைத் தாக்கும்படி மக்களைத் தூண்டிவிடுவது, எகிப்தில் நடைபெறும் போராட்டங்களைத் திசைதிருப்பும் ஒரு முயற்சி - ஆயர் Hanna
டிச.13,2012.
எகிப்தில் நடைபெறும் போராட்டங்களைத் திசைதிருப்பும் ஒரு முயற்சியாக
காப்டிக் ரீதி கத்தோலிக்கர்களைத் தாக்கும்படி மக்கள்
தூண்டிவிடப்படுகிறார்கள் என்று அலேக்சாந்திரியாவின் துணை ஆயர் Botros Fahim Awad Hanna கூறினார்.
நாட்டில்
நடைபெறும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளோரில் 60 விழுக்காட்டுக்கும்
அதிகமானோர் காப்டிக் ரீதி கத்தோலிக்கர்கள் என்ற தவறான செய்தியை, அரசுத் தலைவர் Morsiக்கு ஆதரவு தெரிவிக்கும் Muslim Brotherhoodன் தலைவர் Mahmoud Beltagui வெளியிட்டு, வன்முறையைத் தூண்டி வருகிறார் என்று ஆயர் Hanna, Fides செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
எகிப்தில் பொறுப்பேற்றிருக்கும் Morsi தலைமையிலான அரசு, இஸ்லாமிய
அடிப்படைவாதக் கருத்துக்களை உள்ளடக்கிய சட்டங்களை நாட்டில் கொணர
முயல்வதைத் தடுக்கும் வகையில் தற்போதைய போராட்டங்கள் நடைபெறுகின்றன
என்பதைச் சுட்டிக் காட்டிய ஆயர் Hanna, இக்கசப்பான உண்மையை மறைக்க, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் ஒரு முயற்சியாக கத்தோலிக்கர்களை பகடைக் காய்களாக்குகின்றனர் என்று கூறினார்.
7. நேபாளத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு, 2012ம் ஆண்டுக்கான CNN நாயகர் விருது
டிச.13,2012. நேபாளத்தைச் சேர்ந்த Pushpa Basnet, என்ற 28 வயது இளம்பெண்ணுக்கு, 2012ம் ஆண்டுக்கான CNN நாயகர் (CNN Hero) என்ற புகழ்பெற்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் சிறைப்பட்டிருக்கும் பெண்களுடன் அவர்களின் குழந்தைகளும் சிறைகளில் துன்புறுவதைக் கண்ட Pushpa Basnet, அக்குழந்தைகளைப் பாதுகாக்க, Butterfly Home அதாவது, வண்ணத்துப் பூச்சி இல்லம் என்ற ஓர் இல்லத்தை 2005ம் ஆண்டு உருவாக்கினார்.
நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் இயேசு சபையினர் நடத்திவரும் புனித Xavier கல்லூரியில் சமூகப் பணியியல் பயின்ற Pushpa Basnet, கிறிஸ்தவச் சூழலில் தன் கல்வி அமைந்ததால், சமுதாயப் பிரச்சனைகளைக் காணும் பக்குவமும் தான் பெற்றதாகக் கூறியுள்ளார்.
அரசின் உதவிகள் ஏதுமின்றி, Basnet துவங்கிய வண்ணத்துப் பூச்சி இல்லத்தில் குழந்தைகளுக்கு நல வசதிகளும், கல்வியும் வழங்கப்படுகின்றன.
உலகின் பல நாடுகளிலும் சமூகப் பணிகளில் ஈடுபட்டுள்ள 10000க்கும் அதிகமானோர் தெரிவு செய்யப்பட்டு, அவர்களில் Pushpa Basnetக்கு CNN நாயகர் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதுடன் வழங்கப்படும் 250000 டாலர்கள், அதாவது, 11 கோடியே, 25 இலட்சம் ரூபாய் வண்ணத்துப் பூச்சி இல்லத்திற்குப் பயன்படுத்தப்படும் என்று Pushpa Basnet கூறியுள்ளார்.
8. மனித வர்த்தகத்தில் 27 விழுக்காட்டினர் குழந்தைகள் - ஐ.நா. வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்
டிச.13,2012.
உலகில் நடைபெறும் மனித வர்த்தகத்தில் 27 விழுக்காட்டினர் குழந்தைகள் என்ற
அதிர்ச்சித் தகவலை ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய அறிக்கையொன்று கூறுகின்றது.
2007ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு முடிய எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, உலக மனித வர்த்தகத்தில் 27 விழுக்காட்டினர் குழந்தைகள் என்றும், 2003ம்
ஆண்டு முதல் 2006ம் ஆண்டு முடிய எடுக்கப்பட்டக் கணக்கைக் காட்டிலும் இது
ஏழு விழுக்காடு கூடுதல் என்றும் இவ்வறிக்கை கூறுகிறது.
இவ்வறிக்கையை இப்புதனன்று வெளியிட்ட ஐ.நா. உயர் அதிகாரி Yury Fedotov, இக்கொடூரமான சமுதாயக் குற்றத்தை ஒழிக்க அனைத்து அரசுகளும் மிகத் தீவிரமாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
132 நாடுகளில் எடுக்கப்பட்ட இக்கணக்கெடுப்பின்படி, வர்த்தகம் செய்யப்படும் குழந்தைகளில் 20 விழுக்காடு பெண் குழந்தைகள் என்றும், ஆண் குழந்தைகள் 10 விழுக்காட்டு அளவுக்கு வர்த்தகம் செய்யப்படுகின்றனர் என்றும் தெரிகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், மனித வர்த்தகத்திற்கு எதிராக, சட்டங்கள் இயற்றுவதில் அதிக நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன என்றாலும், இக்குற்றங்களைச்
செய்வோர் தண்டனைகள் பெறாமல் போவது இக்குற்றத்தை இன்னும் அதிகமாய்
வளர்த்துள்ளது என்று ஐ.நா. அறிக்கை கருத்து தெரிவித்துள்ளது.
9. உலக அமைதி வேண்டி, நீலகிரி மாவட்டத்தின் 600 கிராமங்களில் தீபப்பயணம்
டிச.13,2012. உலக அமைதி வேண்டி, ஊட்டியில் அனைத்து மதப்பிரதிநிதிகள் கலந்துகொண்டு, பல்லாயிரம் விளக்குகளை ஏற்றி, மௌனப் பிரார்த்தனை நடத்தினர்.
இப்புதனன்று ஊட்டியில் இடம்பெற்ற அமைதி தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய ஊட்டி இராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுகாத்மானந்தா, ""அன்பு மற்றும் அமைதியை மறந்து மேற்கொள்ளப்படும் செயல்களால், உண்மையான வெற்றியைப் பெற முடியாது,'' என்று கூறினார்.
12-12-12, இப்புதனன்று நண்பகல் 12 மணி, 12 நிமிடம், 12 நொடிக்கு, உலக அமைதியை வலியுறுத்தி, சங்கொலி எழுப்பப்பட்டதுடன், நீலகிரி மாவட்டத்தில் உள்ள, 600 கிராமங்களில், உலக அமைதியை வலியுறுத்தி தீபப்பயணம் ஒன்றும் இடம்பெற்றது.
No comments:
Post a Comment