An ethnic Tamil. A Roman Catholic Priest of the Diocese of Kuzhithurai, Tamil Nadu, India. Promotes creative and alternative ministries; laity participation and progressive thinking in the Church. Believes in ecumenism, inter-faith and inter-religious dialogue. Rooted in Catholic orthodoxy and orthopraxis. Concerned in Eco-spirituality, Minimalism, and lives by the Benevolence of God.
Friday, 31 August 2012
robert john kennedy: Catholic News in Tamil - 31/08/12
robert john kennedy: Catholic News in Tamil - 31/08/12: 1.முதுபெரும் தலைவர் Twal : திருத்தந்தையின் லெபனன் திருப்பயணம் , அப்பகுதி முழுவதற்குமானத் திருப்பயணம் 2. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அ...
Catholic News in Tamil - 31/08/12
1.முதுபெரும் தலைவர் Twal : திருத்தந்தையின் லெபனன் திருப்பயணம், அப்பகுதி முழுவதற்குமானத் திருப்பயணம்
2. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் முன்னாள் மாணவர்கள் கிறிஸ்தவ ஒன்றிப்பு குறித்து கலந்துரையாடி வருகின்றனர்
3. எத்தியோப்பியத் தலத்திருஅவை பிரதமர் Zenawiயை நினைவுகூருகின்றது
4. “சீனாவின் புனித ஜெரோமுக்கு” வருகிற செப்டம்பர் 29ம் தேதி அருளாளர் பட்டம்
5. கட்டாயக் காணாமல்போதல் நிறுத்தப்படுவதற்கு ஐ.நா. வல்லுனர்கள் கோரிக்கை
6. அனைத்துலக காணாமல்போனோர் தினத்தையொட்டி வவுனியாவில் போராட்டம்
7. உணவுப் பொருட்களின் விலை கடந்த ஜூலையில் 10 விழுக்காடு அதிகரிப்பு : உலக வங்கி அதிர்ச்சித் தகவல்
8. இலங்கை அகதிகளை பசிபிக் தீவுகளுக்கு மாற்றும் திட்டம் அடுத்த மாதம் அமல் - ஆஸ்திரேலியா
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1.முதுபெரும் தலைவர் Twal : திருத்தந்தையின் லெபனன் திருப்பயணம், அப்பகுதி முழுவதற்குமானத் திருப்பயணம்
ஆக.31,2012. செப்டம்பர் 14 முதல் 16 வரை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் லெபனன் நாட்டுக்கு மேற்கொள்ளும் திருப்பயணம், அந்நாட்டுக்கு மட்டுமல்லாமல், அப்பகுதி முழுவதற்கும் மேற்கொள்ளும் திருப்பயணமாக அமைகின்றது என எருசலேம் இலத்தீன்ரீதி முதுபெரும் தலைவர் Fouad Twal கூறினார்.
திருத்தந்தையின் லெபனன் திருப்பயணம் குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த முதுபெரும் தலைவர் Twal, 2010ம்
ஆண்டில் வத்திக்கானில் நடைபெற்ற மத்திய கிழக்கு நாடுகள் பற்றிய சிறப்பு
ஆயர் மாமன்றத்தின் தீர்மானத்தொகுப்பை வெளியிடுவதாக இப்பயணத்தின் ஒரு பகுதி
அமையும் என்று தெரிவித்தார்.
மத்திய
கிழக்கு நாடுகளின் திருஅவைத் தலைவர்கள் மற்றும் கிறிஸ்தவச் சமூகங்களின்
தலைவர்களிடம் இத்தீர்மானத்தொகுப்பு ஏடுகளைத் திருத்தந்தை
இத்திருப்பயணத்தில் வழங்குவார் என்றும் அவர் கூறினார்.
யூதர்களுடன் உரையாடல் நடத்துவதற்கு நன்மனம் கொண்ட மனிதர்கள் இருக்கின்றபோதிலும், யூதர்களுடனான உரையாடலில் அவ்வளவாக முன்னேற்றம் காணப்டவில்லையெனவும் முதுபெரும் தலைவர் Twal கூறினார்.
தற்போது சிரியாவில் இடம்பெற்றுவரும் வன்முறை குறித்த கவலையையும் எருசலேம் இலத்தீன்ரீதி முதுபெரும் தலைவர் வெளியிட்டார்.
2. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் முன்னாள் மாணவர்கள் கிறிஸ்தவ ஒன்றிப்பு குறித்து கலந்துரையாடி வருகின்றனர்
ஆக.31,2012. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் முன்னாள் மாணவர்கள் அவரோடு சேர்ந்து கத்தோலிக்கத் திருஅவை, பிற கிறிஸ்தவ சபைகளுடன் கொண்டிருக்கும் உறவுகள் குறித்து கலந்துரையாடி வருகின்றனர் என்று வியன்னா கர்தினால் Christoph Schonborn கூறினார்.
முன்னாள் பேராசிரியர் ஜோசப் இராட்சிங்கரின் முன்னாள் முனைவர் பட்ட மாணவராகிய கர்தினால் Schonborn வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் முன்னாள் மாணவர்கள் அவரோடு சேர்ந்து நடத்திவரும் மூன்று நாள் கூட்டத்தில் கத்தோலிக்கத் திருஅவை, ஆங்லிக்கன் மற்றும் லூத்தரன் கிறிஸ்தவ சபைகளுடன் கொண்டிருக்கும் உறவுகள் குறித்து கலந்துரையாடி வருகின்றனர் என கர்தினால் Schonborn கூறினார்.
ஆங்லிக்கன்
மற்றும் லூத்தரன் கிறிஸ்தவ சபைகள் தங்களது 500வது ஆண்டு நிறைவை 2017ம்
ஆண்டில் சிறப்பிக்கவிருப்பதை முன்னிட்டு திருத்தந்தையுடன் இடம்பெறும்
இக்கூட்டத்தில் இச்சபைகளுடன் கத்தோலிக்கத் திருஅவை கொண்டுள்ள உறவு
குறித்துப் பேசப்படுவதாகவும் கர்தினால் Schonborn கூறினார்.
3. எத்தியோப்பியத் தலத்திருஅவை பிரதமர் Zenawiயை நினைவுகூருகின்றது
ஆக.31,2012. எத்தியோப்பியாவில் இம்மாதம் 20ம் தேதி இறந்த அந்நாட்டுப் பிரதமர் Meles Zenawi அந்நாட்டை நல்லதொரு மாற்றத்திற்குக் கொண்டு சென்றார் என்று தலைநகர் Addis Ababa பேராயர் Berhaneyesus Demerew Souraphiel கூறினார்.
எத்தியோப்பியாவின் நீண்டகாலப் பிரதமர் Zenawiன்
உடல் வருகிற ஞாயிறன்று அனைத்து அரசு மரியாதையுடன் அடக்கம்
செய்யப்படவிருப்பதையொட்டி வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த பேராயர் Berhaneyesus இவ்வாறு கூறினார்.
வறட்சி, பஞ்சம், பட்டினி, உள்நாட்டுப் போர், கலவரங்கள் போன்ற பிம்பங்களைப் பராம்பரியமாகக் கொண்டிருந்த எத்தியோப்பியாவின் அந்தப் பிம்பங்களை மாற்றுவதற்கு மறைந்த பிரதமர் Zenawi மிகுந்த முயற்சி செய்தார் எனவும் பேராயர் Berhaneyesus கூறினார்.
இவர் தனது வாழ்வில் முதல் கட்டமாக, அந்நாட்டின் சர்வாதிகாரி Mengistu Hailemariam ஆட்சிக்கு எதிராகப் போராடினார், இரண்டாவதாக நாட்டில் ஏழ்மையை ஒழிக்கப் போராடினார் என்றும் பேராயர் தெரிவித்தார்.
1991ம் ஆண்டில் அரசியலுக்கும் 1994ம் ஆண்டில் பிரதமர் பதவிக்கும் வந்த Meles Zenawi, ஆப்ரிக்காவின்
கொம்பு எனப்படும் பகுதியின் அரசியலில் முன்னணி வகிப்பவராக
நோக்கப்படுகிறார். இவரது அடக்கச்சடங்கில் பல ஆப்ரிக்கத் தலைவர்கள் கலந்து
கொள்ளவிருக்கின்றனர்.
எத்தியோப்பியாவின்
80 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றில் இப்போதுதான் முதல்முறையாக அரசு
மரியாதையுடன் ஓர் அடக்கச்சடங்கு நடைபெறவிருக்கின்றது.
Zenaw, நீண்டகாலம் நோயால் துன்புற்று இம்மாதம் 20ம் தேதி காலமானார்.
4. “சீனாவின் புனித ஜெரோமுக்கு” வருகிற செப்டம்பர் 29ம் தேதி அருளாளர் பட்டம்
ஆக.31,2012. ”சீனாவின் புனித ஜெரோம்” என அழைக்கப்படும் பிரான்சிஸ்கன் சபை அருள்தந்தை இறையடியார் Gabriele M. Allegra, வருகிற செப்டம்பர் 29ம் தேதி அருளாளர் நிலைக்கு உயர்த்தப்படுவார் என பிரான்சிஸ்கன் சபை தலைமையகம் அறிவித்துள்ளது.
புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்குப் பொறுப்பான திருப்பீட பேராயத்தின் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ, இறையடியார் Allegraவை
அருளாளர் நிலைக்கு உயர்த்தும் திருப்பலியை நிகழ்த்துவார் என்று
பிரான்சிஸ்கன் தலைமையகம் கூறியதாக ஆசியச் செய்தி நிறுவனம் அறிவித்தது.
சீனாவிலும் ஹாங்காங்கிலும் மறைப்பணியாளராகப் பணியாற்றிய இறையடியார் Allegra, விவிலியத்தை சீன மொழியில் மொழிபெயர்த்ததில் புகழ்பெற்று விளங்குகிறார்.
1907ம் ஆண்டு இத்தாலியின் Catania மாநிலத்தில் St. Giovanni La Punta என்ற ஊரில் பிறந்த Gabriele M. Allegra, 1930ம்
ஆண்டு பிரான்சிஸ்கன் சபையில் குருவாகி அதற்கு அடுத்த ஆண்டில் சீனா
சென்றார். சீன மொழியில் விவிலியத்தை மொழி பெயர்க்க வேண்டுமென்பதே அவரின்
முக்கிய நோக்கமாக இருந்தது. ஷங்கையில் சீன மொழியைக் கற்ற பின்னர் 1944ம்
ஆண்டில் சிலருடன் சேர்ந்து விவிலியத்தின் பழைய ஏற்பாட்டை மொழி பெயர்த்தார்.
பின்னர் சீனாவில் ஏற்பட்ட கிளர்ச்சியால் 1949ம் ஆண்டில் ஹாங்காங்
சென்றார். 1968ம் ஆண்டில் சீன மொழியில் முழு விவிலியத்தையும் மொழி
பெயர்த்து வெளியிட்டார். 1971ம் ஆண்டில் சீன மொழியில் விவிலிய அகராதியை
வெளியிட்டார். 1976ம் ஆண்டில் ஹாங்காங்கில் உயிர் துறந்தார்.
பிறரன்பு மற்றும் மெய்ஞானத்தின் மாபெரும் மனிதர் என அனைவராலும் போற்றப்படுகிறார் அருள்தந்தை Gabriele M. Allegra. இவர் 1994ம் ஆண்டில் இறையடியார் என அறிவிக்கப்பட்டார்.
5. கட்டாயக் காணாமல்போதல் நிறுத்தப்படுவதற்கு ஐ.நா. வல்லுனர்கள் கோரிக்கை
ஆக.31,2012. ஒரு நாட்டில் குடிமக்கள் காணாமல்போவது, கடுங்கொடிய
குற்றமாக நோக்கப்படுவது மட்டுமின்றி மனித சமுதாயத்தின் மூல ஆதாரத்தையே
புறக்கணிக்கும் ஒரு செயலாகக் கருதப்படும் என்று ஐ.நா. வல்லுனர்கள் குழு
ஒன்று எச்சரித்துள்ளது.
இவ்வியாழனன்று 2வது அனைத்துலக காணாமல்போனோர் தினம்(ஆகஸ்ட்30) கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி அறிக்கை வெளியிட்ட ஐ.நா. வல்லுனர்கள் குழு, நாடுகளில் மக்கள் கட்டாயமாகக் காணாமல்போவது ஒரு சமுதாயத்தின் ஆழமான விழுமியங்களுக்கு முரணானது என்றும் கூறியுள்ளது.
பயங்கரவாதத்தை அல்லது திட்டமிட்ட குற்றக்கும்பல்களை ஒடுக்குவதற்கு எதிரான நடவடிக்கைக்கும், சனநாயகம், பேச்சு சுதந்திரம், சமய
சுதந்திரம் போன்ற நியாயமான உரிமைப் போராட்டங்களை அடக்குவதற்கும் இத்தகைய
நடவடிக்கைகள் பயன்படுத்தப்படுகின்றன என்று நியாயம் சொல்வது
ஏற்றுக்கொள்ளப்படவும் சகித்துக்கொள்ளப்படவும் முடியாதது என்றும் அவ்வல்லுனர்கள் குழுவின் அறிக்கை கூறுகின்றது.
கட்டாயக் காணாமல்போதல் நடவடிக்கையிலிருந்து மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஐ.நா.பொது அவை அறிக்கை வெளியிட்ட 20வது ஆண்டு, இந்த 2012ம் ஆண்டில் நினைவுகூரப்படுகின்றது.
6. அனைத்துலக காணாமல்போனோர் தினத்தையொட்டி வவுனியாவில் போராட்டம்
ஆக.31,2012. அனைத்துலக காணாமல்போனோர் தினத்தையொட்டி இவ்வியாழனன்று இலங்கையிலும் பிலிப்பீன்சிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
காணாமல்போனவர்கள் தொடர்பாக, ஐ.நா.வின்
நடவடிக்கைக் குழுவின் மேற்பார்வையில் சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட
வேண்டும் என்று வவுனியாவில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை
விடுக்கப்பட்டது.
நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட இந்தப் போராட்டத்தில், காணாமல்போயுள்ள தங்களது கணவர்களும். பிள்ளைகளும் விடுதலை செய்யப்பட வேண்டும், அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பது தெரிவிக்கப்பட வேண்டும் என்று பெண்கள் மிகுந்த வேதனையுடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
7. உணவுப் பொருட்களின் விலை கடந்த ஜூலையில் 10 விழுக்காடு அதிகரிப்பு : உலக வங்கி அதிர்ச்சித் தகவல்
ஆக.31,2012. உலகம் முழுவதும் உணவுப் பொருட்களின் விலை கடந்த ஜூலையில் 10 விழுக்காடு உயர்ந்துள்ளது எனவும், இது ஏழைநாடுகளில் வாழ்வாதாரம் குறித்த பயத்தை அதிகரித்துள்ளது எனவும் உலக வங்கி எச்சரித்துள்ளது.
அமெரிக்க ஐக்கிய நாட்டு வெப்பக்காற்றும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள வறட்சியும் இந்த விலைவாசி உயர்வுக்குக் காரணங்களாகச் சுட்டிக்காட்டிய உலக வங்கி, இந்த வறட்சியினால் சோளம், சோயாபீன்ஸ், கோதுமை போன்ற தானியங்களின் உற்பத்திக் கடுமையாகச் சரிந்து விட்டது எனவும் கூறியது.
இதனால் ஆப்ரிக்காவின் வடக்குப் பகுதி, சஹாராவையடுத்த
நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பெரும் அச்சுறுத்தல்
ஏற்பட்டுள்ளது என்றும் உலக வங்கி கவலை தெரிவித்துள்ளது.
உலகளவில் உணவுப் பொருட்களின் விலையேற்றம் குறித்து உலக வங்கித் தலைவர் Jim Yong Kim இவ்வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விலைவாசி உயர்வு குறித்து எச்சரித்துள்ளார்.
8. இலங்கை அகதிகளை பசிபிக் தீவுகளுக்கு மாற்றும் திட்டம் அடுத்த மாதம் அமல் - ஆஸ்திரேலியா
ஆக.31,2012.
இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக வருபவர்களை
நௌரு மற்றும் பாப்புவா நியுகினித் தீவுகளில் அமைக்கப்படும் முகாம்களுக்கு
மாற்றுவது குறித்த சட்டம் அடுத்த மாதத்தில் நடைமுறைக்கு வரவிருப்பதாகக்
கூறப்படுகிறது.
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டத்தின்படி, கிறிஸ்மஸ் தீவுக்கு வரும் அகதிகளை, நௌரு
மற்றும் பாப்புவா நியுகினித் தீவுகளில் அமைக்கப்படும் முகாம்களில் தங்க
வைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே, இந்த மாதத்தில் மட்டும் 1,900த்துக்கும் அதிகமான அகதிகள் ஆஸ்திரேலியா சென்றுள்ளனர். அவர்களுள் அதிகமானவர்கள் இலங்கையர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், இந்த ஆண்டில் 9,000த்துக்கும் அதிகமான அகதிகள் அங்கு சென்றுள்ளதுடன், அங்குள்ள முகாம்களில் மிகவும் நெருக்கடியான நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், நேர்மையானர்வகள் என்று நிரூபிக்கப்பட்ட அகதிகளுக்கு ஆஸ்திரேலியாவில் குடியுரிமை வழங்குவதில் சிக்கல் ஏற்படாது என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் Jason Clare தெரிவித்துள்ளார்.
robert john kennedy: Catholic News in Tamil - 30/08/12
robert john kennedy: Catholic News in Tamil - 30/08/12: 1. பாகிஸ்தானில் கைதுசெய்யப்பட்டுள்ள சிறுமி Rimsha Masih யின் வழக்கு ஆரம்பம் 2. புரட்சிக் குழுவினருடன் அரசு பேச்சுவார்த்தைகளைத் துவங்கவ...
Catholic News in Tamil - 30/08/12
1. பாகிஸ்தானில் கைதுசெய்யப்பட்டுள்ள சிறுமி Rimsha Masihயின் வழக்கு ஆரம்பம்
2. புரட்சிக் குழுவினருடன் அரசு பேச்சுவார்த்தைகளைத் துவங்கவிருப்பதற்குக் கொலம்பிய ஆயர் பேரவை மகிழ்ச்சி
3. தமஸ்கு நகரில் கிறிஸ்தவ இறுதி ஊர்வலத்தின்போது குண்டுவெடிப்புத் தாக்குதல் - 12 பேர் கொலை
4. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையின் முள்ளிக்குளம் பகுதியில் விண்ணேற்படைந்த அன்னை மரியாவின் திருநாள்
5. நன்னெறியற்றத் தலைவர் ஒருவருடன் ஒரே மேடையில் உரையாற்ற விருப்பமில்லை - பேராயர் Desmond Tutu
6. அணு ஆய்வுகளுக்கு எதிரான உலக நாளுக்கு ஐ.நா. பொதுச்செயலர் வெளியிட்டச் செய்தி
7. கூடங்குளம் அணுமின் நிலையத்தால் இலங்கைக்குப் பாதிப்பு: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மீண்டும் கோரிக்கை
8. இலண்டனில் மாற்றுத் திறனுடையோர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் துவக்கம்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. பாகிஸ்தானில் கைதுசெய்யப்பட்டுள்ள சிறுமி Rimsha Masihயின் வழக்கு ஆரம்பம்
ஆக.30,2012. தேவநிந்தனை சட்டத்தின் கீழ் பாகிஸ்தானில் கைதுசெய்யப்பட்டுள்ள சிறுமி Rimsha Masihயின் வழக்கு தொடர்பாக மக்களிடையே உணர்வுகள் அதிகமாய் எழுவதால், இவ்வழக்கைத் திசைதிருப்பும் ஆபத்து உள்ளது என்று லாகூர் உயர் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் செபஸ்டின் ஷா கூறினார்.
Rimsha Masihயின் வழக்கு இவ்வியாழனன்று நீதிமன்றத்தில் ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இவ்வழக்கைக்
குறித்து மக்கள் மத்தியில் எழுந்துள்ள உணர்வு கொந்தளிப்புக்களால்
300க்கும் அதிகமான சிறுபான்மை மதங்களைச் சார்ந்த குடும்பங்கள்
இஸ்லாமாபாதிலிருந்து வெளியேறியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
மக்களிடையே நிலவும் இந்தச் சூழலைக் குறித்து Aid to the Church in Need என்ற கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்புக்குப் பேட்டியளித்த ஆயர் ஷா, Rimsha Masihயின் குடும்பத்தினரை இஸ்லாமாபாத் ஆயர் Rufin Anthony சென்று சந்தித்ததையும் தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.
சிறுமி Rimsha மூளை
வளர்ச்சிக் குன்றியவர் என்பதற்கு மருத்துவ ஆதாரங்கள் தகுந்த அளவில் உள்ளன
என்பதைச் சுட்டிக் காட்டிப் பேசிய கத்தோலிக்க வழக்கறிஞர் பீட்டர் ஜேக்கப், இஸ்லாமியர் ஒரு சிலரின் தனிப்பட்டப் பகையுணர்வுக்கு இச்சிறுமி பலியாக்கப்பட்டுள்ளதை உணரமுடிகிறது என்று கூறினார்.
பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிராக நிலவும் வன்முறைகளுக்கு எதிராக, திருத்தந்தையும், வத்திக்கான் அதிகாரிகளும் குரல் எழுப்பி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுமி Rimsha கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Jean Louis Tauran வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் பாகிஸ்தானில் மிக அதிகமாய் தற்போது தேவைப்படுவது மக்களிடையே மனம் திறந்த உரையாடலே என்றும், இத்தகைய உரையாடல்களே இவ்வன்முறைகள் பெருகாமல் காக்கும் சிறந்த வழி என்றும் கூறினார்.
2. புரட்சிக் குழுவினருடன் அரசு பேச்சுவார்த்தைகளைத் துவங்கவிருப்பதற்குக் கொலம்பிய ஆயர் பேரவை மகிழ்ச்சி
ஆக.30,2012. 'மக்கள் படை' என்றழைக்கப்படும் FARC என்ற
கொலம்பியப் புரட்சிக் குழுவினருடன் அந்நாட்டு அரசு பேச்சுவார்த்தைகளைத்
துவக்க விருப்பம் தெரிவித்துள்ளதை அந்நாட்டில் உள்ள ஆயர்கள்
வரவேற்றுள்ளனர்.
நாட்டின் அமைதியை வளர்ப்பதற்கு, கொலம்பிய அரசுத் தலைவரும், அரசு அதிகாரிகளும் மேற்கொண்டுள்ள இந்த முயற்சியால் மக்கள் கவலையின்றி வாழ வழி பிறந்துள்ளது என்று கொலம்பிய ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் Ruben Salazar கையெழுத்திட்டு அனுப்பியுள்ள செய்தியில், ஆயர்கள் தங்கள் மகிழ்வைத் தெரிவித்துள்ளனர்.
அரசு அறிவித்துள்ள இந்த அழைப்புக்குத் தங்கள் முழு ஆதரவையும் வெளியிட்டுள்ள ஆயர்கள், மன்னிப்பும், ஒப்புரவுமே இந்நாட்டில் அமைதியையும், வளர்ச்சியையும் உறுதி செய்யும் என்று கூறியுள்ளனர்.
கடந்த பத்து ஆண்டுகளில் அரசுக்கும் FARC புரட்சிக் குழுவுக்கும் இடையே முதன்முறையாக மேற்கொள்ளப்படவிருக்கும் இந்த பேச்சுவார்த்தைகள் Oslo நகரில் வருகிற அக்டோபர் மாதம் 5ம் தேதி நிகழும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
3. தமஸ்கு நகரில் கிறிஸ்தவ இறுதி ஊர்வலத்தின்போது குண்டுவெடிப்புத் தாக்குதல் - 12 பேர் கொலை
ஆக.30,2012. சிரியாவின் தமஸ்கு நகரின் புறநகர் பகுதியில் ஆகஸ்ட் 28, இச்செவ்வாயன்று மேற்கொள்ளப்பட்ட ஒரு குண்டுவெடிப்புத் தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உட்பட, 12 பேர் கொல்லப்பட்டனர், 50க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர். வேறு சில செய்திகளில் இறந்தோரின் எண்ணிக்கை 27 என்றும் சொல்லப்படுகிறது.
இத்திங்களன்று வன்முறைத் தாக்குதல்களால் கொலையுண்ட இரு கிறிஸ்தவ இளைஞர்களுக்கு இச்செவ்வாயன்று நடத்தப்பட்ட இறுதி ஊர்வலத்தின்போது, குண்டுகள் வைக்கப்பட்டிருந்த ஒரு வாகனம் வெடித்ததில் இக்கொலைகள் நிகழ்ந்துள்ளன.
சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த 6 இலட்சம் மக்கள் வாழும் Jaramana பகுதியில் 250,000
கிறிஸ்தவர்கள் வாழ்கின்றனர். இஸ்லாமிய அடிப்படைவாதக் கொள்கைகள்
உடையோரிடமிருந்து இம்மக்களுக்குத் தொடர்ந்து அச்சமூட்டும் எச்சரிக்கைகள்
வந்தவண்ணம் உள்ளன என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
சிரியாவில்
ஆட்சியில் இருக்கும் அரசுக்கு கிறிஸ்தவர்கள் ஆதரவு தருகின்றனர் என்ற தவறான
வதந்திகளால் கிறிஸ்தவர்கள் இஸ்லாமிய வன்முறையாளர்களின் இலக்காக மாறி
வருவது வேதனையே என்று இலத்தீன் கிறிஸ்தவத் தலைவர் ஒருவர் தன் பெயரைக்
குறிப்பிடாமல் கருத்து தெரிவித்தார்.
4. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையின் முள்ளிக்குளம் பகுதியில் விண்ணேற்படைந்த அன்னை மரியாவின் திருநாள்
ஆக.30,2012.
வட இலங்கையின் முள்ளிக்குளம் பகுதியில் விண்ணேற்படைந்த அன்னை மரியா
திருநாளை ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு கத்தோலிக்கர்கள் கொண்டாடினர்.
மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தலைமையில் நடைபெற்ற கூட்டுத் திருப்பலியில் 20க்கும் அதிகமான அருள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
முள்ளிக்குளம் பகுதியில் நிலக்கண்ணி வெடிகள் அதிகம் உள்ளதென்று காரணம் கூறி, அப்பகுதியில் மக்கள் நடமாட்டத்தை இராணுவம் தடை செய்துள்ளது.
அன்னை மரியாவின் விண்ணேற்புத் திருநாளைக் கொண்டாடுவதற்காக இராணுவம் தன் தடைகளைத் தளர்த்தியது என்று UCA செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
மின்சக்தியையும், மருத்துவ உதவிகளையும் வழங்கிய இராணுவத்தின் உதவியுடன் நடைபெற்ற இவ்விழாவில் 2000க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
5. நன்னெறியற்றத் தலைவர் ஒருவருடன் ஒரே மேடையில் உரையாற்ற விருப்பமில்லை - பேராயர் Desmond Tutu
ஆக.30,2012. நன்னெறியும், தலைமைப் பண்பும் ஒன்றோடொன்று தொடர்புடையவை; எனவே, நன்னெறியற்றத் தலைவர் ஒருவருடன் ஒரே மேடையில் தான் உரையாற்ற விரும்பவில்லை என்று முன்னாள் ஆங்கிலிக்கன் பேராயர் Desmond Tutu கூறினார்.
தலைமைப் பண்புத் தேடல் உச்சி மாநாடு (The Discovery Invest Leadership Summit) ஒன்று இவ்வியாழனன்று தென் அப்பிரிக்காவின் Johannesburg நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் உரையாற்ற பிரித்தானிய முன்னாள் பிரதமர் Tony Blairம், ஆங்கலிக்கன் பேராயர் Desmond Tutuவும் அழைக்கப்பட்டிருந்தனர்.
அமைதிக்கான நொபெல் பரிசை வென்றுள்ள பேராயர் Desmond Tutu, அமெரிக்க ஐக்கிய நாட்டுடன் சேர்ந்து பிரித்தானிய அரசும் ஈராக்கில் மேற்கொண்ட இராணுவ ஊடுருவலும், ஆக்கிரமிப்பும் நன்னெறி விழுமியங்களுக்கு முரணானது என்ற தன் கண்டனத்தைக் கூறிவந்தவர்.
பிரித்தானிய அரசின் அன்றையப் பிரதமராக இருந்த Tony Blairஉடன் ஒரே மேடையில் தோன்றி கருத்துக்களைப் பரிமாறத் தனக்கு விருப்பமில்லை என்று பேராயர் Tutu இச்செவ்வாயன்று அறிவித்தார்.
பேராயர் Tutu வெளியிட்ட இக்கருத்தைப் பாராட்டி, பல அமைதிக் குழுக்களும், இஸ்லாமிய குழுக்களும் கருத்துக்களை வெளியிட்டுள்ளன.
6. அணு ஆய்வுகளுக்கு எதிரான உலக நாளுக்கு ஐ.நா. பொதுச்செயலர் வெளியிட்டச் செய்தி
ஆக.30,2012. அணுசக்தி ஆய்வுகள் மனித குலத்தின் நலனுக்கும், உலக பாதுகாப்பிற்கும் பெரும் ஆபத்தாக அமைந்துள்ளது என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் கூறினார்.
ஆகஸ்ட் 29 இப்புதனன்று அணு ஆய்வுகளுக்கு எதிரான உலக நாள் கடைபிடிக்கப்பட்டதையொட்டி செய்தி வெளியிட்ட பான் கி மூன், பாதுகாப்பான உலகை உருவாக்கும் கடமை அனைத்து நாடுகளையும் சார்ந்தது என்று கூறினார்.
1991ம் ஆண்டு Kazakhstan நாட்டில் இருந்த Semipalatinsk என்ற ஒரு மாபெரும் அணு ஆய்வுக்களம் ஆகஸ்ட் 29ம் தேதி முற்றிலும் மூடப்பட்டதால், அந்நாளை அணு ஆய்வுகளுக்கு எதிரான நாளென்று ஐ.நா. அறிவித்தது.
அணு ஆய்வுகளால் இந்தப் பூமிக்கும், சுற்றுச் சூழலுக்கும், நிலத்தடி நீருக்கும் நாம் விளைவிக்கும் கேடுகளை அரசுகள் விரைவில் உணர்வது மிக்க அவசியம் என்று கூறிய ஐ.நா. பொதுச் செயலர், அணு ஆய்வுகளுக்கு எதிராக இன்னும் முடிவெடுக்காத அரசுகள் விரைவில் அத்தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்தார்.
அணு
ஆய்வுகளை நிறுத்தும் ஒரு தீர்மானத்தில் இதுவரை 183 நாடுகள்
கையெழுத்திட்டுள்ளன. இவற்றில் 157 நாடுகள் இத்தீர்மானத்தை
நடைமுறைப்படுத்தியும் உள்ளன என்று ஐ.நா. அறிவித்துள்ளது.
7. கூடங்குளம் அணுமின் நிலையத்தால் இலங்கைக்குப் பாதிப்பு: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மீண்டும் கோரிக்கை
ஆக.30,2012.
தமிழகத்தின் கூடங்குளம் அணுமின் நிலையத்தால் இலங்கைக்குப் பாதிப்புக்கள்
ஏற்படும் என்று இலங்கையின் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மீண்டும்
எச்சரித்துள்ளனர். எனவே, இலங்கையின் வெளியுறவுத்துறை இந்த விடயத்தை இந்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லவேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
அணுமின்
உற்பத்தியை மேற்கொள்ளும் முன்னர் இந்திய அரசு அருகில் உள்ள நாடுகளின்
பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று இலங்கையின் சுற்றுச்சூழல்
ஆர்வலர்களின் சார்பில் பேசிய ஜெகத் குணவர்த்தன கூறினார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தால் வரவிருக்கும் ஆபத்துக்களை மனதிற்கொண்டு, இலங்கை அரசு முன்னெச்சரிக்கை கோபுரங்களை அமைக்கவேண்டும் என்றும் குணவர்த்தன கோரிக்கை விடுத்தார்.
கூடங்குளம்
அணுமின் நிலையம் இலங்கையின் புத்தளத்தில் இருந்து 240 கிலோமீட்டர்
தூரத்திலேயே அமைந்துள்ளது என்பதை ஜெகத் குணவர்த்தன சுட்டிக்காட்டினார்.
8. இலண்டனில் மாற்றுத் திறனுடையோர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் துவக்கம்
ஆக.30,2012.
166 நாடுகளைச் சேர்ந்த நான்காயிரத்துக்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள்
பங்குபெறும் மாற்றுத் திறனுடையோர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் இலண்டன்
மாநகரில் இப்புதனன்று மாலை ஆரம்பமானது.
ஆப்கானிஸ்தானில்
நிகழ்ந்த ஒரு குண்டுவெடிப்பில் தன் இரு கால்களையும் இழந்த ஒரு பிரித்தானிய
இராணுவ வீரர் ஆயிரக்கணக்கான கலைஞர்கள் பங்குபெற்ற இந்த ஆரம்பவிழாவின்
இறுதியில் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினார்.
இரண்டாம் எலிசபெத் அரசியால் துவக்கிவைக்கப்பட்ட இந்த ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்ச்சிகளில், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே, உலகப் புகழ்பெற்ற அறிவியலாளர் Stephen Hawking, மனிதர்களின் விடாமுயற்சிக்குத் தன் வணக்கத்தைக் கூறினார்.
இம்முறை நடைபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு நாடுகளும் அதன் வீரர்களும் கலந்து கொள்வது, இந்தப்
போட்டிகளுக்கு உலக அளவில் மேலும் ஒரு ஏற்றமும் ஆதரவும் கிடைத்துள்ளது
என்பதை வெளிக்காட்டுகிறது என்று விளையாட்டுச் செய்தியாளர்கள்
சுட்டிக்காட்டுகின்றனர்.
வழக்கமாக ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பயன்படுத்தப்படும் ஐந்து வளையங்களுக்குப் பதிலாக, மாற்றுத் திறனுடையோர் ஒலிம்பிக் விளையாட்டுக்களின் அடையாளமாக, மூன்று பிறை நிலா வடிவங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
"நான் நகர்கிறேன்" என்ற பொருள்படும் இலத்தீன் வார்த்தையான Agitos ஐக் குறிக்கும் இந்த பிறை வடிவங்கள் பல நாடுகளில் பயன்படுத்தப்படும் நிறங்களான பச்சை, சிவப்பு, நீலம் ஆகிய வண்ணங்களில் அமைந்துள்ளன.
இந்தப் போட்டிகளுக்கான நுழைவுச் சீட்டைப் பெறுவதற்கு மக்கள் பெருமளவில் ஆர்வம் காட்டியதாகக் கூறும் விளையாட்டு ஏற்பாட்டாளர்கள், நடந்து முடிந்த ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கு இணையாக இந்த விளையாட்டுக்களும் அமையும் என்ற தங்கள் நம்பிக்கையை வெளியிட்டனர்.
Wednesday, 29 August 2012
robert john kennedy: Catholic News in Tamil - 29/08/12
robert john kennedy: Catholic News in Tamil - 29/08/12: 1. திருப்பீடத்தூதர் : சிரியா நரகத்துக்குள் நுழைந்து கொண்டிருக்கின்றது 2. CELRA : அலெப்போ கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாகக் கடிதம் 3. அ...
Catholic News in Tamil - 29/08/12
1. திருப்பீடத்தூதர் : சிரியா நரகத்துக்குள் நுழைந்து கொண்டிருக்கின்றது
2. CELRA : அலெப்போ கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாகக் கடிதம்
3. அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தேர்தல் பிரச்சாரங்களில் ஒருவரையொருவர் தாக்கிப் பேசுவது தவிர்க்கப்பட வேண்டும் : நியுயார்க் கர்தினால் கோரிக்கை
4. உலகக் கத்தோலிக்கருக்கு உதவும் திருப்பீடத்தின் புதிய இணையதளம்
5. ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் : சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதற்காக மனம் வருந்த வேண்டும்
6. பதினான்கு வயதுக்கு உட்பட்ட சிறாரை வேலையில் அமர்த்தினால் மூன்று ஆண்டு சிறை
7. குஜராத் கலவரம்: 32 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு
8. மணிப்பூரில் Mary Kom பெயரில் புதிய சாலை
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருப்பீடத்தூதர் : சிரியா நரகத்துக்குள் நுழைந்து கொண்டிருக்கின்றது
ஆக.29,2012. சிரியா நாட்டில் ஒவ்வொரு நாளின் விடியலும் புதிது புதிதான மரணங்களின் பட்டியலோடும், வெற்றிகளின் அறிவிப்புக்களோடும் தொடங்குகின்றது என்று அந்நாட்டுக்கானத் திருப்பீடத் தூதர் பேராயர் Mario Zenari கூறினார்.
சிரியாவின்
ஜோபர் மாவட்டத்தில் இராணுவ ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதைக்
கொண்டாடியவண்ணம் புரட்சியாளர்கள் இச்செவ்வாய்க்கிழமையைத் தொடங்கினார்கள்
என்றுரைத்த பேராயர் Zenari, இந்த வெற்றிகள் உண்மையோ அல்லது கற்பனையோ எப்படியிருப்பினும், இத்தகைய கொண்டாட்டங்கள் மற்றும் மரண அறிவிப்புக்களுடன் ஒவ்வொரு நாளும் விடிகின்றது என்று தெரிவித்தார்.
சிரியா அரசு Daraya நகரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாக அறிவிக்கின்றது, மறுபக்கம், பெண்கள், குழந்தைகள்
உட்பட குறைந்தது 320 பேர் அரசுப் படைகளால் படுகொலை செய்யப்பட்டனர் எனப்
புரட்சியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர் என்றுரைத்த பேராயர், சிரியாவில் ஒவ்வொரு நாளும் இப்படித் தொடங்குகின்றது என்று கூறினார்.
சிரியாவில் இடம்பெறுவது, சில அரபு நாடுகளில் இடம்பெற்ற “அரபு வசந்தம்”
கிளர்ச்சி போல் அல்லாமல் கற்பனைக்கு எட்டாத கடும் விளைவுகளைக் கொண்டுவரும்
மிகவும் சிக்கலான பிரச்சனையாக இருக்கின்றது என்றும் எச்சரித்த திருப்பீடத்
தூதர், சிரியா, நரகத்துக்குள் நுழைந்து கொண்டிருக்கின்றது என்றே சொல்லத் தோன்றுகின்றது என்று கவலை தெரிவித்தார்.
இதற்கிடையே, புரட்சிப்படைகளுக்கு
எதிரான சண்டையில் வெற்றி பெறுவதற்கு சிரியா அரசுக்கு இன்னும் அவகாசம்
தேவைப்படுகின்றது என்று சிரியா அரசுத்தலைவர் Bashar al-Assad இப்புதனன்று கூறியுள்ளார்.
2. CELRA : அலெப்போ கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாகக் கடிதம்
ஆக.29,2012.
சிரியாவிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் துன்புறும்
கிறிஸ்தவர்களுக்கும் அலெப்போ இலத்தீன்ரீதி அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Giuseppe Nazzaroவுக்கும் ஆதரவாகச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது CELRA என்ற அரபுப் பகுதிகளின் இலத்தீன் ரீதி ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு.
சிரியாவில் தற்போது இடம்பெற்றுவரும் வன்முறைகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்த ஆயர்கள் கூட்டமைப்பு, வன்முறை என்றென்றும் நிலைத்திருக்காது என்று சொல்லி, சிரியா கிறிஸ்தவர்களுடன் தங்களது ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்துள்ளது.
ஜோர்டன் நாட்டு Ammanல் வருகிற செப்டம்பர் 17 முதல் 20 வரை நடைபெறவிருக்கும் CELRA கூட்டமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில் அலெப்போ ஆயர் கலந்துகொண்டு செய்திகளைப் பகிர்ந்துகொள்வார் என்றும், சிரியாவில்
அமைதியும் ஒப்புரவும் ஏற்படுவதற்கு ஆதரவாகச் செய்தி ஒன்று இக்கூட்டத்தில்
கையெழுத்திடப்பட்டு வெளியிடப்படும் என்றும் அச்செய்தி கூறுகிறது.
3. அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தேர்தல் பிரச்சாரங்களில் ஒருவரையொருவர் தாக்கிப் பேசுவது தவிர்க்கப்பட வேண்டும் : நியுயார்க் கர்தினால் கோரிக்கை
ஆக.29,2012.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் வருகிற நவம்பரில் நடைபெறவிருக்கும் அரசுத்தலைவர்
தேர்தல் பிரச்சாரங்களில் வேட்பாளர்கள் தனிப்பட்ட விதத்தில் ஒருவரையொருவர்
தாக்கிப் பேசுவது தவிர்க்கப்பட வேண்டுமென நியுயார்க் கர்தினால் Timothy M. Dolan கேட்டுக் கொண்டார்.
அந்நாட்டின் குடியரசு கட்சி, சனநாயக கட்சி ஆகிய இரண்டின் அரசுத்தலைவர், உதவி அரசுத்தலைவர் ஆகிய வேட்பாளர்கள், குடிமக்களுடன் உரையாடல் நடத்தும் மனுவில் கையெழுத்திடுமாறும் வலியுறுத்திய கர்தினால் டோலன், இந்த வேட்பாளர்கள் ஒருவர் மற்றவரின் சொந்த வாழ்க்கையைத் தாக்கிப் பேசுவது தவிர்க்கப்பட வேண்டுமெனப் பரிந்துரைத்துள்ளார்.
இந்த மிகப் பெரிய நாட்டின் வேட்பாளர்கள் இந்தத் தனது கோரிக்கைக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் இதனைத் தான் எழுதுவதாகக் கூறியுள்ள கர்தினால் டோலன், இவ்வாறு செயல்படுவதன் மூலம் தற்போது நாடு எதிர்நோக்கும் முக்கிய பிரச்சனைகளில் வேட்பாளர்கள் கவனம் செலுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
சனநாயக கட்சியின் அரசுத்தலைவர் வேட்பாளர் Barack Obama, உதவி அரசுத்தலைவர் வேட்பாளர் Joe Biden, குடியரசு கட்சியின் அரசுத்தலைவர் வேட்பாளர் Mitt Romney, உதவி அரசுத்தலைவர் வேட்பாளர் Paul Ryan ஆகிய நால்வருக்கும் நியுயார்க் கர்தினால் எழுதிய கடிதங்களில் இவ்வாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இம்மனுவில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் ஏற்கனவே கையெழுத்திட்டுள்ளனர்.
4. உலகக் கத்தோலிக்கருக்கு உதவும் திருப்பீடத்தின் புதிய இணையதளம்
ஆக.29,2012.
வருகிற அக்டோபரில் தொடங்கவிருக்கும் விசுவாச ஆண்டு குறித்த விபரங்களைப்
பொதுநிலையினர் அறிந்து கொள்வதற்கு உதவியாக புதிய இணையதளம் ஒன்றைத்
தொடங்கியுள்ளது திருப்பீட பொதுநிலையினர் அவை.
இந்தப் புதிய இணையதளம் குறித்து CNA செய்தி நிறுவனத்திடம் விளக்கிய இத்திருப்பீட அவையின் பெண்கள் பிரிவின் Ana Cristina Betancourt, திருஅவையில் தங்களது
பங்கையும் அழைப்பையும் இன்னும் அதிகமாக அறிந்து கொள்ள விரும்பும்
அனைத்துப் பொதுநிலை விசுவாசிகளுக்குமென இந்தப் புதிய இணையதளம்
திறக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
பொதுநிலையினர் தங்களது அழைப்பை வாழ்வதற்குத் திருத்தந்தை வழங்கும் வழிமுறைகள், இன்னும், திருப்பீட பொதுநிலையினர் அவையின் அன்றாடச் செயல்கள் போன்றவற்றைத் தெரிந்து கொள்வதற்கும் இந்த இணையதளம் உதவும் என்றும் அவர் கூறினார்.
திருத்தந்தை ஆறாம் பவுல், திருப்பீட
பொதுநிலையினர் அவையை 1967ம் ஆண்டில் உருவாக்கினார். இந்த அவை
திருப்பீடத்தில் நிரந்தரமாகச் செயல்படும் நோக்கத்தில் இதே திருத்தந்தை
1976ம் ஆண்டில் இந்த அவையை மீண்டும் உறுதி செய்தார்.
5. ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் : சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதற்காக மனம் வருந்த வேண்டும்
ஆக.29,2012. சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதற்காகச் செபிக்கும்போது, அச்சுற்றுச்சூழலை
சிறிய அல்லது பெரிய அளவில் ஒவ்வொருவரும் மாசுபடுத்தி வருவதற்காக இறைவனிடம்
மன்னிப்பும் கேட்குமாறு பரிந்துரைத்துள்ளார் Constantinople Ecumenical ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் Bartholomew.
துருக்கி நாட்டு Istanbulலில் தலைமையகத்தைக் கொண்டுள்ள உலக ஆர்த்தடாக்ஸ் சபைத் தலைவராகிய முதுபெரும் தலைவர் Bartholomew,
வருகிற செப்டம்பர் முதல் தேதி கடைப்பிடிக்கப்படவிருக்கும் சுற்றுச்சூழல்
செப நாளுக்குத் தயாரிப்பாக வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
மனித சமுதாயம் வாழ்வதற்கு ஏற்ற பூமியாக இறைவன் இந்த உலகைப் படைத்தார் என்று தனது செய்தியில் குறிப்பிட்டுள்ள முதுபெரும் தலைவர் Bartholomew, இந்தச் சுற்றுச்சூழலை இறைவன் பாதுகாக்குமாறு செபிக்கும்போது, நாம் அதை அழிக்கும் பாவச்செயலுக்காகவும் மனம் வருந்த வேண்டும் என்று சொல்லியுள்ளார்.
இந்தச் செப நாளை 1989ம் ஆண்டிலிருந்து Istanbul ஆர்த்தடாக்ஸ் சபை கடைப்பிடித்து வருகிறது. இச்செப நாள் ஒரு முக்கியமான கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சி என்று திருத்தந்தை 16ம் பெனடிக்டும் பாராட்டியுள்ளார்.
6. பதினான்கு வயதுக்கு உட்பட்ட சிறாரை வேலையில் அமர்த்தினால் மூன்று ஆண்டு சிறை
ஆக.29,2012. இந்தியாவில் பதினான்கு வயதிற்கு உட்பட்ட சிறாரை எந்த விதமான வேலையில் ஈடுபடுத்தினாலும், அவ்வாறு செய்யும் நபர்களுக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை அல்லது 50 ஆயிரம் ரூபாய்வரை அபராதம் விதிக்கப்படும் என்பது தொடர்பான சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இச்செவ்வாயன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில், 1986ம் ஆண்டின் குழந்தைத் தொழிலாளர் தடை மற்றும் கட்டுப்பாட்டு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்தச் சட்டத்தின்படி, அபாயமான அல்லது அபாயமற்ற எந்த விதமான தொழில்களிலும், 14 வயதிற்கு உட்பட்ட சிறாரை ஈடுபடுத்தக் கூடாது. அதை மீறினால் மூன்றாண்டு சிறைத்தண்டனை அல்லது 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
அத்துடன், சுரங்கம் போன்ற அபாயகரமான தொழில்களில் 18 வயதிற்குக் குறைவானவர்களை ஈடுபடுத்தவும் இந்தச் சட்ட மசோதா தடை விதிக்கிறது.
இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம், இந்தியாவில் தொழில் சட்டங்கள், ILO என்ற அனைத்துலக தொழில் நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டதாய் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது.
7. குஜராத் கலவரம்: 32 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு
ஆக.29, 2012.
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடந்த மதக்கலவரத்தில்
தொடர்புடையவர்களாகக் குற்றம் சாட்டப்பட்ட 32 பேர் குற்றவாளிகள் என்று
அம்மாநில சிறப்பு நீதிமன்றம் இப்புதனன்று தீர்ப்பளித்துள்ளது.
ஆளும் பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான Maya Kodnani மற்றும் பஜ்ரங் தளத்தின் முன்னாள் தலைவர் Babu Bajrangi ஆகியோரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கானத் தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Naroda-Patiya
கலவரம் என்று அழைக்கப்படும் அந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் குற்றம்
சாட்டப்பட்ட மேலும் 29 பேர் குற்றமற்றவர்கள் என்று கூறி நீதிமன்றம் அவர்களை
விடுதலை செய்துள்ளது.
Ahmedabad நகரில் உள்ள Naroda-Patiya பகுதியில் கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி நடந்த கலவரத்தில் 95 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த 2002-ம் ஆண்டு, கோத்ரா
இரயில் எரிப்புச் சம்பவத்தில் 60 இந்து திருப்பயணிகள்
கொல்லப்பட்டதையடுத்து நடந்த இனக்கலவரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்
கொல்லப்பட்டனர். அவர்களி்ல் பெரும்பாலோர் முஸ்லிம்கள்.
8. மணிப்பூரில் Mary Kom பெயரில் புதிய சாலை
ஆக.29,2012. இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் Churachandpur மாவட்டத்திலுள்ள ஒரு சாலைக்கு ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற Mary Kom பெயரை வைப்பதற்கு அம்மாநில அரசு தீர்மானித்துள்ளது.
உலக குத்துச் சண்டை வீரராக ஐந்து முறை தேர்வாகியுள்ள Mary Kom, இவ்வாண்டு
இலண்டன் ஒலிம்பிக்ஸில் குத்துச் சண்டையில் வெண்கலம் வென்றதைப் பாராட்டும்
விதமாக அவருக்கு கூடுதல் காவல்துறை ஆணையர் என்ற பதவி உயர்வு
அளித்துள்ளதுடன் 50 இலட்சம் ரூபாய்ப் பரிசுத் தொகையையும் மாநில அரசு
வழங்கியுள்ளது.
Churachandpur நகரையும் அந்நகரின் உதவி காவல்துறை அதிகாரியின் அலுவலகத்தையும் இணைக்கும் சாலைக்கு Mary Kom சுற்றுச்சாலை எனப் பெயரிடவிருப்பதாக மணிப்பூர் நலவாழ்வு அமைச்சர் T Phungzathang அறிவித்தார்.
மேலும், Churachandpurல் பொது வளாகம் ஒன்று அமைப்பதற்கு பத்து இலட்சம் ரூபாய்க்கும் அரசு அனுமதியளித்துள்ளது. Mary Kom, Churachandpur மாவட்டத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Posts (Atom)
Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica
Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...
-
Kerala priest’s kidney donation inspires 15 priests to follow suit 15 priests, including a bishop and a nun, have donated their ki...
-
Sri Lankan president praises Asian bishops for service to poor The meeting occurred during the Federation of Asian Bishops’ Confer...