Friday, 31 August 2012

Catholic News in Tamil - 31/08/12

1.முதுபெரும் தலைவர் Twal : திருத்தந்தையின் லெபனன் திருப்பயணம், அப்பகுதி முழுவதற்குமானத் திருப்பயணம்

2. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் முன்னாள் மாணவர்கள் கிறிஸ்தவ ஒன்றிப்பு குறித்து கலந்துரையாடி வருகின்றனர்

3. எத்தியோப்பியத் தலத்திருஅவை பிரதமர் Zenawiயை நினைவுகூருகின்றது

4. சீனாவின் புனித ஜெரோமுக்கு வருகிற செப்டம்பர் 29ம் தேதி அருளாளர் பட்டம்

5. கட்டாயக் காணாமல்போதல் நிறுத்தப்படுவதற்கு ஐ.நா. வல்லுனர்கள் கோரிக்கை

6. அனைத்துலக காணாமல்போனோர் தினத்தையொட்டி வவுனியாவில் போராட்டம்

7. உணவுப் பொருட்களின் விலை கடந்த ஜூலையில் 10 விழுக்காடு அதிகரிப்பு : உலக வங்கி அதிர்ச்சித் தகவல்

8. இலங்கை அகதிகளை பசிபிக் தீவுகளுக்கு மாற்றும் திட்டம் அடுத்த மாதம் அமல் - ஆஸ்திரேலியா

------------------------------------------------------------------------------------------------------

1.முதுபெரும் தலைவர் Twal : திருத்தந்தையின் லெபனன் திருப்பயணம், அப்பகுதி முழுவதற்குமானத் திருப்பயணம்

ஆக.31,2012. செப்டம்பர் 14 முதல் 16 வரை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் லெபனன் நாட்டுக்கு மேற்கொள்ளும் திருப்பயணம், அந்நாட்டுக்கு மட்டுமல்லாமல், அப்பகுதி முழுவதற்கும் மேற்கொள்ளும் திருப்பயணமாக அமைகின்றது என எருசலேம் இலத்தீன்ரீதி முதுபெரும் தலைவர் Fouad Twal கூறினார்.
திருத்தந்தையின் லெபனன் திருப்பயணம் குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த முதுபெரும் தலைவர் Twal, 2010ம் ஆண்டில் வத்திக்கானில் நடைபெற்ற மத்திய கிழக்கு நாடுகள் பற்றிய சிறப்பு ஆயர் மாமன்றத்தின் தீர்மானத்தொகுப்பை வெளியிடுவதாக இப்பயணத்தின் ஒரு பகுதி அமையும் என்று தெரிவித்தார்.
மத்திய கிழக்கு நாடுகளின் திருஅவைத் தலைவர்கள் மற்றும் கிறிஸ்தவச் சமூகங்களின் தலைவர்களிடம் இத்தீர்மானத்தொகுப்பு ஏடுகளைத் திருத்தந்தை இத்திருப்பயணத்தில் வழங்குவார் என்றும் அவர் கூறினார்.
யூதர்களுடன் உரையாடல் நடத்துவதற்கு நன்மனம் கொண்ட மனிதர்கள் இருக்கின்றபோதிலும், யூதர்களுடனான உரையாடலில் அவ்வளவாக முன்னேற்றம் காணப்டவில்லையெனவும் முதுபெரும் தலைவர் Twal கூறினார்.
தற்போது சிரியாவில் இடம்பெற்றுவரும் வன்முறை குறித்த கவலையையும் எருசலேம் இலத்தீன்ரீதி முதுபெரும் தலைவர் வெளியிட்டார்.

2. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் முன்னாள் மாணவர்கள் கிறிஸ்தவ ஒன்றிப்பு குறித்து கலந்துரையாடி வருகின்றனர்

ஆக.31,2012. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் முன்னாள் மாணவர்கள் அவரோடு சேர்ந்து கத்தோலிக்கத் திருஅவை, பிற கிறிஸ்தவ சபைகளுடன் கொண்டிருக்கும் உறவுகள் குறித்து கலந்துரையாடி வருகின்றனர் என்று வியன்னா கர்தினால் Christoph Schonborn கூறினார்.
முன்னாள் பேராசிரியர் ஜோசப் இராட்சிங்கரின் முன்னாள் முனைவர் பட்ட மாணவராகிய கர்தினால் Schonborn வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் முன்னாள் மாணவர்கள் அவரோடு சேர்ந்து நடத்திவரும் மூன்று நாள் கூட்டத்தில் கத்தோலிக்கத் திருஅவை, ஆங்லிக்கன் மற்றும் லூத்தரன் கிறிஸ்தவ சபைகளுடன் கொண்டிருக்கும் உறவுகள் குறித்து கலந்துரையாடி வருகின்றனர் என கர்தினால் Schonborn கூறினார்.
ஆங்லிக்கன் மற்றும் லூத்தரன் கிறிஸ்தவ சபைகள் தங்களது 500வது ஆண்டு நிறைவை 2017ம் ஆண்டில் சிறப்பிக்கவிருப்பதை முன்னிட்டு திருத்தந்தையுடன் இடம்பெறும் இக்கூட்டத்தில் இச்சபைகளுடன் கத்தோலிக்கத் திருஅவை கொண்டுள்ள உறவு குறித்துப் பேசப்படுவதாகவும் கர்தினால் Schonborn கூறினார்.

3. எத்தியோப்பியத் தலத்திருஅவை பிரதமர் Zenawiயை நினைவுகூருகின்றது

ஆக.31,2012. எத்தியோப்பியாவில் இம்மாதம் 20ம் தேதி இறந்த அந்நாட்டுப் பிரதமர் Meles Zenawi அந்நாட்டை நல்லதொரு மாற்றத்திற்குக் கொண்டு சென்றார் என்று தலைநகர் Addis Ababa பேராயர் Berhaneyesus Demerew Souraphiel கூறினார்.
எத்தியோப்பியாவின் நீண்டகாலப் பிரதமர் Zenawiன் உடல் வருகிற ஞாயிறன்று அனைத்து அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவிருப்பதையொட்டி வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த பேராயர் Berhaneyesus இவ்வாறு கூறினார்.
வறட்சி, பஞ்சம், பட்டினி, உள்நாட்டுப் போர், கலவரங்கள் போன்ற பிம்பங்களைப் பராம்பரியமாகக் கொண்டிருந்த எத்தியோப்பியாவின் அந்தப் பிம்பங்களை மாற்றுவதற்கு மறைந்த பிரதமர் Zenawi மிகுந்த முயற்சி செய்தார் எனவும் பேராயர் Berhaneyesus கூறினார்.
இவர் தனது வாழ்வில் முதல் கட்டமாக, அந்நாட்டின் சர்வாதிகாரி Mengistu Hailemariam ஆட்சிக்கு எதிராகப் போராடினார், இரண்டாவதாக நாட்டில் ஏழ்மையை ஒழிக்கப் போராடினார் என்றும் பேராயர் தெரிவித்தார்.
1991ம் ஆண்டில் அரசியலுக்கும் 1994ம் ஆண்டில் பிரதமர் பதவிக்கும் வந்த Meles Zenawi, ஆப்ரிக்காவின் கொம்பு எனப்படும் பகுதியின் அரசியலில் முன்னணி வகிப்பவராக நோக்கப்படுகிறார். இவரது அடக்கச்சடங்கில் பல ஆப்ரிக்கத் தலைவர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
எத்தியோப்பியாவின் 80 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றில் இப்போதுதான் முதல்முறையாக அரசு மரியாதையுடன் ஓர் அடக்கச்சடங்கு நடைபெறவிருக்கின்றது.   
Zenaw, நீண்டகாலம் நோயால் துன்புற்று இம்மாதம் 20ம் தேதி காலமானார்.

4. சீனாவின் புனித ஜெரோமுக்கு வருகிற செப்டம்பர் 29ம் தேதி அருளாளர் பட்டம்

ஆக.31,2012. சீனாவின் புனித ஜெரோம் என அழைக்கப்படும் பிரான்சிஸ்கன் சபை அருள்தந்தை இறையடியார் Gabriele M. Allegra, வருகிற செப்டம்பர் 29ம் தேதி அருளாளர் நிலைக்கு உயர்த்தப்படுவார் என பிரான்சிஸ்கன் சபை தலைமையகம் அறிவித்துள்ளது.
புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்குப் பொறுப்பான திருப்பீட பேராயத்தின் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ, இறையடியார் Allegraவை அருளாளர் நிலைக்கு உயர்த்தும் திருப்பலியை நிகழ்த்துவார் என்று பிரான்சிஸ்கன் தலைமையகம் கூறியதாக ஆசியச் செய்தி நிறுவனம் அறிவித்தது.
சீனாவிலும் ஹாங்காங்கிலும் மறைப்பணியாளராகப் பணியாற்றிய இறையடியார் Allegra, விவிலியத்தை சீன மொழியில் மொழிபெயர்த்ததில் புகழ்பெற்று விளங்குகிறார்.
1907ம் ஆண்டு இத்தாலியின் Catania மாநிலத்தில் St. Giovanni La Punta என்ற ஊரில் பிறந்த Gabriele M. Allegra, 1930ம் ஆண்டு பிரான்சிஸ்கன் சபையில் குருவாகி அதற்கு அடுத்த ஆண்டில் சீனா சென்றார். சீன மொழியில் விவிலியத்தை மொழி பெயர்க்க வேண்டுமென்பதே அவரின் முக்கிய நோக்கமாக இருந்தது. ஷங்கையில் சீன மொழியைக் கற்ற பின்னர்  1944ம் ஆண்டில் சிலருடன் சேர்ந்து விவிலியத்தின் பழைய ஏற்பாட்டை மொழி பெயர்த்தார். பின்னர் சீனாவில் ஏற்பட்ட கிளர்ச்சியால் 1949ம் ஆண்டில் ஹாங்காங் சென்றார். 1968ம் ஆண்டில் சீன மொழியில் முழு விவிலியத்தையும் மொழி பெயர்த்து வெளியிட்டார். 1971ம் ஆண்டில் சீன மொழியில் விவிலிய அகராதியை வெளியிட்டார். 1976ம் ஆண்டில் ஹாங்காங்கில் உயிர் துறந்தார்.
பிறரன்பு மற்றும் மெய்ஞானத்தின் மாபெரும் மனிதர் என அனைவராலும் போற்றப்படுகிறார் அருள்தந்தை Gabriele M. Allegra. இவர் 1994ம் ஆண்டில் இறையடியார் என அறிவிக்கப்பட்டார்.

5. கட்டாயக் காணாமல்போதல் நிறுத்தப்படுவதற்கு ஐ.நா. வல்லுனர்கள் கோரிக்கை
ஆக.31,2012. ஒரு நாட்டில் குடிமக்கள் காணாமல்போவது, கடுங்கொடிய குற்றமாக நோக்கப்படுவது மட்டுமின்றி மனித சமுதாயத்தின் மூல ஆதாரத்தையே புறக்கணிக்கும் ஒரு செயலாகக் கருதப்படும் என்று ஐ.நா. வல்லுனர்கள் குழு ஒன்று எச்சரித்துள்ளது.
இவ்வியாழனன்று 2வது அனைத்துலக காணாமல்போனோர் தினம்(ஆகஸ்ட்30) கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி அறிக்கை வெளியிட்ட ஐ.நா. வல்லுனர்கள் குழு, நாடுகளில் மக்கள் கட்டாயமாகக் காணாமல்போவது ஒரு சமுதாயத்தின் ஆழமான விழுமியங்களுக்கு முரணானது என்றும் கூறியுள்ளது.     
பயங்கரவாதத்தை அல்லது திட்டமிட்ட குற்றக்கும்பல்களை ஒடுக்குவதற்கு எதிரான நடவடிக்கைக்கும், சனநாயகம், பேச்சு சுதந்திரம், சமய சுதந்திரம் போன்ற நியாயமான உரிமைப் போராட்டங்களை அடக்குவதற்கும் இத்தகைய நடவடிக்கைகள் பயன்படுத்தப்படுகின்றன என்று நியாயம் சொல்வது ஏற்றுக்கொள்ளப்படவும் சகித்துக்கொள்ளப்படவும் முடியாதது என்றும் அவ்வல்லுனர்கள் குழுவின் அறிக்கை கூறுகின்றது.
கட்டாயக் காணாமல்போதல் நடவடிக்கையிலிருந்து மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஐ.நா.பொது அவை அறிக்கை வெளியிட்ட 20வது ஆண்டு, இந்த 2012ம் ஆண்டில் நினைவுகூரப்படுகின்றது.

6. அனைத்துலக காணாமல்போனோர் தினத்தையொட்டி வவுனியாவில் போராட்டம்

ஆக.31,2012. அனைத்துலக காணாமல்போனோர் தினத்தையொட்டி இவ்வியாழனன்று இலங்கையிலும் பிலிப்பீன்சிலும்  போராட்டங்கள் நடத்தப்பட்டன.
காணாமல்போனவர்கள் தொடர்பாக, ஐ.நா.வின் நடவடிக்கைக் குழுவின் மேற்பார்வையில் சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று வவுனியாவில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட இந்தப் போராட்டத்தில்,  காணாமல்போயுள்ள தங்களது கணவர்களும். பிள்ளைகளும் விடுதலை செய்யப்பட வேண்டும், அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பது தெரிவிக்கப்பட வேண்டும் என்று பெண்கள் மிகுந்த வேதனையுடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

7. உணவுப் பொருட்களின் விலை கடந்த ஜூலையில் 10 விழுக்காடு அதிகரிப்பு : உலக வங்கி அதிர்ச்சித் தகவல்
ஆக.31,2012. உலகம் முழுவதும் உணவுப் பொருட்களின் விலை கடந்த ஜூலையில் 10 விழுக்காடு உயர்ந்துள்ளது எனவும், இது ஏழைநாடுகளில் வாழ்வாதாரம் குறித்த பயத்தை அதிகரித்துள்ளது எனவும் உலக வங்கி எச்சரித்துள்ளது.
அமெரிக்க ஐக்கிய நாட்டு வெப்பக்காற்றும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள வறட்சியும் இந்த விலைவாசி உயர்வுக்குக் காரணங்களாகச் சுட்டிக்காட்டிய உலக வங்கி, இந்த வறட்சியினால் சோளம், சோயாபீன்ஸ், கோதுமை போன்ற தானியங்களின் உற்பத்திக் கடுமையாகச் சரிந்து விட்டது எனவும் கூறியது.
இதனால் ஆப்ரிக்காவின் வடக்குப் பகுதி, சஹாராவையடுத்த நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றும் உலக வங்கி கவலை தெரிவித்துள்ளது.
உலகளவில் உணவுப் பொருட்களின் விலையேற்றம் குறித்து உலக வங்கித் தலைவர் Jim Yong Kim இவ்வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விலைவாசி உயர்வு குறித்து எச்சரித்துள்ளார்.

8. இலங்கை அகதிகளை பசிபிக் தீவுகளுக்கு மாற்றும் திட்டம் அடுத்த மாதம் அமல் - ஆஸ்திரேலியா

ஆக.31,2012. இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக வருபவர்களை நௌரு மற்றும் பாப்புவா நியுகினித் தீவுகளில் அமைக்கப்படும் முகாம்களுக்கு மாற்றுவது குறித்த சட்டம் அடுத்த மாதத்தில் நடைமுறைக்கு வரவிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டத்தின்படி, கிறிஸ்மஸ் தீவுக்கு வரும் அகதிகளை, நௌரு மற்றும் பாப்புவா நியுகினித் தீவுகளில் அமைக்கப்படும் முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே, இந்த மாதத்தில் மட்டும் 1,900த்துக்கும் அதிகமான அகதிகள் ஆஸ்திரேலியா சென்றுள்ளனர். அவர்களுள் அதிகமானவர்கள் இலங்கையர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், இந்த ஆண்டில் 9,000த்துக்கும் அதிகமான அகதிகள் அங்கு சென்றுள்ளதுடன், அங்குள்ள முகாம்களில் மிகவும் நெருக்கடியான நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், நேர்மையானர்வகள் என்று நிரூபிக்கப்பட்ட அகதிகளுக்கு ஆஸ்திரேலியாவில் குடியுரிமை வழங்குவதில் சிக்கல் ஏற்படாது என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் Jason Clare தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...