Monday 28 November 2011

Catholic News - hottest and latest - 28 November 2011

1. கொழும்பு உயர் மறைமாவட்டத்திற்கு இரு துணை ஆயர்கள் நியமனம்

2. இயற்கையைக் காப்பது இளையோரின் கடமை என்கிறார் பாப்பிறை

3. லெபனன் நாட்டு பிரதமர் திருத்தந்தையுடன் சந்திப்பு

4. திருவருகைக் காலத்தின் முக்கியத்துவம் குறித்து திருத்தந்தை

5. சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு பொறுப்பான நம்பத்தகு பதிலுரைகள் தேவை என்கிறார் பாப்பிறை

6. இலங்கையில் சிறையிலடைக்கப்பட்டுள்ள அருள் சகோதரியை அன்னை திரேசா சபை தலைவி சென்று சந்தித்தார்

7. நேபாளக் கிறிஸ்தவக் கோவிலை வெடிகுண்டு மூலம் தகர்க்க முயற்சி

------------------------------------------------------------------------------------------------------

1. கொழும்பு உயர் மறைமாவட்டத்திற்கு இரு துணை ஆயர்கள் நியமனம்

நவ.28,2011. இலங்கையின் கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயர்களாக குருக்கள் ஃபிதெலிசஸ் லியோனெல் எம்மானுவேல் ஃபெர்னாண்டோ மற்றும் சம்பதவடுகே மேக்ஸ்வெல் க்ரென்வில்லே சில்வா (Sampathawaduge Maxwell Grenville Silva) ஆகியோரை இத்திங்களன்று அறிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
1948ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பிறந்த புதிய ஆயர் ஃபெர்னாண்டோ, கண்டி தேசியக் குருமடத்திலும் உரோம் நகரிலும் தன் குருத்துவப் படிப்பை முடித்து கொழும்பு உயர்மறைமாவட்டத்திற்கென 1973ம் ஆண்டு வத்திக்கானில் திருத்தந்தை ஆறாம் பாலால் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். கண்டி தேசியக் குருமடத்தில் பேராசிரியராகவும், அதிபராகவும் பணியாற்றியுள்ள இவர், அண்மைக் காலங்களில் கொழும்பு உயர்குருமடத்தின் தமிழ் விசுவாசிகளுக்கான பொறுப்பாளராகவும் செயலாற்றி வந்துள்ளார்.
புதிய ஆயராக அறிவிக்கப்பட்டுள்ள மற்றொரு குருவான சில்வா, 1953ம் ஆண்டு கொழும்பு உயர்மறைமாவட்டத்தில் பிறந்தவர். 1981ம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட புதிய ஆயர் சில்வா, 2001ம் ஆண்டு முதல் Kotte புனித தாமஸ் கல்லூரியின் முதல்வராகச் செயல்பட்டு வருகிறார்.


2. இயற்கையைக் காப்பது இளையோரின் கடமை என்கிறார் பாப்பிறை

நவ.28,2011. இறைவனின் அழகு மற்றும் நன்மைத்தனம் குறித்து நமக்குச் சொல்லித் தரும் புத்தகமே இயற்கை என்பதை புனித பிரான்சிஸ் அசிசி நமக்குக் கற்றுத் தருகிறார் என இத்தாலிய மாணவர் அமைப்பு ஒன்றிற்கு இத்திங்களன்று உரை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
'இயற்கை எனும் சகோதரி' என்ற அமைப்பின் அங்கத்தினர்களான ஏறத்தாழ 7000 இத்தாலிய மாணவர்களைத் திருத்தந்தை 6ம் பால் மண்டபத்தில் சந்தித்த பாப்பிறை, நிலமனைத்தையும் காய்கறி பயிரிட மட்டும் என பயன்படுத்தாமல்,  பூச்செடிகளை வளர்க்கவும் பயன்படுத்த வேண்டும் என புனித பிரான்சிஸ் அசிசி தன் துறவிகளுக்குக் கட்டளையிட்டதை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
இன்றைய உலகின் முக்கிய ஆய்வுகளையும் அறிவியல் கண்டுபிடிப்புகளையும் பாராட்டும் திருச்சபை, அதே வேளை, இயற்கையில் இறைவனின் கைவண்ணத்தைக் கண்டு ஏற்பது, நம் உண்மையான தனித்தன்மையை புரிந்துகொள்ள உதவுகிறது என்பதிலும் உறுதியாக உள்ளது என்றார் திருத்தந்தை. படைப்பில் மனிதன் இறைவனோடு ஒத்துழைக்க மறந்தானாகில் அது இயற்கைக்கும் அதன் வழி மனித குலத்திற்கும் எதிர்மறை விளைவுகளைக் கொணரும் என்பதையும் மாணவர்களுக்கு நினைவூட்டினார் பாப்பிறை. இயற்கையை மதித்தலும் மனிதனை மதித்தலும் ஒன்றே என்ற திருத்தந்தை, வாழ்வு மற்றும் இயற்கையின் பாதுகாவலர்களாகச் செயல்படவேண்டியது இளையோரின் கடமையாகிறது என்பதையும் சுட்டிக்காட்டினார்.


3. லெபனன் நாட்டு பிரதமர் திருத்தந்தையுடன் சந்திப்பு

நவ.28,2011. லெபனன் நாட்டு பிரதமர் Najib Mikati இத்திங்கள் காலை திருப்பீடத்தில் திருத்தந்தையையும், அதன் பின்னர் திருப்பீடச்செயலர் கர்தினால் Tarcisio Bertone மற்றும் நாடுகளுடன் ஆன உறவுகளுக்கான செயலர் பேராயர் Dominique Mambertiயையும் சந்தித்து உரையாடினார்.
மத்தியக் கிழக்குப் பகுதியிலும் உலகிலும்  லெபனனின் முக்கிய இடம் குறித்தும், அந்நாட்டின் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் ஒன்றிணைந்த வாழ்வு குறித்தும் இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.
நாடு எதிர் நோக்கும் சவால்களுக்குத் தீர்வு காண தேவைப்படும் ஒத்துழைப்பு மற்றும் பேச்சுவார்த்தைகள் குறித்தும் விவாதிக்கப்பட்ட‌தாகக் கூறும் திருப்பீட பத்திரிகைத் துறையின் அறிக்கை, நீதி, ஒப்புரவு, மனித மாண்பிற்கான மதிப்பு ஆகியவைகளின் அடிப்படையில் அமைதியான ஒன்றிணைந்த வாழ்வுக்கென அனைவரும் அர்ப்பணத்துடன் சேவையாற்ற வேண்டிய அவசரத் தேவை குறித்தும் வலியுறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கின்றது. அந்நாட்டின் கிறிஸ்தவர்கள், அமைதி மற்றும் இணக்க வாழ்வினைக் கட்டியெழுப்புவதற்கு ஆற்றி வரும் பங்களிப்பு குறித்தும் கலந்துரையாடலின்போது உரைக்கப்பட்டது என்கிறது திருப்பீட பத்திரிகைத்துறையின் செய்தி.


4. திருவருகைக் காலத்தின் முக்கியத்துவம் குறித்து திருத்தந்தை

நவ.28,2011. இறைவன் தன் தெய்வீக மகிமையைக் களைந்து நம்மைப்போல் மனிதனாக உடலெடுத்த அவரின் வருகைக் குறித்த நினைவுகளை நம்மில் தட்டியெழுப்புவதாக திருவருகைக்காலம் உள்ளது என இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கடவுள் இல்லாமை போன்றும் கடவுள் நம்மை கைவிட்டுவிட்டது போலும் தோன்றும் இன்றைய நவீன உலகில், திருவருகைக்காலம் என்பது மேலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது என்ற பாப்பிறை, இறை அன்பிலிருந்து வெளிப்படும் மீட்பு எனும் மறையுண்மையைத் திறந்த மனதுடன் ஏற்றவர்களாக, கிறிஸ்தவ சமூகங்களோடு வாழ்ந்து விசுவாசத்தின் புதிய பயணத்தைத் தொடர இத்திருவருகைகாலம் அழைப்பு விடுக்கிறது என உரைத்தார்.
இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தில் இயேசு கூறும் ' கவனமாயிருங்கள்! விழிப்பாயிருங்கள்!' என்ற வார்த்தைகளையும் எடுத்துரைத்த பாப்பிறை, எவ்வாறு முளையானது மண்ணிலிருந்து புறப்பட்டு விண்ணை நோக்கி வளர்கிறதோ, அவ்வாறே நம் வாழ்வும் இவ்வுலகை மட்டும் சார்ந்ததல்ல, மாறாக அதையும் தாண்டியது என்பதை இயேசுவின் இவ்வார்த்தைகள் நினைவுறுத்தி நிற்கின்றன என்றார். கடவுளை விலக்கி வைத்து மனிதனே அனைத்திற்கும் தலைவன் என்பது போன்ற ஒரு மாயை இன்றைய உலகில் உருவாக்கப்பட்டுள்ளது குறித்தும், சிலவேளைகளில் இயற்கையிலோ சமூகத்திலோ அதிர்ச்சி தரும் நிகழ்வுகள் இடம்பெறும்போது இறைவன் மக்களைக் கைவிட்டு விட்டது போன்ற எண்ணம் உருவாக்கப்படுகின்றது என்பது குறித்தும் எடுத்துரைத்த பாப்பிறை, உண்மையான தலைவர் என்பவர் மனிதன் அல்ல மாறாக கடவுளே என்பதையும் சுட்டிக்காட்டி, விழிப்பாயிருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.‌


5. சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு பொறுப்பான நம்பத்தகு பதிலுரைகள் தேவை என்கிறார் பாப்பிறை

நவ.28,2011. தென் ஆப்ரிக்காவின் டர்பனில் இடம்பெறும் தட்ப வெப்ப நிலை மாற்றம் குறித்த ஐநா கருத்தரங்கு, இன்றைய உலகின் ஏழைகளையும் வருங்காலத் தலைமுறைகளையும் மனதிற்கொண்டு நல்ல முடிவுகளை எடுக்கும் என்ற நம்பிக்கைக்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
தன் ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் இது குறித்துப் பேசிய பாப்பிறை, இயற்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தும் வாயுக்கள் காற்றில் கலப்பதைக் குறைக்கும் முயற்சிகளை ஐநா கருத்தரங்கு மேற்கொள்ளும் என்பதில் தான் நம்பிக்கைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். இன்றைய சமூகம் அனுபவிக்கும் தட்ப வெப்ப நிலை மாற்றப் பிரச்னைகளுக்கு சர்வதேச சமூகத்தின் அனைத்து அங்கத்தினர்களும் பொறுப்புடைய மற்றும் நம்பத்தகுந்த பதிலுரைகள் வழங்க வேண்டும் என விண்ணப்பிப்பதாகவும் கூறினார் பாப்பிறை.
தென் ஆப்ரிக்காவின் டர்பனில் இத்திங்களன்று துவங்கியுள்ள ஐநா கருத்தரங்கில் அரசு அதிகாரிகள், அறிவியலாளர்கள், மக்கள் நலம் விரும்பிகள் என 25, 000 பேர் கலந்து கொள்கின்றனர்.


6. இலங்கையில் சிறையிலடைக்கப்பட்டுள்ள அருள் சகோதரியை அன்னை திரேசா சபை தலைவி சென்று சந்தித்தார்

நவ.28,2011. இலங்கை குழந்தைகளை வெளிநாட்டவர்க்கு விற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கும் அன்னை திரேசா பிறரன்புக் கன்னியர் சபையைச் சேர்ந்த அருள் சகோதரி மேரி எலிசாவைச் சந்திக்க அந்நாட்டிற்கு வந்துள்ளார் அச்சபை தலைவி அருள் சகோதரி பிரேமா.
உலகம் முழுவதும் 5040 அருள் சகோதரிகளைக் கொண்டு 760 இல்லங்கள் மூலம் பணியாற்றி வரும் பிறரன்பு சபை சகோதரிகளுள் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுவது உலகில் இதுவே முதன்முறையாகும்.
ஏழைகளிடையே பணியாற்றும் பிறரன்புச் சபை சகோதரி ஒருவர் கைதுச் செய்யப்படுள்ளது குறித்து கர்தினால் மால்கம் இரஞ்சித்தும் தன் ஆழ்ந்தக் கவலையை வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கான இந்திய ஹைகமிஷனர் அசோக் கந்தாவும் இந்திய தூதரக அதிகாரிகளை அனுப்பி உண்மை நிலையை விசாரித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, வெலிக்கடா சிறையில் அடைக்கப்பட்ட இந்திய அருள் சகோதரி மேரி எலிசாவிற்கு வெளியிலிருந்து உணவு எடுத்துச் செல்லவும் சிறை அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.


7. நேபாளக் கிறிஸ்தவக் கோவிலை வெடிகுண்டு மூலம் தகர்க்க முயற்சி.

நவ.28,2011. நேபாளத் தலைநகர் காட்மண்டுவிலுள்ள கிறிஸ்தவ சபை கோவில் ஒன்றை வெடிகுண்டு மூலம் தாக்க முயன்ற சிலரின் முயற்சி காவல்துறையால் முறியடிக்கப்பட்டுள்ளது.
கோவிலின் வாசலில் ஒரு சாக்குப்பை அனாதையாகக் கிடந்ததையொட்டி கோவில் அதிகாரிகள் காவல்துறைக்கு செய்தி வெளியிட, இராணுவத்தின் வெடிகுண்டு அகற்றும் வல்லுனர்கள் வந்து மூன்று வெடிகுண்டுகளை வலுவிழக்க வைத்துள்ளனர்.
இக்குண்டுகள் வெடித்திருந்தால், கோவிலுக்கு மட்டுமல்ல, சுற்றியுள்ள பகுதிகளுக்கும் பெரும் சேதம் விளைவித்திருக்கும் என அறிவித்துள்ளார் இராணுவ அதிகாரி ஒருவர்.
வெடிகுண்டு வைத்து கோவிலைத் தாக்க முயன்றவர் யார் எனத் தெரியாத நிலையில், நேபாளத்தில் கோவில்களில் பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து கத்தோலிக்கத் தலத்திருச்சபை அதிகாரிகளும் ஏனைய கிறிஸ்தவ சபை அதிகாரிகளும் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த வாரத்தில் நேபாளத்தில் கிறிஸ்தவ அமைப்பின் கட்டடம் ஒன்று குண்டு வீசி தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

No comments:

Post a Comment