1. திருத்தந்தை : மனிதன், கடவுளோடு சரியான உறவு கொண்டு வாழ்வதே அமைதிக்குச் சிறந்த வழி
2. திருப்பீடப் பேச்சாளர் : 2012ம் ஆண்டில் மெக்சிகோவுக்கும் கியுபாவுக்கும் திருப்பயணம் செல்லத் திருத்தந்தை திட்டம்
3. பெண் குழந்தைகளை அழித்து விடும் முயற்சிகளில் சீனா ஈடுபட்டுள்ளது - கர்தினால் Martino
4. அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களது திருப்பண்டம் சீனாவிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது
5. ஜப்பானில் அணுமின் உற்பத்தித் திட்டங்கள் உடனடியாக நிறுத்தப்பட ஆயர்கள் வலியுறுத்தல்
6. கொத்து வெடிகுண்டுகளை முற்றிலும் அழிப்பதற்கு இயேசு சபையினர் முழு ஆதரவு
7. பாகிஸ்தானில் பயன்படுத்தப்படும் பாடப் புத்தகங்களில் சிறுபான்மை மதத்தவருக்கு எதிரான பகைமையை வளர்க்கும் எண்ணங்கள்
8. குஜராத் கலவரத்தில் 33 முஸ்லீம்கள் கொல்லப்பட்ட நிகழ்வில் 31 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதற்கு இயேசு சபை மனித உரிமை ஆர்வலர் வரவேற்பு
------------------------------ ------------------------------ ------------------------------ ----------------------
1. திருத்தந்தை : மனிதன், கடவுளோடு சரியான உறவு கொண்டு வாழ்வதே அமைதிக்குச் சிறந்த வழி
நவ.10,2011. பிரச்சனைகள் நிறைந்த இக்காலத்தில், பல்வேறு மதங்கள் மத்தியில் ஒருவர் ஒருவரைப் புரிதல் மற்றும் மதிக்கும் சூழலை உருவாக்கும் உரையாடல் மிகவும் முக்கியமானது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இத்தகைய உரையாடலானது பல்வேறு மதங்கள் மத்தியில் ஒருவர் ஒருவர் மீது திடமான நம்பிக்கையும் நட்புறவும் உருவாக வழி அமைக்கும் என்றும் திருத்தந்தை கூறினார்.
நமது மரபுகளின் தூய நினைவுகள் நிறைந்த புனித பூமியில் வாழும் சமயத் தலைவர்களுக்கு இவ்வுரையாடல் அவசியமானது எனவும், இவர்கள் நல்லிணக்கத்தில் ஒன்று சேர்ந்து வாழ்வதன் இன்னல்களால் தினமும் சோதிக்கப்படுகிறார்கள் எனவும் அவர் கூறினார்.
இஸ்ரேல் சமய அவையின் 27 உறுப்பினர்களை இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
புனித பூமியில் மறைப்பணியாற்றும் அனைத்து மதத் தலைவர்கள் மற்றும் பாரம்பரியங்கள் மத்தியில் நம்பிக்கையும் உரையாடலும் நிறைந்த சூழலைப் பேணி வளர்க்குமாறு இஸ்ரேல் சமய அவை உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார் பாப்பிறை.
இக்காலத்தில் சமயத் தலைவர்கள் எதிர்கொள்ளும் இரண்டு விதமான வன்முறைகளைத் தான் அண்மை அசிசிக் கூட்டத்தில் கூறியதை மீண்டும் குறிப்பிட விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒருபுறம் மதத்தின் பெயரால் வன்முறை பயன்படுத்தப்படுகின்றது, மறுபுறம் கடவுளை மறுப்பதால் ஏற்படும் வன்முறை எனவும் குறிப்பிட்ட திருத்தந்தை, மனிதன், கடவுளோடு சரியான உறவு கொண்டு வாழ்வதே அமைதிக்குச் சிறந்த வழியாகும் என்று தெரிவித்தார்.
புனித பூமியில் அமைதி ஏற்பட இடைவிடாமல் செபிக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.
இந்த இஸ்ரேல் சமய அவையில் யூதம், கிறிஸ்தவம், இசுலாம் ஆகிய மதங்கள் உறுப்பினர்களாக உள்ளன.
2. திருப்பீடப் பேச்சாளர் : 2012ம் ஆண்டில் மெக்சிகோவுக்கும் கியுபாவுக்கும் திருப்பயணம் செல்லத் திருத்தந்தை திட்டம்
நவ.10,2011. 2012ம் ஆண்டு வசந்த காலத்தில் மெக்சிகோவுக்கும் கியுபாவுக்கும் திருப்பயணம் மேற்கொள்ளும் தெளிவான திட்டம் குறித்து திருத்தந்தை பரிசீலித்து வருவதாகத் திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெடரிக்கோ லொம்பார்தி கூறினார்.
மெக்சிகோ மற்றும் கியுபாவுக்குத் திருத்தந்தை திருப்பயணம் மேற்கொள்வது குறித்து இவ்வியாழனன்று நிருபர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அருள்தந்தை லொம்பார்தி, இப்பயணம் பற்றி இவ்விரு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கும் பொறுப்பு அந்நாடுகளின் திருப்பீடத் தூதர்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.
பிரேசில் நாட்டுக்குத் திருத்தந்தை திருப்பயணம் மேற்கொண்டார், இலத்தீன் அமெரிக்காவில் இஸ்பானிய மொழி பேசும் நாடுகளும் தங்களது நாடுகளுக்குத் திருத்தந்தை திருப்பயணம் மேற்கொள்ள வேண்டுமென்று விரும்புகின்றன என்றும் அவர் கூறினார்.
அடுத்த ஆண்டில் திருத்தந்தை மேற்கொள்ளவுள்ள இத்திருப்பயணம், கியுபாவில் Cobre நமதன்னைமரி எனும் பிறரன்பு அன்னைமரியா திருவுருவம் கண்டுபிடிக்கப்பட்டதன் 400ம் ஆண்டு விழாவில் கலந்து கொள்வதாய் இருக்கும் என்றும் திருப்பீடப் பேச்சாளர் கூறினார்
3. பெண் குழந்தைகளை அழித்து விடும் முயற்சிகளில் சீனா ஈடுபட்டுள்ளது - கர்தினால் Martino
நவ.10,2011. சீனாவில் வலியுறுத்தப்படும் ஒரு குழந்தை விதிமுறையால், அங்குள்ள பெற்றோர் தங்களுக்குப் பிறக்கும் குழந்தை ஆண் மகவாக இருக்க வேண்டும் என்றும், பெண் மகவாக இருந்தால், அதை அழித்து விடும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் கர்தினால் Renato Raffaele Martino கூறினார்.
Dignitatis Humanae என்று அழைக்கப்படும் மனித மாண்பு நிறுவனத்தின் கவுரவத் தலைவராக இருக்கும் கர்தினால் Martino, ‘அனைத்து பெண்களுக்கும் அனுமதி’ என்று பொருள்படும் All Girls Allowed என்ற பிறரன்பு நிறுவனத்தின் தலைவர் Chai Lingஐ இப்புதனன்று உரோமையில் சந்தித்துப் பேசியபோது இவ்வாறு கூறினார்.
1989ம் ஆண்டு சீனத் தலைநகரில், Tiananmen சதுக்கத்தில் போராட்டங்களில் ஈடுபட்ட மாணவத் தலைவர்களில் ஒருவரான Chai Ling இருமுறை நொபெல் அமைதி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்.
Chai Lingஐச் சந்தித்தது தனக்குக் கிடைத்த ஓர் அரிய வாய்ப்பு என்று எடுத்துரைத்த கர்தினால் Martino, இவர் உலகெங்கும் சென்று, பெண் குழந்தைகளை அழிப்பதற்கு பல்வேறு நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகளை உலகறியச் செய்கிறார் என்றும், இதனால் இந்த அநீதி உலக மக்களின் மனசாட்சியைத் தட்டியெழுப்புகிறது என்றும் கூறினார்.
இன்று சீனாவில் பிறக்கும் ஒவ்வொரு 120 ஆண் குழந்தைகளுக்கு 100 பெண் குழந்தைகளே பிறக்கும்படியான நிலை உருவாகியுள்ளது என்பதைச் சுட்டிக் காட்டிய Chai Ling, இந்நிலை சீனாவிலும் இன்னும் உலகின் பிற நாடுகளிலும் நீடித்தால், ஆண் பெண் இருபால் நீதி மிகவும் குறைந்து, இதனால் பல பிரச்சனைகள் உருவாகும் என்று கூறினார்.
4. அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களது திருப்பண்டம் சீனாவிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது
ஹாங்காங்கிற்கு நவ.10,2011. அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களது திருப்பண்டம் ஹாங்காங்கிற்கு எடுத்துச் செல்லப்படவிருக்கின்றது என்று யூக்கா செய்தி நிறுவனம் அறிவித்தது.
ஹாங்காங் தலத்திருச்சபை இவ்வாரத்தில் பொதுநிலையினர் ஆண்டை நிறைவு செய்யும் நிகழ்வுகளின் ஒரு கட்டமாக அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களது தலைமுடி ஹாங்காங்கிற்கு எடுத்துச் செல்லப்படவிருக்கின்றது என்று அச்செய்தி நிறுவனம் மேலும் அறிவித்தது.
அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால் சீனாவுக்குத் திருப்பயணம் மேற்கொள்வதற்கு மிகுந்த ஆவலாய் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
5. ஜப்பானில் அணுமின் உற்பத்தித் திட்டங்கள் உடனடியாக நிறுத்தப்பட அந்நாட்டு ஆயர்கள் வலியுறுத்தல்
நவ.10,2011. ஜப்பானில் அணுமின் உற்பத்தித் திட்டங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென்று தாங்கள் விரும்புவதாக அந்நாட்டுக் கத்தோலிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.
“இப்போதே அணுமின் உற்பத்தியை நிறுத்துக” என்ற தலைப்பில் “ஜப்பானில் வாழும் எல்லாருக்குமென” என்று தங்கள் செய்தியை வெளியிட்டுள்ள ஆயர்கள், அணுமின் நிலையங்களால் ஏற்படும் பேராபத்துக்களைத் தவிர்க்கும் பொருட்டு மின்சக்தியைத் தயாரிப்பதற்கு வேறு வழிகள் கண்டுபிடிக்கப்படுமாறு வலியுறுத்தியுள்ளனர்.,
ஜப்பானில் தற்போது 54 அணுமின் நிலையங்கள் இருக்கின்றன எனவும், ஃபுக்குஷிமா போன்று மற்றொரு பெரிய விபத்தின் ஆபத்தை இந்த நிலையங்களில் ஒன்று கொண்டிருக்கின்றது என அறிய வருவதாகவும் ஜப்பான் ஆயர்களின் அறிக்கை எச்சரிக்கின்றது.
ஜப்பானுக்கென ஒரு கலாச்சாரம், தேசிய ஞானம் மற்றும் இயற்கையோடு நல்லிணக்கத்தோடு வாழும் மரபு இருக்கின்றன என்றும் கூறும் ஆயர்கள், புத்தம், ஷிண்டோயிசம் போலவே கிறிஸ்தவமும் மிக நேர்த்தியான எளிமை மனப்பான்மையைக் கொண்டிருக்கின்றது என்றும் தெரிவித்தனர்.
6. கொத்து வெடிகுண்டுகளை முற்றிலும் அழிப்பதற்கு இயேசு சபையினர் முழு ஆதரவு
நவ.10,2011. கொத்து வெடிகுண்டுகளுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள ஓர் அறிக்கைக்கு இயேசு சபையினர் தங்கள் முழு ஆதரவைத் தெரிவித்து, அவ்வறிக்கையில் கையொப்பம் இட்டுள்ளனர்.
ஜெனீவாவில் நவம்பர் 14, வருகிற திங்கள் முதல் நவம்பர் 25 வரை நடக்கவிருக்கும் CCCW, அதாவது, பாரம்பரிய ஆயுதங்கள் பற்றிய நான்காவது மறுபரிசீலினைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட விருக்கும் இவ்வறிக்கையை ஆதரித்து JRS என்று அழைக்கப்படும் இயேசு சபையினரின் அகதிகள் பணிக்குழு கையொப்பாம் இட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் மக்களின் உயிர்களையும், உறுப்புக்களையும் பறித்துவரும் இந்த ஆயுதங்களை உலகிலிருந்து முற்றிலும் அழிப்பதற்கு ஐ.நா. அமைப்பும் இன்னும் பிற மனிதாபிமான அமைப்புக்களும் இன்னும் தீவிரமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கம்போடியாவில் JRS பணியில் ஈடுபட்டுள்ள அருள்தந்தை Javi Olaguivel கூறினார்.
கண்ணி வெடிகள், கொத்து வெடிகள் ஆகியவை கம்போடிய மக்களின் தினசரி வாழ்வைப் பெரிதும் பாதிக்கின்றன என்றும், பள்ளிக் குழந்தைகள் நடமாடும் இடங்களுக்கு அருகிலும் இதுபோன்ற வெடிகளை இன்றும் காணலாம் என்றும் அருள்தந்தை Olaguivel சுட்டிக் காட்டினார்.
7. பாகிஸ்தானில் பயன்படுத்தப்படும் பாடப் புத்தகங்களில் சிறுபான்மை மதத்தவருக்கு எதிரான பகைமையை வளர்க்கும் எண்ணங்கள்
நவ.10,2011. பாகிஸ்தானில் அரசுப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் பாடப் புத்தகங்களில் சிறுபான்மை மதத்தவருக்கு எதிரான, சகிப்புத் தன்மையற்ற வழிகளில் பகைமையை வளர்க்கும் எண்ணங்கள் இடம்பெற்றுள்ளன என்று அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஓர் அறிக்கை கூறுகிறது.
அகில உலகில் நிலவும் சமயச் சுதந்திரம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்ட அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுக் கழகம் இப்புதனன்று வாஷிங்டனில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், பாகிஸ்தான் மாணவர்களிடையே சகிப்புத் தன்மையைக் குறைக்கும் வகையில் பள்ளிப்பாடங்கள் அமைந்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
‘பாகிஸ்தானில் கல்வியும் மதப் பாகுபாடுகளும்’ என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் முதல் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயன்படுத்தப்படும் 100 பாடப்புத்தங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வில் ஈடுபட்டோர் 37 அரசுப் பள்ளிகளையும், 19 இஸ்லாமியப் பள்ளிகளையும் பார்வையிட்டு, 500க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்களைச் சந்தித்துள்ளனர்.
இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர் ஆகிய அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களையும் பற்றி கூறப்பட்டுள்ள பல கருத்துக்கள் இம்மதத்தினரைப் பற்றி குறைவான மதிப்பை மாணவர்கள் மத்தியில் விதைக்கின்றன என்றும், பாகிஸ்தான் நாட்டின் சமுதாயம், கலாச்சாரம் ஆகியத் துறைகளில் சிறுபான்மை மதங்களைச் சார்ந்தவர்கள் ஆற்றியுள்ளப் பணிகளைக் குறித்து எந்தக் குறிப்புக்களும் பாடப்புத்தகங்களில் இடம்பெறவில்லை என்றும் இவ்வாய்வில் தெரிய வந்துள்ளது.
8. குஜராத் கலவரத்தில் 33 முஸ்லீம்கள் கொல்லப்பட்ட நிகழ்வில் 31 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதற்கு இயேசு சபை மனித உரிமை ஆர்வலர் வரவேற்பு
நவ.10,2011. குஜராத் மாநிலம் சர்தார்புரா கிராமத்தில் கடந்த 2002ம் ஆண்டுக் கலவரத்தில் 33 முஸ்லீம்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் 31 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதை வரவேற்றுள்ளார் இயேசு சபை மனித உரிமை ஆர்வலர் ஒருவர்.
குஜராத் சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ள இத்தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அருள்தந்தை Cedric Prakash, உண்மை மற்றும் நீதியின் சக்கரங்கள் மெதுவாக சுழன்றாலும் அவை, நிச்சயமாக, சரியான திசை நோக்கி நகரும் என்று தெரிவித்தார்.
கடந்த 2002ம் ஆண்டின் கோத்ரா இரயில் எரி்ப்புச் சம்பவத்தையடுத்து நடந்த கலவரத்திற்குப் பயந்து சர்தார்புரா கிராமத்தில் இப்ராஹிம் ஷேக் என்பவரின் வீட்டில் மக்கள் அடைக்கலம் தேடியிருந்தனர். சுமார் 1,500 பேர் அடங்கிய கும்பல் அவ்வீட்டிற்குத் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. அதில், 22 பெண்கள் உள்பட 33 பேர் எரித்துக் கொல்லப்பட்டார்கள்.
அதுதொடர்பாக நடந்த விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 73 பேரில் 42 பேரை விடுவித்த நீதிமன்றம், 31 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தலா ஐம்பதாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவர்கள் உட்பட 112 பேர் சாட்சி சொல்லியிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment