Wednesday 9 November 2011

Catholic News - hottest and latest - 08 November 2011

1. அமைதியையும், ஒப்புரவையும் வளர்ப்பதே மதங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு - வத்திக்கான் உயர் அதிகாரி

2. மதத்தீவிரவாதத்தை எதிர்த்து மதங்கள் ஒன்றிணைந்து உழைக்க வேண்டிய தேவை

3. வியட்நாமில் துறவு இல்லம் தாக்கப்பட்டதற்கு கண்டனம்

4. சூடான் நாடுகளின் வன்முறைகள் குறித்து ஆயர் பேரவை கவலை

5. ஒப்புரவின் பாதை திறக்கும் வாய்ப்பு குறித்து கொலம்பிய ஆயர் நம்பிக்கை

6. திருத்தந்தை  அசிசி நகரில் விடுத்த அழைப்பே நாம் எதிர்காலத்தில் பின்பற்றக் கூடிய சிறந்த பாதை - நேபாளத்தின் இஸ்லாமியத் தலைவர்கள்

7. இலங்கையில் போர் முடிந்தும் சித்ரவதைகள் முடியவில்லை  - அலைவரிசை 4

8. 2010ல் இந்தியச் சாலை விபத்துகளில் 3.84 லட்சம் பேர் மரணம்

------------------------------------------------------------------------------------------------------

1. அமைதியையும், ஒப்புரவையும் வளர்ப்பதே மதங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு - வத்திக்கான் உயர் அதிகாரி

நவ.08,2011. மக்களிடையே அமைதியையும், ஒப்புரவையும் வளர்ப்பதே மதங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு என்றும், பிரிவுகளையும் பிரச்சனைகளையும் உருவாக்குவது அல்ல என்றும் வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்தியாவில் தற்போது பயணம் மேற்கொண்டுள்ள திருப்பீடத்தின் பல்சமய உரையாடல் அவைத் தலைவரான கர்தினால் Jean-Louis Tauran, பூனேயில் நடைபெறும் ஒரு பலசமயக் கருத்தரங்கில் இத்திங்களன்று பேசுகையில் இவ்வாறு கூறினார்.
பூனேயில் ஆசியாவின் மிகப் பெரும் குருத்துவ பயிற்சி மையமாகக் கருதப்படும் ஞான தீப வித்யாபீத் என்ற நிறுவனத்தில் இப்புதன் வரை நடைபெறும் ஒரு பல்சமயக் கருத்தரங்கில் கர்தினால் தவ்ரான் பேசுகையில், மதங்களின் பெயரால் ஒரு சில சுயநலவாதிகள் பரப்பி வரும் அடிப்படைவாதப் போக்கு வருத்தம் தருகிறது என்று கூறினார்.
மதங்களைப் பயன்படுத்தி வெறுப்பை விதைக்கும் எந்த ஒரு அமைப்புக்கும் மக்கள் இனி செவிசாய்க்காமல், ஒற்றுமையையும், ஒப்புரவையும் வளர்க்க முயல வேண்டும் என்று கர்தினால் வேண்டுகோள் விடுத்தார்.
பல கலாச்சாரங்கள், மதங்கள் ஆகிவற்றின் சங்கமமான இந்தியாவில் பல் சமய உரையாடல் இந்தியர்களின் அன்றாட வாழ்வு முறையாக மாற வேண்டும் என்று திருப்பீடத்தின் பல்சமய உரையாடல் அவையில் உறுப்பினராகப் பணியாற்றும் பூனே ஆயர் தாமஸ் தாப்ரே கூறினார்.


2. மதத்தீவிரவாதத்தை எதிர்த்து மதங்கள் ஒன்றிணைந்து உழைக்க வேண்டிய தேவை

நவ.08,2011. உலகில் மதச்சுதந்திரம் பாதுகாக்கப்பட யூதர்களும் கத்தோலிக்கர்களும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியுயார்க் பேராயர் திமோத்தி டோலன்.
அரசின் அண்மைச் செயல்பாடுகள், மதத்தையும் மனச்சான்றையும் நசுக்கும் ஆபத்தானச் சூழலை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது குறித்தும் தெரிவித்த பேராயர், உலகின் அனைத்து மத நம்பிக்கையாளர்களும் மதத்தீவிரவாதத்தால் அச்சுறுத்தப்பட்டு வருகிறார்கள் எனவும் தெரிவித்தார்.
மதத்தீவிரவாதங்களின் போக்கால், பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு மதங்கள் ஒன்றிணைந்து உழைக்க வேண்டிய தேவை உருவாகியுள்ளது எனவும் கூறினார் பேராயர் டோலன்.


3. வியட்நாமில் துறவு இல்லம் தாக்கப்பட்டதற்கு கண்டனம்

நவ.08,2011. வியட்நாமின் தாய் ஹா பங்குதளமும் அதனருகேயுள்ள துறவு இல்லமும், இராணுவம் மற்றும் காவல் துறையின் உதவியோடு தாக்கப்பட்டுள்ளது குறித்து தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது அந்நாட்டின் Hanoi உயர் மறைமாவட்டம்.
கடந்த வியாழனன்று நாய்கள், குண்டர்கள் மற்றும் அரசு தொலைக்காட்சி குழுவோடு துறவு இல்லத்திற்கு முன் வந்த வியட்நாம் இராணுவமும் காவல்துறையும், அவ்வில்லத்தின் முன்கதவை உடைத்ததோடு, அங்குள்ள துறவிகளையும் வசை பாடி தாக்கியுள்ளனர்.
தாய் ஹா பங்குதளத்தை நடத்தும் இந்தத் துறவு சபைக்குச் சொந்தமான இடத்தை கைப்பற்ற விரும்பும் அரசின் செயலுக்கு இத்துறவிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
அரசுத்துறையின் இத்தாக்குதல் குறித்து அறிந்து கத்தோலிக்கர்கள் கூடியதைத் தொடர்ந்து, இத்தாக்குதல் கைவிடப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


4. சூடான் நாடுகளின் வன்முறைகள் குறித்து ஆயர் பேரவை கவலை

நவ.08,2011. சூடானிலும், புதிய நாடாக உருவாகியுள்ள தென்சூடானிலும் பரவி வரும் வன்முறைகள், அனைத்துலகச் சமூகத்தின் தலையீடு இல்லையெனில் உள்நாட்டுப்போராக வெடிக்கும் அபாயம் இருப்பதாக சூடான் ஆயர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
மக்களின் நியாயமான ஏக்கங்கள் செவிமடுக்கப்படவில்லையெனில், மோதல்கள் உருவாவது தடுக்க முடியாததாகிவிடும் என ஏற்கனவே தாங்கள் எச்சரித்துள்ளதாகக் கூறும் சூடான் ஆயர் பேரவை, சூடானும் தென்சூடானும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி, அதன் மூலம் மோதல்களை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகமாகவே காணக்கிடப்பதாகக் கவலையை வெளியிட்டுள்ளது.
இரு சூடான் நாடுகளும் குடியரசு முறையில் வெளிப்படையான ஆட்சியை நடத்தவேண்டும் என விண்ணப்பித்துள்ள ஆயர்கள், இரு நாடுகளின் எல்லையில் குடிபெயர்ந்தவர்களாக வாழும் ஏறத்தாழ இரண்டு இலட்சம் மக்களின் வாழ்வை மேம்படுத்தும் மனிதாபிமான வழிகள் திறக்கப்படவேண்டும் என விண்ணப்பித்துள்ளனர்.


5. ஒப்புரவின் பாதை திறக்கும் வாய்ப்பு குறித்து கொலம்பிய ஆயர் நம்பிக்கை

நவ.08,2011. கொலம்பியாவின் கொரில்லாக்குழுத் தலைவர் அல்ஃபோன்சோ கானோ இராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளது குறித்து தலத்திருச்சபை உவகை அடையவில்லை, ஆனால் இந்த மரணம் மூலம் பேச்சுவார்த்தை மற்றும் ஒப்புரவிற்கான பாதை திறக்கும் என்ற நம்பிக்கைக் கொண்டுள்ளதாக கொலம்பிய தலத்திருச்சபை அறிவித்துள்ளது.
வன்முறை எப்போதும் வன்முறையையேக் கொணரும் என்பது உண்மையென்ற நிலையில், தனியாரின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் ஒழுங்கமைவு ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு இம்மரணம் சிலவேளைகளில் நியாயப்படுத்தப்பட்டாலும், பேச்சுவார்த்தையே அமைதிக்கான வழி என்பதை திருச்சபை எப்போதும் வலியுறுத்த விரும்புகிறது என்று கொலம்பிய ஆயர் பேரவையின் பொதுச்செயலர் ஆயர் Juan Vicente Cordoba Villota கூறினார்.
அமைதி முயற்சிகளில் நடுநிலையாளராக இருந்து செயல்பட தலத்திருச்சபை தயாராக இருப்பதாகவும் எடுத்துரைத்தார் ஆயர் Villota.


6. திருத்தந்தை  அசிசி நகரில் விடுத்த அழைப்பே நாம் எதிர்காலத்தில் பின்பற்றக் கூடிய சிறந்த பாதை - நேபாளத்தின் இஸ்லாமியத் தலைவர்கள்

நவ.08,2011. மதங்களுக்கிடையே வன்முறையற்ற நல்லுறவும் அமைதியும் வளர வேண்டுமென்று திருத்தந்தை  அசிசி நகரில் விடுத்த அழைப்பே நாம் எதிர்காலத்தில் பின்பற்றக் கூடிய சிறந்த பாதை என்று நேபாளத்தைச் சேர்ந்த இஸ்லாமியத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
இத்திங்களன்று கொண்டாடப்பட்ட பக்ரீத் விழாவையொட்டி, நேபாளத்தில் இஸ்லாமிய மக்கள் சார்பில் செய்தி வெளியிட்ட தலைவர்கள், மதங்களுக்கிடையே உருவாக வேண்டிய உரையாடலை திருத்தந்தை வலியுறுத்தியிருப்பதைப் பாராட்டினர்.
இந்துக்களைப் பெரும்பான்மையாய் கொண்டிருக்கும் நேபாளத்தில், 2006ம் ஆண்டு வரை கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் விழாக்கள் கொண்டாடப்படாமல் இருந்தன. 2006ம் ஆண்டு அந்நாடு மதசார்பற்ற நாடு என்று அறிவிக்கப்பட்டபின்னர், கிறிஸ்தவ, இஸ்லாமிய விழாக்களும் அரசு விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், அந்நாட்டில் மதங்களுக்கிடையில் இன்னும் சகிப்புத் தன்மை வளர வேண்டியுள்ளது என்றும், திருத்தந்தை அசிசி நகரில் காட்டிய வழியே மதங்களிடையே இன்னும் ஆழமான புரிதலை உருவாக்கும் என்றும் இஸ்லாமியத் தலைவர்கள் கூறினர்.


7. இலங்கையில் போர் முடிந்தும் சித்ரவதைகள் முடியவில்லை  - அலைவரிசை 4

நவ.08,2011. போர் முடிவடைந்து 2 வருடங்கள் முடிவடைந்துள்ள நிலையில், இலங்கையில் உள்ள இரகசியச் சிறைச்சாலைகளில் தமிழ் கைதிகள் இன்னும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக இங்கிலாந்தின் அலைவரிசை 4 தொலைக்காட்சி தெரிவித்துஆதாரமாக, வீடியோப் பதிவுகளையும் வெளியிட்டுள்ளது.
அண்மையில் இலங்கைச் சிறையில் இருந்து தப்பி பின்னர் இங்கிலாந்து வந்து அங்கு அகதிகளாகத் தங்களை ஏற்றுக்கொள்ளும்படி விண்ணப்பித்துள்ள இருவரது வாக்குமூலங்களை அது தற்போது வெளியிட்டுள்ளது.
தமிழ் இளைஞர்களைக் கட்டிவைத்து முதுகில் பலமாக அடித்து சித்திரவதைப்படுத்தியுள்ளனர் இலங்கை இராணுவத்தினர்.
போர் குற்றம் மற்றும் இன அழிப்பு என்பன ஒரு புறம் இருக்க, தற்போது தமிழ் இளைஞர்களை அளவுக்கதிகமாக சித்திரவதை செய்யும் குற்றச்செயல்களில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது என அலைவரிசை 4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.


8. 2010ல் இந்தியச் சாலை விபத்துகளில் 3.84 லட்சம் பேர் மரணம்

நவ.08,2011. இந்தியாவில் கடந்த ஆண்டு, 3 லட்சத்து 84 ஆயிரத்து 649 பேர், சாலை விபத்துகளில் பலியாகியுள்ளனர் என்று தேசிய குற்றப்பதிவு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.
கடந்த 2000ம் ஆண்டில், நாடு முழுவதும், 2 லட்சத்து 55 ஆயிரத்து 883 பேர், சாலை விபத்துகளில் பலியானார்கள். ஆனால், இந்த எண்ணிக்கை, கடந்த 2010ம் ஆண்டில், 3 லட்சத்து 84 ஆயிரத்து 649 ஆக உயர்ந்துள்ளது என்கிறது இந்த அறிக்கை.
கடந்த ஆண்டு நாடு முழுவதும் நடந்த விபத்துகளில், ஆறில் ஒரு பங்கு  மகாராஷ்டிராவில் நடந்துள்ளது, இதில் 64 ஆயிரத்து 204 பேர் இறந்துள்ளனர் எனக் கூறும் தேசிய குற்றப்பதிவு ஆணைய அறிக்கை, இதற்கு அடுத்தபடியாக, பலியானோர் எண்ணிக்கை விகிதத்தில், உத்தரப் பிரதேசமும், மத்தியப் பிரதேசமும், தமிழகமும், ஆந்திராவும் இடம் வகிக்கின்றன என்று கூறுகிறது.



No comments:

Post a Comment