Monday 28 November 2011

Catholic News - hottest and latest - 25 November 2011

1. திருச்சபைப் பணிகளுக்கு பொதுநிலையினரின் பங்களிப்பு குறித்து திருத்தந்தை

2. இந்திய கத்தோலிக்க அவையின் முதல் அமர்வில் திருச்சபை தலைவர்கள் வழங்கிய செய்திகள்

3. காங்கோ நாட்டில் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலையொட்டி ஆயர்கள் விடுத்த வேண்டுகோள்

4. மியான்மார் இராணுவ அரசு மேற்கொண்டுள்ள புதிய முயற்சிகள் குறித்து பேராயர் வெளியிட்ட நம்பிக்கை

5. இயேசு கிறிஸ்துவின் பெயரைப் பயன்படுத்தப்படக் கூடாதென்று பாகிஸ்தான் அரசு விதித்திருந்த தடையை நீக்கியிருப்பதற்கு லாகூர் பேராயர் வரவேற்பு

6. பெண்கள் முன்னேற்றத்திற்கு இளையோர் முக்கிய கருவிகளாக மாற வேண்டும் - ஐ.நா. பொதுச்செயலர்

7. காக்கப்படவேண்டிய பாரம்பரியக் கலைகள்: யுனெஸ்கோ அறிக்கை

------------------------------------------------------------------------------------------------------
1. திருச்சபைப் பணிகளுக்கு பொதுநிலையினரின் பங்களிப்பு குறித்து திருத்தந்தை

நவ.25,2011. திருச்சபையின் மறைப்பணிகளுக்கு அனைவரின் பங்களிப்பும் இன்றியமையாதது, குறிப்பாக பொதுநிலையினரின் பங்களிப்பு, என இவ்வெள்ளியன்று பொதுநிலையினருக்கான திருப்பீட அவையின் அங்கத்தினர்களை திருப்பீடத்தில் சந்தித்தபோது கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
பொதுநிலையினர் ஒவ்வொருவரும் தாங்கள் வாழும் இன்றையச் சூழல்களில் தங்கள் திருமுழுக்கை வாழ்ந்து, அதன் வழி சாட்சியம் பகர வேண்டுமென இறைவன் எதிர்பார்க்கிறார் என உரைத்த திருத்தந்தை, கடந்த ஆண்டு தென்கொரியாவின் சியோல் நகரில் இடம்பெற்ற ஆசிய பொதுநிலையினருக்கான திருச்சபை கூட்டம்,  மத்ரித்தில் இடம்பெற்ற உலக இளையோர் மாநாடு, அடுத்த ஆண்டு இடம்பெற உள்ள புதிய நற்செய்தி அறிவிப்பு குறித்த உலக ஆயர் மாமன்றத்தின் 13வது பொது அவைக் கூட்டம் ஆகியவை பற்றியும் எடுத்துரைத்தார்.
பல்வேறு கலாச்சாரங்களையும் மதங்களையும் கொண்ட ஆசியக்கண்டத்தில் சிறுபான்மையினராக வாழும் கிறிஸ்தவர்கள், துன்பங்களையும் சில வேளைகளில் சித்ரவதைகளையும் தங்களின் விசுவாசத்திற்காக அனுபவித்து வரும் வேளையில்,  'இன்றைய ஆசியாவில் இயேசுவை அறிவித்தல்' என்ற தலைப்பிலான சியோல் கூட்டம்,  பொதுநிலையினருக்கு உறுதிப்பாட்டையும் சக்தியையும் வழங்குவதாக இருந்தது எனப் பாராட்டினார் பாப்பிறை.
ஆசியாவின் பொதுநிலையினருக்கென கடந்த ஆண்டில் ஏற்பாடு செய்த கூட்டம் போல் வரும் ஆண்டில் ஆப்ரிக்க பொதுநிலையினருக்கென அக்கண்டத்தின் கேம்ரூனில் பொதுநிலையினருக்கான திருப்பீட அவை ஏற்பாடு செய்து வருவதையும் சுட்டிக்காட்டினார் பாப்பிறை.
2013ம் ஆண்டு Rio de Janeiroவில் நடைபெறவுள்ள உலக இளையோர் நாளையொட்டிய ஏற்பாடுகள் இடம்பெற்றுவரும் வேளையில், 'இன்று இறைவனைக் குறித்த கேள்வி' என்ற தலைப்பில் திருப்பீட அவையின் நிறையமர்வுக் கூட்டம் நடைபெறுவது பொருத்தமானதே என்று கூறிய திருத்தந்தை, இன்றைய பொருளாதார சமூக நெருக்கடிகள் துவங்குவதற்கு முன்னரே, அர்த்தங்கள் மற்றும் மதிப்பீடுகள் குறித்த நெருக்கடி துவங்கி விட்டது என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டினார். இத்தகைய ஒரு பின்னணியில் கடவுளைக் குறித்தக் கேள்வி என்பது கேள்விகளின் கேள்வியாகிறது எனவும் உரைத்தார் அவர்.
குடும்பத்திலும், பணியிடங்களிலும், அரசியலிலும் பொருளாதாரச்சூழல்களிலும் மாற்றங்கள் இடம்பெறும்போது, கடவுளோடும் கடவுளின்றியும் வாழ்வது எப்படிப்பட்டதென்பதை இக்கால மனிதர்கள் உணரவேண்டியது அவசியம் என்ற விண்ணப்பத்தையும் விடுத்தார் திருத்தந்தை. நம் காலத்தின் பெரும் சவால்களுக்கான நம் அளிக்கும் பதிலுரை ஆழமான மனமாற்றத்திற்கு முதலில் அழைப்புவிடுக்கிறது, ஏனெனில் உலகின் ஒளியாகவும் உப்பாகவும் நம்மை மாற்றிய நம் திருமுழுக்கு, அனைத்தையும் மாற்றியமைக்க வல்லது என மேலும் தன் உரையில் குறிப்பிட்டார் திருத்தந்தை.


2. இந்திய கத்தோலிக்க அவையின் முதல் அமர்வில் திருச்சபை தலைவர்கள் வழங்கிய செய்திகள்

நவ.25,2011. இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைப்பது, சிறப்பாக, இங்கு வாழும் தலித், பழங்குடியினர் மற்றும் ஏழைகளின் முன்னேற்றத்திற்கு உழைப்பது நம் கடமை என்று கர்தினால் ஆஸ்வல்ட் கிரேசியஸ் கூறினார்.
இவ்வியாழனன்று கேரளாவின் கொச்சியில் ஆரம்பித்த இந்திய கத்தோலிக்க அவையின் முதல் அமர்வில் உரையாற்றிய கர்தினால் கிரேசியஸ், அமைதியின்றி முன்னேற்றமும், மன்னிக்கும் மனமின்றி அமைதியும் உருவாக முடியாது என்று கூறினார்.
இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக இருப்பது ஊழலே என்றுரைத்த கர்தினால் கிரேசியஸ், இந்த நோயை வேரோடு அழிப்பது இந்திய மக்களின் கடமை என்பதையும் சுட்டிக் காட்டினார்.
இந்த அமர்வில் உரையாற்றிய சீரோ மலபார் ரீதி உயர் பேராயர் ஜார்ஜ் ஆலஞ்சேரி, உலகமயமாக்கல் மற்றும் நுகர்வு கலாச்சாரம் ஏழை செல்வந்தர்களிடையே உள்ள தூரத்தை வெகுவாக அதிகரித்து விட்டது என்று கூறினார்.
தலித் மற்றும் ஏழைகளை அநீதியான முறைகளில் பயன்படுத்தும் வழிகளை நாம் அறவே ஒழித்தால் மட்டுமே இந்தியா முன்னேற முடியும் என்று பேராயர் ஆலஞ்சேரி வலியுறுத்தினார்.
ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்திய  கத்தோலிக்க அவையின் கூட்டத்தில் ஆயர்கள், குருக்கள், துறவியர் மற்றும் பொதுநிலையினர் கலந்து கொண்டு, இந்திய கத்தோலிக்கத் திருச்சபையின் பல்வேறு பணிகள் பற்றி ஆலோசனைகள் மேற்கொண்டுவருகின்றனர்.


3. காங்கோ நாட்டில் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலையொட்டி ஆயர்கள் விடுத்த வேண்டுகோள்

நவ.25,2011. நவம்பர் 28, வருகிற திங்களன்று ஆப்ரிக்காவின் காங்கோ நாட்டில் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் தேர்தல் முடிவுகளை தகுந்த மன நிலையோடு ஏற்கவும், வன்முறைகளைத் தூண்ட வேண்டாமென்றும் அந்நாட்டு ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த 40 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக அந்நாட்டில் நடைபெறும் ஜனநாயக வழித் தேர்தலை மக்களும் தலைவர்களும் தகுந்த முறையில் நடத்தி முடிக்குமாறு ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இத்தேர்தலின் முடிவில் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர் அரசியல் சட்டங்களை மதிக்கிறவராகவும், மக்கள் நலனிலும், நாட்டு முன்னேற்றத்திலும் அக்கறை உள்ளவராகவும் இருப்பதையே தான் விரும்புவதாக Kisangani பேராயர் Marcel Utembi கூறினார்.
உலகின் மிக வறுமைப்பட்ட நாடுகளில் ஒன்றாக விளங்கும் காங்கோவில் 1998க்கும் 2003க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் நடந்த இனக்கலவரங்களால் 30 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். இன்றும் அந்நாட்டில் பல்வேறு நோய்களுக்கு பலியாகும் மக்கள் ஒவ்வொரு நாளும் 1000 பேருக்கும் அதிகம். நாட்டின் 80 விழுக்காடு மக்கள் வறுமை கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர் என்ற தகவல்களை ICN என்ற கத்தோலிக்க செய்தி நிறுவனம் அளித்துள்ளது.
காங்கோ கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் பிரதிநிதிகள் கடந்த மாதம் பிரித்தானிய அரசுக்கு பயணம் மேற்கொண்டபோது, தங்கள் நாட்டில் சாவு கலாச்சாரத்தை வளர்த்து வரும் தலைவர்களையும், குழுக்களையும் குறித்து தங்கள் கவலைகளை வெளியிட்டனர்.


4. மியான்மார் இராணுவ அரசு மேற்கொண்டுள்ள புதிய முயற்சிகள் குறித்து பேராயர் வெளியிட்ட நம்பிக்கை

நவ.25,2011. நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைப்பதற்கு மதத் தலைவர்களை அரசு அழைத்திருப்பதும், அனைத்து மதங்களுக்கும் சமமான உரிமைகள் வழங்கியிருப்பதும் நாடு நல்லதொரு திசையை நோக்கி செல்கிறது என்பதைக் காட்டும் நம்பிக்கை அடையாளங்கள் என்று மியான்மாரின் ஆயர் ஒருவர் கூறினார்.
எதிர்கட்சித் தலைவர் Aung San Suu Kyiயைத் தேர்தலில் போட்டியிட அழைத்திருப்பது, அடுத்த ASEAN கூட்டம் மியான்மாரில் நடக்க விருப்பதாக அறிவித்திருப்பது ஆகிய செயல்பாடுகளைக் காணும்போது மனதில் நம்பிக்கை பிறந்துள்ளது என்று Yangon பேராயர் Charles Maung Bo கூறினார்.
உலகின் பிற நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்தும் வகையில் மியான்மார் இராணுவ அரசு மேற்கொண்டுள்ள இந்த புதிய முயற்சிகள் குறித்து தன் நம்பிக்கையை வெளியிட்ட பேராயர் Maung Bo, இந்த நாட்டில் முன்னேற்றம் தொடர்ந்து வளர அனைத்து மதத் தலைவர்களின் ஒத்துழைப்பையும் அரசு பெறவேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.
பல ஆண்டுகளாக அரசின் அடக்கு முறைகளால் மனம் தளர்ந்திருந்த கிறிஸ்தவ சமுதாயம் இனி நாட்டின் முன்னேற்றத்திற்காக முழு மூச்சுடன் உழைக்கும் என்ற தன் நம்பிக்கையை வெளியிட்டார் மியான்மார் ஆயர் பேரவையின் செயலரான பேராயர் Charles Maung Bo.


5. இயேசு கிறிஸ்துவின் பெயரைப் பயன்படுத்தப்படக் கூடாதென்று பாகிஸ்தான் அரசு விதித்திருந்த தடையை நீக்கியிருப்பதற்கு லாகூர் பேராயர் வரவேற்பு

நவ.25,2011. செல்லிடப் பேசிகளின் குறுஞ்செய்திகளில் இயேசு கிறிஸ்துவின் பெயரைப் பயன்படுத்தப்படக் கூடாதென்று பாகிஸ்தான் அரசு விதித்திருந்த தடையை நீக்கியிருப்பதை வரவேற்கிறோம் என்று லாகூர் பேராயர் செபாஸ்டின் ஷா கூறினார்.
தலத்திருச்சபை அதிகாரிகள், குருக்கள், கிறிஸ்தவ அரசியல் தலைவர்கள் மற்றும் சில இஸ்லாமியத் தலைவர்கள் அனைவரும் தெரிவித்த எதிர்ப்புக்களால் அரசு இந்த முடிவை இப்புதனன்று அறிவித்தது.
மும்பையில் செயல்படும் கத்தோலிக்க அவை ஒன்றும் பாகிஸ்தான் அரசின் இந்த தடை உத்தரவை எதிர்த்து பாகிஸ்தான் தொடர்பு சாதன அமைச்சருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியதாக UCAN செய்தியொன்று கூறியுள்ளது.
இயேசு கிறிஸ்துவின் பெயரை தகாத வார்த்தைகளின் பட்டியலில் பாகிஸ்தான் அரசு சேர்க்க முயன்ற இதுபோன்ற தவறான முடிவுகளை இனியும் இந்த அரசு எடுக்காமல் இருக்க வேண்டும் என்று அனைத்து மதங்களின் ஒருங்கிணைப்பு என்ற அமைப்பை நடத்தி வரும் அருள்தந்தை ஜேம்ஸ் சன்னன் கூறினார்.
அமைதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் இந்த நாட்டில் மதங்கள் தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு முன் அரசு இன்னும் தீவிரமான கலந்துரையாடல்களில் ஈடுபடுவது நாட்டிற்கு நல்லது என்று அருள்தந்தை சன்னன் மேலும் கூறினார்.
குறுஞ்செய்திகள் பரிமாற்றத்தில் பாகிஸ்தான் உலகில் 5வது இடத்தில் உள்ளது என்றும் ஒவ்வொரு நாளும் அந்நாட்டில் பரிமாறப்படும் குறுஞ்செய்திகளின் எண்ணிக்கை 80 கோடி என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


6. பெண்கள் முன்னேற்றத்திற்கு இளையோர் முக்கிய கருவிகளாக மாற வேண்டும் - ஐ.நா. பொதுச்செயலர்

நவ.25,2011. பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை ஒழிக்க மனித சமுதாயம் முழுவதும், முக்கியமாக, இளையோர் சமுதாயம் இன்னும் அதிக தீர்மானத்துடன் செயல்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் கேட்டுக்கொண்டார்.
பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகளை அகற்றும் உலக நாள் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 25ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
இவ்வெள்ளியன்று கடைபிடிக்கப்படும் இவ்வுலகநாளையொட்டி, இப்புதனன்று நியூயார்க் நகரில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய பான் கி மூன், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் முற்றிலும் ஒழியும் வரை ஆண் பெண் சமத்துவம் நிலைபெறாது என்று கூறினார்.
ஆண்மை என்பதன் உண்மையான பொருளை இளைஞர்களும், வளர் இளம் சிறுவர்களும் சரியான வகையில் உணர்வதே பெண்கள் மீது அவர்கள் மதிப்பு கொள்ளச் செய்யும் ஒரு சிறந்த வழி என்று பான் கி மூன் சுட்டிக் காட்டினார்.
இளையோரிடையே உள்ள சக்திகளை நல்ல வழிகளில் செலவிட்டு, சமுதாய முன்னேற்றத்திற்கும், முக்கியமாக பெண்கள் முன்னேற்றத்திற்கும் இளையோரை கருவிகளாக மாற்ற வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலர் எடுத்தரைத்தார்.
பெண்களுக்கு  எதிராக இழைக்கப்படும் வன்முறைகள் பெண்களை மட்டுமல்லாமல், உலகச் சமுதாயத்தின் பெருமையைச் சீர்குலைக்கிறது என்று ஐ.நா.பெண்கள் அமைப்பின் உயர் இயக்குனர் Michelle Bachelet கூறினார்.
உலகில் 125 நாடுகளில் இல்லங்களில் நடக்கும் வன்முறைகள் குற்றங்களாகக் கருதப்படுகின்றன, மற்றும் 139 நாடுகளில் ஆண், பெண் சமத்துவம் சட்ட ரீதியாக வலியுறுத்தப்பட்டுள்ளது என்பவைகளைச் சுட்டிக்காட்டி பேசிய Bachelet, இருப்பினும், உலகில் ஒவ்வொரு 10 பெண்களுக்கு 6 பெண்கள் வன்முறைகளை தங்கள் வாழ்வில் சந்தித்து வருகின்றனர் என்பதையும் எடுத்துரைத்தார்.


7. காக்கப்படவேண்டிய பாரம்பரியக் கலைகள்: யுனெஸ்கோ அறிக்கை

நவ.25,2011. ஐ.நா.வின் கல்வி மற்றும் கலாச்சார நிறுவனமான UNESCO, உலகின் பல்வேறு நாடுகளிலும் அழிவு நிலையில் உள்ள பாரம்பரியக் கலைகள் பலவற்றில் எட்டுக் கலைகளை காக்கப்பட வேண்டிய கலைகள் பட்டியலில் இவ்வியாழனன்று இணைத்தது.
பாரம்பரிய கலாச்சாரச் சின்னங்களாக விளங்குவதற்குரிய கலைகள் என்ற தகுதியைப் பெறுவதற்கு விண்ணப்பித்துள்ள எண்பதுக்கும் மேற்பட்ட கலைவடிவங்களில் தகுந்தவற்றைத் தேர்ந்தெடுப்பதற்காக யுனெஸ்கோ அமைப்பினர் இந்தோனேஷியாவின் பாலி தீவில் கடந்த செவ்வாய் முதல் ஒரு வாரக் கூட்டம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.
வியட்நாமின் வடமேற்குப் பகுதிகளில் திருவிழாக்களின்போது பாடப்படுபம் Xoan நாட்டுப்புறப் பாடல்கள், இந்தோனேஷியாவின் அச்சே என்ற பகுதியில் பல காலமாக ஆடப்பட்டுவருகின்ற 'சமன்' நாட்டியம், வடகிழக்குச் சீனாவில் இருந்து வருகின்ற Hezhen Yimakan என்ற கதாகாலட்சேபம், இரானில் படகு கட்டுவதில் பயன்படுத்தப்படும் பாரம்பரிய வழிமுறை போன்றவை உட்பட 11 கலைகள் பாதுகாக்கப்பட வேண்டிய அளவுக்கு உயர்வானவை என்று ஐ.நா.அவையின் கலாச்சார பாதுகாப்பு நிறுவனமான யுனெஸ்கோவின் அதிகாரிகள் இவ்வெள்ளி வரை முடிவு செய்துள்ளனர்.
 

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...