1. அமெரிக்க ஆயர்களுக்கு திருத்தந்தையின் உரை
2. நோயுற்றோருக்கு சேவையாற்றுவது என்பது, நற்செய்தி அறிவிப்பு அர்ப்பணம் மற்றும் அக்கறை
3. திருச்சபையின் படிப்பினைகளைப் பறைச்சாற்றவேண்டிய கடமை ஒவ்வோர் ஆயருக்கும் உள்ளது
4. இயற்கையைக் காப்பாற்ற வேண்டியது கிறிஸ்தவக் கடமை
5. அன்னை திரேசா பிறரன்பு சகோதரிகள் சபை இல்லம் ஒன்றில் சோதனைச் செய்துள்ளனர் இலங்கை காவல்துறையினர்
6. இலங்கையில் நாளொன்றுக்கு 1000 கருக்கலைப்புகள் இடம்பெறுகின்றன
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. அமெரிக்க ஆயர்களுக்கு திருத்தந்தையின் உரை
நவ.26,2011. இறைவனை விட்டு மேலும் மேலும் விலகியிருக்க முயலும் இன்றைய சமுதாயத்தில் கிறிஸ்தவ சாட்சியம் எதிர்நோக்கும் பெரும் சவால்களைக் குறித்து அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் காட்டும் அக்கறையில் தானும் பங்கு கொள்வதாக உரைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
'அட் லிமினா' சந்திப்பையொட்டி உரோம் நகர் வந்துள்ள ஆமெரிக்க ஆயர்களை இந்த சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இறைவனிடமிருந்து ஒதுங்கியிருக்க முயலும் மனப்போக்கு அதிகரித்து வருகின்ற போதிலும், இன்றைய மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே வருங்காலம் குறித்த ஒருவித பாதுகாப்பற்ற நிலையையும் காண முடிகிறது என்றார். இன்றைய திடீர் மாற்றங்கள் மற்றும் நெருக்கடிகளின் மத்தியில் பலர் ஞானம் மற்றும் வழிகாட்டுதலுக்காக திருச்சபையை நோக்கி வருவதும் இடம் பெறுகின்றது என்று கூறிய திருத்தந்தை, இத்தகையச் சூழல்களில் ஆயர்களின் பணியானது ஒழுக்க ரீதி உண்மைகளைப் பாதுகாப்பதாகவும், நம்பிக்கையின் வார்த்தைகளை வழங்குவதாகவும், உண்மையை நோக்கி மக்களின் மனங்களை திறப்பதாகவும் இருக்க வேண்டும் என்றார்.
அண்மையில் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் வெளியிட்ட, பிரமாணிக்கக் குடியுரிமை மற்றும் திருமணம் பற்றிய சுற்றுமடல்கள் குறித்து தன் பாராட்டுதல்களையும் வெளியிட்டார் பாப்பிறை.
தான் 2008ம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் திருப்பயணம் மேற்கொண்டபோது, ஆயர்களுடன் விவாதித்த கருப்பொருட்கள் குறித்து மீண்டும் இங்கு எடுத்தியம்பினார் திருத்தந்தை. தலத்திருச்சபையில் குருக்களால் சிறார்கள் தவறாக நடத்தப்பட்டது குறித்து எடுக்கப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள், மற்றும் புதிய நற்செய்தி அறிவிப்புக்கென எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் ஆகியவை குறித்தும் அமெரிக்க ஆயர்களோடு விவாதித்தார் பாப்பிறை.
2. நோயுற்றோருக்கு சேவையாற்றுவது என்பது, நற்செய்தி அறிவிப்பு அர்ப்பணம் மற்றும் அக்கறை
நவ.26,2011. உடலளவிலும் ஆன்மீக அளவிலும் நோயுற்றோருக்கு சேவையாற்றுவது என்பது, நற்செய்தி அறிவிப்பு அர்ப்பணம் மற்றும் அக்கறையாகும் என்று திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் கூறிச்சென்றதை மீண்டும் நினைவுறுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
' திருத்தந்தை ஜான் பால் வழங்கிய படிப்பினைகளின் ஒளியில் வாழ்வின் பணிக்கான மேய்ப்பு பணி அக்கறை' என்ற தலைப்பில் நலப்பணிகளுக்கான திருப்பீட அவை உரோம் நகரில் ஏற்பாடு செய்துள்ள 26வது அனைத்துலக மாநாட்டில் பங்குபெறுபவர்களை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, 1985ம் ஆண்டில் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இந்த அவையை உருவாக்கியதையும், 20 ஆண்டுகளுக்கு முன்னர் அவரே உலக நோயாளர் தினத்தை உருவாக்கியதையும் நினைவு கூர்ந்தார்.
நோயாளிகளோடு பணிபுரிவோர் இறைவனின் மீட்புச்செயலை அருகில் இருந்து காணும் பாக்கியம் பெற்றோர் என்பதையும் சுட்டிக்காட்டிய பாப்பிறை, நமக்காக சிலுவையில் துன்பங்களை அனுபவித்த இறைவன், எந்த ஒரு சூழலிலும் மனிதனின் மாண்பு மதிக்கப்படவேண்டும் மற்றும் அவனின் உயிர் பாதுகாக்கப்படவேண்டும் என எதிர்பார்க்கிறார் என மேலும் உரைத்தார்.
3. திருச்சபையின் படிப்பினைகளைப் பறைச்சாற்றவேண்டிய கடமை ஒவ்வோர் ஆயருக்கும் உள்ளது
நவ.26,2011. நவீன சமூகத்திற்கு திருச்சபையின் படிப்பினைகளைப் பறைச்சாற்றவேண்டிய கடமை ஒவ்வோர் ஆயருக்கும் உள்ளது என்றார் ஆயர்களுக்கான திருப்பேராயத் தலைவர் கர்தினால் Marc Ouellet.
இத்தாலிய தினத்தாள் L’Avvenireக்கு பேட்டியளித்த கர்தினால், ஓர் ஆயரிடம் எதிர்பார்க்கப்படும் தனிப்பட்ட பண்புகளுடன் அவர்கள் சமூகத்தில் வெளிப்படையாக விசுவாசத்தைப் பாதுகாக்க வல்லவர்களாகவும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
ஒவ்வோர் ஆயருக்கும் தாங்கள் யாருக்காக உழைக்கிறோம் என்பது தெரிந்திருக்க வேண்டும், அதாவது, இறைவனுக்கும் திருச்சபைக்கும் உழைப்பது தெரிந்திருக்கவேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புவதாக மேலும் கூறினார் கர்தினால் Ouellet.
4. இயற்கையைக் காப்பாற்ற வேண்டியது கிறிஸ்தவக் கடமை
நவ.26,2011. இயற்கையைப் பாதுகாத்து இயற்கைப் பேரழிவுகளிலிருந்து சமூகத்தைக் காப்பாற்ற வேண்டியது கிறிஸ்தவக் கடமையாகிறது என வியட்நாமின் ஹோ கி மின்ஹ் உயர்மறைமாவட்ட திருச்சபை அதிகாரிகளின் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஹோ கி மின்ஹ் உயர் மறைமாவட்டத்தின் ஐந்து நாள் உயர்மட்டக் கூட்டத்தில் உரையாற்றிய வியட்நாமின் கோல்பிங் கத்தோலிக்க அமைப்பின் தலைவர் ஆன்ட்ரூ நுகுயென் ஹூ நிகியா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது கிறிஸ்தவ அறநெறியாக நோக்கப்படவேண்டும் என்றார்.
ஒவ்வோர் ஆண்டும் இயற்கைப் பேரழிவுகளால் இவ்வுலகில் எண்ணற்றோர் உயிரிழந்து வருகின்ற போதிலும், சுற்றுச்சூழலை பதுகாக்கவேண்டிய தேவை கருத்தில் கொள்ளப்படுவதில்லை என்றார் நிகியா.
இயற்கை மீது சிறிதும் அக்கறை இன்றி மனிதர்கள் செயல்படும்போது தட்ப வெப்ப நிலை மாற்றம், மற்றும், நீரும் காற்றும் மாசுபடுதல் போன்றவை இடம்பெறுகின்றன என்றார் அவர்.
தலத்திருச்சபையில் இயற்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த வகுப்புகள் எடுக்கப்படவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார் நிகியா.
வியட்நாமின் ஹோ கி மின்ஹ் உயர்மறைமாவட்டத்தில் இடம்பெற்ற இந்த ஐந்து நாள் கூட்டத்தில் குருக்கள் துறவியர் மற்றும் பொதுநிலையினர் என 180 பேர் கலந்துகொண்டனர்.
5. அன்னை திரேசா பிறரன்பு சகோதரிகள் சபை இல்லம் ஒன்றில் சோதனைச் செய்துள்ளனர் இலங்கை காவல்துறையினர்
நவ.26,2011. இலங்கையிலிருந்து குழந்தைகளைக் கடத்துவதாகக் குற்றஞ்சாட்டி கொழும்புவின் அன்னை திரேசா பிறரன்பு சகோதரிகள் சபை இல்லம் ஒன்றில் சோதனைச் செய்துள்ளனர் இலங்கைக் காவல்துறையினர்.
தன் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத ஒருவர் வழங்கிய தகவலையடுத்து மொராடுவா எனுமிடத்திலுள்ள பிரேம் நிவாசா என்ற அனாதைக் குழந்தைகள் இல்லத்தில் நுழைந்த காவல் துறை, அங்குள்ள அருட்சகோதரிகளிடம் விசாரணை நடத்தியதுடன், பல ஆவணங்களையும் எடுத்துச் சென்றுள்ளது.
பிரேம் நிவாசா அனாதை இல்லம் குறித்து சில பத்திரிகைகள் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகவும், எவ்விதத் தவறும் இடம் பெறாத நிலையில், சந்தேகத்தின்பேரில் சோதனை நடத்தப்பட்டுள்ளது கவலை தருவதாகவும் உள்ளது என்றார் இந்த இல்லத்தின் தலைமை அருள்சகோதரி மேரி எலிஷா. எந்தக் குழந்தையையும் கடத்துவதற்கு தாங்கள் உதவவில்லை என்றும் அது தங்கள் விசுவாசத்திற்கு எதிரானது என்றும் மேலும் கூறினார் அவர்.
அன்னை திரேசாவின் பிறரன்பு சகோதரிகள் சபை கொழும்பு உயர் மறைமாவட்டத்தில் நடத்தி வரும் இந்த அநாதை இல்லத்தில் தற்போது 75 குழந்தைகள், 20 கருவுற்ற தாய்மார்கள் மற்றும் 12 இளம்தாய்கள் தங்கியிருந்து உதவிகளைப் பெற்று வருகின்றனர்.
6. இலங்கையில் நாளொன்றுக்கு 1000 கருக்கலைப்புகள் இடம்பெறுகின்றன
நவ.26,2011. இலங்கையில் ஆண்டொன்றுக்கு மூன்று லட்சம் கருக்கலைப்புகள் இடம்பெறுவதாக தி ஐலன்ட் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
மக்களிடையே அறநெறி மதிப்பீடுகளுக்கான முக்கியத்துவம் குறைந்து வருவதே இதற்கு காரணம் என அப்பத்திரிகை மேலும் தெரிவிக்கிறது.
நாளொன்றிற்கு 1000 கருக்கலைப்புகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், கருக்கலைப்புகளின் எண்ணிக்கை இதனை விட அதிகமாக இருக்கலாம் என்று இலங்கையின் நலத்துறை அமைச்சக அதிகாரியான பி.எம்.டி அமரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கருக்கலைப்புகளைத் தடுக்க சட்டங்கள் இயற்றப்படவுள்ளதாக சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு அமைப்பு கூறியுள்ளது
No comments:
Post a Comment