Wednesday, 2 November 2011

Catholic News - hottest and latest - 02 November 2011

1. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் திருப்பயணங்கள் ஆரம்பம்

2. கர்நாடகாவின் 14 கத்தோலிக்க ஆயர்கள் மாநில முதல்வருடன் சந்திப்பு

3. தலித் கிறிஸ்தவப் பிரதிநிதிகள் குழு சோனியா காந்தியுடன் சந்திப்பு

4. நேபாளத்தில் அரசியல் கட்சிகளுக்கும் மாவோயிஸ்ட் புரட்சிக்குழுக்களுக்கும் இடையே உருவாகியுள்ள அமைதி ஒப்பந்தம்

5. இணையதளத்தில் இறந்தோர் நினைவுக்கென திருப்பலிகள் பதியும் வசதி

6. உலகப் பொருளாதாரச் சீர்குலைவுக்கு எதிரான போராட்டத்தைக் குறித்து Canterbury பேராயரின் கட்டுரை

7. இயற்கை வளங்களை மனித குலம் அழித்து வரும் வேகம் 40 விழுக்காடு அதிகரித்துள்ளது - ஐ.நா. அறிக்கை

8. இளம்பிள்ளைவாதத்தை முற்றாக ஒழிக்க உறுதிப்பாடு

------------------------------------------------------------------------------------------------------

1. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் திருப்பயணங்கள் ஆரம்பம்

நவ.02,2011. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் திருப்பயணங்கள் என்ற ஒரு முயற்சி இச்செவ்வாயன்று இத்தாலியின் அசிசி நகரில் துவக்கப்பட்டது.
ARC என்றழைக்கப்படும் மதங்கள் மற்றும் பாதுகாப்பின் கூட்டணி என்ற ஓர் அமைப்பும், WWF என்றழைக்கப்படும் உலக வனவாழ்வின் நிதிஅமைப்பும் இணைந்து மேற்கொண்டுள்ள இந்த உலகளாவிய முதல் முயற்சியில் கலந்து கொள்ள உலகின் 15 மதங்களின் பிரதிநிதிகள் அசிசி நகரில் கூடி வந்தனர்.
ARC அமைப்பு நடத்திய ஒரு கணக்கெடுப்பின் அடிப்படையில், உலகெங்கும் திருப்பயணங்கள் மேற்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருகிறதென்று அறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு மதமும் இயற்கையை மதிக்க வேண்டும் என்றும் கூறிவருகின்றன. இவ்விரு தரவுகளின் அடிப்படையில் வளர்ந்து வரும் திருப்பயணங்கள் இயற்கையை அழிக்காத வண்ணம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இச்செவ்வாய் ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சி வலியுறுத்துகின்றது.
திருத்தலங்களைச் சுற்றி வாகனப் பயன்பாடுகளைக் குறைத்தல், கோவில்களிலும், பிற திருத்தலங்களிலும் சூரிய ஒளியால் சக்திபெறக்கூடிய வழிமுறைகளைப் பயன்படுத்துதல், திருத்தலங்களில் நூற்றுக் கணக்கான மரங்களை நடுதல், திருப்பயணிகளுக்கு நல்ல குடி நீர் வசதிகளை அமைத்தல் ஆகிய பல முடிவுகள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
1986ம் ஆண்டு அசிசி நகரில் அருளாளர் இரண்டாம் ஜான் பால் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட முதல் அமைதி முயற்சியின்போது, உலக அமைதியைக் காப்பதற்கு, சுற்றுச் சூழலைக் காக்கும் கடமையும் நமக்கு உண்டு என்று வலியுறுத்தப்பட்டது என்பது இச்செவ்வாய் நிகழ்ந்த கூட்டத்திலும் நினைவுறுத்தப்பட்டது.


2. கர்நாடகாவின் 14 கத்தோலிக்க ஆயர்கள் மாநில முதல்வருடன் சந்திப்பு

நவ.02,2011. குற்றமற்ற கிறிஸ்தவ இளையோர்மீது தேவையில்லாத குற்றங்கள் சுமத்தப்பட்டு, ஒவ்வொரு நாளும் காவல்துறை விசாரணைகளுக்கு ஆளாக்கப்படுவது நிறுத்தப்படவேண்டுமென்று பெங்களூர் பேராயர் Bernard Moras கூறினார்.
2008ம் ஆண்டு முதல் கர்நாடக மாநிலத்தில் கிறிஸ்தவக் கோவில்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு தாக்குதல்களில், அவ்வன்முறையில் ஈடுபட்டோருக்குப் பதிலாக, கிறிஸ்தவ சபையின் உறுப்பினர்கள், முக்கியமாக இளையோர் பலர் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் சார்பில், கர்நாடகாவின் 14 கத்தோலிக்க ஆயர்கள் கர்நாடக முதல்வர் சதானந்த கவுடாவை அண்மையில் சந்தித்தவேளையில், கிறிஸ்தவ இளையோருக்கு காவல்துறையினர் தொடர்ந்து துன்பங்கள் கொடுத்து வருவதை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
மேலும், வன்முறைகளால் சேதமடைந்துள்ள கிறிஸ்தவ கோவில்கள் நிறுவனங்கள் அனைத்திற்கும் தகுந்த ஈட்டுத்தொகை வழங்கப்பட வேண்டுமென்றும், எதிர்காலத்தில் கிறிஸ்தவர்களுக்கும், கிறிஸ்தவ கோவில், நிறுவனம் அனைத்திற்கும் தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் ஆயர்கள் முதல்வரிடம் விண்ணப்பித்துள்ளனர்.
முதல்வருடன் தாங்கள் மேற்கொண்ட பேச்சு வார்த்தை நல்ல முறையில் நடந்ததென்றும், தாங்கள் அளித்த விண்ணப்பங்களின் மேல் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதி அளித்தார் என்றும் பெங்களூர் பேராயர் Moras கூறினார்.


3. தலித் கிறிஸ்தவப் பிரதிநிதிகள் குழு சோனியா காந்தியுடன் சந்திப்பு

நவ.02,2011. இந்தியாவில் தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்படும் சலுகைகள் தலித் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்த கிறிஸ்தவ பிரதிநிதிகள் குழு ஒன்று ஐக்கிய முன்னேற்ற கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியை இச்செவ்வாயன்று புது டில்லியில் சந்தித்தனர்.
இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையும், இந்திய கிறிஸ்தவ சபைகளின் அவையும் மேற்கொண்டுள்ள கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக, தலித் கிறிஸ்தவர்கள் தேசியக் குழு, மற்றும், தலித் கிறிஸ்தவர்களின் தேசிய ஒருங்கிணைப்புக் குழு ஆகியவற்றின் பிரதிநிதிகள் சோனியா காந்தியைச் சந்தித்தனர்.
கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பது குறித்து எட்டு வாரங்களில் பதில் கூறுவதாக, 2008ம் ஆண்டு சனவரி மாதம் மத்திய அரசு உச்ச நீதி மன்றத்திற்கு அளித்த வாக்குறுதிக்குப் பின் மூன்று ஆண்டுகள் கழிந்து விட்டன என்று இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவை  தாழ்த்தப்பட்டோர் மற்றும் பின்படுத்தப்பட்டோர் பணிக்குழுவின் தலைவர் அருள்தந்தை காஸ்மோன் ஆரோக்கியராஜ் சோனியா காந்தியிடம் நினைவுத்தினார் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் காங்கிரஸ் கட்சியுடன் இத்தனை ஆண்டுகள் உறவு கொண்டிருந்தாலும், இவ்விரு மதத்தவருக்கும் உரிய சலுகைகள் இன்னும் வழங்கப்படவில்லை என்று அருள்தந்தை ஆரோக்கியராஜ் தெரிவித்தார்.
கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களுக்குத் தன் முழுமையான கவனத்தைச் செலுத்துவதாக இச்சந்திப்பின்போது சோனியா காந்தி கூறினார் என்று UCAN செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.


4. நேபாளத்தில் அரசியல் கட்சிகளுக்கும் மாவோயிஸ்ட் புரட்சிக்குழுக்களுக்கும் இடையே உருவாகியுள்ள அமைதி ஒப்பந்தம்

நவ.02,2011. நேபாளத்தில் அரசியல் கட்சிகளுக்கும் மாவோயிஸ்ட் புரட்சிக்குழுக்களுக்கும் இடையே இச்செவ்வாயன்று உருவாகியுள்ள அமைதி ஒப்பந்தம் அந்நாட்டு மக்களிடையே நம்பிக்கையை அளித்துள்ளது.
ஆறு ஆண்டுகளாக உருவாகி வந்த இந்த அமைதி உடன்படிக்கையினால், அங்கு செயலாற்றிவரும் 19000க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட் புரட்சி வீரர்கள் அந்நாட்டின் இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவர் என்று சொல்லப்படுகிறது. மாவோயிஸ்ட் குழுக்கள் பறித்து வைத்துள்ள பல்வேறு நிலங்கள் மற்றும் சொத்துக்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த அமைதி உடன்படிக்கையால் நாட்டில் முழு அமைதி திரும்பும் என்றும், நாடு முன்னேற்றப் பாதையில் செல்லும் என்றும் மக்கள் தங்கள் நம்பிக்கையைத் தெரிவித்துள்ளனர்.
இந்த உடன்படிக்கையின் முழு வடிவமும் வெளிவர இன்னும் ஓரிரு நாட்கள் உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசிய ஆயர் Anthony Sharma, இவ்விரு தரப்பினரும் எடுத்துள்ள முடிவுகளில் உறுதியாக நிலைத்துள்ளனரா என்பதை காத்திருந்து பார்க்க வேண்டும் என்று கூறினார்.


5. இணையதளத்தில் இறந்தோர் நினைவுக்கென திருப்பலிகள் பதியும் வசதி

நவ.02,2011. இறந்தோர் நினைவுக்கென திருப்பலிகள் ஒப்புக்கொடுப்பதற்கு, இணையதளம் வழியாகப் பதிவு செய்யும் ஒரு வசதியை பிலிப்பின்ஸ் கத்தோலிக்க ஆயர் பேரவை அறிமுகப்படுத்தியுள்ளது.
பிலிப்பின்ஸ் நாட்டில் இறந்தோர் நினைவு நாள் மிகவும் பிரபலமான நாள். இந்நாளையொட்டி, நவம்பர் 1ம் தேதி முதல் 8ம் தேதி வரை இறந்தொருக்கென ஒப்புக்கொடுக்கப்படும் திருப்பலிகளை இணையதளத்தில் பதிவு செய்யும் வசதியை அந்நாட்டின் ஆயர் பேரவை ஆரம்பித்துள்ளது.
பிலிப்பின்ஸ் நாட்டிலிருந்து சென்று, பிற நாடுகளில் பணி புரியும் பலர் இந்த வசதி மூலம் தங்கள் குடும்பத்தினருடன் இணைந்து, தங்கள் உறவுகளுக்குத் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்க முடியும் என்று இந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.


6. உலகப் பொருளாதாரச் சீர்குலைவுக்கு எதிரான போராட்டத்தைக் குறித்து Canterbury பேராயரின் கட்டுரை

நவ.02,2011. இலண்டன் பங்குசந்தையை ஆக்கிரமிப்போம் என்ற அறைகூவலுடன் புனித பவுல் பேராலய வளாகத்தில் கடந்த சில நாட்களாகக் கூடியிருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களை பலவந்தமாக வெளியேற்றுவதில்லை என்று பேராலய நிர்வாகமும், இலண்டன் நகராட்சியும் இச்செவ்வாயன்று தீர்மானித்துள்ளன.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அழைப்பின் பேரில் அண்மையில் அசிசி நகரில் நடைபெற்ற பல்சமய அமைதி கூட்டத்திற்குச் சென்று திரும்பியுள்ள Canterbury பேராயர் ரோவன் வில்லியம்ஸ், உலகப் பொருளாதாரச் சீர்குலைவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தப் போராட்டத்தைக் குறித்து எழுதியுள்ள ஒரு கட்டுரை, இலண்டனில் வெளியாகும் Financial Times என்ற நாளிதழில் இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ளது.
சமுதாயத்தின் அடிப்படை விழுமியங்கள் கேள்விக்குரியதாக மாறும்போது, மக்கள் மேற்கொள்ளும் பல போராட்டங்கள் அண்மைக் காலங்களில் புனித பவுல் பேராலய வளாகத்தில் நடைபெற்றுள்ளன. உலகில் நிலவும் தவறான பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக  இப்போது நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில் பலரும் கலந்து கொண்டு வருவது, இன்றைய உலகில் எளிய மக்களிடையே வளர்ந்து வரும் ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறதென்று பேராயர் வில்லியம்ஸ் கூறினார்.
மக்களிடையே இந்த ஏமாற்றத்தை உருவாகியுள்ள நமது நிதி நிறுவனங்கள் எவ்வித குற்ற உணர்வும் இல்லாமல், தொடர்ந்து தங்கள் சுயநலப் போக்குகளில் செல்வது வேதனையைத் தருகிரதென்று பேராயர் வில்லியம்ஸ் இக்கட்டுரையில் மேலும் கூறியுள்ளார்.


7. இயற்கை வளங்களை மனித குலம் அழித்து வரும் வேகம் 40 விழுக்காடு அதிகரித்துள்ளது - ஐ.நா. அறிக்கை

நவ.02,2011. நம் வாழ்வுக்கும் பொருளாதரத்திற்கும் ஆதாரமாக விளங்கும் இயற்கை வளங்களைக் கண்மூடித்தனமாக அழித்து வரும் போக்கு நிறுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா.வின் அறிக்கையொன்று கூறுகிறது.
1992ம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்ற உலக உச்சி மாநாட்டின் (Earth Summit) இருபதாம் ஆண்டு நிறைவையொட்டி, அதே நகரில் 2012ம் ஆண்டு நடைபெற விருக்கும் Rio+20 என்ற உச்சி மாட்டிற்கு தயாரிக்கும் வகையில், இச்செவ்வாயன்று வெளியிடப்பட்ட ஐ.நா. அறிக்கையில் இயற்கை வளங்களை மனிதர்கள் அழிப்பதால் வரும் ஆபத்துக்கள் கூறப்பட்டுள்ளன.
மக்கள் தொகை, சுற்றுச்சூழல் மாற்றங்கள், சக்தி பயன்பாடு, உணவு பாதுகாப்பு ஆகிய முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய இந்த அறிக்கையில் மனித குலம் சந்திக்க இருக்கும் சவால்கள் தெளிவாக்கப்பட்டுள்ளன.
1992ம் ஆண்டிலிருந்து 2005ம் ஆண்டு வரை இயற்கை வளங்களையும், பன்முக உயிரினங்களையும் மனித குலம் அழித்து வரும் வேகம் 40 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று ஐ.நா.வின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அவையின் இயக்குனர் அக்கிம் ஸ்டெய்னர் (Achim Steiner) கூறினார்.
முதல் உலக உச்சி மாநாடு 1992ம் ஆண்டு, Rio நகரில் நடைபெற்றபோது, சுற்றுச் சூழல் பற்றிய கவலைகளாக இருந்த ஒரு சில போக்குகள் இன்று பல நாடுகளில் மிக அதிக அளவில் ஒவ்வொரு நாளும் நடைமுறைப்படுத்தப்படும் செயல்பாடுகளாகி உள்ளது கவலையைத் தருகிறதென்று அக்கிம் ஸ்டெய்னர் மேலும் கூறினார்.


8. இளம்பிள்ளைவாதத்தை முற்றாக ஒழிக்க உறுதிப்பாடு

நவ.02,2011. ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் அண்மையில் கூடிய காமன்வெல்த் (Commonwealth) நாடுகளின் தலைவர்கள், இளம்பிள்ளைவாதத்தை அடியோடு ஒழிப்பதற்கான உறுதியை மீண்டும் பூண்டிருக்கிறார்கள். இந்த நோய்க்கெதிரான தீவிர நடவடிக்கைகளுக்காக 5 கோடி டாலர்களை வழங்க ஆஸ்திரேலியா முன்வந்திருக்கிறது.
உலகிலேயே இன்னும் இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 4 நாடுகளில் மட்டுமே இந்த இளம்பிள்ளைவாத நோய் தற்போது தாக்கிவருவதாகவும், மற்றபடி உலகில் 99 விழுக்காடு இந்த நோய் ஒழிக்கப்பட்டு விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நோயை அடுத்து வருகின்ற 2 வருடங்களுக்குள் முற்றாக அழிப்பது என்பது உலகின் கரங்களிலேயே இருக்கிறது என்று பிரித்தானியப் பிரதமர் டேவிட் காமரோன் கூறினார். நடக்க முடியாமல் முடங்கியிருக்கக்கூடிய 80 லட்சம் பேர் இளம்பிள்ளைவாத நோய்த்தடுப்பு மருந்து காரணமாக இன்று உலகில் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இளம்பிள்ளைவாதத்தை ஒழிப்பதற்கான உலக முயற்சி என்பது 1988 முதல் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. காமன்வெல்த் நாடுகள் ஐ.நா. போன்ற நிறுவனங்களுடன் இணைந்து சரியாகச் செயற்பட்டால் 2013ம் ஆண்டிற்குள் உலகில் இளம்பிள்ளைவாதத்தை முற்றாக ஒழித்துவிடலாம் என்று நம்பப்படுகிறது.

 

No comments:

Post a Comment