Monday, 14 November 2011

Catholic News - hottest and latest - 12 November 2011

1. திருத்தந்தை : ஒரு மனித உயிரை அழிக்கும் எந்த அறிவியல் ஆய்வும் ஒருபோதும் நியாயப்படுத்தப்பட முடியாதது

2. அருள்தந்தை லொம்பார்தி :  பலனை எதிர்பார்க்காத அன்பு உலகை உய்விக்க உதவும்

3. கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப்புப் போராட்டங்களுக்கு ஆயர் ஆதரவு : CCBI  தகவல்

4. இந்தோனேசியாவின் பாப்புவாவில் வன்முறை நிறுத்தப்பட ஆயர்கள் அழைப்பு

5. கஜகஸ்தான் சிறைகளில் மசூதிகளும், கிறிஸ்தவ ஆலயங்களும் மூடப்பட்டுள்ளன

6. இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மக்களுக்கும் விலங்குகளுக்கும் அச்சுறுத்தல்

----------------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : ஒரு மனித உயிரை அழிக்கும் எந்த அறிவியல் ஆய்வும் ஒருபோதும் நியாயப்படுத்தப்பட முடியாதது

நவ.12,2011. முழு வளர்ச்சியடைந்த தண்டுவடத்தின் மரபணுக்கள் பற்றிய ஆய்வு, இன்னொரு மனித உயிருக்கு பலனைக் கொண்டு வரும் என்ற நிலை இருந்தாலும்கூட, அது ஒரு மனித உயிரை அழித்தால் அந்த ஆய்வை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இவ்வாறு ஆய்வை நடத்துகின்றவர்கள், மனிதன் தனது தாயின் கருவிலிருந்து இயற்கையான மரணம் அடையும்வரை அவனுக்கு இருக்கும் தவிர்க்க முடியாத வாழ்வதற்கான உரிமையைப் புறக்கணிக்கும் தவற்றைச் செய்கின்றனர் என்றும் கூறினார் திருத்தந்தை.
முழு வளர்ச்சி அடைந்த தண்டுவடத்தின் மரபணுக்கள்:அறிவியலும் மனிதனின் எதிர்காலமும் கலாச்சாரமும் என்ற தலைப்பில் திருப்பீடக் கலாச்சார அவை வத்திக்கானில் நடத்திய மூன்று நாள் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களில் சுமார் 250 பேரை இச்சனிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
மருத்துவத்துறையில் நடைபெறும் ஆய்வுகள் மனித உயிருக்குப் பாதகம் வராத வகையில் நடைபெறுவதற்கு அறிவியலுக்கும் அறநெறிகளுக்கும் இடையே உரையாடல் இடம் பெறுவது மிகவும் முக்கியம் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
நோயானது, எந்தப் பாகுபாடும் இன்றி எல்லா மனிதரையும் தாக்குவதால் அறிவியல் ஆய்வுகளின் பலன்கள் எல்லாருக்கும் பயன்படும் விதத்தில் வழங்கப்பட வேண்டுமெனவும் திருத்தந்தை கேட்டுக் கொண்டார்.
முழு வளர்ச்சியடைந்த தண்டுவடத்தின் மரபணுக்கள் பற்றிய அறிவியல் ஆய்வுக்கு ஆதரவளித்து, கலாச்சார, அறநெறி, உடலியல் ஆகியவற்றில் அவ்வாய்வின் பயன் குறித்தவைகளைக் கண்டறிந்து வரும் திருப்பீடப் பணிகளுக்குத் தனது ஆதரவையும் தெரிவித்தார் திருத்தந்தை.
இந்த  மூன்று நாள் கருத்தரங்கை, திருப்பீடக் கலாச்சார அவையும், வாழ்வின் அடிப்படையாக தண்டுவடம் என்ற பொருள்படும் Stem for Life Foundation என்ற அமெரிக்க ஐக்கிய நாட்டு நிறுவனமும் இணைந்து நடத்தின. இதில்  அறிவியலாளர்கள், கல்வியாளர்கள், அரசியல் வாதிகள் மற்றும் மதப் பிரதிநிதிகள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

2. அருள்தந்தை லொம்பார்தி :  பலனை எதிர்பார்க்காத அன்பு உலகை உய்விக்க உதவும்

நவ.12,2011. ஒருவர் ஒருவர் மீதான நம்பிக்கையும், கைம்மாறு கருதாமல் ஒருவர் மீது காட்டப்படும் அன்பும் இவ்வுலகை மேம்படுத்துவதற்கு அவசியமானவை என்று  திருப்பீடப் பேச்சாளரான இயேசு சபை அருள்தந்தை பெதெரிகோ லொம்பார்தி கூறினார்.
“Octava Dies” என்ற வத்திக்கான் தொலைக்காட்சியின் வார நிகழ்ச்சியில், இக்காலத்திய நெருக்கடியும் கைம்மாறு கருதாதப் பிறரன்புச் செயலும் என்ற தலைப்பில் பேசிய  அருள்தந்தை லொம்பார்தி இவ்வாறு கூறினார்.
தற்போது ஐரோப்பியக் கண்டத்தைத் தாக்கியிருக்கும் பொருளாதார நெருக்கடியினால் உலகின் பல பாகங்களில் ஏற்பட்டுள்ள பதட்டநிலைகள், கவலைகள் மற்றும் வேதனைகள், அரசியல்வாதிகள் மற்றும் பொருளாதார நிபுணர்களின் திறமைகளுக்குச் சவாலாக இருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐரோப்பியத் தன்னார்வ ஆண்டையொட்டி உரோமில் கூட்டம் நடத்திய இளையோர்க்குத் திருத்தந்தை ஆற்றிய உரையின் மூலம் இப்பிரச்சனைகளுக்கு ஒரு சிறு தீர்வைக் கொடுக்கும் நம்பிக்கையைப் பெற முடியும் என்றும் அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.
இலவசமாகப் பெற்றீர்கள், இலவசமாகக் கொடுங்கள் என்ற இயேசுவின் திருச்சொற்களின் அடிப்படையில் செயல்பட வேண்டும், அத்துடன் மனிதன் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை, ஒருவர் ஒருவரை மதித்து, பிரதிபலனை எதிர்பார்க்காமல் அன்பு செய்து ஒருவர் ஒருவரை நம்பி வாழ்வதன் மூலம் உலகை மேம்படுத்த உதவ முடியும் என்று அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.

3. கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப்புப் போராட்டங்களுக்கு ஆயர் ஆதரவு : CCBI  தகவல்

நவ.12,2011. தமிழ் நாட்டின் தூத்துக்குடி மறைமாவட்டக் குருக்கள் கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப்புப் போராட்டங்களிலிருந்து ஒதுங்கி இருக்க வேண்டுமென்று தான் கூறியதாக ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளுக்கு தூத்துக்குடி ஆயர் யுவான் அம்புரோஸ் அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளார் என்று CCBI என்ற இந்திய இலத்தீன் ரீதி ஆயர்கள் அவையின் இணையதளம் அறிவித்தது.
இந்தப் போராட்டங்களுக்கு அருட்பணியாளர்களும் அருட்சகோதரிகளும் ஆதரவு தெரிவிக்குமாறும், அதேசமயம், இந்தப் போராட்டங்களுக்குப் பொதுநிலையினர் தலைமை ஏற்று நடத்துவதற்கு அருட்பணியாளர்களும் அருட்சகோதரிகளும் அவர்களை அனுமதிக்குமாறும் ஆயர் கூறியுள்ளதாகவும் கூறியுள்ளது இந்த இணையதளம்.  
இரஷ்யத் தொழிற்நுட்பத்துடன் 300 கோடி டாலர் செலவில் அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையம் வருகிற டிசம்பர் மாதத்தில் செயல்படத் தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இதில் இரண்டாயிரம் மெஹாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

4. இந்தோனேசியாவின் பாப்புவாவில் வன்முறை நிறுத்தப்பட ஆயர்கள் அழைப்பு

நவ.12,2011. பெரும்பாலும் பெண்களையும் சிறாரையும் பாதிக்கும் வன்முறையை நிறுத்தி, ஒப்புரவுக்கு வழி அமைக்கும் உரையாடலை உடனடியாகத் தொடங்குமாறு இந்தோனேசிய ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தோனேசியாவின் Irian Jaya மாநிலத்தில் அப்பாவி மக்கள்  சுதந்திரத்திற்காகப் போராடுகிறார்கள் என்று குற்றம் சாட்டி  இராணுவம் அவர்களுக்கு எதிராக வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடுவதை வைத்து ஆயர்கள் இந்த அழைப்பை முன்வைத்துள்ளனர்.
அம்மாநிலத்தின் உள்நாட்டு விவகாரங்களைத் தீர்ப்பதற்கு இராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்படுவது கைவிடப்பட வேண்டும் என வலியுறுத்தும் ஆயர்கள், உரையாடலை மேற்கொண்டு அமைதியைக் கொண்டு வருவதற்கு முயற்சிக்குமாறு கேட்டுள்ளனர்.
பிற கிறிஸ்தவ சபைகளின் தலைவர்களும் இதேமாதிரியான வேண்டுகோள்களை அரசுக்கு முன்வைத்துள்ளனர்.

5. கஜகஸ்தான் சிறைகளில் மசூதிகளும், கிறிஸ்தவ ஆலயங்களும் மூடப்பட்டுள்ளன

நவ.12,2011. கஜகஸ்தான் நாட்டுச் சிறைகளிலுள்ள மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் பிற வழிபாட்டுத் தலங்களை  அந்நாட்டு அரசு மூடியுள்ளது. 
அந்நாட்டின் புதிய சட்டப்படி, பொதுக் கட்டிடங்களில் சமய நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டுள்ளன என்று சொல்லி அதிகாரிகள் தங்களது இந்த நடவடிக்கையை நியாயப்படுத்தியுள்ளனர் என்று ஆசியச் செய்தி நிறுவனம் கூறியது.
இது குறித்துப் பேசிய கஜகஸ்தான் உள்துறை அமைச்சர் Alika Kadenova, கிறிஸ்தவ ஆலயங்களும் மற்றும் பிற கட்டிடங்களும் சட்டத்துக்குப் புறம்பே கட்டப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.  

6. இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மக்களுக்கும் விலங்குகளுக்கும் அச்சுறுத்தல்

நவ.12,2011. இலங்கை அரசின் நில அபகரிப்புகளும் காடுகள் அழிப்பும் மக்களின் நல்வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன என்று NARL என்ற தேசிய நிலஉரிமை கூட்டமைப்பு கூறியது.
இலங்கை அரசின் சுற்றுலாத் திட்டங்களின்கீழ் இடம்பெறும் நில அபகரிப்பு, காடுகள் அழிப்பு, வீடுகள் இடிப்பு போன்ற நடவடிக்கைகள் குறித்து அறிக்கை வெளியிட்ட NARL அமைப்பு, இவற்றுக்கு எதிராய் மக்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்குமாறு கேட்டுள்ளது.
ஆசியாவின் அற்புதம் என்ற திட்டத்தின்கீழ் கடந்த சில ஆண்டுகளாக இலங்கை மகிந்த இராஜபக்ஷ அரசு பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கியுள்ளது.
விவசாயிகள், மீனவர்கள் போன்ற சமூகத்தில் நலிந்தவர்களின் தேவைகளை இத்திட்டங்கள் புறக்கணிக்கின்றன என்று ஊடகச் செய்தி ஒன்று குறை கூறுகிறது.

No comments:

Post a Comment