1. மரபணுக்கள் தொடர்பான கருத்தரங்கு வத்திக்கானில் நடைபெறுகிறது
2. கருக்கலைப்பு செய்து கொள்ளும் பெண்களுக்கு திருச்சபை குணமளிக்கும் வழிகளைக் காட்டுகிறது - மெக்சிகோ நகரின் பேராயர்
3. எழுநூறு கோடியைத் தாண்டிப் பிறந்த குழந்தை கடவுளின் கோடை - வத்திக்கான் அதிகாரி
4. வெறுப்பைத் தூண்டிவிடும் அரசியல்வாதிகளுக்கு நைஜீரியாவின் ஆயர்கள் கண்டனம்
5. மறைமாவட்டக் குருக்கள் கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப்பு போராட்டங்களில் முன்னிலை வகிக்க வேண்டாம் - தூத்துக்குடி ஆயர் யுவான் அம்புரோஸ்
6. கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு வசதிகள் குறித்து முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் திருப்தி
7. இந்து மதத்தைச் சார்ந்த நான்கு மருத்துவர்கள் பாகிஸ்தானில் கொலை
8. நைரோபியில் HIV மற்றும் AIDS நோய் கண்டுள்ள குழந்தைகளுக்கென்று இயேசு சபையினர் நடத்தும் ஒரு தனிப்பட்ட பள்ளி
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
மரபணுக்கள் தொடர்பான கருத்தரங்கு வத்திக்கானில் நடைபெறுகிறது
நவ.09,2011. முழு வளர்ச்சி அடைந்த தண்டுவடத்தின் மரபணுக்களை மையப்படுத்திய ஒரு கருத்தரங்கு வத்திக்கானில் இப்புதனன்று ஆரம்பமானது.
பாப்பிறை கலாச்சாரக் கழகமும், வாழ்வின் அடிப்படையாக தண்டுவடம் என்ற பொருள்படும் Stem for Life Foundation என்ற அமெரிக்க ஐக்கிய நாட்டு நிறுவனமும் இணைந்து நடத்தும் இந்த மூன்று நாள் கருத்தரங்கில் அறிவியலாளர்கள், கல்வியாளர்கள், அரசியல் வாதிகள் மற்றும் மதப் பிரதிநிதிகள் ஆகியோரைக் கொண்ட 350 பேர் கலந்து கொள்கின்றனர்.
பாப்பிறை கலாச்சாரக் கழகத்தின் தலைவர் கர்தினால் Gianfranco Ravasi இக்கருத்தரங்கைக் குறித்த விவரங்களை இச்செவ்வாயன்று செய்தியாளர்களுக்கு அறிவித்தார்.
உயிர்களைக் காப்போம் என்று மருத்துவர்கள் எடுத்துக் கொள்ளும் உறுதி மொழிகளை உயிரியல் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைவரும் எடுப்பதா என்பது குறித்து இக்கருத்தரங்கில் விவாதிக்கப்படும் என்று பாப்பிறைக் கழகத்தின் அறிவியல் துறைக்கு பொறுப்பாளரான அருள்தந்தை Tomasz Trafny கூறினார்.
இன்று உலகில் புற்றுநோய், நீரழிவு நோய் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள பல கோடி மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் தண்டுவட அணுக்கள் பற்றிய ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு Stem for Life Foundation நிறுவனத்தின் தலைவர் திரு.ராபின் ஸ்மித் கூறினார்.
கருக்கலைப்பு செய்து கொள்ளும் பெண்களுக்கு திருச்சபை குணமளிக்கும் வழிகளைக் காட்டுகிறது - மெக்சிகோ நகரின் பேராயர்
நவ.09,2011. கருக்கலைப்பு செய்து கொள்வதால் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளாகும் பெண்களுக்கு திருச்சபை கருணையையும், குணமளிக்கும் வழிகளையும் காட்டுகிறது என்று மெக்சிகோ நகரின் பேராயர் கர்தினால் Norberto Carrera கூறினார்.
மெக்சிகோ நகரில் வெளியாகும் “Desde la Fe” என்ற செய்தித்தாளுக்கு அவர் அண்மையில் அளித்த பேட்டியொன்றில் கருக்கலைப்பைப் பற்றி திருச்சபையின் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.
கருக்கலைப்பு செய்து கொள்ளும் பெண்களை திருச்சபை கண்டனம் செய்கிறதா என்ற கேள்விக்கு, திருச்சபை எப்போதுமே ஒப்புரவையும், கருணையையும் வலியுறுத்தி வருகிறதென்று கர்தினால் Carrera சுட்டிக் காட்டினார்.
கருக்கலைப்பு செய்துகொள்ளும் பெண்கள் அந்நேரத்தில் அனுபவிக்கும் வேதனை, அதற்கு பின் அவர்கள் உள்ளத்தில் உருவாகும் குற்றஉணர்வு, வெறுமை ஆகியவற்றை குணப்படுத்தும் முயற்சியில் திருச்சபை அதிக அக்கறை காட்டுகிறது என்றும், கருக்கலைப்பை துச்சமாக எண்ணும் பலர் இந்த உணர்வுகளுக்கு மதிப்பு தருவதில்லை என்றும் கர்தினால் Carrera கூறினார்.
கருக்கலைப்பை ஒரு மனித உரிமை பிரச்சனையாக விளம்பரப்படுத்தும் பெண்ணுரிமை இயக்கங்கள், குழந்தை பிறப்பு நேரத்தில் உண்டாகும் உயிர்ச் சேதங்கள் கருக்கலைப்பினால் காப்பாற்றப்படும் என்று கூறுவதும் மக்களை திசைத் திருப்பும் முயற்சி என்று கர்தினால் வலியுறுத்திக் கூறினார்.
கருவுற்ற பெண்களை ஆதரவற்றவர்களாய் விட்டுச் செல்லும் ஆண்கள் இறைவன் முன் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்றும், எனவே அவர்கள் மனசாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் தன் பேட்டியின் இறுதியில் மெக்சிகோ நகர் பேராயர் கர்தினால் Carrera வேண்டுகோள் விடுத்தார்.
எழுநூறு கோடியைத் தாண்டிப் பிறந்த குழந்தை கடவுளின் கொடை - வத்திக்கான் அதிகாரி
நவ.09,2011. இவ்வுலகில் எழுநூறு கோடியைத் தாண்டிப் பிறந்த குழந்தையே, நீ எங்கு பிறந்திருந்தாலும் சரி, நீ ஆணாகவோ பெண்ணாகவோ பிறந்திருந்தாலும் சரி, நீ உண்மையிலேயே உலகிற்குக் கிடைத்துள்ள கடவுளின் கொடை, நீ ஒரு அற்புதம், வருக, வருக என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
அக்டோபர் மாத இறுதியில் உலகின் மக்கள் தொகை 700 கோடியைத் தாண்டிய செய்தியைப் பல்வேறு உலக நிறுவனங்கள் கவலைகளுடன் கூறிவந்த வேளையில், வத்திக்கானின் அதிகாரப் பூர்வப் பேச்சாளராகப் பணிபுரியும் அருள்தந்தை பெதெரிகோ லொம்பார்தி Octava Dies என்ற வார நிகழ்ச்சியில் 700 கோடியைத் தாண்டிப் பிறந்த முதல் குழந்தையை மகிழ்வுடன் வரவேற்றுப் பேசினார்.
பிறந்துள்ள இந்தக் குழந்தையிடம் நேரடியாகப் பேசுவது போல் இந்த வார நிகழ்ச்சியில் அமைந்திருந்த அவர் கூற்றுக்களில், இக்குழந்தைக்கு இவ்வுலகம் சரியான ஓர் இடத்தை தயாரித்துள்ளதா என்ற கேள்வியையும் எழுப்பினார்.
அண்மையில் நடந்து முடிந்த G20 நாடுகளின் உச்சி மாநாட்டையும் தன் எண்ணங்களில் இணைத்துப் பேசிய அருள்தந்தை லொம்பார்தி, 700 கோடி என்ற எண்ணிக்கையைத் தாண்டிப் பிறந்த இந்தக் குழந்தையும் இதற்குப் பின் பிறந்துள்ள, இன்னும் பிறக்கப்போகும் குழந்தைகள் அனைவருமே நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்க வேண்டும், ஏனெனில் அவர்கள் 800 கோடியைத் தாண்டிப் பிறக்கும் குழந்தையை இவ்வுலகில் வரவேற்க வேண்டியிருக்கும் என்று தன் எண்ணங்களை நிறைவு செய்தார்.
வெறுப்பைத் தூண்டிவிடும் அரசியல்வாதிகளுக்கு நைஜீரியாவின் ஆயர்கள் கண்டனம்
நவ.09,2011. சுயநலமிக்க அரசியல் வாதிகள் வளர்த்துவிடும் வெறுப்பாலும், அரசு மற்றும் காவல் துறையின் தவறுகளாலும் அப்பாவி பொது மக்கள் பெரிதும் துன்பத்திற்கு ஆளாகிறார்கள் என்று நைஜீரியாவின் ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.
கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களிலும் நைஜீரியாவின் Damaturu மற்றும் Patiskum ஆகிய இரு ஊர்களில் கோவில்களும், மசூதிகளும் தாக்கப்பட்டு, ஏறத்தாழ 100 பேருக்கும் மேல் உயிரிழுந்துள்ளதைக் குறித்து பேசிய Maiduguri ஆயர் Oliver Dashe Doeme இவ்வாறு கூறினார்.
Damaturu என்ற ஊரில் உள்ள அன்னை மரியாவின் ஆலயம் இத்தாக்குதலால் தீக்கிரையாகி, முற்றிலும் தரை மட்டமாகிவிட்டதென்று கூறிய ஆயர் Doeme அப்பகுதியில் உள்ள அரசியல் தலைவர்களே இந்த வன்முறைக்குக் காரணம் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
வன்முறைகள் ஏழ்மையையும், அறியாமையையும் இன்னும் அதிகம் வளர்க்குமே தவிர, அவைகளை நீக்கும் வழிகளைக் காண்பிக்காது என்று Bauchi மறைமாவட்ட ஆயர் Goltok Malachy கூறினார்.
நைஜீரியாவில் பழக்கத்தில் உள்ள மேற்கத்திய கல்வி முறை ஒழிக்கப்பட வேண்டுமென்றும் இஸ்லாமிய பாரம்பரியம் நிலைநிறுத்தப்பட வேண்டுமென்றும் போராடி வரும் Boko Haram என்ற இஸ்லாமிய அடிப்படைவாதக் குழு அன்னை மரியா கோவிலைத் தாக்கியதற்கு பொறுபேற்றுள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவர்களை முற்றிலும் விரட்டி விட்டு, அப்பகுதியில் Sharia எனப்படும் இஸ்லாமிய பாரம்பரிய வாழ்வு முறையைப் புகுத்த இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களுடன் அரசியல் வாதிகளும் இணைந்துள்ளனர் என்று ஆயர் Doeme சுட்டிக் காட்டினார்.
இஸ்லாமிய அடிப்படைவாதக் கொள்கைகளில் ஊறியுள்ளவர்கள் அரசிலும், காவல் துறையிலும் ஊடுருவி இருப்பதால், அவர்கள் கிறிஸ்தவர்களுக்கு உதவிகள் செய்ய மறுத்து வருகின்றனர் என்றும் ஆயர் Doeme மேலும் கூறினார்.
மறைமாவட்டக் குருக்கள் கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப்பு போராட்டங்களில் முன்னிலை வகிக்க வேண்டாம் - தூத்துக்குடி ஆயர் யுவான் அம்புரோஸ்
நவ.09,2011. தமிழ் நாட்டின் தூத்துக்குடி மறை மாவட்டக் குருக்கள் கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப்பு போராட்டங்களில் முன்னிலை வகிக்க வேண்டாமென்றும், மக்களுக்குத் தங்கள் ஆதரவைப் பிற வழிகளில் வெளிப்படுத்தலாம் என்றும் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் யுவான் அம்புரோஸ் கூறினார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவடையும் நிலையில் அப்பகுதி மக்கள் பல வாரங்களாக மேற்கொண்டிருக்கும் போராட்டத்தால் இந்த அணு மின் நிலையம் திட்டமிட்டபடி டிசம்பர் மாதம் செயல்படுவதில் பிரச்சனைகள் எழுந்துள்ளன.
இந்தக் குழப்பத்தை ஓரளவு தீர்க்கும் நோக்கத்தில் ஆயர் தன் குருக்களுக்கு இந்த அறிக்கையை விடுத்திருக்கலாம் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள் விடாப்பிடியான நிலையிலிருந்து சற்றே இறங்கி வந்திருப்பதாகவும், இந்த அணு மின் நிலையம் குறித்த அனைத்து விவரங்களும் மக்களுக்கு ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்தும் ஒரு வெள்ளை அறிக்கையை போராட்டக் குழுவினர் கேட்டு வருவதாகவும் இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.
கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு வசதிகள் குறித்து முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் திருப்தி
நவ.09,2011. கூடங்குளம் அணுமின் நிலையம் சிறப்பானது, சிறந்த பாதுகாப்பு வசதிகளுடன் கூடியது, இது தமிழகத்திற்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதம் என இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை நிரந்தரமாக மூடக்கோரி நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மீனவர்களும், சமூக ஆர்வலர்களும் தொடர் போராட்டம் நடத்தி வரும் வேளையில் அப்துல் கலாம் அண்மையில் அங்கு சென்று அணுசக்தி துறை மற்றும் மின்நிலைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அணுமின் திட்டத்தினை ஆதரிக்கும் கிராம மக்கள் சிலரையும் நிலைய வளாகத்திலேயே சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அப்துல் கலாம், அணுமின் நிலையம் அனைத்து பாதுகாப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். அணு உலை வெடித்தாலுங்கூட கதிர்வீச்சு வெளியாகாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் கலாம் தெரிவித்தார். கழிவு எதுவும் கடலில் கலக்காது எனவும் உறுதியளித்தார் கலாம்.
ஆனால் போராடும் மக்க்ள் எவரையும் அவர் சந்திக்கவில்லை. அது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது தான் சமாதானம் செய்துவைக்க வரவில்லையென்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படியிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளவே வந்ததாகவும், இப்போது முழுத்திருப்தியுடன் திரும்புவதாகவும் கலாம் கூறினார்.
கூடங்குளம் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் ''அப்துல் கலாமை சந்திக்கத் தங்களுக்கு அழைப்புவரவில்லை, அது தங்களுக்கு ஏமாற்றமே, எப்படியும் அரசுசார் அறிவியலாளராகவே கலாம் பேசியிருக்கிறார், தங்களுக்கு அது ஏற்புடையதல்ல'' என்றவர், குறிப்பாக அணுஉலைக் கழிவுகள் பற்றி குழப்பமான தகவல்கள் வெளிவருவதாகக் கூறினார்.
''அணு மின்நிலையம் குறித்த அனைத்து பிரச்சனைகளையும் நடுநிலையோடு ஆய்ந்து பரிந்துரை செய்ய புதிதாக, முற்றிலும் சுதந்திரமாக செயல்படக்கூடிய நிபுணர் குழுவேண்டும், அதன் அறிக்கையின் பேரில் மக்கள் முடிவெடுக்கட்டும், அதற்குத் தாங்கள் உடன்படத்தயார்'' என்றும் உதயகுமார் மேலும் கூறினார்.
இந்து மதத்தைச் சார்ந்த நான்கு மருத்துவர்கள் பாகிஸ்தானில் கொலை
நவ.09,2011. தெற்கு பாகிஸ்தானில் சிந்து மாநிலத்தில் இந்து மதத்தைச் சார்ந்த நான்கு மருத்துவர்கள் இத்திங்களன்று கொல்லப்பட்டுள்ளனர்.
மருத்துவர்கள் அசோக், நரேஷ், அஜீத், மற்றும் சத்தியா பால் ஆகியோர் Chak என்ற ஊரில் அவர்கள் பணிபுரிந்து வந்த மருத்துவ மனையிலேயே ஆயுதம் தாங்கிய ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அண்மையில் இந்தப் பகுதியில் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே உருவான ஒரு கருத்து வேறுபாட்டால் இந்தக் கொலைகள் நிகழ்ந்திருக்கலாம் என்றும், இந்தக் கொலைகளில் தொடர்புடைய இருவரை தாங்கள் கைது செய்திருப்பதாகவும் காவல் துறையினர் கூறியுள்ளனர்.
அண்மையில் கொண்டாடப்பட்ட தீபாவளி விழாவன்று இந்து மக்களை வாழ்த்திய பாகிஸ்தான் அரசுத் தலைவர் Asif Zardari அவர்களைச் சந்தித்த இந்து மக்களின் தலைவர்கள் சிலர், இக்கொலைகளில் ஈடுபட்டோரைக் கண்டுபிடிக்கவும், தங்களுக்குத் தகுந்த பாதுகாப்பு தரவும் வேண்டுமென்று விண்ணப்பித்துள்ளனர்.
பாகிஸ்தானில் சிறுபான்மையினர் தொடர்ந்து அனுபவிக்கும் அநீதிகளுக்கும், துன்பங்களுக்கும் இந்தக் கொலைகள் மற்றுமொரு எடுத்துக்காட்டு என்று பாகிஸ்தானில் செயலாற்றும் பாப்பிறை மறைபணிக் கழகத்தின் இயக்குனர் அருள்தந்தை மாரியோ ரோட்ரிகுவேஸ் FIDES செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.
நைரோபியில் HIV மற்றும் AIDS நோய் கண்டுள்ள குழந்தைகளுக்கென்று இயேசு சபையினர் நடத்தும் ஒரு தனிப்பட்ட பள்ளி
நவ.09,2011. ஆப்ரிக்காவின் நைரோபியில் Kibera எனும் இடத்தில் உள்ள ஒரு சேரியில் HIV மற்றும் AIDS நோய் கண்டுள்ள குழந்தைகளுக்கென்று ஒரு தனிப்பட்ட பள்ளி நடத்தப்பட்டு வருகிறது.
Kiberaவில் வாழும் பத்து இலட்சம் மக்களில் 30000௦க்கும் அதிகமான குழந்தைகள் HIV நோயினால் தாக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கென்று புனித ஆலோய்சியஸ் கொன்சாகா கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளி என்ற ஒரு தனிப்பட்ட நிறுவனத்தை இயேசு சபையினர் நடத்தி வருகின்றனர்.
கென்யாவில் ஆரம்பக் கல்வி இலவசமாக வழங்கப்படுகிறது என்றும், உயர்நிலைக் கல்வி பயில அதிக செலவாகிறதென்றும் உணர்ந்த இயேசு சபை குரு அருள்தந்தை Terry Charlton இப்பள்ளியை நிறுவியுள்ளார் என்று இப்புதனன்று வெளியான FIDES செய்தியொன்று கூறியுள்ளது.
2004ம் ஆண்டு AIDS நோய் கண்ட 25 குழந்தைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பள்ளியில் தற்போது 280க்கும் அதிகமான குழந்தைகள் பயின்று வருகின்றனர் என்று FIDES செய்தி மேலும் கூறுகிறது.
No comments:
Post a Comment