Tuesday, 1 November 2011

Catholic News - hottest and latest - 01 November 2011

1.  அனைத்துப் புனிதர்கள் பெருவிழாவையொட்டி, திருத்தந்தையின் மூவேளை செபஉரை

2.  ஒழுக்க ரீதி மதிப்பீடுகள் குறைந்து வருவதே, பொருளாதார நெருக்கடிக்கான‌ காரணம் என்கிறார் கர்தினால்

3.  கேரள அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் குறித்து பேராயர்

4.  தாய்லாந்திலும் துருக்கியிலும் இய்ற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருச்சபை உதவிகள்

5.  மத்திய அமெரிக்காவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இஸ்பெயின் காரித்தாஸ் அமைப்பின் உதவி

6.  ஐ.நா. வின் மரம் நடும் திட்டத்திற்கு இந்தோனேசிய திருச்சபை ஆதரவு

7.  இந்தியாவின் பல‌ நகரங்களில், குடிநீர் வசதி மற்றும் கழிவு நீர் அகற்றும் வசதி இல்லை

------------------------------------------------------------------------------------------------------

1.  அனைத்துப் புனிதர்கள் பெருவிழாவையொட்டி, திருத்தந்தையின் மூவேளை செபஉரை

நவ.01,2011. திருச்சபையை அன்பு கூர்ந்து அதனைப் புனிதப்படுத்த தன்னையேக் கையளித்த இயேசுவைப் பின்பற்றும் நாம், திருமுழுக்கின் வழியான நம் அழைப்பை ஏற்று புனிதர்களாக மாறுவதற்கான வழிகளைக் கைகொள்வோம் என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
அனைத்துப் புனிதர்கள் பெருவிழாவையொட்டி, இச்செவ்வாயன்று தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு நண்பகல் மூவேளை செபஉரை வழங்கியத் திருத்தந்தை, வாழ்வின் பல்வேறு வழிகள் மூலம் புனிதர்களாக மாறிய திருச்சபையின் இந்தப் புனிதர்கள் கூட்டம்,   இயேசுவே நமது இறுதி நம்பிக்கை என்பதையும், அவரை மையமாகப் பற்றிக்கொண்டு நாம் பல்வேறு வழிகள் மூலம் புனிதத்துவத்தை அடையலாம் என்பதையும்  சுட்டிக்காட்டுகிறது என்றார்.
வாழ்வின் எல்லா நிலைகளும், அருளின் நடவடிக்கைகளாக மாறி அர்ப்பணத்துடனும் உறுதி நிலைப்பாட்டுடனும் செயல்படும்போது புனிதமாக மாறமுடியும் என மேலும் உரைத்தார் திருத்தந்தை.
இப்புதனன்று திருச்சபையில் சிறப்பிக்கப்படும் அனைத்து ஆன்மாக்கள் விழா குறித்தும் தன் மூவேளை செப உரையில் எடுத்துரைத்த அவர்,  இறந்த நம் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக நாம் மேற்கொள்ளும் செபங்கள் அவர்களுக்கு மட்டும் உதவுவதில்லை, மாறாக நமக்காக அவர்கள் பரிந்துபேசுவதற்கும் உதவுகிறது என்று கூறினார்.
இறந்த உறவினர்களின் கல்லறையைச் சென்றுத் தரிசிப்பது, மரணத்திற்குப் பின் வரும் நம் வாழ்வின் மீது நாம் கொள்ளும் நம்பிக்கையையையும் பலப்படுத்துகிறது என மேலும் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

2.  ஒழுக்க ரீதி மதிப்பீடுகள் குறைந்து வருவதே, பொருளாதார நெருக்கடிக்கான‌ காரணம் என்கிறார் கர்தினால்

நவ.01,2011. த‌‌னி மனிதர்களிலும் நிறுவனங்களிலும் ஒழுக்க ரீதி மதிப்பீடுகள் குறைந்து வருவதே, தற்போது உலகில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கான‌ முக்கிய காரணம் என்றார் மும்பை கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்.
உலகப் பொருளாதாரம் சரியான முறையில் இயங்க வேண்டுமெனில் பகுத்தறிவுவாதத்தையும், நம்பிக்கையையும் அடிப்படையாகக் கொண்ட அடிப்படை மதிப்பீடுகளும், பொது நன்னெறிக் கோட்பாடுகளும் தேவைப்படுகின்றன என்றார் கர்தினால் கிரேசியஸ்.
தொழில்துறை என்பது பொறுப்பான நிர்வாகத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும், அறநெறி சார்ந்த தவறுகளுக்கு பொறுப்பை ஏற்பதும், சுற்றுச்சூழல் குறித்த பொறுப்புணர்வுடன் செயல்படுவதும் தொழில்துறைக்கு மிகவும் அவசியம் என்றும் கர்தினால் கிரேசியஸ் எடுத்துரைத்தார்.

3.  கேரள அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் குறித்து பேராயர்

நவ.01,2011. அதிகக் குழந்தையுள்ளக் குடும்பங்களை பொருளாதார ரீதியாகத் தண்டிக்க முயலும் கேரள காங்கிரஸ் அரசின் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியிடம் விண்ணப்பித்துள்ளார் கேரளாவின் சீரோ மலபார் ரீதி கத்தோலிக்க சபையின் தலைவர் பேராயர் ஜார்ஜ் ஆலஞ்சேரி.
கேரளா மாநிலத்தில் ஒவ்வொரு குடும்பமும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் வைத்திருக்கக் கூடாது என்ற கொள்கையைச் செயல்படுத்த மாநில அரசு முயன்று வருவது, மனிதர்களின் அடிப்படை உரிமையை மீறுவதாகும் என பேராயர் ஆலஞ்சேரி, சோனியா காந்தியை டெல்லியில் சந்தித்தபோது கூறினார்.
கம்யூனிச நாடான சீனாவில் இருக்கும் முறையற்ற ஒரு சட்டத்தை குடியரசு நாடான இந்தியாவிலும் புகுத்த முயல்வது ஏற்றுக் கொள்ள முடியாதது எனவும் எடுத்துரைத்தார் சீரோ மலபார் ரீதி பேராயர் ஆலஞ்சேரி.
எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்வது என்பதை தம்பதியரின் விருப்பத்திற்கு விட்டுவிட வேண்டுமேயொழிய, அரசு அதில் தலையிட உரிமையில்லை என்பதையும் வலியுறுத்திய பேராயர், மூன்றாண்டுகளுக்கு முன்னர் ஒரிசாவின் கந்தமாலில் இடம்பெற்ற வன்முறைகளால் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் குறித்து சோனியா காந்தி அக்கறை கொள்ள வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன் வைத்தார்.

4.  தாய்லாந்திலும் துருக்கியிலும் இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருச்சபை உதவிகள்

நவ.01,2011. அண்மை வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள தாய்லாந்து நாட்டிற்கும் நில அதிர்ச்சியால் பாதிப்புக்குள்ளாகியுள்ள துருக்கி நாட்டிற்கும் 25,000 டாலர்கள் வீதம் உதவித் தொகை அனுப்ப உள்ளதாக தென்கொரியாவின் கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு அறிவித்துள்ளது.
Seoul பெருமறைமாவட்டத்தின் பிறரன்பு அமைப்பால் வழங்கப்பட உள்ள இவ்வுதவித் தொகைகள், வீடுகள் கட்டுவதற்கும், மருத்துவப் பணிகளுக்கும், நிவாரண உபகரணங்கள் வாங்குவதற்கும் செலவழிக்கப்படும் என்றார் அவ்வமைப்பின் இயக்குனர் குரு ஜோசப் கிம் யாங் தயே.
தாய்லாந்து நாட்டிற்கான உதவிகள் விரைவில் அனுப்பப்பட்டு, காரித்தாஸ் அமைப்பு மூலம் பணிகள் தொடரும் என்று கூறிய கொரியத் திருச்சபை அதிகாரிகள், வெளிநாட்டு உதவிகளை துருக்கி அரசு மறுத்துள்ள நிலையில், அந்நாட்டிற்கு உதவும் வழிகள் குறித்து சிந்திக்கப்படும் என அறிவித்துள்ளனர்.


5.   மத்திய அமெரிக்காவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இஸ்பெயின் காரித்தாஸ் அமைப்பின் உதவி

நவ.01,2011. மத்திய அமெரிக்காவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இரண்டு இலட்சத்து எண்பதாயிரம் டாலர்களை அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளது இஸ்பெயின் காரித்தாஸ் அமைப்பு.
மெக்ஸிகோ, ஹொண்டுராஸ், எல் சால்வதோர், நிக்காராகுவா, பானமா மற்றும் கோஸ்ட ரிக்காவில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள 12 இலட்சம் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற இந்த உதவிப்பணத்தை அனுப்புவதாக இஸ்பானிய காரித்தாஸ் அமைப்பு கூறியது.
ஏற்கனவே இஸ்பானிய காரித்தாஸ் அமைப்பு, வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மத்திய அமெரிக்க நாடுகளின் நீண்ட கால உதவித் திட்டங்கள் குறித்து ஆய்வுச் செய்ய வல்லுனர்களை அப்பகுதிக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

6.  ஐ.நா. வின் மரம் நடும் திட்டத்திற்கு இந்தோனேசிய திருச்சபை ஆதரவு

நவ.01,2011. இந்தோனேசியாவில் 100 கோடி மரங்களை நடுவதற்கு ஐ.நா அமைப்பு வகுத்துள்ளத் திட்டத்திற்கு அனைத்து கத்தோலிக்கர்களும் தங்கள் ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் அந்நாட்டு பேராயர் Petrus Turang.
கிழக்கு Nusa Tenggara மாநிலத்தில் இந்த மரம்நடும் திட்டம் துவக்கப்பட்ட விழாவில் உரையாற்றிய Kupang  பேராயர் Turang, காடுகளைப் பாதுகாக்கும் திட்டத்திற்கு திருச்சபை தன் ஆதரவை என்றும் வழங்குகிறது என்றார்.
வரும் தலைமுறையினருக்கு பலன் தர உள்ள இத்திட்டத்தில் வெறும் பார்வையாளராக மட்டும் இல்லாமல், இதில் ஆர்வத்துடன் கத்தோலிக்கர்கள் ஈடுபடவேண்டும் என்ற நோக்கில் ஒவ்வொரு பங்குதளத்திற்கும் தான் கடிதம் அனுப்ப உள்ளதாகவும் கூறினார் பேராயர் Turang.


7.  இந்தியாவின் பல‌ நகரங்களில், குடிநீர் வசதி மற்றும் கழிவு நீர் அகற்றும் வசதி இல்லை

நவ.01,2011. இந்தியாவின் 12 மாநிலங்களில் உள்ள 1,405 நகரங்களில், 50 விழுக்காடு நகரங்களில் குடிநீர் வசதி மற்றும் கழிவுநீர் அகற்றும் வசதி இல்லை  என, மத்திய அரசு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி, துப்புரவு வசதி, மழைநீர் வடிகால் வசதி உள்ளிட்டவை குறித்து மத்திய நகர்ப்புற அமைச்சகம் சமீபத்தில், 12 மாநிலங்களில் உள்ள 1,405 நகரங்களில் மேற்கொண்ட ஆய்வில், 50 விழுக்காடு நகரங்களில் இந்த அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என  கண்டறியப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள 249 நகரங்களில், நவி மும்பை மற்றும் மால்காபூரில் மட்டும் தான் 24 மணி நேர தண்ணீர் விநியோகம் உள்ளது, பெரும்பாலான நகரங்களில் நிலத்தடி சாக்கடையே கிடையாது.
கர்நாடகாவில் 52 நகரங்களில் மட்டும் கழிவுநீர் அகற்றும் வசதி செய்யப்பட்டுள்ளது, ஆந்திராவில் 124 நகரங்களில் ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யும் வசதி செய்து தரப்படவில்லை, மத்திய பிரதேசத்தில் 46 விழுக்காடு நகரங்களில் மட்டுமே தண்ணீர் விநியோகம்  செய்யப்படுகிறது, என‌ நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நகர்ப்புற நிர்வாகத்துறை இயக்குனர் சீனிவாஸ் சாரி குறிப்பிடுகையில், “பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த நினைக்கும் அரசு, இது போன்ற அடிப்படை வசதிகள் விஷயத்தில் உடனடி கவனம் செலுத்த வேண்டியது அவசியம்என்றார்.
 

No comments:

Post a Comment