1. வத்திக்கான் : அமெரிக்காவில் புதிய நற்செய்திப்பணி செய்வதற்கு, குடியேற்றம் சவாலாக இருக்கின்றது
2. ஐவரி கோஸ்டில் அமைதிக்குப் புதிய அச்சுறுத்தல், ஆயர் கவலை
3. நவம்பர் 6, இஸ்பானிய உள்நாட்டுச் சண்டையில் இறந்த மறைசாட்சிகளின் நினைவு
4. திருத்தந்தை 12ம் பத்திநாதர் யூதப் படுகொலையிலிருந்து யூதர்களைக் காப்பாற்றினார், யூத ஆய்வாளர் நம்பி்க்கை
5. திறம்படச் சேவையாற்றும் கிறிஸ்தவர்களைக் கவுரவிப்பதற்கு ஆந்திர மாநில அரசு இசைவு
6. கொலம்பியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்கின்றன
7. அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
------------------------------ ------------------------------ ------------------------------ ----------------------
1. வத்திக்கான் : அமெரிக்காவில் புதிய நற்செய்திப்பணி செய்வதற்கு, குடியேற்றம் சவாலாக இருக்கின்றது
நவ.05,2011. வட மற்றும் தென் அமெரிக்காவில் புதிய நற்செய்திப் பணி செய்வதற்கு, மக்களின் குடியேற்றம் மிகப்பெரும் சவால்களில் ஒன்றாக இருக்கின்றது என்று ஆயர் மாமன்றப் பொதுச் செயலகம் இவ்வெள்ளியன்று வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.
குடியேற்றதாரர்கள் தங்களின் கலாச்சாரங்களைத் தாங்கள் குடியேறியுள்ள நாடுகளோடு ஒன்றிணைத்துச் சமூக அமைதியுடன் வாழ்வதற்குத் திருச்சபை, சமூக மற்றும் சமயம் சார்ந்த உதவிகளைச் செய்து வருகின்றது என்று அவ்வறிக்கை மேலும் கூறியது.
1997ம் ஆண்டில் வத்திக்கானில் நடைபெற்ற அமெரிக்க சிறப்பு ஆயர் மாமன்றத் தீர்மானங்கள் எவ்வாறு அமெரிக்காவில் அமல்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறித்து கடந்த மாத இறுதியில் இடம் பெற்ற கூட்டத்தில் பேசப்பட்டவைகள் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளன.
2012ம் ஆண்டு அக்டோபரில் “புதிய நற்செய்திப்பணி” என்ற தலைப்பில் வத்திக்கானில் நடைபெறும் உலக ஆயர் மாமன்றத்தின் முன்வரைவுக்கு உதவியாகவும் இக்கூட்டம் இடம் பெற்றதாக அவ்வறிக்கை கூறுகின்றது.
2. ஐவரி கோஸ்டில் அமைதிக்குப் புதிய அச்சுறுத்தல், ஆயர் கவலை
நவ.05,2011. மேற்கு ஆப்ரிக்க நாடான ஐவரி கோஸ்டில் ஆயுதங்கள் பெருமளவில் விநியோகத்தில் உள்ளன என்றும் மோதல்கள் மீண்டும் தொடங்கக்கூடும் என்றும் அந்நாட்டு Man ஆயர் Gaspard Beby Gnéba எச்சரித்தார்.
ஐவரி கோஸ்டில் பரவலாக, இன்னும் குறிப்பாக லைபீரிய நாட்டு எல்லைப்புறங்களில் உள்ள கிராமங்களில் பாதுகாப்பற்ற சூழல் உருவாகி இருப்பதாகவும், அண்மை நாட்களில் இக்கிராமங்களில் இடம் பெற்ற வன்முறையில் நான்கு பேர் இறந்தனர் எனவும் ஆயர் Gnéba கவலை தெரிவித்தார்.
அந்நாட்டில் புரட்சிக் குழுக்கள் வளர்ந்து வருவதாகவும், இக்குழுக்களிடமிருந்து துப்பாக்கிகள் எளிதாக மற்றவர்களுக்குக் கிடைப்பதாகவும், ஃபீதெஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார் ஆயர் Gnéba.
ஐவரி கோஸ்ட் நாடு தற்போதுதான் இரத்தம் சிந்தும் மோதல்களிலிருந்து மீண்டு வந்துள்ளது. இதற்கு முன்னர், அந்நாட்டின் முன்னாள் அரசுத் தலைவர் Laurent Gbagbo , பதவி விலக மறுத்ததைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்களுக்கும், தேர்தலில் வெற்றியடைந்த அரசுத் தலைவர் Alassane Ouattara ஆதரவாளர்களுக்கும் இடையே சண்டை நடந்தது. இதில் மனித உரிமைகள் பெருமளவில் மீறப்பட்டன.
3. நவம்பர் 6, இஸ்பானிய உள்நாட்டுச் சண்டையில் இறந்த மறைசாட்சிகளின் நினைவு
நவ.05,2011. இஸ்பானிய உள்நாட்டுச் சண்டையில் கொல்லப்பட்ட மறைசாட்சிகளை அந்நாட்டுக் கத்தோலிக்கத் திருச்சபை இஞ்ஞாயிறன்று நினைவுகூரும் என்று அந்நாட்டு கோர்தோபா ஆயர் Demetrio Fernandez அறிவித்தார்.
இவ்வாண்டில், இஸ்பானிய உள்நாட்டுச் சண்டை இடம் பெற்றதன் 75ம் ஆண்டு கடைபிடிக்கப்படுகின்றது என்றுரைத்த ஆயர் Fernandez, இச்சண்டையில் பல்லாயிரக்கணக்கானோர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர், இவர்கள் இயேசு கிறிஸ்துவுக்காகத் தங்கள் உயிரைக் கொடுத்தவர்கள் என்று கூறினார்.
இச்சண்டையில் இறந்தவர்களில் சுமார் ஆயிரம் பேர் ஏற்கனவே அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளார்கள், இன்னும் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இந்நிலைக்கு உயர்த்தப்படுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.
இவர்கள் இறந்ததற்கான நோக்கம், அதிகாரிகளின் முன்னிலையில் எவ்வாறு பதில் சொன்னார்கள் என்பது குறித்த விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இச்சண்டையில் மறைசாட்சிகளானவர்கள், தங்கள் வீடுகளிலிருந்து கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டு கிறிஸ்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காகத் தூக்கில் இடப்பட்டார்கள் எனவும் ஆயர் ஃபெர்ணான்டெஸ் விளக்கினார்.
1936ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி முதல் 1939ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி வரை இஸ்பானிய உள்நாட்டுச் சண்டை இடம் பெற்றது.
4. திருத்தந்தை 12ம் பத்திநாதர் யூதப் படுகொலையிலிருந்து யூதர்களைக் காப்பாற்றினார், யூத ஆய்வாளர் நம்பி்க்கை
நவ.05,2011. இரண்டாம் உலகப் போரின் போது நாத்சி யூதப்படுகொலையிலிருந்து யூதர்களைக் காப்பாற்றுவதற்கு திருத்தந்தை 12ம் பத்திநாதர், தானே யூதர்களின் இருப்பிடம் சென்று அவர்களைக் காப்பாற்றியிருப்பதற்குச் சான்றுகளை வெளியிட்டுள்ளார் ஓர் அமெரிக்க ஆராய்ச்சியாளர்.
இரண்டாம் உலகப் போரின் போது உரோமில் யூதர்கள் வாழ்ந்த பகுதியிலிருந்து தப்பித்துச் சென்று பின்னர் பாதுகாப்புக்காக வத்திக்கானுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒருவரின் கடிதத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார் Pave the Way Foundation என்ற அமைப்பின் நிறுவனர் Gary Krupp.
பின்னாளில் அந்த ஆள், திருத்தந்தை 12ம் பத்திநாதரைச் சந்தித்த போது, இவர்தான் ஒரு சாதாரண பிரான்சிஸ்கன் சபை சகோதரர் போல் உடையணிந்து தன்னை வத்திக்கானுக்கு அழைத்து வந்தவர் என்பதைத் தெரிந்து கொண்டதாக அக்கடிதம் கூறுவதாக Krupp கூறினார்.
கத்தோலிக்கருக்கும் யூதருக்கும் இடையே புரிந்து கொள்ளுதலை ஊக்குவிக்கும் நோக்கத்தில் 2002ம் ஆண்டு Pave the Way Foundation என்ற அமைப்பை ஏற்படுத்தினார் Krupp.
திருத்தந்தை 12ம் பத்திநாதர் நாத்சி ஆட்சிமுறையை அதிகமாக எதிர்த்தார், இவர் உரோம் நகருக்குள் அடிக்கடிச் சென்று போரின் சேதங்களைப் பார்த்தார், உரோமில் யூதர்களின் குடியிருப்புகளுக்குச் சென்று அவர்களைக் காப்பாற்றினார் என்பன போன்ற இத்திருத்தந்தையின் செயல்பாடுகளில் தான் உறுதியாக இருப்பதாக Krupp கூறுகிறார்.
5. திறம்படச் சேவையாற்றும் கிறிஸ்தவர்களைக் கவுரவிப்பதற்கு ஆந்திர மாநில அரசு இசைவு
நவ.05,2011. சமூகநலப்பணி, மருத்துவம், கல்வி, இலக்கியம், மேடை நாடகம், நுண்கலைகள் போன்ற சமயம் அல்லாத துறைகளில் திறமையுடன் சேவையாற்றியுள்ள கிறிஸ்தவர்களைக் கவுரவிப்பதற்கு ஆந்திர மாநில அரசு இசைவு தெரிவித்துள்ளது.
க்ததோலிக்க ஆயர்கள், கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் ஆகியோரை உள்ளடக்கிய ஆந்திர மாநில கிறிஸ்தவ நிதி கூட்டமைப்பு (APSCMFC), ஆந்திர அரசுக்கு முன்வைத்த பரிந்துரையை ஏற்று, சமூகத்தில் பல துறைகளில் திறம்படச் சேவையாற்றும் கிறிஸ்தவர்களைக் கவுரவிப்பதற்கு அது முன்வந்துள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளாக மிகத் திறமையாகப் பணியாற்றும் 5 பேர் வருகிற கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியில் ஆந்திர மாநில அரசால் கவுரவிக்கப்படுவார்கள். இவர்களுக்குப் பத்தாயிரம் ரூபாய் பணமும் சான்றிதழும் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
6. கொலம்பியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்கின்றன
நவ.05,2011. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து இடம் பெற்று வருவதாக, அந்நாட்டு ஆயர் பேரவையின் நலப்பணி ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த நவம்பர் மாத இதழில் இத்தகவலை வெளியிட்டுள்ள அந்த ஆணையம், 2006க்கும் 2009க்கும் இடைப்பட்ட காலத்தில் 3,540 புகார்கள் பெண்களிடமிருந்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.
நவம்பர் 25ம் தேதி, அனைத்துலக பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள் என்பதையும், இந்தச் சர்வதேச நாள், 30 ஆண்டுகளுக்கு முன்னர் கொலம்பியாவின் பொகோட்டாவில் நடைபெற்ற முதல் இலத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் பெண்ணுரிமை கூட்டத்தில் ஏற்படுத்தப்பட்டது என்பதையும் அவ்வாணையம் சுட்டிக் காட்டியுள்ளது.
கொலம்பியா போன்ற பல நாடுகளில் பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் இருந்த போதிலும், அச்சட்டம் உண்மையிலேயே செயல் வடிவம் பெறுவதற்கு நீண்ட பயணம் செய்ய வேண்டியிருக்கின்றது என்றும் அவ்வாணைய அறிக்கை கூறுகிறது.
7. அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
நவம்பர் 05,2011. அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும் மக்களில் பதினைந்து பேரில் ஒருவர் ஏழையாக உள்ளதாக அண்மைக் கணக்கெடுப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
2010-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், ஆண்டு ஒன்றிற்கு நான்கு பேர் உள்ள குடும்பத்தினரின் ஆண்டு வருமானம் 11 ஆயிரத்து 157 டாலராகவும், தனிநபரின் ஆண்டு வருமானம் ஐந்தாயிரத்து 570 டாலருக்குக் கீழே உள்ளவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி சுமார் 2 கோடியே 5 இலட்சம் அமெரிக்கர்கள் அதாவது அந்நாட்டு மக்கள் தொகையில் 6.7 விழுக்காட்டினர் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளதாகவும், 50 விழுக்காட்டினர் வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 40க்கும் மேற்பட்ட மாவட்டங்களைக் கொண்ட கொலம்பியா மாநிலத்தில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment