Wednesday 16 November 2011

Catholic News - hottest and latest - 15 November 2011

1. iPad ஐப் பயன்படுத்தி உலகின் மிக உயரமான எலெக்ட்ரானிக் கிறிஸ்துமஸ் மரத்தை ஒளியேற்றுவார் திருத்தந்தை

2. பேராயர் தொமாசி : சர்வதேச மனிதாபிமானச் சட்டம் பலவீனப்படுத்தப்படக் கூடாது

3. நேபாளத்தில் ஒதுக்கப்பட்ட பழங்குடி இனத்தவர்க்கெனக் கத்தோலிக்கப் பள்ளி ஒன்று திறக்கப்பட்டுள்ளது

4. இந்தோனேசிய சமய சகிப்புத்தன்மை மசோதா பல்சமய நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தல் : தலத்திருச்சபை உயர் அதிகாரி குறை

5. 1930களில் திபெத்திய மொழியில் எழுதப்பட்ட திருமறை நூல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

6. மியான்மாரில் மேலும் அதிகமான அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு அரசு திட்டம்

7. வெப்பநிலை மாற்றத்தால் கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பகுதியில் இலட்சக்கணக்கான சிறாரின் வாழ்க்கைத்தரம் மேலும் மோசமடையும் : ஐ.நா. எச்சரிக்கை

------------------------------------------------------------------------------------------------------

1. iPad ஐப் பயன்படுத்தி உலகின் மிக உயரமான எலெக்ட்ரானிக் கிறிஸ்துமஸ் மரத்தை ஒளியேற்றுவார் திருத்தந்தை

நவ.15,2011. உலகின் மிக உயரமான எலெக்ட்ரானிக் கிறிஸ்துமஸ் மரத்தை புதிய iPad கணனி தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்தி வத்திக்கானில் தனது அறையில் இருந்து கொண்டே ஒளியேற்றி வைப்பார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
வத்திக்கான் தொலைக்காட்சி மையத்தின் உதவியினால் ஒளி-ஒலி காட்சி மூலம் முதலில் செய்தி வழங்கிய பின்னர் இந்தக் கிறிஸ்துமஸ் மரத்திற்குத் திருத்தந்தை ஒளியேற்றுவார் என்று இத்தாலியின் Gubbio நகரமும் Gubbio மறைமாவட்டமும் அறிவித்தன.
டிசம்பர் 7ம் தேதி மாலை இந்நிகழ்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Gubbio நகருக்கு அருகிலுள்ள Igino மலைக்கு முன்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த எலெக்ட்ரானிக் கிறிஸ்துமஸ் மரம், இரண்டாயிரம் அடிக்கு மேற்பட்ட உயரத்தைக் கொண்டுள்ளது. இதற்கு 25 ஆயிரம் அடிக்கு அதிகமான மின்சாரக் கம்பிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 1981ம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்த மரம், 1991ம் ஆண்டில் உலகின் மிக உயரமான கிறிஸ்துமஸ் மரம் என்று அங்கீகரிக்கப்பட்டு உலகக் கின்னஸ் சாதனையிலும் பதிவாகியுள்ளது.


2. பேராயர் தொமாசி : சர்வதேச மனிதாபிமானச் சட்டம் பலவீனப்படுத்தப்படக் கூடாது

நவ.15,2011. கொத்து வெடிகுண்டுகள் அப்பாவி மக்களுக்கும் அவர்களின் அடிப்படையான பொருளாதார வாழ்வுக்கும்  விளைவிக்கும் பெரும் சேதங்களைக் கவனத்தில் கொண்டு இந்தக் குண்டுகளின் பயன்பாட்டை முற்றிலும் தடைசெய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கேட்டுக் கொண்டார்.
சிறிய ஆயுதப் பயன்பாட்டுத் தடை குறித்த ஐ.நா. ஒப்பந்தத்தை நான்காவது தடவையாகப் பரிசீலனை செய்யும் ஐ.நா. கூட்டத்தில் இத்திங்களன்று உரையாற்றிய, ஐ.நா.வுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சில்வானோ தொமாசி,  கொத்துவெடி குண்டுகளால் பாதிக்கப்படுவோருக்குத் தேவையான உதவிகள் செய்யப்படுமாறும் வலியுறுத்தினார்.
நிலையற்ற சர்வதேசச் சூழலிலும் நிச்சயமற்ற உலகிலும் சர்வதேச மனிதாபிமானச் சட்டமே மக்களுக்குப் பாதுகாப்புக் கவசமாக இருக்கின்றது என்றுரைத்த பேராயர் தொமாசி, இந்தச் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் பலவீனப்படுத்தப்படக் கூடாது என்பதைச் சுட்டிக்காட்டினார்.
அப்பாவி குடிமக்கள் மீது தாறுமாறாக ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதற்கு எதிராகச் செயல்படும் உரிமை CCW என்ற சிறிய ஆயுதப் பயன்பாட்டைத் தடை செய்வது குறித்த உடன்பாட்டிற்கு இருக்கின்றது என்றும் அவர் கூறினார்.   
கொத்துவெடி குண்டு என்பது பலநூறு சிறிய வெடிகலங்களை வெளியே தள்ளும் ஒரு குண்டு. இந்த வெடிகலங்கள் பரந்த பரப்பளவில் விழுந்து வெடித்து அழிவு உண்டு பண்ணும். வானிலில் இருந்தோ தரையில் இருந்தோ கொத்துக் குண்டுகள் வீசப்படும். வீசப்பட்ட பல காலம் பின்பும் வெடிக்காத வெடிகலங்கள் வெடித்து பெரும் அழிவு ஏற்படுத்த வல்லவை. இதனால் இந்தக் குண்டை போரில் பயன்படுத்துவதில்லை என 94 நாடுகள் 2008ம் ஆண்டு மே மாதம் Convention on Cluster Munitions என்ற பன்னாட்டு உடன்படிக்கை செய்துள்ளன.


3. நேபாளத்தில் ஒதுக்கப்பட்ட பழங்குடி இனத்தவர்க்கெனக் கத்தோலிக்கப் பள்ளி ஒன்று திறக்கப்பட்டுள்ளது

நவ.15,2011. நேபாளத்தின் மலைப்பகுதியில் வாழும் Chepang என்ற மிக ஏழைப் பழங்குடி இனத்தவர்க்கெனப் புதிய கத்தோலிக்கப் பள்ளி ஒன்றைத் திறந்துள்ளது தலத்திருச்சபை.
வாழ்வில் நிறைவடையக் கற்றல்என்ற விருதுவாக்குடன் தொடங்கப்பட்டுள்ள நவோதயா என்ற இந்தப் பள்ளியை இச்சனிக்கிழமை திறந்து வைத்துப் பேசிய காத்மண்ட் ஆயர் அந்தோணி ஷர்மா, இதனைக் கட்டுவதற்கு உதவிய உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்தார்.
நேபாளத்திலுள்ள 59  பழங்குடி இனங்களில் ஒன்றான Chepang இனத்தில் சுமார் 52 ஆயிரம் பேர் இருக்கின்றனர். இவர்கள், நகரங்களுக்கும் முக்கிய சாலைகளுக்கும் தொலை தூரத்தில் கடல் மட்டத்திற்கு 4,500 அடி உயரமான மலைப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது வாழ்க்கை, காடுகளைச் சார்ந்தே உள்ளது.


4. இந்தோனேசிய சமய சகிப்புத்தன்மை மசோதா பல்சமய நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தல் : தலத்திருச்சபை உயர் அதிகாரி குறை

நவ.15,2011. இந்தோனேசியாவில் பிரதிநிதிகள் அவையால் தயாரிக்கப்பட்டுள்ள சமய சகிப்புத்தன்மை மசோதா பல்சமய நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதால் இது இரத்துச் செய்யப்பட வேண்டும் என்று தலத்திருச்சபை உயர் அதிகாரி ஒருவர் கேட்டுக் கொண்டார்.
சமய விழாக்கள், மறையுரைகள், இறந்தோர் அடக்கம், வழிபாட்டுத்தலங்களைக் கட்டுதல் போன்ற அடிப்படை விவகாரங்கள் மீது விதிமுறைகளை வைப்பதால் இம்மசோதா பல்சமய நல்லிணக்கத்தை வெகுவாய்ப் பாதிக்கும் என்று இந்தோனேசிய ஆயர் பேரவையின் பல்சமய ஆணைக்குழுச் செயலர் அருட்பணி  Antonius Benny Susetyo கூறினார்.
இம்மசோதாவின்படி, மக்கள் தங்கள் மதப் போதனைகளின் அடிப்படையில் மதக் கொண்டாட்டங்களை நடத்தலாம், அத்துடன் அந்தக் கொண்டாட்டங்கள் அந்த மத மக்களால் மட்டுமே நடத்தப்பட வேண்டும் எனத் தெரிகிறது.
இதனால் பல்வேறு மதப் பின்னணிகளைக் கொண்ட மக்களுக்கிடையே நல்ல உறவுகளைக் கட்டி எழுப்புவது கடினம் என்று அருட்பணி  Susetyo மேலும் கூறினார்.


5. 1930களில் திபெத்திய மொழியில் எழுதப்பட்ட திருமறை நூல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

நவ.15,2011. 1930களில் திபெத்திய மொழியில் எழுதப்பட்ட திருமறை நூல்களும் அன்னைமரியாவின் வாழ்க்கை வரலாறும் நல்ல நிலையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று ஃபீதெஸ் செய்தி நிறுவனம் அறிவித்தது.
இந்தக் கண்டுபிடிப்புக்கள் பற்றிக் கூறிய ஃபீதெஸ் செய்தி நிறுவனம், திபெத்திய மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருமறை நூல்களின் 45 தொகுப்புகள் 1931ம் ஆண்டில் வெளியிடப்பட்டன என்றும், 489 தொகுப்புக்களைக் கொண்ட  அன்னைமரியாவின் வரலாறு 1932ம் ஆண்டில் வெளியிடப்பட்டன என்றும்  கூறியது.
மேலும், திபெத்திய மொழியில் இத்தகைய நல்ல நிலையில் பாதுகாக்கப்பட்டுள்ள கத்தோலிக்க நூல்கள் இவை மட்டுமே என்று வல்லுனர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
திபெத்திலுள்ள ஒரே கத்தோலிக்கப் பங்குத்தளமான Mang Kangல் இந்நூல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்பங்குத்தளத்தை 1855ம் ஆண்டில் பாரிஸ் மறைபோதக சபையினர் உருவாக்கியுள்ளனர். 1865ம் ஆண்டு முதல் 1959ம் ஆண்டு வரை 17 மறைபோதகர்கள் பணி செய்துள்ளனர். இவர்களில் ஏழுபேர் பொதுநிலை விசுவாசிகளுடன் சேர்த்துக் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தப் பங்குத்தளமானது 1988ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.


6. மியான்மாரில் மேலும் அதிகமான அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு அரசு திட்டம்

நவ.15,2011. மியான்மாரில் சனநாயக ஆதரவு எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சு கி, அடுத்து நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடுவதற்கு முயற்சித்து வரும் வேளை, அந்நாட்டு அரசு மேலும் அதிகமான அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்குத் திட்டமிட்டுள்ளது என்று ஆசியச் செய்தி நிறுவனம் கூறியது.
கடந்த அக்டோபரில் சுமார் 200 மனச்சான்றின் கைதிகள் உட்பட ஆறாயிரத்துக்கு அதிகமான கைதிகளை விடுதலை செய்த மியான்மார் அரசு, அரசியல் கைதிகள் உட்பட பல கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கத் திட்டமிட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
மியான்மார் சிறைகளில் 1,600க்கு அதிகமான அரசியல் கைதிகள் உள்ளனர் என்று மனித உரிமைக் குழுக்கள் கூறுகின்றன. ஆனால் இவ்வெண்ணிக்கை சுமார் 500 என்று அரசு சார்பு தினத்தாள் கூறுகிறது.
2010ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி வீட்டுக் காவலிலிருந்து விடுதலை செய்யப்பட்ட சு கி, வருகிற தேர்தலில் நிற்பதற்குத் திட்டமிட்டு வருவதாக அறிவித்துள்ளார்.


7. வெப்பநிலை மாற்றத்தால் கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பகுதியில் இலட்சக்கணக்கான சிறாரின் வாழ்க்கைத்தரம் மேலும் மோசமடையும் : ஐ.நா. எச்சரிக்கை

நவ.15,2011. இப்புவியின் வெப்பநிலை மாற்றத்தால் கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பகுதியில் இலட்சக்கணக்கான சிறாரின் வாழ்க்கைத்தரம் மேலும் மோசமடையும் என்று ஐ.நா.வெளியிட்ட ஓர் அறிக்கை எச்சரித்துள்ளது.
இந்தோனேசியா, மங்கோலியா, கிரிபாட்டி, பிலிப்பீன்ஸ், வனுவாட்டு ஆகிய ஐந்து நாடுகளில் யுனிசெப் என்ற ஐ.நா.வின் குழந்தைநல அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இவ்வாறு தெரிய வந்துள்ளது.
உலகில் அதிகரித்து வரும் வெப்பத்தினால் காலரா, மலேரியா போன்ற நோய்களாலும் இயற்கைப் பேரிடர்களாலும் சிறாரின் வாழ்க்கை மேலும் பாதிக்கப்படும் என்று, யுனிசெப் அமைப்பின் பசிபிக் பிரதிநிதி Isiye Ndombi கூறினார்.
இந்தோனேசியா, மங்கோலியா மற்றும் பசிபிக் பகுதியில் மக்களின் வாழ்க்கை ஆதாரங்களில் 50 விழுக்காடு வேளாண்மையைச் சார்ந்து இருப்பதால் வெப்பநிலை மாற்றம் சிறாரை அதிகம் பாதிக்கின்றது என்றும் ஐ.நா.அறிக்கை கூறுகிறது.
 

No comments:

Post a Comment