1. கிறிஸ்தவ முன்னேற்ற அவையில் இந்து அடிப்படைவாத எண்ணங்கள் கொண்டோர் உள்ளனர் - பெங்களூரு பேராயர் முறையீடு
2. ஊழலை எதிர்ப்பது விசுவாச வாழ்வின் ஒரு வெளிப்பாடு : தலத் திருச்சபை ஆயர்கள்
3. Aung San Suu Kyiயால் நாடு முன்னேற்றம் அடையும் - மியான்மார் பேராயர் நம்பிக்கை
4. எகிப்து இராணுவம் அப்பாவி மக்கள் மீது வன்முறைகளை அளவுக்கு அதிகமாகக் காட்டுகிறது - காப்டிக் ரீதி கத்தோலிக்க ஆயர்
5. அகமதாபாத் நகரில் உணவு உரிமைகளைக் கோரும் விழிப்புணர்வு கூட்டம்
6. பாகிஸ்தானில் SMS களில் இயேசுகிறிஸ்து என்ற வார்த்தைக்கு இருந்த தடை நீக்கம்
7. கோவாவில் புனித பிரான்சிஸ் சேவியர் திருநாட்கள் காலத்தில் திரைப்பட விழா நடப்பதால் இடையூறுகள்
8. தென்கொரிய அரசு அமெரிக்க அரசுடன் மேற்கொண்டுள்ள கட்டுப்பாடற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு கிறிஸ்தவ அமைப்புக்கள் எதிர்ப்பு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. கிறிஸ்தவ முன்னேற்ற அவையில் இந்து அடிப்படைவாத எண்ணங்கள் கொண்டோர் உள்ளனர் - பெங்களூரு பேராயர் முறையீடு
நவ.23,2011. கிறிஸ்தவ முன்னேற்ற அவை என்று கர்நாடகா அரசு உருவாக்கியுள்ள அமைப்பு குறித்து தன் வலுவான விமர்சனத்தையும், கண்டனத்தையும் பெங்களூரு பேராயர் பெர்னார்ட் மொராஸ் வெளியிட்டார்.
2008ம் ஆண்டு முதல் கிறிஸ்தவர்களுக்கு எதிரானத் தாக்குதல்கள் அதிகரித்துள்ள கர்நாடகாவில், கிறிஸ்துவ சமுதாயத்தின் நன்மதிப்பைப் பெரும் நோக்கில் அண்மையில் கிறிஸ்தவ முன்னேற்ற அவை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்தவர்களின் வழிபாட்டுத் தலங்கள கட்டப்படுவதற்கும் இன்னும் கிறிஸ்தவ சமுதாயத்தின் பிற முன்னேற்றப் பணிகளுக்கும் ஒவ்வோர் ஆண்டும் 50 கோடி ரூபாய் நிதி இந்த அவையால் பிரித்துக் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அவையின் உறுப்பினர்கள் பற்றி தன்னிடம் கலந்து பேசிய முதலமைச்சர், தான் அளித்த ஆலோசனைகளைப் புறக்கணித்துவிட்டு, பாரதீய ஜனதா கட்சி உறுப்பினர்களையும், இந்து அடிப்படைவாத எண்ணங்கள் கொண்டவர்களையும் இந்தக் குழுவில் இணைத்துள்ளார் என்று பெங்களூரு பேராயர் முறையிட்டுள்ளார்.
இந்த அவையின் அமைப்பு குறித்து முதலமைச்சரைச் சந்தித்து தான் பேசவிருப்பதாகக் கூறிய பேராயர், 2008ம் ஆண்டு தாக்குதலை எதிர்த்து போராட்டங்கள் மேற்கொண்ட இளையோர் பலரை, தகுந்த காரணங்கள் இன்றி அரசு கைது செய்திருப்பது குறித்தும் முதலமைச்சரிடம் பேசவிருப்பதாகத் தெரிவித்தார்.
2. ஊழலை எதிர்ப்பது விசுவாச வாழ்வின் ஒரு வெளிப்பாடு : தலத் திருச்சபை ஆயர்கள்
நவ.23,2011. ஊழல் எவ்விதம் பல வழிகளில் இந்திய சமுதாயத்தில் பாதிப்புக்களை உருவாக்குகிறதோ அவ்விதமே அது திருச்சபையையும் பாதிக்கிறது என்று இந்திய ஆயர் ஒருவர் கூறினார்.
இந்தியாவில் ஆக்ரா பகுதியில் உள்ள மறைமாவட்டங்கள் இணைந்து நடத்திய ஒரு கூட்டத்தில் ஊழலை எதிர்ப்பது விசுவாச வாழ்வின் ஒரு வெளிப்பாடு என்று தலத் திருச்சபை ஆயர்கள் விவாதங்களை மேற்கொண்டபோது, ஜெய்பூர் ஆயர் ஆஸ்வால்ட் லூயிஸ் இவ்விதம் கூறினார்.
இந்திய சமுதாயத்தில் ஊடுருவியிருக்கும் ஊழல் இந்தியத் திருச்சபையிலும் காணப்படுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டுகள் உள்ளன என்று ஆயர் லூயிஸ் கூறினார்.
இந்திய சமுதாயத்தில் ஊழலை ஒழிக்கப் பாடுபடும் அனைத்து குழுக்களும் தங்கள் குழுவினரிடையே இந்தப் பிரச்சனை உள்ளதா என்பதையும் தீர ஆராய வேண்டும் என்று வாரணாசி ஆயர் Raphy Manjaly கூறினார்.
தலத்திருச்சபை ஆயர்களையும், சமுதாய நலனில் ஆர்வமுள்ள பல குழுக்களையும் ஒருங்கிணைத்து இக்கூட்டத்தை வழி நடத்திய இயேசு சபை குரு செட்ரிக் பிரகாஷ், கிறிஸ்துவின் சீடராக இருப்பது நேர்மை, நீதி, ஒளிவு மறைவற்ற வாழ்வு இவைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
3. Aung San Suu Kyiயால் நாடு முன்னேற்றம் அடையும் - மியான்மார் பேராயர் நம்பிக்கை
நவ.23,2011. மியான்மார் எதிர்கட்சித் தலைவரான Aung San Suu Kyi நாட்டுப் பற்று மிக்கவர் என்றும், அவரால் மியான்மார் நாடு முன்னேற்றம் அடையும் என்று தான் நம்புவதாகவும் மியான்மார் பேராயர் ஒருவர் கூறினார்.
அண்மையில் மியான்மாரின் இராணுவ ஆட்சியாளர்கள் Suu Kyiஐ வீட்டுக் காவலில் இருந்து விடுதலை செய்ததும், அவர் அரசியலில் மீண்டும் ஈடுபட உத்திரவு அளித்ததும் நாட்டிற்கு நல்ல அடையாளங்கள் என்று கூறிய Yangon பேராயர் சார்ல்ஸ் போ, தற்போது Suu Kyiயும் பிற அரசியல் கட்சிகளும் இணைந்து மக்களின் முன்னேற்றத்திற்கு உழைக்கும் நேரம் வந்துள்ளது என்று கூறினார்.
வரவிருக்கும் தேர்தலில் போட்டியிட Suu Kyi விருப்பம் தெரிவித்துள்ளதை வரவேற்றுப் பேசிய பேராயர் போ, அவர் எவ்வளவு தூரம் சுதந்திரமாகச் செயல்பட முடியும் என்பதைக் காத்திருந்து பார்க்க வேண்டும் என்று கூறினார்.
நாட்டிற்கு இது ஒரு முக்கிய நேரம் என்று உணர்ந்துள்ள Suu Kyi வரவிருக்கும் தேர்தலில் நல்ல முடிவுகள் வெளியாக வேண்டும் என்பதற்காக தலத்திருச்சபையின் செபங்களைக் கோரியுள்ளார் என்றும் பேராயர் போ தெரிவித்தார்.
4. எகிப்து இராணுவம் அப்பாவி மக்கள் மீது வன்முறைகளை அளவுக்கு அதிகமாகக் காட்டுகிறது - காப்டிக் ரீதி கத்தோலிக்க ஆயர்
நவ.23,2011. மக்கள் அனைவரும் அமைதியான வழிகளில் மேற்கொண்டிருக்கும் போராட்டத்தைக் குலைக்க எகிப்து இராணுவம் அப்பாவி மக்கள் மீது வன்முறைகளை அளவுக்கு அதிகமாகக் காட்டுகிறது என்று அந்நாட்டின் காப்டிக் ரீதி கத்தோலிக்க ஆயர் ஒருவர் கூறினார்.
கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் இணைந்து, கடந்த சில நாட்களாக கெய்ரோவின் Tahrir சதுக்கத்தில் மேற்கொண்டு வரும் போராட்டத்தில் எவ்வித தூண்டுதலும் இல்லாமல் இராணுவம் வெளிப்படுத்தும் வன்முறை கண்டனத்திற்கு உரியதென்று ஆயர் அந்தோனியோஸ் அசிஸ் மினா கூறினார்.
அப்பாவி மக்களைச் சுடுகின்ற இராணுவமும், அதற்கு உத்தரவு அளிக்கும் அரசும் இந்த அராஜக நடவடிக்கைக்குப் பதில் சொல்ல வேண்டும் என்று ஆயர் மினா கூறினார்.
போராட்டங்கள் ஒன்றே மக்களிடம் உள்ள ஒரு கருவி. அதையும் சீரிய, அமைதியான வழியில் மக்கள் மேற்கொள்ளும்போது, அரசு வன்முறையைப் பயன்படுத்தினால், மக்களும் வன்முறைகளில் ஈடுபட தூண்டுதலாய் இருக்கும் என்று ஆயர் மினா எச்சரிக்கை கொடுத்தார்.
தற்போது பொறுப்பில் உள்ள இராணுவ ஆட்சி கிறிஸ்தவ கோவில்கள் கட்டக் கூடாது என்பது உட்பட கிறிஸ்தவர்கள் மீது சுமத்தியுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரி கிறிஸ்தவர்கள் இந்த போராட்டத்தில் குரல் எழுப்பி வருகின்றனர் என்றும் ஆயர் மினா கூறினார்.
தொடர்ந்து இப்புதனன்று கெய்ரோவில் நடைபெற்று வரும் போராட்டங்களை அடக்க இராணுவம் மேற்கொண்டு வரும் அளவுமீறிய வன்முறைகளையும், இதுவரை 30 பேருக்கும் மேல் கொல்லப்பட்டுள்ளதையும் வன்மையாகக் கண்டனம் செய்துள்ளார் ஐ.நா.வின் மனித உரிமைகள் நிறுவனத்தின் இயக்குனர் Navi Pillay.
இராணுவத்தின் வன்முறைகளைக் குறை கூறியதால், கத்தோலிக்கத் திருச்சபைக்கும் அரசுக்கும் இடையே உள்ள உறவு பாதிக்கப்பட்டுள்ளது என்று ICN என்ற கத்தோலிக்கச் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
5. அகமதாபாத் நகரில் உணவு உரிமைகளைக் கோரும் விழிப்புணர்வு கூட்டம்
நவ.23,2011. ‘Anna Suraksha Adhikar Jhumbesh’ என்று அழைக்கப்படும் உணவு உரிமைகளைக் கோரும் விழிப்புணர்வு கூட்டம் ஒன்று இத்திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாட்கள் குஜராத்தின் அகமதாபாத் நகரில் நடைபெற்றது.
இயேசு சபையினரின் சமுதாயப் பணிகள் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கூட்டத்தில், குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 400 பேருக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஒவ்வொருவருக்கும் தேவையான உணவு கிடைக்கும் திட்டம், மதிய உணவு திட்டம், குழந்தைகளின் முழு வளர்ச்சித் திட்டம், தாய் சேய் நலத் திட்டம் என்ற பல்வேறு திட்டங்கள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
குஜராத் மாநிலத்தில் எந்த ஒரு மனிதரும் இரவு பசியோடு தூங்கப்போகக் கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று இக்கூட்டத்தின் இறுதியில் உறுப்பினர்கள் அனைவரும் உறுதி மொழி எடுத்தனர் என்று இக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த இயேசு சபை குரு செட்ரிக் பிரகாஷ் கத்தோலிக்க ஆயர்கள் அவையின் வலைதளத்திற்கு அளித்த அறிக்கையில் கூறியுள்ளார்.
6. பாகிஸ்தானில் SMS களில் இயேசுகிறிஸ்து என்ற வார்த்தைக்கு இருந்த தடை நீக்கம்
நவ.23,2011. பாகிஸ்தானில் செல்லிடப்பேசிகளில் பரிமாறப்படும் SMS எனப்படும் குறுஞ்செய்திகளில் நீக்கப்பட வேண்டிய வார்த்தைகள் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ள பட்டியலில் இயேசுகிறிஸ்து என்ற வார்த்தையும் சேர்க்கப்பட்டிருப்பதற்கு அந்நாட்டின் கிறிஸ்தவர்கள் கடந்த இரு நாட்களாகக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
குறுஞ்செய்திகளில் பயன்படுத்தக்கூடாத ஆபாசமான, ஆபத்தான வார்த்தைகள் என்று பாகிஸ்தான் அரசு செல்லிடப் பேசி சேவைகளை நடத்தும் நிறுவனங்களுக்கு அளித்திருந்த 1600 வார்த்தைகளில் இயேசுகிறிஸ்து என்ற வார்த்தையும் அடங்கும். இந்த வார்த்தைகளைத் தடை செய்யும் வழிகளைச் செல்லிடப் பேசி நிறுவனங்கள் ஒரு வாரத்திற்குள் நடைமுறைப் படுத்த வேண்டும் என்றும் அரசு ஆணை பிறப்பித்திருந்தது.
கிறிஸ்தவ அமைப்புக்கள் மேற்கொண்ட இந்த எதிர்ப்புக்கு பல்வேறு சமயம் சாரா அமைப்புக்களும் ஆதரவு தந்தன என்று FIDES செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இந்த எதிர்ப்புக்களைத் தொடர்ந்து, நீக்கப்பட வேண்டிய வார்த்தைகள் என்று தாங்கள் வெளியிட்ட வார்த்தைகளின் பட்டியலை மறு பரிசீலனைச் செய்து விரைவில் வெளியிடுவதாக பாகிஸ்தான் அரசு இச்செவ்வாயன்று கூறியிருந்தது.
புதிய வழிகளில் நற்செய்தியை அறிவிப்பதில் திருச்சபை தற்போது காட்டி வரும் ஆர்வத்தைத் தடை செய்யும் வகையில் பாகிஸ்தான் அரசு நேரடியாகவும் மறைமுகமாகவும் மேற்கொள்ளும் எந்த முயற்சியையும் தலத்திருச்சபை எதிர்க்கும் என்று பாகிஸ்தான் ஆயர் பேரவையின் தொடர்புசாதன பணிக்குழுவின் செயலர் அருள்தந்தை ஜான் ஷகீர் நதீம் கூறினார்.
மதங்களிடையே நல்லுறவு என்ற துறையின் அமைச்சராகப் பணியாற்றும் Akram Gill என்ற கத்தோலிக்கர், தொடர்பு சாதன அமைச்சருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளாலும், அமைச்சரவையில் கூறிய கருத்துக்களாலும் இயேசுகிறிஸ்து என்ற வார்த்தை இந்தப் பட்டியலில் இருந்து இப்புதனன்று நீக்கப்பட்டது என்று FIDES செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
7. கோவாவில் புனித பிரான்சிஸ் சேவியர் திருநாட்கள் காலத்தில் திரைப்பட விழா நடப்பதால் இடையூறுகள்
நவ.23,2011. இப்புதன் துவங்கி புனித பிரான்சிஸ் சேவியர் திருநாளான டிசம்பர் 3ம் தேதி வரை கோவாவில் நடைபெறும் அகில உலகத் திரைப்பட விழாவுக்கு எதிராக பழைய கோவாவில் வாழும் கத்தோலிக்கர்கள் இச்செவ்வாயன்று போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
ஒவ்வோர் ஆண்டும் கோவாவில் நடைபெறும் இத்திரைப்பட விழாவை வேறு நாட்களில் மாற்றி அமைக்கும்படி தலத்திருச்சபை அரசிடம் பலமுறை கேட்டுக் கொண்டுள்ளது. இதைக் குறித்து மறுபரிசீலனை செய்வதாக கோவா அரசு 2006ம் ஆண்டு வாக்குறுதி அளித்துள்ளது. இருப்பினும், அரசு எவ்வித முயற்சிகளும் எடுக்காமல் இருப்பதை எதிர்த்து தாங்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளதாக இப்போராட்டத்தை முன்னின்று நடத்திய பீட்டர் வியேகாஸ் கூறினார்.
இவ்வியாழனன்று ஆரம்பமாகும் புனித பிரான்சிஸ் சேவியர் திருநாளின் நவநாட்கள் காலத்தில் இத்திரைப்பட விழா நடப்பதால் பல வகையிலும் இடையூறுகள் உருவாகின்றன என்று புனித சேவியர் பசிலிக்கா அதிபர் அருள்தந்தை சாவியோ பரெட்டோ கூறினார்.
புனிதரின் விழாவையொட்டி கோவிலுக்கு வரும் மக்களுக்கு காவல் துறையினர் அளிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் இத்திரைப்பட விழாவினால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இதனால், தன்னார்வத் தொண்டர்களை ஏற்பாடு செய்யவேண்டிய கட்டாயத்திற்குக் கோவில் நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளதாகவும் அருள்தந்தை பரெட்டோ சுட்டிக் காட்டினார்.
8. தென்கொரிய அரசு அமெரிக்க அரசுடன் மேற்கொண்டுள்ள கட்டுப்பாடற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு கிறிஸ்தவ அமைப்புக்கள் எதிர்ப்பு
நவ.23,2011. தென்கொரிய அரசு அமெரிக்க அரசுடன் மேற்கொண்டுள்ள கட்டுப்பாடற்ற வர்த்தகம் என்ற ஒப்பந்தத்தை எதிர்த்து, அந்நாட்டின் கத்தோலிக்கத் திருச்சபை உட்பட, அனைத்து கிறிஸ்தவ அமைப்புக்களும் குரல் கொடுத்துள்ளன.
கட்டுப்பாடற்ற வர்த்தகம் குறித்து அரசு மக்களிடையே மேற்கொண்ட கருத்தெடுப்பில் கூறப்பட்டிருந்த பெருவாரியான எண்ணங்களுக்கு எதிராக அரசு இந்த முடிவை இரகசியமாக மேற்கொண்டதை எதிர்த்து, கிறிஸ்தவ அமைப்புக்கள் தங்கள் எதிர்ப்பை இப்புதனன்று வெளியிட்டனர்.
இந்த வர்த்தக ஒப்பந்தம் உள்நாட்டு வர்த்தகத்தை, முக்கியமாக, சிறு வர்த்தகங்களை முற்றிலும் அழித்து விடும் என்றும், நாட்டை இவ்விதம் காட்டிக் கொடுத்துள்ள இந்த அரசை வருகிறத் தேர்தலில் மீண்டும் பதவியில் அமர்த்தாமல் இருப்பது மக்களின் கடமை என்றும் Seoul உயர்மறைமாவட்ட மெய்ப்புப் பணி அவையின் கல்வித் துறை இயக்குனர் Augustine Maeng Joo-hyung கூறினார்.
2007ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்க ஐக்கிய நாடு கையொப்பமிட்டது. இச்செவ்வாயன்று தென் கொரிய அரசு கையொப்பமிட்டது. வருகிற சனவரி மாதம் முதல் தேதியிலிருந்து இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
No comments:
Post a Comment