Saturday 5 November 2011

Catholic News - hottest and latest - 04 November 2011

1. திருத்தந்தை : ஒரு நாட்டினரின் ஒன்றிணைந்த வாழ்வுக்கு உண்மையும் நீதியும் கடைப்பிடிக்கப்பட வேண்டியது அவசியம்

2. திருப்பீடப் பேச்சாளர் : திருப்பீடத்துக்கும் நாடுகளுக்கும் இடையேயான தூதரக உறவுகள்தான் முக்கியம்

3. உரோமிலுள்ள திருப்பீடத்துக்கானத் தனது தூதரகத்தை மூடுவதற்கு அயர்லாந்து முடிவு செய்துள்ளது குறித்து தலத் திருச்சபை கவலை

4. திருப்பீட அதிகாரி : எந்தவொரு குழந்தையும் ஆண், பெண் பாகுபாடின்றி நோக்கப்பட வேண்டும்

5. Sao Paulo பங்குத்தளங்கள் 271 துப்பாக்கிகளைச் சேகரித்துள்ளன

6. பிலிப்பைன்ஸ் மக்கள் 41 நாடுகளுக்குப் வேலைக்குச் செல்வதற்கு அரசு தடை

7. கடந்த அக்டோபரில் உலக அளவில் உணவுப் பொருட்களின் விலை குறைந்தது - ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் அறிவிப்பு

8. பொலிவியாவில் மனித வியாபாரம் அதிகரிப்பு


------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : ஒரு நாட்டினரின் ஒன்றிணைந்த வாழ்வுக்கு உண்மையும் நீதியும் கடைப்பிடிக்கப்பட வேண்டியது அவசியம்

நவ.04,2011. ஒரு நாட்டில் உண்மையும் நீதியும் கடைப்பிடிக்கப்பட்டால் மட்டுமே அந்நாட்டினர் ஒன்றிணைந்து வாழ்வது இயலக்கூடியது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இவ்வெள்ளிக்கிழமை கூறினார்.
ஐவரி கோஸ்ட் நாட்டின் திருப்பீடத்துக்கானப் புதிய தூதர் Joseph Tebah-Klah விடமிருந்து நம்பிக்கைச் சான்றிதழைப் பெற்று உரையாற்றிய திருத்தந்தை, பல ஆப்ரிக்க நாடுகளைப் போலவே ஐவரி கோஸ்ட் நாட்டிலும் பல மதங்களும் பல இனங்களும் இருக்கின்றன, எனவே நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வது எப்பொழுதும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  
மேற்கு ஆப்ரிக்க நாடான ஐவரி கோஸ்டில் கடந்த ஆகஸ்டில் அரசு அதிகாரிகளுக்கென கொண்டு வரப்பட்டுள்ள ஒழுக்கநெறி விதிமுறைகளுக்குத் தனது பாராட்டுதல்களையும் தெரிவித்தார் திருத்தந்தை.
நாட்டின் வளங்கள், அனைத்துக் குடிமக்களுக்கும் சமமாகப் பகிரப்படுவது அரசு அதிகாரிகளைச் சார்ந்து இருக்கின்றது என்பதையும் குறிப்பிட்ட அவர், ஒரு நாட்டின் வளமையான எதிர்காலத்திற்குக் கல்வி மிகவும் இன்றியமையாதது என்பதையும் கோடிட்டுக் காட்டினார்.
ஐவரி கோஸ்ட் நாட்டிற்கும் திருப்பீடத்தும் இடையே அரசியல் உறவு உருவானதன் நாற்பதாம் ஆண்டு நிறைவில் இப்புதிய தூதர் Joseph Tebah-Klah பொறுப்பேற்பதையும் சுட்டிக் காட்டிப் பேசிய திருத்தந்தை, அவரது பணிக்குத் திருப்பீடப் பணியாளரின் ஒத்துழைப்பு இருக்கும் என்பதற்கும் உறுதி கூறினார்.

2. திருப்பீடப் பேச்சாளர் : திருப்பீடத்துக்கும் நாடுகளுக்கும் இடையேயான தூதரக உறவுகள்தான் முக்கியம்

நவ.04,2011. உரோம் நகரிலுள்ள திருப்பீடத்துக்கானத் தனது தூதரகத்தை மூடுவதற்கு அயர்லாந்து எடுத்துள்ள தீர்மானத்தைத் திருப்பீடம் கவனத்தில் கொண்டுள்ளது என்று திருப்பீடப் பேச்சாளர் கூறினார்.
அயர்லாந்து அரசின் இத்தீர்மானம் குறித்து நிருபர் கூட்டத்தில் பேசிய திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெடரிக்கோ லொம்பார்தி, திருப்பீடத்துடன் தூதரக உறவுகளைக் கொண்டிருக்கும் எந்த நாடும், அதன் வசதி, வாய்ப்புக்களுக்குத் தகுந்தபடி உரோமையிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ அதன் அலுவலகத்தைக் கொண்டிருப்பதற்குச் சுதந்திரம் உள்ளது என்று கூறினார்.
அயர்லாந்தைப் பொருத்தவரை இவ்விவகாரம் ஒன்றும் பெரிதல்ல என்றுரைத்த அருள்தந்தை லொம்பார்தி, திருப்பீடத்துக்கும் நாடுகளுக்கும் இடையே உருவாகும் தூதரக உறவுகள்தான் முக்கியம் என்பதைச் சுட்டிக் காட்டினார்.  
1920களில் பிரிட்டனிடமிருந்து விடுதலை அடைந்த அயர்லாந்தை உடனடியாக அங்கீகரித்த வெளிநாடுகளில் வத்திக்கானும் ஒன்றாகும்.
அயர்லாந்து அரசின் இத்தீர்மானத்தை அறிவித்த அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் Eamon Gilmore, இத்தீர்மானம் வருந்துதற்குரியது எனினும், தற்போதைய பொருளாதார நிலையால் இம்முடிவை எடுக்க நேர்ந்துள்ளது என்று கூறியுள்ளார்.
திருப்பீடம் 179 நாடுகளுடன் தூதரக உறவைக் கொண்டுள்ளது. இவற்றில் 80 நாடுகள் மட்டுமே உரோமையில் தூதர்களைக் கொண்டுள்ளது. திருப்பீடத்துக்கான இந்தியத் தூதர் சுவிட்சர்லாந்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

3. உரோமிலுள்ள திருப்பீடத்துக்கானத் தனது தூதரகத்தை மூடுவதற்கு அயர்லாந்து முடிவு செய்துள்ளது குறித்து தலத் திருச்சபை கவலை

நவ.04,2011. அயர்லாந்து அரசின் இத்தீர்மானத்தைக் குறை கூறியுள்ள அந்நாட்டுக் கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவர் கர்தினால் Sean Brady, இத்தீர்மானம் தனக்கு மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது என்று கூறினார்.
அயர்லாந்தின் இத்தீர்மானம் விரைவில் மறுபரிசீலனை செய்யப்படும் எனவும், திருச்சபைக்கும் அரசுக்கும் இடையே அடுத்து இடம் பெறவுள்ள உரையாடல் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் எனவும் தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்.
கத்தோலிக்க நாடான அயர்லாந்துக்கும் திருப்பீடத்துக்கும் இடையே தூதரக உறவு 1929ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.  அச்சமயம், அமெரிக்க ஐக்கிய நாடு, பிரிட்டன், ஐக்கிய நாடுகள் நிறுவனம் ஆகியவற்றுடன் மட்டுமே அயர்லாந்து தூதரக உறவைக் கொண்டிருந்தது.
மேலும், ஈரான், Timor Leste ஆகிய இரண்டு நாடுகளிலும் தனது தூதரகங்களை மூடுவதற்கு முடிவு செய்துள்ளது அயர்லாந்து. இதன்மூலம் ஆண்டுக்கு 12 இலட்சத்து ஐம்பதாயிரம் யூரோ பணத்தைச் சேமிக்க முடியும் என்றும் அந்நாடு கூறியுள்ளது.

4. திருப்பீட அதிகாரி : எந்தவொரு குழந்தையும் ஆண், பெண் பாகுபாடின்றி நோக்கப்பட வேண்டும்

நவ.04,2011. ஒரு குழந்தை ஆணோ பெண்ணோ அது கடவுளின் கொடை என்ற உணர்வுடன் அக்குழந்தையை ஏற்பதே சிறாரின் உரிமைகள் மீறப்படுவதைத் தடுப்பதற்கு உண்மையான அடித்தளமாகும் என்று திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.
உலகச் சிறாரும் அவர்களது உரிமைகள் மீறப்படுவதும் என்ற தலைப்பில் உரோமையில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் இவ்வெள்ளியன்று உரையாற்றிய, திருப்பீட விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத்தின் நீதித்துறையின் பேரருட்திரு Charles Scicluna இவ்வாறு கூறினார்.
சிறாரைப் பாதுகாப்பதற்கு நிறுவனங்களும் சமூகங்களும் என்ன செய்ய வேண்டும், இதில் கத்தோலிக்கத் திருச்சபையின் பங்கு என்ன என்பது குறித்து உரையாற்றிய பேரருட்திரு Scicluna, சிறாரின் மாசற்ற தன்மை பாதுகாக்கப்பட்டு மதிக்கப்பட வேண்டுமெனப் பரிந்துரைத்தார்.

5. Sao Paulo பங்குத்தளங்கள் 271 துப்பாக்கிகளைச் சேகரித்துள்ளன

நவ.04,2011. கடந்த அக்டோபரில் கடைப்பிடிக்கப்பட்ட உலக ஆயுதக் களைவு வாரத்தின் ஒரு கட்டமாக, பிரேசில் நாட்டு Sao Paulo நகரின் 19 கத்தோலிக்கப் பங்குத்தளங்கள் 271 துப்பாக்கிகளையும் வெடிகுண்டுகளையும் சேகரித்துள்ளது என்று சி.என்.எஸ் செய்தி நிறுவனம் கூறியது.
Sao Paulo நகரத் தெருக்களில் காணப்படும் ஆயுதப் புழக்கத்தைத் தவிர்க்கும் நோக்கத்தில், அந்நகரின் ஓர் அமைதிக்கான நிறுவனம் பல்வேறு சமயக் குழுக்களின் ஒத்துழைப்போடு ஆயுதங்களைச் சேகரிக்கும் நடவடிக்கையைத் தொடங்கியது.
கத்தோலிக்கம், இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவம், புத்தம், யூதம் ஆகிய மதங்களின் வழிபாட்டுத் தலங்களில் சுமார் மூன்று நாட்கள், மக்கள் தங்கள் ஆயுதங்களைக் கொண்டு வந்து கொடுத்தனர் என்று அச்செய்தி நிறுவனம் மேலும் கூறியது.
இந்நடவடிக்கை குறித்து அறிக்கை வெளியிட்ட Sao Paulo கர்தினால் Odilio Pedro Scherer, சிறாரை வன்முறைக்கு உட்படுத்தும் பழக்கங்களைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படுமாறு அழைப்பு விடுத்தார்.
Sao Paulo நகரில், 2010ம் ஆண்டில் இடம் பெற்ற 1,189 கொலைகளில் சுமார் மூன்றில் இரண்டு பகுதிக் கொலைகள் துப்பாக்கிச் சூட்டினால் இடம் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

6. பிலிப்பைன்ஸ் மக்கள் 41 நாடுகளுக்குப் வேலைக்குச் செல்வதற்கு அரசு தடை

நவ.04,2011. அரசியல் ரீதியாக நெருக்கடிகளை எதிர்நோக்கும் ஆப்கானிஸ்தான், லிபியா, சூடான் ஆகிய நாடுகள் உட்பட 41 நாடுகளுக்குப் பிலிப்பைன்ஸ் மக்கள் வேலைக்குச் செல்வதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.
குடியேற்றதாரர்கள் அடிக்கடித் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகச் சொல்லப்படும் இந்தியா, கம்போடியா ஆகிய நாடுகளுக்கும் வேலைக்குச் செல்வதற்குப் பிலிப்பைன்ஸ் அரசு தடை விதித்துள்ளது.

வெளி நாடுகளில் வேலை செய்யும் ஒரு கோடிக்கு மேற்பட்ட பிலிப்பைன்ஸ் மக்களைப் பாதுகாக்கும் நோக்கத்தில் இந்நடவடிக்கையை அரசு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பிலிப்பைன்ஸில் ஒரு நாளைக்கு ஏறக்குறைய இரண்டாயிரம் பேர் வீதம் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்.
பிலிப்பைன்ஸ் குடியரசின் குடியேற்றதாரர் சட்டத்துக்கு ஒத்திணங்கும் நாடுகளுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தவும் அந்நாடு தீர்மானித்துள்ளது.

7. கடந்த அக்டோபரில் உலக அளவில் உணவுப் பொருட்களின் விலை குறைந்தது - ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் அறிவிப்பு

நவ.04,2011. கடந்த அக்டோபரில் உலக அளவில் உணவுப் பொருட்களின் விலை குறைந்து இருந்தது எனினும், இந்நிலை கடந்த ஆண்டைவிட அதிகம் என்று FAO என்ற ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் அறிவித்தது.
உலகில் அண்மை மாதங்களில் தானியங்களின் விலை குறைந்து வருகின்றது என்றும் 2012ம் ஆண்டிலும் தானியங்களின் விலை தொடர்ந்து குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் FAO கூறியது.
இதற்கிடையே, இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலை, தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், ஒரு வாரத்தில் மட்டும் 12.21 விழுக்காடு அதிகரித்ததாகவும் இந்திய மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது.

8. பொலிவியாவில் மனித வியாபாரம் அதிகரிப்பு

நவ.04,2011. தென் அமெரிக்க நாடான பொலிவியாவின் Sucre ல் மூன்று மாதங்களில் மட்டும் 75 சிறார் காணாமற் போயுள்ளனர், இவர்களில் 38 பேர் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டுக் குற்றத் தடுப்பு அலுவலகம் அறிவித்தது.
அந்நாட்டில் காணாமற் போகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் இதற்கு மனித வியாபாரம் காரணமாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
சிறார் மிக எளிதாக நகரங்களுக்குக் கடத்தப்பட்டு அங்கிருந்து வேறு நாடுகளுக்கு வியாபாரம் செய்யப்படுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment