Monday, 14 November 2011

Catholic News - hottest and latest - 11 November 2011

1. திருத்தந்தை : கிறிஸ்தவர்களுக்குத் தன்னார்வப்பணி என்பது கிறிஸ்துவைத் தங்களது தனிப்பட்ட வாழ்வில் அனுபவிப்பதை அடிப்படையாகக் கொண்டது

2. திருத்தந்தை : தனிப்பட்ட மற்றும் குடும்பங்களின் மாண்புக்கு வேலைவாய்ப்பின்மை அச்சுறுத்தல்

3. திருத்தந்தையின் மெக்சிகோ, கியுபத் திருப்பயணம் குறித்து ஆயர்கள் மகிழ்ச்சி

4. வத்திக்கான் அதிகாரி : கத்தோலிக்கத் திருச்சபை மதமாற்றங்களுக்காக வேலை செய்யவில்லை

5. இந்தியாவில் கல்வி பெறும் உரிமை விழிப்புணர்வு, திருச்சபை நடவடிக்கை 

6. கேரளாவில் விவசாயிகள் தற்கொலை செய்து வருவது குறித்து தலத்திருச்சபை கவலை

7. பிலிப்பைன்சில் 2012ம் ஆண்டில் 19வது பன்னாட்டுத் திருச்சபைத் தலைவர்கள் கருத்தரங்கு

8. கணனியுலக கொள்ளைக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை

----------------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : கிறிஸ்தவர்களுக்குத் தன்னார்வப்பணி என்பது கிறிஸ்துவைத் தங்களது தனிப்பட்ட வாழ்வில் அனுபவிப்பதை அடிப்படையாகக் கொண்டது

நவ.11,2011. கிறிஸ்தவர்களுக்குத் தன்னார்வப்பணி என்பது நன்மனத்தின் வெறும் வெளிப்பாடு மட்டுமல்ல, மனித சமுதாயத்திற்கு முதலில் பணிவிடை செய்த கிறிஸ்துவைத் தனிப்பட்ட வாழ்வில் அனுபவிப்பதை அடிப்படையாகக் கொண்டது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
ஐரோப்பியத் தன்னார்வப்பணியாளர் ஆண்டு, இந்த 2011ம் ஆண்டில் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, “Cor Unum” என்ற திருப்பீடப் பிறரன்பு அவை வத்திக்கானில் நடத்திய இரண்டு நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 150 பிரதிநிதிகளை இவ்வெள்ளிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய  திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
பிறரை அன்பு கூருவதற்குரிய நம்மிலுள்ள அடிப்படையான அழைப்பைக் கண்டு கொள்வதற்கு கிறிஸ்துவின் திருவருளே நமக்கு உதவுகின்றது என்று கூறிய திருத்தந்தை, மனிதத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு நாம் செய்யும் சிறிய செயலானது, கிறிஸ்துவின் அன்பு மற்றும் அவரின் பிரசன்னத்தின் அடையாளமாக இருக்கின்றது என்று தெரிவித்தார்.
கிறிஸ்தவர்கள் பொது வாழ்வில் ஊக்கமுடன் பங்கு கொண்டு உண்மையான சுதந்திரம், நீதி, ஒருமைப்பாடு ஆகிய பண்புகளால் குறிக்கப்படும் சமுதாயத்தை உருவாக்கும் வழிகளை அதிகமதிகமாகத் தேட வேண்டும் என்றும் திருத்தந்தை வலியுறுத்தினார்.
இளையோர், தன்னார்வப்பணிகளில் வளரவும் அவர்கள்  கிறிஸ்துவின் குரலைத் தங்கள் இதயங்களில் கேட்கவும் அவர்களை ஊக்கப்படுத்துமாறும் திருத்தந்தை, இக்கூட்டத்தினரைக் கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டமானது நவம்பர் 10,11 தேதிகளில் நடைபெற்றது.

2. திருத்தந்தை : தனிப்பட்ட மற்றும் குடும்பங்களின் மாண்புக்கு வேலைவாய்ப்பின்மை அச்சுறுத்தல்

நவ.11,2011. ஈக்குவதோர் நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் அந்தோணியோ யார்சாவுக்குத் திருத்தந்தை அனுப்பிய கடிதத்தில், தனிப்பட்ட மற்றும் குடும்பங்களின் மாண்புக்கு வேலைவாய்ப்பின்மை அச்சுறுத்தலாக இருக்கின்றது என்று கூறியுள்ளார்.
தென் அமெரிக்க நாடான ஈக்குவதோரில் இப்புதனன்று தொடங்கிய இரண்டாவது தேசிய குடும்ப மாநாட்டிற்கென அனுப்பிய கடிதத்தில் இவ்வாறு சொல்லியுள்ளார் திருத்தந்தை.
மனிதன், வேலையின் வழியாக, கடவுளின் படைப்புத் திட்டத்தில், தான் பங்கு கொள்வதைப் பார்க்கத் தொடங்குகிறான் என்றுரைக்கும் அக்கடிதம், ஒவ்வொருவரும் மாண்புடன் தரமான வேலைகளைச் செய்வதற்குத் தீவிர நடவடிக்கை எடுக்கப்படுமாறு வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே, ஐரோப்பிய சமுதாய அவை நாடுகளில் வேலைவாய்ப்பின்மை 9.7 விழுக்காடு அதிகரித்திருப்பதாக அண்மை அறிக்கை ஒன்று கூறுகிறது.

3. திருத்தந்தையின் மெக்சிகோ, கியுபத் திருப்பயணம் குறித்து ஆயர்கள் மகிழ்ச்சி

நவ.11,2011. 2012ம் ஆண்டின் வசந்த காலத்தில் மெக்சிகோ மற்றும் கியுபாவுக்குத் திருத்தந்தை திருப்பயணம் மேற்கொள்வது குறித்து திருப்பீட அதிகாரிகள் தீவிரமாய்ப் பரிசீலித்து வருவது பற்றிய அறிவிப்பு தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக அவ்விரு நாடுகளின் ஆயர்கள் கூறியுள்ளனர்.
அனைத்து கியுப மக்களுக்கும் தாயாக விளங்கும் பிறரன்பு அன்னைமரியின் கொடையாக இச்செய்தியைத் தாங்கள் பெற்றதாக கியுப ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.
கோப்ரே தேசிய அன்னைமரி திருத்தலத்தில் வைக்கப்பட்டுள்ள பிறரன்பு அன்னைமரி திருவுருவப் படம் கண்டெடுக்கப்பட்டதன் 400ம் ஆண்டு விழாவில் திருத்தந்தை கலந்து கொள்வதாய், அவரின் கியுபத் திருப்பயணம் அமையும் என்றும் கியுப ஆயர்கள் கூறினர்.
மேலும், திருத்தந்தை மெக்சிகோவிற்குத் திருப்பயணம் மேற்கொள்வது தங்களது நீண்டகால ஆவலை நிறைவேற்றுவதாக இருக்கின்றது என்று மெக்சிகோ ஆயர்கள்  கூறியுள்ளனர்.

4. வத்திக்கான் அதிகாரி : கத்தோலிக்கத் திருச்சபை மதமாற்றங்களுக்காக வேலை செய்யவில்லை

நவ.11,2011. கத்தோலிக்கத் திருச்சபை மதமாற்றங்களுக்காக உழைக்கவில்லை, மாறாக நீதி, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்காக, மதங்களிடையே உறவை ஆழப்படுத்தவே விரும்புகின்றது என்று திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran கூறினார்.
இந்தியாவில் பத்து நாள்கள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள கர்தினால் Tauran, நாட்டில் முக்கிய மதங்களின் தலைவர்களைச் சந்தித்து வருகிறார்.
 கத்தோலிக்கத் திருச்சபை, கட்டாய அல்லது  ஏமாற்று வழிகளைப் பயன்படுத்தி மக்களை மதமாற்ற முயற்சிக்கிறது என்று சில இந்து குழுக்கள் குறை சொல்லி வருவதைத் தான் அறிந்தே இருப்பதாகவும் இக்குற்றச்சாட்டு உண்மையல்ல எனவும் கர்தினால் Tauran கூறினார்.

5. இந்தியாவில் கல்வி பெறும் உரிமை விழிப்புணர்வு, திருச்சபை நடவடிக்கை 

நவ.11,2011. இந்தியாவில் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை உறுதிப்படுத்தும் சட்டத்தின்கீழ் தங்களது பிள்ளைகள் பெறும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் இவ்வெள்ளிக்கிழமை இறங்கியுள்ளது இந்தியக் கத்தோலிக்கத் திருச்சபை.
இந்நடவடிக்கை குறித்துப் பேசிய இந்திய ஆயர் பேரவையின் கல்வி ஆணைக்குழுச் செயலர் அருட்பணி Kuriala Chittattukalam, பெற்றோரும் பிள்ளைகளும் தங்களது உரிமைகளை அறிந்திருக்க வேண்டியது அவசியம் என்று கூறினார்.
6க்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட சிறாருக்குக் கட்டாய மற்றும் இலவசக் கல்வி வழங்க, இந்தியச் சட்டம் அனுமதிக்கின்றது. இந்தச் சட்டம் 2013ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட வேண்டும்.     
கல்வி பெறும் உரிமை குறித்தத் திருச்சபையின் விழிப்புணர்வுச் செயல்பாடுகளை நாடு முழுவதும் 13 இலட்சம் பள்ளிகளில் ஓராண்டுக்கு நடத்தத் திட்டமிட்டுள்ளது திருச்சபை.
நகரச் சேரிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் அதிகம் இல்லாத ஒதுக்குப்புறப் பகுதிகளில் வாழும் குடும்பங்களுக்கு சிறார் கல்வி குறித்த உரிமைகளை எடுத்துச் செல்லும் முக்கிய நோக்கத்துடன் திருச்சபை இதில் ஈடுபட்டுள்ளது.

6. கேரளாவில் விவசாயிகள் தற்கொலை செய்து வருவது குறித்து தலத்திருச்சபை கவலை

நவ.11,2011. இந்தியாவின் கேரள மாநிலத்தில் கடன் சுமையால் துன்பப்படும் விவசாயிகளுக்குத் தலத்திருச்சபை பல்வேறு நலத்திட்டங்களைச் செய்து வருவதையும் விடுத்து அம்மாநிலத்தில் கடன் தொல்லையால் விவசாயிகள் தொடர்ந்து தற்கொலை செய்து வருகின்றனர் என்று தலத்திருச்சபை தனது கவலையை வெளியிட்டுள்ளது.
நிதிப் பிரச்சனையால் மக்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வது மிகவும் வருந்துதற்குரியது என்று Mananthavady மறைமாவட்டப் பேச்சாளர் அருட்பணி Thomas Therakam கூறினார்.
கடந்த வாரத்தில் Wayanad மாவட்டத்தில் மூன்று விவசாயிகள் தற்கொலை செய்ததையடுத்து இவ்வாறு கூறினார் அருட்பணி  Therakam.
Wayanad மாவட்ட அறிக்கையின்படி, அறுவடை பொய்த்ததால் 2001ம் ஆண்டுக்கும் 2007ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 300க்கு மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்று தெரிகிறது.

7. பிலிப்பைன்சில் 2012ம் ஆண்டில் 19வது பன்னாட்டுத் திருச்சபைத் தலைவர்கள் கருத்தரங்கு

நவ.11,2011. வருகிற ஆண்டில் பிலிப்பைன்சில் நடைபெறும் 19வது பன்னாட்டுத் திருச்சபைத் தலைவர்கள் கருத்தரங்கிற்குத் தயாரிப்புப் பணிகள் தொடங்கி விட்டதாக இளையோர் அமைப்புத் தலைவர் ஒருவர் கூறினார்.
2012ம் ஆண்டு ஏப்ரல் 9 முதல் 15 வரை பிலிப்பைன்சின் Kalibo மறைமாவட்டத்தில் நடைபெறும் 19வது பன்னாட்டுத் தலைவர்கள் கருத்தரங்கில், ஆயர்கள், அருட்பணியாளர்கள், பொதுநிலை விசுவாசிகள் என  சுமார் 12 ஆயிரம் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
2012ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி முதல் 2013ம் ஆண்டு நவம்பர் 24 ம் தேதி வரை திருச்சபையில் விசுவாச ஆண்டு கடைப்பிடிக்கப்படும் வேளை, இளையோரும் பெற்றோரும் இயேசு கிறிஸ்துவை அனுபவிக்க இந்தக் கருத்தரங்கு உதவும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார், கிறிஸ்துவுக்காக இளையோர் என்ற அனைத்துலக அமைப்பின்(YFC)  தலைவர் Eren Lyle Villegas.
“Greeneration” என்ற பிலிப்பைன்ஸ் சுற்றுச்சூழல் அமைப்பின் திட்டத்தோடு சேர்ந்து இக்கருத்தரங்கில் கலந்து கொள்வோர் மரங்களை நடுவார்கள் மற்றும் கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவார்கள் என்று Villegas கூறினார்.

8. கணனியுலக கொள்ளைக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை

நவ.11,2011. நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் நாற்பது இலட்சத்துக்கும் மேற்பட்ட கணனிகளில் சட்டவிரோத மென்பொருட்களை பதியச் செய்தார்கள் என ஏழு பேர் மீது நியூயார்க் நகர சட்டநடவடிக்கை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
அமேசான் இணைய விற்பனை நிறுவனம், நாஸா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், அமெரிக்க அரசின் வரித்துறை சேவைகள் அலுவலகமான ஐ.ஆர்.எஸ். போன்றவற்றின் இணையதளங்களையும் இலக்குவைத்து சட்டவிரோத மென்பொருட்களை இவர்கள் அனுப்பியிருந்தனர்.
எஸ்டோனியர்கள் ஆறு பேர், இரஷ்யர் ஒருவர் அடங்கிய இந்தக் கும்பலை "சைபர் பண்டிட்ஸ்" அதாவது "கணினியுலக கொள்ளைக்காரர்கள்" என்று சட்ட நடவடிக்கை அதிகாரிகள் வருணித்துள்ளனர்.
இணையதளங்களில் தெரியும் வேறொரு பொருளுக்கான விளம்பரங்களை பாவனையாளர்கள் சொடுக்கும்போது அது அவர்களை குறிப்பிட்ட அந்தப் பொருளுக்கான இணையதளத்துக்கு இட்டுச் செல்லாமல், இவர்களுடைய சட்டவிரோத கணனி சர்வர்களினால் விளம்பரம் செய்யப்படும் பொருட்களுக்கு கொண்டு சென்று விட்டிருந்தன.
இவர்கள் வழியாக எத்தனை பேர் தமது விளம்பரங்களைப் பார்க்கிறார்கள் என்பதைப் பொறுத்து அந்த பொருளின் விற்பனையாளர்கள் இவர்களுக்கு பணம் கொடுத்து வந்துள்ளார்கள் என்றும் தெரிகிறது.
இந்த ஏமாற்று வேலையின் மூலம் இந்தக் கும்பல் 14 மில்லியன் டாலர்களை ஈட்டியுள்ளதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment