Saturday, 5 November 2011

Catholic News - hottest and latest - 03 November 2011

1. இறைபதம் சேர்ந்த கர்தினால்கள் மற்றும் ஆயர்களுக்கென ஒப்புக்கொடுக்கப்பட்ட திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை

2. இஸ்லாமியக் கட்சிகள் பதவிக்கு வருவதைக் கண்டு ஜரோப்பிய நாடுகள் அச்சம் கொள்ளத் தேவையில்லை துனிசியா பேராயர் Lahham

3. இயற்கைப் பேரிடர்களில் வாழ்வையும், வாழ்வாதாரங்களையும் இழப்பது பெரும்பாலும் ஏழை மக்களே - சான் சால்வதோர் பேராயர்

4. இந்திய காரித்தாஸ் அமைப்பு பொன்விழா ஆண்டில் மேற்கொள்ளவிருக்கும் திட்டங்கள்

5. தென்கொரிய மக்கள் கத்தோலிக்கக் கொள்கைகள் மீது உயர்ந்த நம்பிக்கை கொண்டுள்ளனர்

6. பார்வை இழந்தோரின் பாதுகாவலராக அருளாளர் Manuel Lozano Garridoவை அறிவிக்க கோரிக்கை

7. ஐ.நா.நிறுவனம் வெளியிட்ட மனித முன்னேற்றம் அறிக்கையில் நார்வே முதலிடம்


------------------------------------------------------------------------------------------------------
1. இறைபதம் சேர்ந்த கர்தினால்கள் மற்றும் ஆயர்களுக்கென ஒப்புக்கொடுக்கப்பட்ட திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை

நவ.03,2011. கடந்த 12 மாதங்களில் இறைபதம் சேர்ந்த கர்தினால்கள் மற்றும் ஆயர்களுக்கென இவ்வியாழனன்று வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் திருப்பலியை நிறைவேற்றிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், 'திருமுழுக்கினால் கிறிஸ்துவோடு இணந்திருக்கும் நாம் அனைவரும் அவருடைய சாவிலும் அவரோடு இணைந்திருக்கிறோம்' என்ற தூய பவுலின் வார்த்தைகளை மையமாக வைத்து மறையுரை வழங்கினார்.
தான் கொல்லப்பட‌ப் போவ‌து குறித்து இயேசு கிறிஸ்து எடுத்துரைத்த‌போது, அதற்கான விள‌க்க‌ம் கேட்க‌வே சீட‌ர்க‌ள் அஞ்சிய‌தை சுட்டிக்காட்டிய‌ பாப்பிறை, ந‌ம் ம‌னித‌ இய‌ல்பில் ம‌ர‌ண‌ம் க‌ண்டு அஞ்சுவ‌தே நம்மில் பெரும்பாலும் இட‌ம்பெறுகிற‌து என்றார்.
நான் பெற‌வேண்டிய‌ திருமுழுக்கு ஒன்று உள்ள‌து என‌ கிறிஸ்து த‌ன் பாடுக‌ளைக்  குறித்து எடுத்துரைத்த‌தையும் சுட்டிக்காட்டிய‌ பாப்பிறை, இயேசு கிறிஸ்துவின் இறப்பில் இறைவ‌ன் த‌ன் அன்பு முழுமையையும் ஒரு நீர்வீழ்ச்சி போல் பொழிந்துள்ளார் என்றார்.
இறை பிரசன்னத்தில் நாம் தொடர்ந்து வாழமுடியும் என்பது கிறிஸ்துவில் மட்டுமே தன் உண்மை நிலையை அடைய முடியும், ஏனெனில் புதிய மற்றும் நிலைத்த வாழ்வு என்பது சிலுவை மரத்தின் கனி எனவும் எடுத்துரைத்தார் பாப்பிறை.
இயேசுவின் சிலுவை இல்லையேல், பாவத்தின் எதிர்ம‌றை விளைவுகளின் முன்னால் இயற்கையின் அனைத்து சக்திகளும் பலமற்றவைகளாகவே மாறுகின்றன என்பதையும் சுட்டிக்காட்டிய பாப்பிறை, அனைத்தையும் இயங்க வைப்பது இயேசுவின் இதயத்திலிருந்து பிறக்கும் அன்பே என்பதையும் எடுத்துரைத்தார்.
கடந்த 12 மாதங்களில் உயிரிழந்த  கர்தினால்கள் மற்றும் ஆயர்களுக்கான இத்திருப்பலியில், இவ்வாண்டு உயிரிழந்த இந்திய கர்தினால் வர்கி வித்யாத்தில் உட்பட பத்து கர்தினால்களின் பெயர்களையும் எடுத்துரைத்து, திருத்தந்தை செபித்தார்.


2. இஸ்லாமியக் கட்சிகள் பதவிக்கு வருவதைக் கண்டு ஜரோப்பிய நாடுகள் அச்சம் கொள்ளத் தேவையில்லை துனிசியா பேராயர் Lahham

நவ.03,2011. துனிசியாவில் தற்போது நடைபெற்ற தேர்தலில் இஸ்லாமிய கட்சி ஒன்று பதவிக்கு வந்திருப்பதை சந்தேகத்துடனும், பயத்துடனும் நோக்கத் தேவையில்லை என்று Tunis பெருமறைமாவட்டத்தின் பேராயர் Maroun Elias Lahham கூறினார்.
அரேபிய நாடுகளில் தற்போது சுதந்திரமான, மக்களாட்சி முறையில் தேர்தல்கள் நடைபெற்றால், இஸ்லாமியக் கொள்கைகளால் உந்தப்பட்ட கட்சிகளே வெற்றி பெறும் என்று கூறிய பேராயர் Lahham, துனிசியாவில் நடந்துள்ளதுபோல், அடுத்து தேர்தலைச் சந்திக்கவிருக்கும் எகிப்திலும் இஸ்லாமியக் கட்சிகளே பதவிக்கு வரலாம் என்று கூறினார்.
துனிசியாவில் பல ஆண்டுகளாக பென் அலி நடத்திவந்த ஆட்சியால் மனம் வெறுத்துப் போனவர்களுக்கு தற்போது தேர்தலில் வெற்றிபெற்றுள்ள Ennahda முஸ்லிம் கட்சி நம்பிக்கையைத் தந்துள்ளது என்பதையும், சர்வாதிகார ஆட்சி முறையில் சிக்குண்டிருந்த பல நாடுகளுக்கு ஒரு வழிகாட்டியாக அமைந்த துனிசியா நாட்டின் புரட்சி, அரேபிய நாடுகளின் வசந்தம் என்ற ஒரு புதிய போக்கினை உலகிற்கு காண்பித்துள்ளது என்பதையும் பேராயர் Lahham சுட்டிக் காட்டினார்.
இஸ்லாமியக் கட்சிகள் பதவிக்கு வருவதைக் கண்டு ஜரோப்பிய நாடுகள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், எவ்வகை இஸ்லாம் அதிகாரத்தைக் கைப்பற்றுகிறது என்பதே முக்கியம் என்றும் கூறிய பேராயர் Lahham, மக்களாட்சி என்ற முகமூடியை அணிந்து வரும் எவ்வகை சர்வாதிகாரத்தையும் மக்கள் இனி இனம் கண்டு கொள்வர் என்ற தன் நம்பிக்கையையும் வெளியிட்டார்.


3. இயற்கைப் பேரிடர்களில் வாழ்வையும், வாழ்வாதாரங்களையும் இழப்பது பெரும்பாலும் ஏழை மக்களே - சான் சால்வதோர் பேராயர்

நவ.03,2011. கால நிலையில் உருவாகி வரும் மாற்றங்களே மனித குலம் சந்தித்து வரும் மிகப் பெரும் சவால் என்று தென் அமெரிக்க ஆயர் ஒருவர் கூறினார்.
கால நிலை மாற்றங்களுக்குக் காரணமாக இருக்கும் உலக அரசுகள் பல தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று எல் சால்வதோர் நாட்டின் அரசுத் தலைவர் Maruricio Funes அண்மையில் ஓர் அழைப்பை விடுத்தார்.
இதனை முற்றிலும் ஆதரித்துப் பேசிய சான் சால்வதோர் பேராயர் Jose Luis Escobar Alas, இந்த மாற்றங்களை உருவாக்கி வரும் தொழில்மயமாகியுள்ள நாடுகள் இந்தப் பிரச்சனையைக் களைவதற்கு தீவிர முயற்சிகள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
எல் சால்வதோர் உட்பட ஒரு சில மத்திய அமெரிக்க நாடுகளில் வீசிய கடும் புயலை அடுத்து, அப்பகுதியில் நடைபெற்ற ஓர் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட எல் சால்வதோர் அரசுத் தலைவர் Funes, தன் கருத்தை வெளியிட்டு, வருங்காலத்தில் வரக்கூடிய ஆபத்துக்களைத் தவிர்க்க அனைவரும் முயல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஒவ்வோர் ஆண்டும் உலகின் பல பகுதிகளையும் தாக்கி வரும் இயற்கைப் பேரிடர்களில் வாழ்வையும், வாழ்வாதாரங்களையும் இழப்பது பெரும்பாலும் ஏழை மக்களே என்பதை எடுத்துரைத்த பேராயர் Escobar, உலகளாவிய முறையில் அரசுகள் தீமானத்திற்கு  வரும்வரையில் காத்திருக்காமல், ஒவ்வோர்  அரசும் ஏழை மக்களின் வாழ்வை உயர்த்த தன்னால் இயன்ற உதவிகளைச் செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


4. இந்திய காரித்தாஸ் அமைப்பு பொன்விழா ஆண்டில் மேற்கொள்ளவிருக்கும் திட்டங்கள்

நவ.03,2011. இந்தியாவில் காரித்தாஸ் அமைப்பு உருவாகி 50 ஆண்டுகள் நிறைவுறும் வேளையில், இந்தப் பொன்விழா ஆண்டில், இவ்வமைப்பு மக்களை மையப்படுத்திய பல பணிகளை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளது.
இந்திய காரித்தாஸ் அமைப்பு மேற்கொள்ளும் பல பணிகளில் பெண் குழந்தைகளை கருவிலேயே அழிக்கும் முயற்சிகளுக்கு எதிரான பல திட்டங்களை மேற்கொள்ளப் போவதாக இந்தியக் காரித்தாஸ் அமைப்பின் இயக்குனர் அருள்தந்தை வர்கீஸ் மட்டமனா தெரிவித்தார்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும், நாட்டிற்கும் பெண் குழந்தைகள் மிகவும் முக்கியமானவர்கள் என்ற விழிப்புணர்வை அனைவரும் பெறும் வகையில் கருத்தரங்குகள், மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும் என்று காரித்தாஸ் இயக்குனர் மேலும் கூறினார்.
இந்திய காரித்தாஸ் அமைப்பின் இந்த முயற்சியில் பெண் மருத்துவர்களையும் மற்றும் அரசுசாரா அமைப்பைச் சார்ந்தவர்களையும் ஈடுபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று காரித்தாஸ் இயக்குனர் அருள்தந்தை மட்டமனா மேலும் கூறினார்.


5. தென்கொரிய மக்கள் கத்தோலிக்கக் கொள்கைகள் மீது உயர்ந்த நம்பிக்கை கொண்டுள்ளனர்

நவ.03,2011. தென்கொரியாவின் பெரும்பாலான மக்கள் கத்தோலிக்கக் கொள்கைகள் மீது உயர்ந்த நம்பிக்கை கொண்டுள்ளனர் என்று அந்நாட்டில் வெளியான ஓர் அறிக்கை கூறுகிறது.
புத்த மதமும், சமுதாயமும் என்ற தலைப்பில் Jogye Order’s Institute என்ற நிறுவனம் அந்நாட்டில் மேற்கொண்ட ஓர் ஆய்வின் முடிவுகள் இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டபோது, பொதுவாக, அந்நாட்டு மக்களிடையே மத நம்பிக்கை குறைந்து வந்தாலும், கிறிஸ்தவ கொள்கைகள் மீது தனி மதிப்பு உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
16 வயதுக்கும் 69 வயதுக்கும் இடைப்பட்ட 1500 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின்படி, கொரியாவில் பின்பற்றப்படும் பல மதங்களில் கத்தோலிக்க மதம் மிக உயர்ந்த இடத்தையும், அதற்கு அடுத்தபடியாக புத்தமதக் கொள்கைகள் அதிக மதிப்பையும் பெற்றுள்ளன.
பொதுவாகவே, மதநிறுவனங்கள் மீது குறைவான மதிப்பு கொண்டுள்ள இம்மக்களிடையே, அரசுநிறுவனங்கள், ஊடகத்துறை, மற்றும் பொருளாதார நிறுவனங்கள் இன்னும் தாழ்ந்த இடங்களையே பிடித்துள்ளன என்று இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
1970 மற்றும் 80களில் தென் கொரியா மக்களாட்சியில் நிலைப்பதற்கு போராடி வந்த வேளையில், மறைந்த கர்தினால் Stephen Kim Sou-hwan மற்றும் கத்தோலிக்க குருக்கள் கழகத்தைச் சார்ந்தவர்கள் மக்களுக்குப் பல வழிகளில் உதவிகள் செய்ததே, இம்மக்கள் மத்தியில் கத்தோலிக்கக் கொள்கைகளுக்கு உயர்ந்த மதிப்பைப் பெற்றுத் தந்துள்ளது என்று மதம் மற்றும் அமைதிக்காக உருவாக்கப்பட்டுள்ள கொரிய அவையின் முன்னாள் தலைமைச் செயலர் James Byun Jin-heung  கூறினார்.


6. பார்வை இழந்தோரின் பாதுகாவலராக அருளாளர் Manuel Lozano Garridoவை அறிவிக்க கோரிக்கை

நவ.03,2011. சென்ற ஆண்டு ஜூன் மாதம் அருளாளராக உயர்த்தப்பட்ட Manuel Lozano Garrido அவர்களை பார்வை இழந்தோரின் பாதுகாவலராக திருத்தந்தை அறிவிக்க வேண்டும் என்ற முயற்சியில் இஸ்பானிய கத்தோலிக்க பார்வை இழந்தோர் கழகம் ஈடுபட்டுள்ளது.
1920ம் ஆண்டு இஸ்பெயின் நாட்டில் பிறந்து 1971ம் ஆண்டு மறைந்த Manuel Lozano,  தன் வாழ்வின் 25 ஆண்டுகளை சக்கர நாற்காலியில் செலவழித்தவர். இவரது இறுதி ஒன்பது ஆண்டுகள் பார்வையையும் இழந்து, இவர் துன்புற்றார்.
செய்தியாளராகப் பணிபுரிந்த இவர், 2010ம் ஆண்டு ஜூன் மாதம் அருளாளராக உயர்த்தப்பட்டார். செய்தித் துறையில் பணிபுரிவோரில் முதல் முறையாக அருளாளராக உயர்த்தப்பட்ட பெருமை இவரையேச் சாரும்.
கடவுள் மீது கொள்ளும் விசுவாசம், ஊனக் கண்களால் காணும் சக்தியைச் சார்ந்தது அல்ல மாறாக, அகக் கண்களால் இறைவனைக் காணும் சக்தியைச் சார்ந்தது என்பதை அருளாளர் Manuel Lozano வாழ்ந்து காட்டியதால், அவரைத் தங்கள் பாதுகாவலாராகப் பெற விழைகிறோம் என்று கழகத்தின் உதவித் தலைவர் Ignacio Segura Madico கூறினார்.
1990ம் ஆண்டு இஸ்பெயின் நாட்டின் Zaragoza மறைமாவட்டத்தில் உருவாக்கப்பட்டு, 2008ம் ஆண்டில் திருச்சபையால் அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட இஸ்பானிய கத்தோலிக்க பார்வை இழந்தோர் கழகத்தில், பார்வை இழந்தோரும் அவர்களுக்கு பணிபுரிவோரும் இணைந்துள்ளனர்.


7. ஐ.நா.நிறுவனம் வெளியிட்ட மனித முன்னேற்றம் அறிக்கையில் நார்வே முதலிடம்

நவ.03,2011. ஐ.நா.நிறுவனம் வெளியிட்ட மனித முன்னேற்றம் அறிக்கையில் நார்வே, ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களையும், ஆப்ரிக்காவின் காங்கோ, நைஜர், புருண்டி ஆகிய நாடுகள் இறுதி மூன்று இடங்களையும் பிடித்துள்ளன.
ஒவ்வொரு நாட்டிலும் மனிதர்கள் வாழும் காலஅளவு, கல்வியறிவு, நாட்டின் பொருள் உற்பத்தி, ஒவ்வொரு மனிதரும் பெறும் வருமானம் ஆகிய அளவைகளின் அடிப்படையில் UNDP என்ற ஐ.நா.வின் ஓர் அங்கம் ஒவ்வோர் ஆண்டும் வெளியிடும் இவ்வறிக்கை இப்புதனன்று வெளியிடப்பட்டது.
சென்ற ஆண்டு 169 நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, இவ்வாண்டு 187 நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்டது. இந்த நாடுகளின் வரிசையில் இலங்கை 97வது இடத்தையும், இந்தியா 134வது இடத்தையும் பெற்றுள்ளன.
அமெரிக்க ஐக்கிய நாடு, நியூசிலாந்து, கனடா, அயர்லாந்து, ஜெர்மனி, ஸ்வீடன் ஆகிய நாடுகள் மனித முன்னேற்றம் என்ற இவ்வறிக்கையின்படி, முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகள்.
மக்களிடையே நிலவும் பொருளாதார வேறுபாடு அமெரிக்க ஐக்கிய நாட்டில் மிக அதிக அளவு உயர்ந்திருப்பதால், அந்த அளவையில் அந்நாடு 4வது இடத்திலிருந்து 23வது இடத்திற்கு வீழ்ந்துள்ளது. அதேபோல், கொரியா 15வது இடத்திலிருந்து 32 வது இடத்திற்கும், இஸ்ரேல் 17 வது இடத்திலிருந்து 25வது  இடத்திற்கும் வீழ்ந்துள்ளன.
இருபாலினரிடையே நிலவும் வேறுபாடுகள் என்ற அளவில், ஐரோப்பிய நாடுகள் மென்மையான இடங்களிலும், ஆசிய மற்றும் ஆப்ரிக்க நாடுகள் தாழ்வான இடங்களையும் பிடித்துள்ளன.

 

No comments:

Post a Comment