Friday, 18 November 2011

Catholic News - hottest and latest - 18 November 2011

1. மியான்மாருக்கு ASEAN தலைமைத்துவம் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது தலத்திருச்சபை

2. தற்கொலைக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு கேரள தலத்திருச்சபை வரவேற்பு

3. சிறைப்படுத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் எதிர்நோக்கும் கடும் பாகுபாடுகள்

4. லைபீரியத் தேர்தல் தொடர்பான வன்முறைப் பரிசீலனைக் குழுவுக்கு ஓர் அருட்சகோதரி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்

5. பன்வலைத் தொடர்பு அமைப்புகள் உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்குமாறு வழி செய்யப்பட வேண்டும் - இயேசு சபை இதழ்

6. காடுகள் அழிப்பு, புவியின் பொருளாதாரம் மற்றும் சமூகங்களுக்கு அச்சுறுத்தல் - பான் கி மூன்

7. தண்ணீர் மற்றும் எரிசக்தி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்குத் வேளாண் துறையில் புதிய முறைகள் கையாளப்பட வேண்டும் - FAO

------------------------------------------------------------------------------------------------------

1. மியான்மாருக்கு ASEAN தலைமைத்துவம் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது தலத்திருச்சபை

நவ.18,2011. ASEAN நாடுகள் கூட்டமைப்புத் தலைமைப் பதவியை 2014ம் ஆண்டில் மியான்மார் நாட்டிற்கு வழங்க முடிவு செய்திருப்பது அந்நாட்டின் சமய சுதந்திரம், மனித உரிமைகள் மற்றும் பொருளாதாரம் முன்னேற உதவும் என்று தலத்திருச்சபை அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்தார்.
ASEAN அமைப்பின் இத்தீர்மானம் குறித்து கருத்து தெரிவித்த மியான்மார் கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் John Hsane Hgyi, ASEAN அமைப்பின் உறுப்பினர்கள் மியான்மாருக்குத் தலைமைப் பதவியை அளிப்பதற்குத் தீர்மானித்திருப்பதன் மூலம், அந்நாடு சனநாயகப் பாதையில் செல்வதற்குத் தூண்டியுள்ளார்கள் என்று கூறினார்.
ASEAN அமைப்பின் தலைமைப் பதவிக்கு மியான்மார் உண்மையிலேயே தகுதியானதா என்பதை நிரூபணம் செய்வதற்கு அந்நாடு பெருமளவில் முன்னேற்றங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று ஆயர் Hgyi மேலும் கூறினார்.
இந்நடவடிக்கை குறித்துப் பேசிய Yangon அரசியல் விமர்சகர், U Kyaw Khin, இது நாட்டின் முன்னேற்றத்தின் அடையாளமாக இருந்தாலும் எதிர்காலத்தைக் கட்டி எழுப்புவதற்கு அந்நாடு பெருமளவில் தன்னை அர்ப்பணிக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்தார்.  


2. தற்கொலைக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு கேரள தலத்திருச்சபை வரவேற்பு

நவ.18,2011. கேரளாவில் விவசாயிகள் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு ஓராண்டு அவகாசம் கொடுத்திருப்பது உட்பட விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதைத் தடை செய்வதற்கு அம்மாநில அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து தங்கள் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது தலத்திருச்சபை.
Wayanad மாவட்டத்தில் கடந்த 15 நாட்களில் பெரும் கடன் சுமை காரணமாக ஐந்து விவசாயிகள் தற்கொலை செய்துள்ள வேளை, விவசாயிகள் குறித்த அரசின் இப்புதிய நடவடிக்கைகள் நல்லதொரு தொடக்கம் என்று Mananthavady மறைமாவட்டப் பேச்சாளர் அருட்பணி Thomas Therakam கூறினார்.
கேரள முதலமைச்சர் Oomen Chandy இப்புதனன்று வெளியிட்ட அறிக்கையின்படி, அரசுத் துறைகள், பிற அரசு நிறுவனங்களிடமிருந்து வேளாண்மைக்கென கடன் பெற்ற விவசாயிகள் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு ஓராண்டு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அத்துடன், வேளாண்மை உற்பத்திப் பொருட்களுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது மற்றும் காட்டு விலங்குகளால் சேதமாக்கப்பட்ட அறுவடைகளுக்கு நல்ல இழப்பீட்டுத் தொகையும் வழங்குவதாக அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கேரள அரசின் இவ்வறிப்பைப் பாராட்டியுள்ள அருட்பணி  Therakam, அறுவடை காப்பீடு முறையைத் தொடங்குவதற்கும் அரசை வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் பரவலாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


3. சிறைப்படுத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் எதிர்நோக்கும் கடும் பாகுபாடுகள்

நவ.18,2011. பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் சிறைகளில் ஆபத்தான நிலைகளை எதிர்நோக்குவதாகவும் கடும் பாகுபாடுகளால் துன்புறுகின்றனர் எனவும் உள்ளூர் கத்தோலிக்க வழக்கறிஞர் ஒருவர் கூறினார்.
Aid to the Church in Need பிறரன்பு நிறுவனத்திடம் பேசிய Faisalabadல் பணி செய்யும் வழக்கறிஞர் Moazzam Aslam Bhatti, உணவு, உடை, மருந்துகள் ஆகியவற்றைப் பெறுவதிலும், தங்களது மத நம்பிக்கைகளைச் செயல்படுத்துவதிலும் சிறைகளிலுள்ள  கிறிஸ்தவர்கள் பாகுபாடுகளைச் சந்திக்கிறார்கள் என்று கூறினார்.
இந்த நிலை மாறுவதற்குச் சட்டரீதியான உதவிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
Faisalabad நகரில் சுமார் 5,000 கைதிகள் உள்ளனர். இவர்களில் 85 முதல் 100 பேர் கிறிஸ்தவர்கள் என்று, Faisalabad மறைமாவட்ட சிறைக் கைதிகள் நலன் குறித்த பணிக்குழுத் தலைவர் அருள்தந்தை Iftikhar Moon கூறினார்.


4. லைபீரியத் தேர்தல் தொடர்பான வன்முறைப் பரிசீலனைக் குழுவுக்கு ஓர் அருட்சகோதரி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்

நவ.18,2011. லைபீரிய நாட்டில் அண்மையில் இடம் பெற்ற தேர்தல் தொடர்பான வன்முறைகள் குறித்து விசாரணை நடத்துவதற்கு அமைக்கப்பட்டுள்ள குழுவுக்கு ஓர் அருள்சகோதரியைத் தலைவராக நியமித்துள்ளார்.அந்நாட்டு அரசுத்தலைவர் எல்லன் ஜான்சன்.
இக்குழுவுக்குத் தலைமை தாங்கும் பிரான்சிஸ்கன் அருள்சகோதரி Mary Laurene Browne, லைபீரியாவின் உள்நாட்டுப் போரின் பல்வேறு விதமான நிலைகளை நன்கு அறிந்தவர் என்றும் அந்நாட்டின் வரலாறு பற்றி ஆழமான அறிவைக் கொண்டுள்ளவர் என்றும் ஒரு மறைபோதகக் குரு Mauro Armanino தெரிவித்தார்.
லைபீரியாவைக் கட்டி எழுப்புவதில் கத்தோலிக்கத் திருச்சபையின் பங்கை அங்கீகரிப்பதாகவும் இந்த நியமனம் இருக்கின்றது என்றும் அக்குரு கூறினார். 
1989ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரையும், 1999ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரையும் லைபீரியா, இரண்டு உள்நாட்டுப் போர்களை அனுபவித்துள்ளது. 
லைபீரிய அரசுத்தலைவர் எல்லன் ஜான்சன், 2011ம் ஆண்டுக்கான நொபெல் அமைதி விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.   


5. பன்வலைத் தொடர்பு அமைப்புகள் உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்குமாறு வழி செய்யப்பட வேண்டும் - இயேசு சபை இதழ்

நவ.18,2011. பன்வலைத் தொடர்பு அமைப்புகள் உலக மக்கள் அனைவருக்கும் நன்மை செய்வதால் அவை எல்லாருக்கும் கிடைக்குமாறு வழி செய்யப்பட வேண்டும் மற்றும் மற்றவரின் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்று இயேசு சபை இதழ் ஒன்று கேட்டுக் கொண்டது.
அடக்குமுறை அரசுகள் தகவல்கள் பெறும் வசதிகளையும்  தொடர்புகள் பெறும் வசதிகளையும் கட்டுப்படுத்துவதால்,  இணையதளத்தைப் பயன்படுத்துவது உலகளாவிய மனித உரிமைகள் என்பதை உறுதிப்படுத்தும் பொதுக் கொள்கைகளை சனநாயக அரசுகள் கொண்டு வருமாறு La Civilta Cattolica என்ற இதழ் மேலும் கேட்டுக் கொண்டது.
இம்மாதம் 24,25 தேதிகளில் ஐரோப்பிய அவை இணையதளம் குறித்த கருத்தரங்கை நடத்தவுள்ளது. இதையொட்டி இவ்வாறு கேட்டுள்ளது அவ்விதழ்.


6. காடுகள் அழிப்பு, புவியின் பொருளாதாரம் மற்றும் சமூகங்களுக்கு அச்சுறுத்தல் - பான் கி மூன்

நவ.18,2011. காடுகள் அழிக்கப்பட்டு வருவது, இப்புவியின் வெப்பநிலை மாற்றத்திற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் மட்டும் அச்சுறுத்தலாக இல்லை, அத்துடன் காடுகளை நம்பி வாழும் சமூகங்களின் வருவாய், வாழும்நிலை மற்றும் கலாச்சாரத்திற்கும் அச்சுறுத்தலாக இருக்கின்றது என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
இந்தோனேசியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பான் கி மூன், அந்நாட்டின் Borneo மாநிலத்தின் மத்திய Kalimantan பகுதியைப் பார்வையிட்ட போது இவ்வாறு கூறினார்.
காடுகள் அழிப்பால் ஏற்படும் வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு மிகப்பெரும் திட்டத்தை இந்த Kalimantan பகுதியில் நடத்தி வருகிறது இந்தோனேசிய அரசு. இத்திட்டத்தின் மூலம், காடுகள் சேமித்து வைக்கும் கார்பனின் மதிப்பை அறிவிக்கவும் இந்தோனேசிய அரசு முயற்சி்தது வருகிறது.
உலக அளவில் வெளியேற்றப்படும் கார்பனில் சுமார் 17 விழுக்காட்டிற்குக் காடுகள் அழிக்கப்படுவதே காரணம் என்று ஐ.நா.பொதுச் செயலர் கூறினார்.


7. தண்ணீர் மற்றும் எரிசக்தி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்குத் வேளாண் துறையில் புதிய முறைகள் கையாளப்பட வேண்டும் - FAO

நவ.18,2011. வருங்காலத்தில் தண்ணீர் மற்றும் எரிசக்தி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்குத் தற்போதைய வேளாண் துறையில் புதிய முறைகள் கையாளப்பட வேண்டும் என்று FAO என்ற ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் கேட்டுக் கொண்டது.
குறுநில விவசாயிகளைப் பாதுகாக்கவும் கிராமங்களில் நிலையான வளர்ச்சி ஏற்படவும் ஒருங்கிணைந்த திட்டங்களும் கொள்கைகளும் வகுக்கப்பட வேண்டுமென்றும் FAO நிறுவனம் வலியுறுத்தியது.
நாளையப் பசுமைப் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருப்பது வேளாண்மையே என்றுரைத்த FAOவின் இயற்கை வளங்களுக்கான உதவி இயக்குனர் Alexander Mueller, வேளாண்மையில் கற்பனை திறத்துடன் புதுமைகள் புகுத்தப்பட வேண்டும் எனக் கூறினார்.
2050ம் ஆண்டில் தொள்ளாயிரம் கோடியாக உயரவுள்ள மக்கள் தொகைக்கு உணவளிப்பதற்கு உணவு உற்பத்தி 70 விழுக்காடாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று FAO கூறுகிறது.  

 

No comments:

Post a Comment