Thursday, 17 November 2011

Catholic News - hottest and latest - 16 November 2011

1. பெனின் நாட்டிற்கு திருத்தந்தை மேற்கொள்ளும் திருப்பயணம் குறித்து திருப்பீடப் பேச்சாளர்

2. தூத்துக்குடி ஆயர் யுவான் அம்புரோஸ் - அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் முழுவதுமே மக்கள் மேற்கொண்ட ஒரு போராட்டம்

3. கேரளாவில் நான்கு குழந்தைகளுக்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு உதவிகள் செய்யும் திட்டம்

4. லோக்பால் மசோதாவை சீரமைக்க இந்தியாவின் கிறிஸ்தவத் தலைவர்கள் ஆலோசனைகள்

5. கிறிஸ்துவைத் தவறான வகையில் சித்தரித்துள்ள இந்தித் திரைப்படத்தின் சுவரொட்டிகள்

6. அகில உலகத் திருச்சபையின் எதிர்காலத்திற்கு அமெரிக்க ஐக்கிய நாட்டை திருத்தந்தை நம்பிக்கையுடன் நோக்குகிறார் - திருப்பீடத் தூதர்

7. பார்வைக் குறைவினால் படிக்கும் வாய்ப்புக்களை இழந்துள்ள 2 கோடியே 30 இலட்சம் குழந்தைகள்

------------------------------------------------------------------------------------------------------

1. பெனின் நாட்டிற்கு திருத்தந்தை மேற்கொள்ளும் திருப்பயணம் குறித்து திருப்பீடப் பேச்சாளர்

நவ.16,2011. வருகிற வெள்ளிக்கிழமை முதல் ஞாயிறு முடிய திருத்தந்தை ஆப்ரிக்காவின் பெனின் நாட்டிற்கு மேற்கொள்ளும் திருப்பயணம் ஆப்ரிக்கக் கண்டத்தில் வாழும் அனைத்து மக்களுக்காகவும் மேற்கொள்ளப்படும் ஒரு பயணம் என்று திருப்பீடப் பேச்சாளர் கூறினார்.
திருத்தந்தை இவ்வார இறுதியில் மேற்கொள்ளவிருக்கும் பெனின் திருப்பயணம் குறித்து இத்திங்களன்று பத்திரிக்கையாளர்களுக்கு விளக்கிய திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை Federico Lombardi, ஆப்ரிக்கக் கண்டத்திற்கு திருத்தந்தை மேற்கொள்ளும் இரண்டாவது திருப்பயணம் இது என்பதைச் சுட்டி காட்டினார்.
ஈராண்டுகளுக்கு முன் வத்திக்கானில் நடைபெற்ற ஆப்ரிக்க நாட்டு ஆயர்களின் சிறப்பு மாமன்றத்தின் நிறைவாக, மாமன்ற ஆயர்களுக்கு திருத்தந்தை தயாரித்துள்ள அறிவுரைகள் அடங்கிய ஒரு மடலில் இந்தத் திருப்பயணத்தின்போது திருத்தந்தை தன் கையொப்பமிட்டு, அதனை ஆப்ரிக்க ஆயர்களுக்கு வழங்குவார் என்றும், இந்தக் கையொப்பமிடும் நிகழ்வில் 35 ஆப்ரிக்க நாடுகளின் ஆயர் பேரவைத் தலைவர்கள் கலந்துகொள்வர் என்றும் அருள்தந்தை லொம்பார்தி தெரிவித்தார்.
பெனின் மக்களின் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய காலம்சென்ற கர்தினால் Bernardin Gantin அவர்களின் கல்லறையைச் சந்திப்பதும் திருத்தந்தையின் இத்திருப்பயணத்தின் ஒரு முக்கிய நிகழ்வு என்று திருப்பீடப் பேச்சாளர் கூறினார்.
பெனின் நாட்டில் 90 இலட்சத்திற்கும் குறைவான மக்களே வாழ்ந்து வருகின்றனர் என்றாலும், 150 ஆண்டுகளுக்கு முன், மற்ற நாடுகளுக்கு நற்செய்தி பரப்பும் பணி இந்த நாட்டிலிருந்து ஆரம்பமானது என்பதை லொம்பார்தி தன் உரையில் வலியுறுத்தினார்.
தற்போது 88 இலட்சம் மக்களைக் கொண்ட பெனின் நாட்டில், 30 இலட்சம் பேர் கத்தோலிக்கர். 11 ஆயர்கள், 811 குருக்கள், 1386 துறவியர் மற்றும் 11251 மறைகல்வி ஆசிரியர்களைக் கொண்ட இந்நாட்டில், தற்போது 800க்கும் அதிகமானோர் குருத்துவ பணிக்கென பயிற்சிகள் பெற்று வருகின்றனர்.


2. தூத்துக்குடி ஆயர் - அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் முழுவதுமே மக்கள் மேற்கொண்ட ஒரு போராட்டம்

நவ.16,2011. தமிழ்நாட்டின் கூடங்குளத்தில் கட்டப்பட்டுள்ள அணுமின் நிலையத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களுக்கு உதவிகள் செய்வதாகவும், அவர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் தூத்துக்குடி ஆயர் யுவான் அம்புரோஸ் மீதும், நான்கு பங்கு குருக்கள் மீதும் காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
தமிழ்நாட்டின் கூடங்குளத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அணுமின் நிலையப் பணிகளுக்கு இடையூறாக, சட்டத்திற்குப் புறம்பான கூட்டங்களை நடத்துவதாக தன்மீதும், குருக்கள்மீதும், பிற மனித உரிமை ஆர்வலர்கள்மீதும் காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர் என்று ஆயர் யுவான் அம்புரோஸ் செய்தியாளர்களிடம் இச்செவ்வாயன்று கூறினார்.
போராட்டம் நடத்தி வரும் மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்க மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு முயற்சி இது என்று கூறிய ஆயர் அம்புரோஸ், இந்தக் குற்றச்சாட்டினால் மனம் தளராமல், போராட்டம் தொடரும் என்றும் எடுத்துரைத்தார்.
இவ்வணுமின் நிலையம் கூடங்குளத்தில் அமைவதற்கு ஆரம்ப நாட்கள் முதலே எதிர்ப்புக்கள் இருந்தன என்பதைச் சுட்டிக்காட்டிய ஆயர் அம்புரோஸ், ஜப்பான் Fukushimaவில் நிகழ்ந்த விபத்தை அடுத்து, இந்தப் பிரச்சனையை மக்கள் அனைவரும் நன்கு புரிந்துகொண்டுள்ளதால், இந்த எதிர்ப்பு வலுவடைந்துள்ளது என்று கூறினார்.
இந்தப் போராட்டம் முழுவதுமே மக்கள் தாங்களாகவே மேற்கொண்ட ஒரு போராட்டம் என்றும், தலத்திருச்சபை இதற்குத் தலைமைத் தாங்கவில்லை என்றும் தூத்துக்குடி ஆயர் யுவான் அம்புரோஸ் விளக்கினார்.
செப்டம்பர் 11 முதல் ஆரம்பமான இந்தப் போராட்டத்தில் இதுவரை 8000க்கும் அதிகமானோர் பல்வேறு வகைகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர் என்று பொதுநிலையினர் தலைவர்களில் ஒருவரான சேவியர் பெர்னாண்டோ கூறினார்.


3. கேரளாவில் நான்கு குழந்தைகளுக்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு உதவிகள் செய்யும் திட்டம்

நவ.16,2011. நான்கு குழந்தைகளுக்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு உதவிகள் செய்யும் ஒரு திட்டத்தை சீரோ மலபார் உயர் பேராயர் மார் ஜார்ஜ் ஆலஞ்சேரி அண்மையில் துவக்கி வைத்தார்.
‘Jeevasamridhi’ என்று வழங்கப்படும் இந்தத் திட்டம் கேரளாவின் சட்டசபையில் விவாதத்திற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள கேரளா பெண்கள் வழிமுறை 2011 (Kerala Women’s Code Bill 2011) என்ற ஒரு சட்ட வரைவுக்கு ஒரு மாற்றாகக் கருதப்படுகிறது.
கேரள அரசின் இந்தச் சட்ட வரைவின்படி, இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளும் தம்பதியர் மீது 10000 ரூபாய் அபராதமும், மூன்று மாத சிறை தண்டனையும் சுமத்தப்பட்டுள்ளது.
மக்களின் மனசாட்சி சுதந்திரத்தைக் கட்டிப் போடும் வண்ணம் இந்தச் சட்ட வரைவு அமைந்துள்ளது என்பதே திருச்சபையின் கருத்து என்று சீரோ மலபார் ஆயர் பேரவையின் சார்பில் பேசிய அருள்தந்தை பால் தெலக்கத் கூறினார்.


4. லோக்பால் மசோதாவை சீரமைக்க இந்தியாவின் கிறிஸ்தவத் தலைவர்கள் ஆலோசனைகள்

நவ.16,2011. இந்தியாவில் நிலவிவரும் ஊழலை முற்றிலும் ஒழிக்க முடியாவிடினும், இந்தச் சமுதாயத் தீமையை எதிர்க்கும் சட்டங்கள் இன்னும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று இந்திய கிறிஸ்தவத் தலைவர்கள் கூறினர்.
தற்போது இந்தியாவில் பல்வேறு விவாதங்களை உருவாக்கிவரும் லோக்பால் மசோதாவை இன்னும் வலுவுள்ளதாக மாற்ற இந்தியாவின் கிறிஸ்தவத் தலைவர்கள் ஆலோசனைகள் வழங்கியுள்ள ஓர் அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளனர்.
இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை, கிறிஸ்தவ சபைகளின் தேசிய அவை, இளைய கிறிஸ்தவப் பெண்கள் சங்கம், ஆகியவை இணைந்து வழங்கியுள்ள இந்த அறிக்கையில், அன்னா ஹசாரே உருவாக்கிய லோக்பால் மசோதாவும், மத்திய அரசு உருவாக்கியுள்ள மசோதாவும் நல்ல முறையில் அமையவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு உறுப்பினரும் இந்தச் சட்டத்தின் கீழ் புலன்விசாரனைக்கு உள்ளாக வேண்டும் என்றாலும், அவர்கள் குற்றம் தீர்மானம் ஆகும்வரை அவர்கள் பாராளுமன்ற உரிமைகளைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்று இவ்வறிக்கை கூறுகிறது.
அதேபோல், பிரதமரும் இந்தச் சட்டத்தின் அதிகாரத்திற்குக் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று கூறும் இவ்வறிக்கை, பிரதமருக்கு ஒரு சில விதி விலக்குகளும் வழங்கப்பட வேண்டும், இல்லையேல் சிறு சிறு காரணங்களுக்காக குடியரசை நிலை குலையச் செய்யும் வழிமுறைகள் பரவி விடும் என்று இவ்வறிக்க எச்சரிக்கின்றது.
மத்திய அரசளவில் உள்ள இந்த அதிகாரம் ஒவ்வொரு மாநில அளவிலும் உருவாக்கப்பட வேண்டும் என்றும் இவ்வறிக்கை ஆலோசனை தந்துள்ளது.


5. கிறிஸ்துவைத் தவறான வகையில் சித்தரித்துள்ள இந்தித் திரைப்படத்தின் சுவரொட்டிகள்

நவ.16,2011. இந்தியாவில் வருகிற வெள்ளியன்று வெளியாகும் என்ற ஓர் இந்தித் திரைப்படத்தின் சுவரொட்டிகள் கிறிஸ்துவைத் தவறான வகையில் சித்தரித்துள்ளதால், பிரச்சனைகளை எழுப்பியுள்ளன.
Kaun Hai Wahan? என்ற திரைப்படத்தின் சுவரொட்டியில் கிறிஸ்து தலைகீழாக சிலுவையில் தொங்குவதுபோலும், அவருக்குப் பின்பக்கம் கத்திகள் குத்தப்பட்டிருப்பது போலும் அமைந்துள்ள இந்தச் சுவரொட்டிகள் கிறிஸ்தவர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளன என்று கிறிஸ்தவத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் இந்தச் சுவரொட்டிகள் குறித்து மன்னிப்பு கேட்டுள்ளனர் என்றாலும், இவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது என்று கத்தோலிக்கர் அவைப் பொதுச் செயலர் ஜோசப் டயஸ் கூறினார்.
வழக்கு தொடர்வதன் ஒரு முக்கிய நோக்கமே, எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நிகழாது தடுக்கப்பட வேண்டும் என்பதே என்று டயஸ் விளக்கினார்.
கிறிஸ்துவையும், கிறிஸ்தவ விசுவாசம், வாழ்வுமுறை ஆகியவற்றை கேலி செய்யும் போக்கு அண்மைக் காலங்களில் அதிகமாகியுள்ளது என்று கத்தோலிக்க ஆயர் பேரவையின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர் அருள்தந்தை பாபு ஜோசப் கூறினார்.


6. அகில உலகத் திருச்சபையின் எதிர்காலத்திற்கு அமெரிக்க ஐக்கிய நாட்டை திருத்தந்தை நம்பிக்கையுடன் நோக்குகிறார் - திருப்பீடத் தூதர்

நவ.16,2011. அமெரிக்க ஐக்கிய நாடு பல்வேறு பிரச்சனைகளில் சிக்குண்டிருந்தாலும், அகில உலகத் திருச்சபையின் எதிர்காலத்திற்கு இந்த நாட்டைத் திருத்தந்தை நம்பிக்கையுடன் நோக்குகிறார் என்று திருப்பீடத்தின் தூதர் கூறினார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் திருப்பீடத் தூதராக அண்மையில் பொறுப்பேற்ற பேராயர் Carlo Maria Viganò அமெரிக்க ஆயர்கள் பேரவையை இத்திங்களன்று முதன் முதலாகச் சந்தித்து உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
அமெரிக்க சமுதாயம் உருவாவதில் திருச்சபையின் பங்கு பெரிதும் இருந்தது என்பதையும், 'கடவுளில் நம்பிக்கை கொள்வோம்' என்பது இந்நாட்டின் மையமான ஓர் எண்ணமாக இன்றும் இருப்பதையும் திருப்பீடத் தூதர் தன் உரையில் சுட்டிக் காட்டினார்.
திருத்தந்தை அண்மையில் 2012ம் ஆண்டை விசுவாச ஆண்டென அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டி, அமெரிக்க ஆயர்கள் அனைவரும் இந்நாட்டின் விசுவாசத்தை இன்னும் வளர்க்கும் பல வழிகளில் மக்களை வழி நடத்த வேண்டும் என்று திருப்பீடத் தூதர் பேராயர் Viganò ஆயர்களுக்கு அழைப்பு விடுத்தார்.


7. பார்வைக் குறைவினால் படிக்கும் வாய்ப்புக்களை இழந்துள்ள 2 கோடியே 30 இலட்சம் குழந்தைகள்

நவ.16,2011. உலகில் குறைந்தது 2 கோடியே 30 இலட்சம் குழந்தைகள் பார்வைக் குறைவினால் படிக்கும் வாய்ப்புக்களை இழந்துள்ளனர் என்று Sightsavers என்ற ஒரு பிறரன்பு நிறுவனம் கூறியுள்ளது.
2015ம் ஆண்டுக்குள் உலகின் அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி என்ற மில்லேன்னிய இலக்கை அடைய பெரும் தடையாக உள்ளது பார்வை இழந்தோர் கல்வி பெறாமல் போவதே என்று பார்வை இழந்தோருக்கென உலகின் பல நாடுகளில் உழைத்து வரும் பிறரன்பு அமைப்பான Sightsavers கூறுகிறது.
உடல் அளவில் உள்ள இந்த குறைபாட்டை பல நாடுகளில் ஒரு அவமானமாகக் கருதுவதால், கலாச்சார வழியிலும் மக்கள் இந்த குறைபாட்டை நீக்கும் விழிப்புணர்வைப் பெற வேண்டும் என்று இந்நிறுவனம் வலியுறுத்துகிறது.
வளர்ந்து வரும் நாடுகள் பலவற்றில் பார்வை இழந்த குழந்தைகளில், 1 முதல் 3 விழுக்காடு குழந்தைகளே கல்வியறிவு பெறுகின்றனர் என்று இவ்வறிக்கையை தொகுத்த Sunit Bagree கூறினார்.
பல நாடுகளில் பார்வை இழந்தக் குழந்தையை கடவுள் தங்களுக்கு தந்த ஒரு தண்டனை என்று பெற்றோர் தீர்மானிப்பதால், அக்குழந்தையை கண்காணிக்காமல் விட்டுவிடும் ஆபத்தும் உள்ளது என்று Bagree சுட்டிக் காட்டினார்.
மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கென உருவாக்கப்படும் பள்ளிகளில் கல்வி கற்க அதிகச் செலவாகிறதென்பதும் இக்குழந்தைகள் கல்வி கற்க முடியாமல் போவதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

 

No comments:

Post a Comment