Friday 25 November 2011

Catholic News - hottest and latest - 24 November 2011

1. திருத்தந்தை : பசித்திருப்போருக்கு உணவு கொடுப்பது மட்டும் போதாது, மாறாக, அவர்கள் பசித்திருப்பதற்கான காரணத்தை அறிய முற்பட வேண்டும்

2. ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் ஒருங்கிணைந்த குழு திருத்தந்தையுடன் சந்திப்பு

3. உரோம் நகரில் உள்ள Rebibbia சிறைச்சாலையில் உள்ளவர்களைத் திருத்தந்தை சந்திக்கச் செல்கிறார்

4. கலவரங்களும், மரணமும் கிறிஸ்துவர்களை மனம் தளரச் செய்யாது - இந்திய ஆயர் பேரவையின் தலைவர்

5. போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களும், இராணுவமும், தேர்தல்கள் நல்ல முறையில் நடைபெற வேண்டியவற்றைச் செய்ய வேண்டும் - திருப்பீடத் தூதர் அழைப்பு

6. மக்களுக்கு வழங்கப்படும் இலவச நல உதவிகள் குறைக்கப்பட்டால், பெரும் பாதிப்புக்கு உள்ளாவது ஏழைகளே - பேராயர் நிக்கோல்ஸ்

7. உலகப் பிரச்சனைகளால் வறுமையில் வாடும் நாடுகள் முற்றிலும் சீர்குலையும் நிலைக்குத் தள்ளப்படும்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : பசித்திருப்போருக்கு உணவு கொடுப்பது மட்டும் போதாது, மாறாக, அவர்கள் பசித்திருப்பதற்கான காரணத்தை அறிய முற்பட வேண்டும்

நவ.24,2011. நற்செய்தியின் நல்வாழ்வை எடுத்துரைக்கும் பாதை கடினமாகவும் பலன்தராதது போலவும் இருந்தாலும் அந்த நல்வாழ்வைக் கற்பிக்கும் பணியை கைவிட்டு விடாமல் செய்யுமாறு காரித்தாஸ் பணியாளர்களைக் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இத்தாலியத் திருச்சபையின் காரித்தாஸ் அமைப்பு உருவாக்கப்பட்டு நாற்பது ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி அந்தக் காரித்தாஸ் அமைப்பின் சுமார் 12 ஆயிரம் பேரை இவ்வியாழனன்று வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை இயேசுவின் அன்புப்பணி தொடர்ந்து செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துச் சொன்னார்.
இன்றைய உலகின் தன்னலப்பற்று, தனியாட்களும் சமூகங்களும் மற்றவரின் தேவைகளுக்குத் திறந்த மனம் கொண்டவர்களாய் வாழுமாறு அழைப்பு விடுக்கின்றது என்றும் அவர் கூறினார்.
பிறரன்புப் பணியானது விசுவாசத்திலிருந்து பிறப்பதாகும், இப்பணியானது தேவையில் இருப்போருக்கு உதவும் திருச்சபையின் பணியாக இருக்கின்றது என்றும் கூறிய திருத்தந்தை, பசித்திருப்போருக்கு உணவு கொடுப்பது மட்டும் போதாது, மாறாக, அவர்கள் பசித்திருப்பதற்கான காரணத்தை அறிய முற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இயற்கைப் பேரிடர்களும் போர்களும் அவசரகால நிலையை ஏற்படுத்துகின்றன, அத்துடன் தற்போதைய உலகளாவியப் பொருளாதார நெருக்கடியும் சகோதரத்துவ உணர்வைத் தைரியமுடன் வெளிப்படுத்த அழைப்பு விடுக்கின்றன என்றும் அவர் கூறினார்.
மனித சமுதாயம் நம்பிக்கையின் அடையாளங்களைத் தேடுகின்றது, நமது நம்பிக்கையின் ஊற்று இயேசுவே, இந்த நம்பிக்கையைக் கொடுக்கவே காரித்தாஸ் பணியாளர்கள் தூண்டப்படுகிறார்கள் என்று திருத்தந்தை கூறினார்.


2. ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் ஒருங்கிணைந்த குழு திருத்தந்தையுடன் சந்திப்பு

நவ.24,2011. கிறிஸ்தவம் பரவியுள்ள கீழ்த்திசை நாடுகளையும் மேற்கத்திய நாடுகளையும் இணைக்கும்  பாலமாக Krizevci என்ற கிரேக்க கத்தோலிக்க மறைமாவட்டம் அமையட்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வாழ்த்தினார்.
கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சபைகள் உரோமை கத்தோலிக்கத் திருச்சபையுடன் உறவுகளைப் புதிப்பித்த 400வது ஆண்டு கொண்டாடப்படும் வேளையில், இப்புதனன்று திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகத்தில் கலந்துகொண்ட அப்பகுதி மக்களை வாழ்த்துகையில் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகத்திற்குப் பின் CCEE என்றழைக்கப்படும் ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் ஒருங்கிணைந்த குழு 40வது ஆண்டு நிறைவை கொண்டாடுவதையொட்டி, இக்குழுவில் உள்ள அங்கத்தினர்களைச் சந்தித்து அவர்களை வாழ்த்தினார் திருத்தந்தை.
உரோமைய மற்றும் ஆர்த்தடாக்ஸ் ரீதிகளைச் சார்ந்த 33 ஆயர் பேரவைகளை ஒருங்கிணைக்கும் இக்குழுவினரைத் திருத்தந்தை சந்தித்தது, இவ்விரு ரீதிகள் மட்டில் திருத்தந்தைக்கு உள்ள மதிப்பை வெளிப்படுத்துகிறது என்று CCEE தலைவரான கர்தினால் Péter Erdő கூறினார்.


3. உரோம் நகரில் உள்ள Rebibbia சிறைச்சாலையில் உள்ளவர்களைத் திருத்தந்தை சந்திக்கச் செல்கிறார்

நவ.24,2011. வருகிற டிசம்பர் 18ம் தேதி, திருவருகைக்கால நான்காம் ஞாயிறன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் உரோம் நகரில் உள்ள Rebibbia என்ற சிறைச்சாலையில் உள்ளவர்களைச் சந்திக்கச் செல்கிறார்.
திருத்தந்தையின் இந்த சந்திப்பைக் குறித்து இப்புதனன்று செய்தி வெளியிட்ட பாப்பிறை இல்லத்தின் மேற்பார்வையாளர், திருத்தந்தை டிசம்பர் 18ம் தேதி காலை 10 மணியிலிருந்து 11.30 மணி வரை இச்சிறையில் உள்ளவர்களோடு நேரம் செலவழிப்பார் என்று தெரிவித்தார்.
Rebibbia சிறைச்சாலையின் நடுவில் அமைந்துள்ள விண்ணகத் தந்தை ஆலயத்தில் சிறைச்சாலைக் கைதிகளைச் சந்தித்து திருத்தந்தை உரையாடுவார் என்றும் 11.30 மணியளவில் சிறைச்சாலையின் வளாகத்தில் மரக்கன்று ஒன்றை திருத்தந்தை தனது நினைவாக நட்டு வைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


4. கலவரங்களும், மரணமும் கிறிஸ்துவர்களை மனம் தளரச் செய்யாது - இந்திய ஆயர் பேரவையின் தலைவர்

நவ.24,2011. அன்பு, நீதி, அமைதி ஆகியவற்றை நிலைநாட்டுவதில் கிறிஸ்துவர்கள் எப்போதும் அர்ப்பணத்துடன் செயல்படுவர் என்றும், கலவரங்களும், மரணமும் அவர்களை மனம் தளரச் செய்யாது என்றும் இந்திய ஆயர் பேரவையின் தலைவர் கூறினார்.
நவம்பர் 15ம் தேதி கொல்லப்பட்ட அருள்சகோதரி வல்சா ஜான் அவர்களின் வீர மரணம் குறித்துப் பேசிய கர்தினால் ஆஸ்வல்ட் கிரேசியஸ் இவ்வாறு கூறினார்.
கேரளாவின் கொச்சியில் இவ்வியாழன் ஆரம்பாமாகியிருக்கும் இந்திய கத்தோலிக்க அவையின் 11வது பொதுக்குழு கூட்டத்திற்காக அங்கு சென்ற கர்தினால் கிரேசியஸ், நற்செய்தி படிப்பினைகளை எடுத்துச் சொல்வதற்கு எதிராக எழும் எந்த ஒரு சவாலையும் திருச்சபை சந்திக்கும் என்று கூறினார்.
இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகவும், மதம், மொழி, சாதி என்ற பாகுபாடுகள் இல்லாமல் ஏழைகள், மற்றும் உரிமைகள் மறுக்கப்பட்டோர் ஆகியோரின் நல்வாழ்வுக்காகவும் கத்தோலிக்கத் திருச்சபை தளராமல் உழைத்து வரும் என்று உறுதி கூறினார் கர்தினால் கிரேசியஸ்.


5. போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களும், இராணுவமும், தேர்தல்கள் நல்ல முறையில் நடைபெற வேண்டியவற்றைச் செய்ய வேண்டும் - திருப்பீடத் தூதர் அழைப்பு

நவ.24,2011. ஜனநாயக முறையில் நடத்தப்படும் தேர்தல்கள் வழியே மக்கள் அளிக்கும் வாக்குகளே அவர்களது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்யும் ஒரே வழி என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
கடந்த சில நாட்களாய் எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் நடைபெறும் போராட்டங்களையும், அவற்றை அடக்க இராணுவம் மேற்கொண்ட அடக்கு முறைகளையும் குறித்து தன் கருத்தைத் தெரிவித்த திருப்பீடத் தூதர் பேராயர் Michael Fitzgerald, MISNA செய்தி நிறுவனத்திற்கு இப்புதனன்று அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.
போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களும், இராணுவமும், அரசும் தங்கள் வன்முறைகள் அனைத்தையும் விடுத்து, தேர்தல்கள் விரைவில் நல்ல முறையில் நடைபெற வேண்டியவற்றைச் செய்ய வேண்டும் என்று பேராயர் Fitzgerald எடுத்துரைத்தார்.
கடந்த சில நாட்களாக இராணுவம் மேற்கொண்ட அடக்கு முறைகளால் மக்கள், முக்கியமாக இளையத் தலைமுறையினர் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறிய திருப்பீடத் தூதர், விரைவில் தேர்தல்களை நடத்துவதற்கு இராணுவ அரசு முழு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


6. மக்களுக்கு வழங்கப்படும் இலவச நல உதவிகள் குறைக்கப்பட்டால், பெரும் பாதிப்புக்கு உள்ளாவது ஏழைகளே - பேராயர் நிக்கோல்ஸ்

நவ.24,2011. பிரித்தானிய பாராளுமன்றத்தில் முடிவுகள் எடுப்பவர்களுக்கும், அம்முடிவுகளை நடைமுறைப்படுத்தும் பணியாளர்களுக்கும் இடையே நலமான உரையாடல் நிகழ வேண்டும் என்று Westminster பேராயர் வின்சென்ட் நிக்கோல்ஸ் கூறினார்.
CSAN என்று அழைக்கப்படும் பிறரன்பு சமுதாயச் செயல்பாடுகளின் ஒருங்கிணைப்பு என்ற அமைப்பைச் சார்ந்தவர்களுக்கு பிரித்தானிய பாராளு மன்றத்தினர் இப்புதனன்று அளித்த வரவேற்பு நிகழ்வில் உரையாற்றிய பேராயர் நிக்கோல்ஸ் இவ்வாறு கூறினார்.
சமுதாயப் பாதுகாப்பு, நலவாழ்வு, குற்றங்களைக் களைதல் ஆகிய முக்கியமான பணிகளில் ஈடுபட்டிருப்போர் சந்திக்கும் நேரடிப் பிரச்சனைகளை பாராளுமன்ற அங்கத்தினர்கள் புரிந்து கொள்வதற்கு உரையாடல்கள் பெரிதும் உதவியாக இருக்கும் என்றும், இவ்விதம் புரிந்து கொள்வதன் மூலம் பாராளுமன்றத்தில் எடுக்கப்படும் முடிவுகள் சமுதாயத்திற்குப் பயனுள்ளதாக அமையும் என்றும் பேராயர் சுட்டிக் காட்டினார்.
பிறரன்புச் சேவைகளில் ஈடுபட்டிருப்போரின் பணிகளைப் பாராட்டியப் பேராயர் நிக்கோல்ஸ், இவர்கள் பெற்றிருக்கும் நடைமுறை அனுபவங்கள் பாராளு மன்றத்தினருக்கு கிடைத்தற்கரிய ஒரு கருவூலம் என்றும் சுட்டிக் காட்டினார்.
மக்கள் நலவாழ்வுத் திட்டங்களின் சீரமைப்பு குறித்து பிரித்தானிய பாராளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெற்று வரும் வேளையில், இத்திட்டங்களில் மக்களுக்கு வழங்கப்படும் இலவச நல உதவிகள் குறைக்கப்பட்டால், பெரும் பாதிப்புக்கு உள்ளாவது ஏழைகளே என்று பேராயர் நிக்கோல்ஸ் வலியுறுத்திக் கூறினார்.


7. உலகப் பிரச்சனைகளால் வறுமையில் வாடும் நாடுகள் முற்றிலும் சீர்குலையும் நிலைக்குத் தள்ளப்படும்

நவ.24,2011. திட்டமிட்டு நடத்தப்படும் குற்றங்கள், பரவிவரும் நோய்கள், சுற்றுச்சூழல் பிரச்சனைகள் ஆகியவை  உலக அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் எதிராக ஒவ்வொரு நாட்டிலும் நிகழும் பிரச்சனைகள் என்றாலும், தற்போது நாடு விட்டு நாடு மக்கள் செல்லும் வழிகள் அதிகரித்திருப்பதால், புதிய வகை சவால்களை நாம் சந்திக்கிறோம் என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் கூறினார்.
ஐ.நா.அவையின் ஓர் அங்கமான பாதுகாப்பு உயர்மட்டக் குழுவின் கூட்டத்தில் இப்புதனன்று பேசிய பான் கி மூன், தனித் தனி நாடுகள் சந்தித்து வந்த பிரச்சனைகள் தற்போது உலகப் பிரச்சனைகளாக மாறிவருவதை இவ்விதம் சுட்டிக் காட்டினார்.
இந்த உலகப் பிரச்சனைகளால் வறுமையில் வாடும் நாடுகள் முற்றிலும் சீர்குலையும் நிலைக்குத் தள்ளப்படுவதையும் ஐ.நா. பொதுச்செயலர் தன் உரையில் எடுத்துரைத்தார்.
ஐ.நா. அவையின் அகதிகள் பாதுகாப்பு மேற்பார்வையாளர் António Guterres பேசுகையில், சுற்றுச்சூழல் மாற்றங்களால் நாடு விட்டு நாடு செல்லும் அகதிகளின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் அதிகமாகி வருகிறதென்றும், இது பல நாடுகளில் பிரச்சனைகளாக மாறி வருகிறதென்றும் கூறினார்.
வேளாண்மை நிலங்கள் குறுகி வருதல், தண்ணீர் பற்றாக்குறை, மக்கள் பயன்படுத்தும் சக்திகளின் பற்றாக்குறை ஆகிய பிரச்சனைகள் அகதிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்கின்றன என்று Guterres கூறினார்.

 

No comments:

Post a Comment