1. பெனின் நாட்டில் திருத்தந்தை வழங்கிய பிரியாவிடை உரை
2. மீன்பிடித் தொழிலாளர் நாளுக்கென திருப்பீட அவை வெளிட்டுள்ள செய்தி
3. மீனவர் வாழ்க்கை மேம்பட நடவடிக்கை எடுக்க கோரிக்கை
4. கோவா கோவில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகப்படுத்த காவல்துறை கட்டளை
5. பெத்லகேம் நகரை உலகப் பாரம்பரியச் சொத்தாக அறிவிக்க பிரான்சிஸ்கன் துறவியர் தயக்கம்
6. இலங்கையின் நீதித்துறை சீரமைப்பிற்கு மதத்தலைவர்கள் அழைப்பு
7. சாலை பாதுகாப்பு நாள் - ஐ.நா. பொதுச்செயலர் செய்தி
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. பெனின் நாட்டில் திருத்தந்தை வழங்கிய பிரியாவிடை உரை
நவ.21,2011. ஆப்ரிக்க நாடு நம்பிக்கை தரும் ஒரு நாடு. இங்கு காணப்படும் பல்வேறு மதிப்பீடுகள் உலகிற்கு நல்ல பல பாடங்களை வழங்கவல்லது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
கடந்த மூன்று நாட்கள் ஆப்ரிக்கக் கண்டத்தின் பெனின் நாட்டில் தனது திருப்பயணத்தை மேற்கொண்ட திருத்தந்தை இஞ்ஞாயிறு மாலை Cotonou விமான நிலையத்தில் அம்மக்களிடமிருந்து பிரியாவிடை பெற்றபோது இவ்விதம் கூறினார்.
இத்திருப்பயணத்தின் இறுதி நிகழ்ச்சியாக Cotonou நகரில் அமைந்துள்ள கர்தினால் Bernardin Gantin விமான நிலையத்தில் பெனின் நாட்டு அரசுத் தலைவர் தாமஸ் போனி யாயி திருத்தந்தைக்கு பிரியாவிடை வாழ்த்துக்களைக் கூறினார்.
அரசுத் தலைவரின் வாழ்த்துக்களுக்குப் பதிலிறுத்த திருத்தந்தை, அந்நாடு பல்வேறு கலாச்சாரங்களையும், மதங்களையும் கொண்டுள்ளது, மற்றும் அரசுக்கும் திருச்சபைக்கும் இடையே நல்லுறவு உள்ளது என்பவைகளைச் சுட்டிக் காட்டி, பல்வேறு குழுக்கள் நாட்டில் இருந்தாலும், அங்கு நிலவும் கலந்துரையாடல் அந்நாட்டை இதுவரை அமைதியிலும் முன்னேற்றத்திலும் வளர்த்திருப்பது மற்ற நாடுகளுக்கு ஓர் எடுத்துகாட்டு என்று கூறினார்.
தான் ஆப்ரிக்க ஆயர்கள் வழியாக மக்களுக்கு வழங்கியுள்ள Africae Munus என்ற அப்போஸ்தலிக்க ஏட்டை அனைவரும் கவனமாகப் பயின்று, அங்கு கூறப்பட்டுள்ள கருத்துக்களை நடைமுறைப் படுத்துவதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று திருத்தந்தை தன் இறுதி உரையில் மக்களைக் கேட்டுக் கொண்டார்.
ஆப்ரிக்கக் கண்டத்தையும், பெனின் நாட்டையும் அன்னை மரியாவின் பாதுகாவலில் ஒப்படைப்பதாகக் கூறியபின், திருத்தந்தை விமானம் ஏறி உரோம் நகர் நோக்கிப் புறப்பட்டார்.
2. மீன்பிடித் தொழிலாளர் நாளுக்கென திருப்பீட அவை வெளிட்டுள்ள செய்தி
நவ.21,2011. மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் கவலைக்குரிய கடல் பயணத்தில் அவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்காகவும், நங்கூரமாகவும் திருச்சபை செயல்பட்டு வருகிறது என்று திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.
மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் வாழ்வை மக்களுக்கு நினைவுபடுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 21ம் தேதி உலக மீன்பிடித் தொழிலாளர் நாள் கடைபிடிக்கப்படுகின்றது.
இத்திங்களன்று கடைபிடிக்கப்படும் இந்நாளையொட்டி, குடியேற்றதாரர்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள திருப்பீட மேய்ப்புப்பணி அவையின் தலைவர் பேராயர் Antonio Maria Vegliò வெளியிட்டச் செய்தியில், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருப்போர் வழியாக உலகம் பெறும் நன்மைகளைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
குடும்பத்தையும், வீடுகளையும் விட்டு நாட்கள், அல்லது மாதக்கணக்கில் கடலிலேயே வாழும் இந்தத் தொழிலாளிகள் இயற்கையின் கருணையால் வாழும் நிலைக்கு ஆளாகியுள்ளனர் என்று பேராயர் Vegliò தன் செய்தியில் கூறியுள்ளார்.
இந்த நாளில் கடல் சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ள பல உலக அமைப்புக்களும் நிறுவனங்களும் இத்தொழிலாளிகளின் குறைகளை நிறைவு செய்து, அவர்கள் வாழ்வுக்கு பாதுகாப்பையும், அவர்கள் குடும்பங்களுக்கு நல்லதொரு எதிர்காலத்தையும் உருவாக்கும் கடமை உள்ளதென்று பேராயர் Vegliò தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.
3. மீனவர் வாழ்க்கை மேம்பட நடவடிக்கை எடுக்க கோரிக்கை
நவ 21, 2011. மீனவர் வாழ்வு மேம்பட, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அனைத்துலக மீனவர் தினத்தையொட்டி அகில இந்திய மீனவர் சங்கம் கோரியுள்ளது.
தமிழகத்தின் 1,076 கிலோ மீட்டர் நீள கடற்கரையில் உள்ள 596 மீனவ கிராமங்களில் வாழும் 30 லட்சம் மீன்பிடித் தொழிலாளர்களின் சார்பாகப் பேசிய அகில இந்திய மீனவர் சங்க செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் ரவி, மீனவர்களை வாழ வைக்கும் கடற்கரை மாசுபட்டுள்ளதால், கடற்கரையில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரம் வரை மீன்கள் கிடைக்காத நிலையில், மீன்களைத் தேடி அலையும் போது, கடல் எல்லையைத் தாண்டி பாதிக்கப்படுகின்றனர் என்றார்.
இந்த நிலையை மாற்ற, அரசு நடவடிக்கை எடுத்து, மீனவர்களின் வாழ்க்கைக்கான ஆதாரத்தை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார் நாஞ்சில் ரவி.
4. கோவா கோவில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகப்படுத்த காவல்துறை கட்டளை
நவ.21,2011. கிறிஸ்மஸ் புத்தாண்டு ஆகிய முக்கிய விழாக்களின்போது மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் கோவில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதிகப்படுத்தப்பட வேண்டுமென்று கோவா மாநில காவல்துறை கோவில் நிர்வாகங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
ஒவ்வொரு கோவிலிலும் கண்காணிப்பு காமராக்கள் பொருத்தப்படவேண்டும் என்றும், 24 மணி நேரமும் கோவிலைச் சுற்றி கண்காணிப்பில் ஈடுபட காவலாளிகளை நியமிக்க வேண்டும் என்றும் காவல்துறை உயர் அதிகாரி Arvind Gawas கேட்டுக் கொண்டுள்ளார்.
டிசம்பர் 3ம் தேதி கோவாவின் மிகப் புகழ்பெற்ற புனித சேவியர் பசிலிக்கா பேராலய விழாவில் பங்கேற்க உலகெங்கும் இருந்து பயணிகள் வந்து சேருவர். இதைத் தொடர்ந்து கோவாவில் உள்ள 180க்கும் அதிகமான கிறிஸ்தவ கோவில்களில் கிறிஸ்மஸ், புத்தாண்டு என பல விழாக்களில் கலந்து கொள்ள மக்கள் கூட்டம் நிறையும் என்பதால், இக்கோவில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக்கப்பட வேண்டும் என்று காவல் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
புனித சேவியரின் உடல் வைக்கப்பட்டிருக்கும் Bom Jesus பசிலிக்காப் பேராலயமும், அதன் சுற்றுப்பகுதிகளும் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொள்ளும் இந்திய அரசின் மேற்பார்வையில் உள்ளது என்று கூறிய பசிலிக்கா அதிபர் அருள்தந்தை சாவியோ பரெட்டோ (Savio Barretto) இந்த அரசுத்துறை பாதுகாப்பு நடவடிக்கைகளை தனியார் நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைத்துள்ளதால், பாதுகாப்பில் பல குறைபாடுகள் எழுந்துள்ளன என்று சுட்டிக் காட்டினார்.
கோவில் பாதுகாப்பை காவல் துறையினர் மேற்கொள்வதே பொருத்தம் என்றும், பாதுகாப்பு நடவைக்கைகளைக் கோவில் நிர்வாகமே மேற்கொள்ள வேண்டும் என்று காவல் துறை கூறுவது ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்து அல்ல என்றும் கோவா பேராயர் இல்லத்தின் சார்பில் பேசிய அருள்தந்தை Francis Caldeira கூறினார்.
5. பெத்லகேம் நகரை உலகப் பாரம்பரியச் சொத்தாக அறிவிக்க பிரான்சிஸ்கன் துறவியர் தயக்கம்
நவ.21,2011. பாலஸ்தீனிய நகர் பெத்லகேமை உலகப் பாரம்பரியச் சொத்தாக அறிவிக்க முயலும் யுனெஸ்கோ அமைப்பின் திட்டம் குறித்து தங்கள் தயக்கத்தை வெளியிட்டுள்ளனர் அப்பகுதியின் பொறுப்பாளர்களாகச் செயல்படும் பிரான்சிஸ்கன் துறவுச் சபையினர்.
திருத்தலங்கள் என்பவை சுற்றுலாத் தலங்கள் அல்ல, மாறாக செபம் மற்றும் வழிபாட்டின் இடங்கள் என்று கூறும் பிரான்சிஸ்கன் துறவியர், இத்திருத்தலங்கள் உலகப் பாரம்பரியச் சொத்துக்களாக அங்கீகரிக்கப்படுவதன் மூலம், தேசிய உடமைகளாக அறிவிக்கப்படும் அபாயம் உள்ளது என்றனர்.
யுனெஸ்கோ நிறுவனத்தால் ஒரு திருத்தலம் உலகப் பாரம்பரியச் சொத்தாக அறிவிக்கப்படும்போது, அது அரசு நிர்வாகத்தின் கீழே கொணரப்படும் எனவும் கூறினர் பிரான்சிஸ்கன் துறவியர்.
இத்தகைய ஒரு சூழலில், அரசு நிர்வாகத்தின் கீழ் திருத்தலங்கள், அரசியல் ஆதயாயங்களுக்காக பயன்படுத்தப்படக்கூடிய ஆபத்தையும் சுட்டிக்காட்டியுள்ளனர் அவர்கள்.
இதற்கிடையே, பெத்லகேம் நகரை, உலகப் பாரம்பரியச் சொத்தாக அறிவிக்கக் கேட்கும் விண்ணப்பத்தை கடந்த ஆண்டே யுனெஸ்கோவிடம் சமர்ப்பித்துள்ளதாகக் கூறினார் பாலஸ்தீனிய சுற்றுலாத்துறை அமைச்சர் Khouloud Daibes Abu Dayyeh.
6. இலங்கையின் நீதித்துறை சீரமைப்பிற்கு மதத்தலைவர்கள் அழைப்பு
நவ 21, 2011. ஏற்கனவே 30 மாத தண்டனையை அனுபவித்து வரும் இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு தற்போது முன்றாண்டு சிறைத்தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது அரசியல் நோக்குடையது எனக் குற்றஞ்சாட்டும் அந்நாட்டு மதத்தலைவர்கள், நீதித்துறையில் சீர்திருத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
உள்நாட்டுப்போர் காலத்தின் உச்சக்கட்டத்தில் சரணடைய முன்வந்த தமிழ்ப் போராளிகளை சுட்டுக் கொல்லும்படி இராணுவ அமைச்சர் கொத்தபயா இராஜபக்சே கட்டளையிட்டார் என சரத் பொன்சேகா ஒரு பேட்டியில் குறிப்பிட்டதைத் தொடர்ந்து, பொய்யான தகவலை வழங்கியதாக அவர் அரசால் குற்றஞ்சாட்டப்பட்டடார்.
தற்போது பொன்சேகாவிற்கு வழங்கப்பட்டுள்ள தண்டனைத் தீர்ப்பு குறித்து கருத்து வெளியிட்ட புத்தமத குரு Maduluwawe Sobitha Thero, நீதித்துறை தனிச்சுதந்திரத்துடன் செயல்பட மக்கள் அழைப்பு விடுக்க வேண்டும் என விண்ணப்பித்தார்.
இலங்கையின் நீதித்துறை சீரமைப்பிற்கு மதத்தலைவர்களுடன் இணைந்து பத்த்கிரிகையாளைர்களும் வழக்குரைஞர்களும் தங்கள் விண்ணப்பத்தை முன்வைத்துள்ளனர்.
7. சாலை பாதுகாப்பு நாள் - ஐ.நா. பொதுச்செயலர் செய்தி
நவ 21, 2011. கடந்த காலங்களில் உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் உயிரிழந்தவர்களைக் கௌரவிக்கும் விதமாக, சாலை பாதுகாப்பு மேம்பாட்டுத் திட்டங்களை அதிகரிப்பதற்கான அர்ப்பணம் வெளியிடப்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன்.
சாலை விபத்துக்களில் உயிரிழந்தோரை நினைவுகூரும் உலக தினம் இஞ்ஞாயிறு சிறப்பிக்கப்பட்டதையொட்டி செய்தி வெளியிட்ட ஐ.நா. பொதுச்செயலர், வல்லுனர்கள் மற்றும் தனியார்களின் அர்ப்பணத்துடன் அதற்குத் தேவையான அனைத்து வளங்களையும் பயன்படுத்தி,விபத்துத் தடுப்புகளைச் செயல்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
சாலை விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றும்போது தங்கள் உயிரை இழந்த நல்ல உள்ளங்களையும் இந்நாளில் நினைவு கூர்வோம் எனவும் அச்செய்தியில் விண்ணப்பித்துள்ளார் பான் கி மூன்.
ஒவ்வொரு நாளும் உலகில் சாலை விபத்துக்களில் ஏறத்தாழ 3500 பேர் உயிரிழப்பதாகவும், பல ஆயிரக்கணக்கானோர் காயமடைவதாகவும் கவலையை வெளியிட்ட ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன், இவ்வாறு பாதிக்கப்படுவோருள் பெரும்பான்மையினோர் 15 முதல் 29 வயதிற்கு உட்பட்டோர் எனவும் தெரிவித்தார். ஒவ்வோர் ஆண்டும் சாலை விபத்துக்களில் 13 இலட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர்.
2020ம் ஆண்டில் உலகம் முழுவதும் வாகனங்களின் எண்ணிக்கை, தற்போதய எண்ணிக்கையை விட இருமடங்காகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment