1. இந்தியத் திருப்பீடத்தூதர் : இந்தியத் திருஅவை, கிறிஸ்துவில் கொண்டுள்ள நம்பிக்கையையும் விசுவாசத்தையும் ஊன்றி வளரச்செய்ய வேண்டும்
2. வேளாங்கண்ணியில் இந்திய இலத்தீன்ரீதி ஆயர்கள் பேரவை கூட்டம்
3. வெனெசுவேலா கர்தினால் : சிறைகள், மக்கள் இறப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள கூட்டுறவு அங்காடிகள் அல்ல
4. இந்திய காரித்தாஸ் : ஒருவருடைய உயிரைப் பறிப்பதற்கு எந்த மனிதருக்கும் உரிமை கிடையாது
5. அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வில் எதிர்நோக்கப்படும் சவால்கள் குறித்து துறவிகள் கலந்துரையாடல்
6. கொலம்பியாவில் 15 நாள்களுக்குள் இரண்டு குருக்கள் கொலை
7. உலகின் மிகப்பெரிய அன்னைமரியா திருவுருவம்
8. சுற்றுச்சூழல் மாசுக்கேட்டைக் குறைக்கும் வழிகள் குறித்து ஆசிய நாடுகள் கலந்துரையாடல்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. இந்தியத் திருப்பீடத்தூதர் : இந்தியத் திருஅவை, கிறிஸ்துவில் கொண்டுள்ள நம்பிக்கையையும் விசுவாசத்தையும் ஊன்றி வளரச்செய்ய வேண்டும்
பிப்.05,2013. அகில இந்திய கத்தோலிக்க இலத்தீன்ரீதி ஆயர்கள் பேரவையின் 25வது பொதுக்கூட்டம் தமிழகத்தின் வேளாங்கண்ணியில் இச்செவ்வாயன்று தொடங்கியுள்ளது.
இதன் தொடக்க நிகழ்வாக, இந்தியாவுக்கான திருப்பீடத்தூதர் பேராயர் சால்வத்தோரே பென்னாக்கியோ, வேளாங்கண்ணி ஆரோக்ய திருத்தலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆயர்களுடன் கூட்டுத் திருப்பலி நிகழ்த்தினார்.
இத்திருப்பலியில் மறையுரையில் பேராயர் பென்னாக்கியோ, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் பொன்விழாக் காலத்தில் நம்பிக்கை ஆண்டைச் சிறப்பித்துவரும் நாம், கிறிஸ்துவில் நாம் கொண்டுள்ள நம்பிக்கையையும் விசுவாசத்தையும் ஊன்றி வளரச்செய்ய வேண்டுமென்று வலியுறுத்தினார்
இத்திருப்பலிக்குப் பின்னர் காலை 10 மணியளவில் பொதுக்கூட்டம் ஆரம்பமானது. இதில் CCBI பேரவையின் தலைவர் ராஞ்சி பேராயர் கர்தினால் டெலஸ்போர் டோப்போ தொடக்கவுரையாற்றினார். மேலும், இக்கூட்டத்தின் முக்கிய கருத்துக்கள் குறித்து உரையாற்றிய மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ், இந்தியாவில் திருஅவையின் மேய்ப்புப்பணி குறித்து ஆயர்கள் சிந்திக்குமாறு கேட்டுக்கொண்டார்.
பிப்ரவரி 5, இச்செவ்வாயன்று தொடங்கியுள்ள இக்கூட்டம், பிப்ரவரி 10, இஞ்ஞாயிறன்று நிறைவடையும்.
“இந்தியாவில் திருஅவையின் மேய்ப்புப்பணித் திட்டம்” என்ற தலைப்பில் நடைபெறும் இக்கூட்டத்தில், ஆயர்கள், வல்லுனர்கள் மற்றும் ஆயர் பணிக்குழுக்களின் செயலர்கள் என 160 பேர் கலந்து கொள்கின்றனர்.
வேளாங்கண்ணி திருத்தலம், மைனர் பசிலிக்காவாக உயர்த்தப்பட்டதன் வெள்ளிவிழா சிறப்பிக்கப்படும் இஞ்ஞாயிறன்று, அங்குப் புதிதாகக் கட்டப்பட்டுள்ள விடியற்கால விண்மீன் ஆலயத்தை திருநிலைப்படுத்துவார் கர்தினால் பெர்னான்டோ ஃபிலோனி.
(செய்தித் தொடர்பாளர் - புனித பேதுரு குருத்துவக் கல்லூரி பேராசிரியர் அருள்பணி பெரியண்ணா)
2. வேளாங்கண்ணியில் இந்திய இலத்தீன்ரீதி ஆயர்கள் பேரவை கூட்டம்
பிப்.05,2013. “இந்தியாவில் திருஅவையின் மேய்ப்புப்பணித் திட்டம்” என்ற தலைப்பில் வேளாங்கண்ணியில் தொடங்கியுள்ள இந்திய இலத்தீன்ரீதி ஆயர்களின் பொதுக்கூட்டம் குறித்து நிருபர்களுக்குப் பேட்டியளித்த கர்தினால் டோப்போ, ஆயர்கள் இக்கூட்டத்தில் வகுக்கும் மேய்ப்புப்பணித் திட்டம், இன்று நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்குப் பதில் சொல்வதாய் இருக்கும் என்று கூறினார்.
இந்நிருபர் கூட்டத்தில் பேசிய கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ், 1962ம்
ஆண்டில் மைனர் பசிலிக்காவாக உயர்த்தப்பட்டதன் வெள்ளிவிழாவைச்
சிறப்பிக்கும் வேளாங்கண்ணி ஆரோக்ய அன்னை திருத்தலத்தில் இந்த ஆயர்கள்
கூட்டம் நடைபெறுவது உண்மையிலேயே இறைவனது செயல் என்று கூறினார்.
இந்த நமது காலத்தில் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் பொன்விழா திருஅவைக்கு மிக முக்கியமான நிகழ்வாக அமைந்துள்ளது என்றும் கூறிய கர்தினால் கிரேசியஸ், இந்த நம்பிக்கை ஆண்டில், விசுவாசத்தின் தாயின் பாதங்களில் ஆயர்கள் கூடியிருப்பது இந்தியத் திருஅவைக்கு வரலாற்று சிறப்புமிக்க நேரம் என்றும் தெரிவித்தார்.
CCBI
என்ற இந்திய இலத்தீன்ரீதி ஆயர்கள் பேரவை உருவாக்கப்பட்டதன் 25ம்ஆண்டு
வெள்ளி விழா வருகிற சனிக்கிழமை சிறப்பிக்கப்படவிருக்கின்றது. அதில்
திருத்தந்தையின் பிரதிநிதியாக, திருப்பீட விசுவாசப்பரப்புப் பேராயத் தலைவர் கர்தினால் பெர்னான்டோ ஃபிலோனி கலந்து கொள்வார்.
3. வெனெசுவேலா கர்தினால் : சிறைகள், மக்கள் இறப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள கூட்டுறவு அங்காடிகள் அல்ல
பிப்.05,2013. சிறைகள், மக்கள்
இறப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள கூட்டுறவு அங்காடிகள் என்ற எண்ணத்தில்
வெனெசுவேலா நாட்டு மக்கள் பழக்கப்பட்டுவிடக் கூடாது என்று தலைநகர் கரகாஸ்
கர்தினால் Jorge Urosa Savino கேட்டுக் கொண்டார்.
வெனெசுவேலா
நாட்டின் உரிபானாவிலுள்ள சிறையில் கடந்த சனவரி 30ம் தேதி ஏற்பட்ட
கலவரத்தில் குறைந்தது 58 பேர் இறந்தனர் மற்றும் 90க்கும் அதிகமானோர்
காயமடைந்தனர். இதையொட்டி உள்ளூர் பத்திரிகைக்குப் பேட்டியளித்த கர்தினால் Urosa Savino, சிறைகள் சீர்திருத்த மையங்கள், மறுவாழ்வு மையங்கள் மற்றும் கைதிகளை சமூகத்தில் மீண்டும் ஒன்றிணைக்கும் மையங்கள் என்று கூறினார்.
சிறையிலுள்ள மக்களின் வாழ்வுக்கும் பாதுகாப்புக்கும் அந்நாட்டின் அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று குறிப்பிட்ட கர்தினால் Urosa Savino, சிறையை மூடுவது இவ்விவகாரத்துக்குத் தீர்வாக அமையாது, மாறாக, அதிகமான சிறைகளை அமைத்து விசாரணைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று கூறினார்.
சிறையிலுள்ளவர்களில் சிலர் குற்றவாளிகளாய் இருந்தாலும், கைதிகளின் மனித உரிமைகளுக்கு ஆதரவளித்து, அவர்கள் சிறைகளில் வாழும் நிலை மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் Caracas கர்தினால் Jorge Urosa Savino.
4. இந்திய காரித்தாஸ் : ஒருவருடைய உயிரைப் பறிப்பதற்கு எந்த மனிதருக்கும் உரிமை கிடையாது
பிப்.05,2013. மரண தண்டனை உட்பட, பாலியல் வன்கொடுமை குறித்த புதிய சட்டம் இந்தியாவில் கொண்டுவரப்பட்டுள்ளவேளை, ஒரு மனிதருடைய உயிரைப் பறிப்பதற்கு, வேறு
எந்த மனிதருக்கும் உரிமை கிடையாது என்று கூறியுள்ளார் புதுடெல்லி
உயர்மறைமாவட்ட அரசுசாரா அமைப்பின் இயக்குனர் அருள்திரு சவரி ராஜ்.
இந்திய அரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி பிறப்பித்துள்ள சட்டத்தின்படி, அதிகபட்ச, குறைந்தபட்சத் தண்டனைகளோடு, பாலியல் வன்கொடுமையின்போது அப்பெண் இறந்தால் மரண தண்டனையும் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த, இந்திய காரித்தாஸோடு தொடர்புடைய புதுடெல்லி உயர்மறைமாவட்ட அமைப்பின் இயக்குனர் அருள்திரு சவரிராஜ், ஆயுள்தண்டனை சரியானது என்றும் கூறியுள்ளார்.
அதேநேரம்
பெண்களுக்கு எதிராக இடம்பெறும் பலவிதமான வன்கொடுமைகளை நிறுத்துவதற்கு
மரணதண்டனை தீர்வாக அமையாது என்று கூறியுள்ளார் அருள்திரு சவரிராஜ்.
5. அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வில் எதிர்நோக்கப்படும் சவால்கள் குறித்து துறவிகள் கலந்துரையாடல்
பிப்.05,2013.
துறவு சபைகள் தங்களின் தனித்துவத்தில் வளருவதற்கு முயற்சிகளை எடுக்குமாறு
இந்தியத் துறவு சபைகளின் ஏறக்குறைய 600 உறுப்பினர்கள் கேட்டுக்
கொள்ளப்பட்டனர்.
இஞ்ஞாயிறன்று மங்களூருவில் அனைத்துலக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு தினத்தைச் சிறப்பித்த ஏறக்குறைய 600 இருபால் துறவியர், படைப்பாற்றல்திறனுடன் தங்களது துறவற அழைத்தலுக்குப் பிரமாணிக்கமாக இருக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டனர்.
மற்றவரோடு குழுவாக வாழ்வதும், சுதந்திரம், சகோதரத்துவம், நீதி ஆகியவை நிறைந்த குழுக்களைக் கட்டி எழுப்புவதுமே துறவு வாழ்வு என்றுரைத்த அருள்சகோதரி ஜெசி மெர்லின், துறவிகள் தங்களது இறைவாக்குரைக்கும் மற்றும் தியானயோகக் கூறுகளைக் கண்டுணருமாறு கேட்டுக்கொண்டார்.
6. கொலம்பியாவில் 15 நாள்களுக்குள் இரண்டு குருக்கள் கொலை
பிப்.05,2013. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் 15 நாள்களுக்குள் இரண்டு கத்தோலிக்க குருக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
Villavicencio உயர்மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்திரு Luis Alfredo Suárez Salazar என்பவர், கடந்த சனிக்கிழமையன்று Ocañaவின் Torcoroma அன்னைமரி
ஆலயத்தில் திருப்பலியை நிறைவேற்றிவிட்டு நடந்து வந்து கொண்டிருந்தபோது
இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மனிதர்கள் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
உள்ளூர் வானொலிச் செய்தியின்படி, கொலையாளிகள் வேறு ஒருவரைக் குறிவைத்துக் கொல்ல முயற்சித்தபோது இக்குரு கொலை செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிகிறது.
கடந்த சனவரி 16ம் தேதி கொலம்பியாவின் Bugaவில் 55 வயதான அருள்திரு José Francisco Velez Echeverri என்பவர் கொலை செய்யப்பட்டார்.
2012ம் ஆண்டில் அமெரிக்காவில் 6 குருக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் பிரேசிலிலும், இருவர் மெக்சிகோவிலும், ஒருவர் கொலம்பியாவிலும், இன்னுமொருவர் குவாத்தமாலாவிலும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
7. உலகின் மிகப்பெரிய அன்னைமரியா திருவுருவம்
பிப்.05,2013. தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் உலகின் மிகப்பெரிய அன்னைமரியா திருவுருவம் அமைக்கப்பட்டுள்ளது.
பொலிவியா நாட்டின் Oruro நகரில் Socavon அன்னைமரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட திருவுருவம், அந்நாட்டினர் மரபுகளை உறுதிப்படுத்தும் விசுவாசத்தின் செயலாக இருக்கின்றது என்று, இத்திருவுருவத்தை அமைத்த கலைஞர் ரொலாண்டோ ரோக்கா கூறினார்.
La Pazவுக்குத்
தெற்கிலுள்ள 12 ஆயிரம் அடி உயரமான மலையில் 149 அடி உயரமான அன்னைமரியா
திருவுருவம் அமைக்கப்பட்டுள்ளது. 12 இலட்சம் டாலர் செலவில்
எழுப்பப்பட்டுள்ள இந்த அன்னைமரியா திருவுருவம், பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவிலுள்ள கிறிஸ்து மீட்பர் திருவுருவத்தைவிட 22 அடி உயரமானதாகும்.
Socavon அன்னைமரியா, சுரங்கத்தொழிலாளர்களுக்குப் பாதுகாவலியாகப் போற்றப்படுகிறார்.
8. சுற்றுச்சூழல் மாசுக்கேட்டைக் குறைக்கும் வழிகள் குறித்து ஆசிய நாடுகள் கலந்துரையாடல்
பிப்.05,2013.
ஆசிய-பசிபிக் பகுதியில் சுற்றுச்சூழல் மாசுக்கேட்டைக் குறைக்கும் வழிகள்
குறித்த செயல்திட்ட நடவடிக்கைகளை 19 ஆசிய நாடுகளின் பிரதிநிதிகள்
விவாதித்து வருகின்றனர்.
UNEP என்ற ஐ.நா.வின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கூட்டத்தில், SLCP எனப்படும் சுற்றுச்சூழலில் சிறிது காலமே தங்கும் கருப்பு கார்பன், மீத்தேன், HFC என்ற ஓசோன் வாயு மண்டலத்தைத் தாக்கும் ஹைட்ரஜன், ப்ளோரின், கார்பன் ஆகியவைகளின் கலவையான hydrofluorocarbons போன்றவற்றைக் குறைப்பது குறித்து பேசப்பட்டு வருகிறது.
சுற்றுச்சூழலில்
சிறிது காலமே தங்கி பாதிப்பு ஏற்படுத்தும் இவற்றை 2030ம் ஆண்டுக்குள்
குறைக்கும் ஐ.நா.வின் திட்டம் நிறைவேறினால் 20 இலட்சம் குழந்தை
இறப்புக்களையும், அறுவடையில் ஆண்டுதோறும் ஏற்படும் 3 கோடி டன்களுக்கு மேற்பட்ட இழப்பையும் தடுக்க முடியும் என்று, UNEP அமைப்பு 2011ம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
அத்துடன், உலகம் வெப்பமாகி வருவதையும் 2050ம் ஆண்டுக்குள் குறைக்க முடியும் என்றும் UNEP அமைப்பு கூறுகிறது.
No comments:
Post a Comment