Friday, 14 December 2012

Catholic News in Tamil - 14/12/12


1. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் அனைத்துலக அமைதி நாள் செய்தி

2. திருத்தந்தை - கிறிஸ்து என்ற ஒளியை நினைவுறுத்தும் ஒரு வழிதான் நாம் விளக்குகளால் அலங்காரம் செய்யும் கிறிஸ்மஸ் மரம்

3. வியட்நாமில் நடைபெறும் பத்தாவது ஆசிய ஆயர்கள் பொதுக்கூட்டம்

4. கத்தோலிக்கத் திருஅவை மனித உரிமைகளுக்கு முக்கிய இடம் அளித்து வந்துள்ளது - கர்தினால் பீட்டர் டர்க்சன்

5. பிலிப்பின்ஸ் பாராளுமன்றம் நாட்டு மக்களுக்கு பெரும் தீமை இழைத்துள்ளது - கர்தினால் Tagle

6. எருசலேமில் உள்ள ஒரு பழம்பெரும் நினைவுச் சின்னத்தில் சேதங்கள்

7. இந்தியர்களுக்கு ஆயுள் அதிகம்; ஆரோக்கியம் குறைவு:ஆய்வில் தகவல்

8. Ivory Coast நாட்டின் திருப்பீடத் தூதர் பேராயர் Ambrose Madthaவின் உடல் சனிக்கிழமை நல்லடக்கம்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் அனைத்துலக அமைதி நாள் செய்தி

டிச.14,2012. புலரும் ஒவ்வொரு புதிய ஆண்டும் நமக்கு நல்லவைகள் நடைபெறும் என்ற நம்பிக்கையோடு பிறக்கிறது, இதன் அடிப்படையில் மனித குலம் அனைத்தும் மகிழ்விலும் அமைதியிலும் வளமான வாழ்வில் இவ்வாண்டு அடியெடுத்து வைக்கவேண்டுமென்று அனைத்து மனித குலத்தின் தந்தையை வேண்டுகிறேன் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தன் அனைத்துலக அமைதி நாள் செய்தியில் கூறியுள்ளார்.
ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி முதல் தேதி அனைத்துலக அமைதி நாள் என்று கத்தோலிக்கத் திருஅவையால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளுக்கென திருத்தந்தை, "அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்" என்ற தலைப்புடன் அளித்துள்ள சிறப்புச் செய்தி இவ்வேள்ளியன்று வத்திக்கானில் வெளியிடப்பட்டது.
நன்மைகளும், பிரச்சனைகளும் நிறைந்த உலகமயமாக்கல் என்ற வழிமுறையில் வாழும் நாம், போர்களையும், போராட்டங்களையும் சந்திக்கிறோம் என்றும், அனைத்து மனிதருக்கும், முழு மனித நலனை உருவாக்கும் புதிய வழிகளைக் கண்டுபிடிக்க நமக்குச் சவால்கள் விடுக்கப்படுகின்றன என்றும் தன் செய்தியை ஆரம்பித்துள்ளார் திருத்தந்தை.
கடவுளின் கொடையும், மனித முயற்சியும் இணைவது அமைதியில், வாழ்வை அதன் அனைத்து அம்சங்களிலும் காப்பவர்களே உண்மையில் அமைதி ஏற்படுத்துவோர், பொருளாதார முன்னேற்றம் புதிய வழிகளில் சிந்திக்கப்படுவதன் வழியாக உருவாகும் அமைதி, அமைதி கலாச்சாரத்தை வலியுறுத்தும் புதிய கல்வியும், இக்கல்வியைப் புகட்டுவதில் குடும்பங்களின் பங்கும், என்று பல அழகிய அம்சங்களைத் தாங்கி வரும் இச்செய்தியைத் திருத்தந்தை ஏழு பகுதிகளாக வழங்கியுள்ளார்.
அமைதியை ஏற்படுத்துவோர் கடைபிடிக்க வேண்டிய வழிகள் என்ற தன் இறுதிப் பகுதியில், அமைதியின் தூதர்கள் முக்கியமாக இறைவனுடன் தொடர்பு கொண்டுள்ள ஆன்மீகத்தில் பக்குவப்பட்டவர்களாகவும் விளங்கவேண்டும் என்று திருத்தந்தை வலியுறுத்தியுள்ளார்.
திருத்தந்தை 6ம் பவுல் அவர்களால் 1968ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி உலக அமைதி நாள் உருவாக்கப்பட்டது. இப்பாரம்பரியத்தைத் தொடர்ந்து, 2013ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி 46வது உலக அமைதி நாள் கத்தோலிக்கத் திருஅவையால் கொண்டாடப்படுகிறது.


2. திருத்தந்தை - கிறிஸ்து என்ற ஒளியை நினைவுறுத்தும் ஒரு வழிதான் நாம் விளக்குகளால் அலங்காரம் செய்யும் கிறிஸ்மஸ் மரம்

டிச.14,2012. பல நூற்றாண்டுகள் கடந்தபின்னும், கிறிஸ்து என்ற ஒளியின் சக்தி குறையாமல் ஒளிர்கிறது என்பதை நினைவுறுத்தும் ஒரு வழிதான் நாம் ஒளி விளக்குகளால் அலங்காரம் செய்யும் கிறிஸ்மஸ் மரம் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள இவ்வேளையில், அங்கு வைக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் மரம் இவ்வெள்ளி மாலை ஒளியேற்றப்பட்டது.
இத்தாலியின் Pescopennataro ஊரைச் சேர்ந்தவர்கள் இந்தக் கிறிஸ்மஸ் மரத்தை வத்திக்கானுக்குப் பரிசாக அளித்துள்ளனர். இவ்வூரைச் சார்ந்த பிரதிநிதிகளை இவ்வேள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, அம்மக்களின் கிறிஸ்தவப் பாரம்பரியத்தைப் புகழ்ந்து பேசினார்.
நம்பிக்கை ஆண்டில் வழங்கப்பட்டுள்ள இந்த கிறிஸ்மஸ் மரம், புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்திற்கு வருகைதரும் அனைத்து மக்களையும் நம்பிக்கையில் வேரூன்றி வளர அழைப்பதாக என்று கூறியத் திருத்தந்தை, கூடியிருந்த அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.


3. வியட்நாமில் நடைபெறும் பத்தாவது ஆசிய ஆயர்கள் பொதுக்கூட்டம்

டிச.14,2012. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கூடிய இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் முயற்சியால் உருவான ஆசிய ஆயர்கள் பேரவை தன் 40ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது என்று ஆசிய ஆயர்கள் பேரவையின் தலைவர் கர்தினால் Oswald Gracias கூறினார்.
டிசம்பர் 11, இச்செவ்வாய் முதல் வருகிற ஞாயிறு முடிய வியட்நாமின் இரு நகரங்களில் நடைபெறும் பத்தாவது ஆசிய ஆயர்கள் பொதுக்கூட்டத்தில் ஆறு கர்தினால்கள், 113 பேராயர்கள், ஆயர்கள் உட்பட 200க்கும் அதிகமானோர் கலந்து கொள்கின்றனர்.
வியட்நாமில் இத்தகைய ஒரு கூட்டம் நிகழ்வது தற்போது அந்நாட்டில் உருவாகிவரும் மாற்றங்களைக் குறிக்கிறது என்று வியட்நாமின் திருப்பீடத் தூதர் பேராயர் Leopoldo Girelli கூறினார்.
ஆசியாவின் 350 கோடி மக்களில், 2.9 விழுக்காடு என்ற அளவில் மிகக் குறைந்த சிறுபான்மையினராய் இருக்கும் கத்தோலிக்க மக்கள் தொகை, பல்வேறு சவால்களையும் சந்திக்கின்றது என்று பேராயர் Girelli சுட்டிக் காட்டினார்.
இச்செவ்வாயன்று நிகழ்ந்த துவக்க அமர்வில் வியட்நாம் அரசின் உள்நாட்டுத் துறையின் இணை அமைச்சர் Pham Dung, நாட்டின் முன்னேற்றத்திற்கும், மாற்றங்களுக்கும் வழிவகுத்துள்ள வியட்நாம் தலத்திருஅவையைப் பாராட்டிப் பேசினார்.
வியட்நாமில் கத்தோலிக்க விசுவாசத்தை விதைத்த அயல்நாட்டு மறைபரப்புப் பணியாளர்களுக்கு சிறப்பான நன்றியைக் கூறினார் வியட்நாம் ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் Peter Nguyen Van Nhon.


4. கத்தோலிக்கத் திருஅவை மனித உரிமைகளுக்கு முக்கிய இடம் அளித்து வந்துள்ளது - கர்தினால் பீட்டர் டர்க்சன்

டிச.14,2012. கத்தோலிக்கத் திருஅவை பல நூற்றாண்டுகளாக மனித உரிமைகளுக்கு முக்கிய இடம் அளித்து வந்துள்ளது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
போலந்து நாட்டின் Cracow நகரில் உள்ள Jagiellonian பல்கலைக்கழகத்தில் அண்மையில் முடிவுற்ற மூன்றாம் அனைத்துலக மனித உரிமை கல்விக் கருத்தரங்கில் உரையாற்றிய அமைதி மற்றும் நீதி திருப்பீட அவையின் கர்தினால் பீட்டர் டர்க்சன் இவ்வாறு கூறினார்.
மனித உரிமைகள் குறித்த அனைத்துலக அறிவிப்பு 1948ம் ஆண்டு உருவானது முதல், திருஅவையும், உலகச் சமுதாயமும் மனித உரிமைகள் குறித்து கொண்டுள்ள கண்ணோட்டத்தில் ஒப்புமைகளைக் காணலாம் என்று கர்தினால் டர்க்சன் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
ஒவ்வொரு மனிதருக்கும் உள்ள அடிப்படை மாண்பின் அடிப்படையில் மனித உரிமைகள் நிலைநிறுத்தப்படவேண்டும் என்று உலகச் சமுதாயம் எண்ணிவருவதை திருத்தந்தையர்களும் திருஅவைத் தலைவர்களும் வலியுறுத்தி வந்துள்ளனர் என்று கர்தினால் எடுத்துரைத்தார்.
1963ம் ஆண்டு திருத்தந்தை அருளாளர் 23ம் ஜான் எழுதிய உலகில் அமைதி(Pacem in terris) என்ற ஏட்டில் கூறப்பட்டுள்ள கருத்துக்களைத் தன் உரையில் மேற்கோள்களாகக் கூறிய கர்தினால் டர்க்சன், தான் வளர்ந்து வந்த ஆப்ரிக்காவில் நிகழ்ந்துள்ள மாற்றங்களையும் நினைவுகூர்ந்தார்.
மனித உரிமைகள் என்ற விரிந்த ஒரு குடைக்குக் கீழ், மத உரிமையும் முக்கியமாக இடம்பெறவேண்டும் என்று தலைவர் டர்க்சன் வலியுறுத்திக் கூறினார்.


5. பிலிப்பின்ஸ் பாராளுமன்றம் நாட்டு மக்களுக்கு பெரும் தீமை இழைத்துள்ளது - கர்தினால் Tagle

டிச.14,2012. குழந்தைப் பேறு நலம் குறித்த சட்டத்திற்கு, பிலிப்பின்ஸ் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்திருப்பது நாட்டு மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள பெரும் தீமை என்று மணிலா பேராயர் கர்தினால் Luis Antonio Tagle கூறினார்.
14 ஆண்டுகளாக பாராளு மன்றத்தில் விவாதிக்கப்பட்டு வந்த இந்தச் சட்டம், இவ்வியாழன் அதிகாலையில் 113க்கு 104 என்ற மிகக் குறைந்த அளவு ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது என்று கத்தோலிக்க ஊடகங்கள் கூறுகின்றன.
பெரும்பான்மை மக்களின் கருத்துக்களை அலட்சியம் செய்து உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சட்டத்தை எதிர்க்கும் திருஅவையின் போராட்டம் இன்னும் தொடரும் என்று கர்தினால் Tagle தெரிவித்தார்.
பேராயரின் கருத்தையொத்த எண்ணங்களை ஆயர்கள் Jesse Mercado, Ruperto Santos, Pedro Arigo உட்பட பல ஆயர்கள் வெளியிட்டுள்ளனர்.
இதற்கிடையே, இப்போராட்டத்தைத் தொடரும் ஒரு வழியாகவும், மனசாட்சியுள்ள அரசியல் தலைவர்களை உருவாக்கும் ஒரு வழியாகவும், பொது நிலை கத்தோலிக்கர்கள் இணைந்து, அரசியல் கட்சியொன்றை உருவாக்கி, 2013ம் ஆண்டில் நடைபெறவிருக்கும் தேர்தல்களில் பங்கெடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.


6. எருசலேமில் உள்ள ஒரு பழம்பெரும் நினைவுச் சின்னத்தில் சேதங்கள்

டிச.14,2012. பாரம்பரியக் கருவூலமான தங்கள் துறவுமடம் ஏழாவது முறையாக இழிவு படுத்தப்பட்டுள்ளது, ஏழாவது முறையல்ல, எழுபத்து ஏழு முறை இழிவு படுத்தப்பட்டாலும் இதனைச் செய்தவர்களை நாங்கள் மன்னிக்கிறோம் என்று எருசலேம் துறவு மடத்தின் தலைவர் அருள்தந்தை Claudius கூறினார்.
எருசலேமில் உள்ள புனித சிலுவை கிரேக்க ஆர்த்தடாக்ஸ் துறவுமடம் 11ம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு பழம்பெரும் நினைவுச் சின்னம். இத்துறவு மடத்தின் சுவர்களில் அடையாளம் தெரியாத ஒரு கும்பல் வெறுப்பு கலந்த வார்த்தைகளை இச்செவ்வாய் நள்ளிரவில் எழுதி வைத்துள்ளன.
இதனைச் செய்தவர்கள் யூத மதத்தின் அடிப்படைவாதக் குழு என்று கருதப்படுகிறது. பிற மதங்களுக்கு மரியாதை தருவது யூதர்களின் பழக்கம் என்று  கூறிய இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu, இச்செயல்களைச் செய்தவர்களைச் சட்டம் தண்டிக்கும் என்று கூறினார்.
இத்துறவு மடத்தில் மட்டுமின்றி, மற்றோர் ஆர்மீனிய கல்லறையிலும் இக்கும்பல் சேதங்களை உருவாக்கியுள்ளது என்று கூறப்படுகிறது.


7. இந்தியர்களுக்கு ஆயுள் அதிகம்; ஆரோக்கியம் குறைவு:ஆய்வில் தகவல்

டிச.14,2012. இந்தியர்கள் நீண்ட நாள் வாழ்கிறார்கள் என்றும், வய‌தான காலத்தில், மோசமான உடல்நிலையால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
சராசரியாக இந்தியாவில் ஆண்கள் 63 வயது‌ வரையிலும், பெண்கள் 67.5 வயது வர‌ையிலும் வாழ்வதாகவும், இதில் ஆண்கள் 54.6 வயது வரை உடல்நிலை நல்ல ஆரோக்யமாக இருப்பதாகவும் பெண்கள் 57.1 வயது வரை ஆரோக்யமாக வாழ்வதாகவும், ‌ பிரிட்டனை சேர்ந்த பிரபல மருத்துவ இதழான லான்செட் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
1970ல் இருந்து 2010ம் ஆண்டு வரை பிறந்தவர்களின் ஆயுள் காலத்தை கணக்கிடுகையில் சராசரியாக ஆண்களின் ஆயுள் 15 வருடங்களும், பெண்களின் ஆயுள் 18 வருடங்களும் அதிகரித்துள்ளது எனத் தெரிய வந்துள்ளது.
காற்று மாசுபாடு காரணமாக இந்தியர்களில் பெரும்பாலானோருக்கு உயர் இரத்தஅழுத்த நோய் ஏற்படுவதாகவும், இந்தியர்களின் உணவில் உள்ள குறைந்த பழங்கள், இரத்தத்தில் அதிகப்படியான குளூக்கோஸ் அளவு, மதுபான பயன்பாடு, இரும்புச்சத்து குறைபாடு, தாய்ப்பாலுக்கு மாற்றான உணவு, குறைந்த உடற்பயிற்சி, புகையிலை பயன்படுத்துதல், புகைபிடித்தல் உள்ளிட்டவைகளே அவர்களின் குறைந்த ஆரோக்கியத்திற்கு காரணம் எனவும் கூறப்பட்டுள்ளது.


8. Ivory Coast நாட்டின் திருப்பீடத் தூதர் பேராயர் Ambrose Madthaவின் உடல் சனிக்கிழமை நல்லடக்கம்

டிச.14,2012. மறைந்த பேராயர் Ambrose Madthaவின் வாழ்வு நம்பிக்கை ஆண்டில் நம்மை இன்னும் ஆழமான கிறிஸ்துவ விசுவாசத்திற்கு அழைப்பு விடுக்கிறது என்று மங்களூரு பேராயர் Aloysius Paul D'Souza கூறினார்.
டிசம்பர் 8, கடந்த சனிக்கிழமையன்று ஒரு வாகன விபத்தில் இறந்த Ivory Coast நாட்டின் திருப்பீடத் தூதர் பேராயர் Madthaவின் உடல் இவ்வெள்ளியன்று காலை இந்தியாவை அடைந்தது. பேராயரின் அடக்கச் சடங்குகள் இச்சனிக்கிழமை அவர் பிறந்த இடமான Belthangadyல் உள்ள புனித மீட்பர் ஆலயத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Ivory Coast நாட்டின் அரசுத் தலைவர் தனிப்பட்ட வகையில் ஏற்பாடு செய்திருந்த விமானத்தில், பேராயர் Madthaவின் உடல் கொண்டுவரப்பட்டது என்றும், அந்நாட்டின் ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் Alexis Touabli Youlo,  Abidjan உயர்மறைமாவட்டப் பேராயர் Jean-Pierre Kutwa, வெளியுறவுத் துறை அமைச்சர் Charles Koffi Diby ஆகியோர் பேராயர் Madthaவின் அடக்கச் சடங்கில் கலந்து கொள்வர் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.
1955ம் ஆண்டு கர்நாடகாவின் Belthangady என்ற ஊரில் பிறந்த Ambrose Madtha, உரோம் நகரில், திருஅவைச் சட்டங்களில் முனைவர் பட்டம் பெற்று, 2008ம் ஆண்டு Ivory Coast நாட்டின் திருப்பீடத் தூதராகப் பொறுப்பேற்றார். 2010ம் ஆண்டு அந்நாட்டில் உருவான போராட்டச் சூழலின்போது, நாட்டில் அமைதியைக் கொணர்வதற்கு பேராயர் பெரிதும் உழைத்தார்.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...