Tuesday, 11 December 2012

Catholic News in Tamil - 11/12/12


1.  புனித பூமியிலிருந்து கிறிஸ்தவர்கள் வெளியேறுவது நிறுத்தப்படவேண்டுமானால் நீடித்த   நிலையான அமைதி தேவை

2.  லெபனன் மக்கள் பேச்சுவார்த்தைகளை நோக்கி உழைக்க ஆயர்கள் அழைப்பு

3.  சித்ரவதைகளால் கந்தமால் கிறிஸ்தவர்களின் விசுவாசத்தை அழிக்க முடியாது, பேராயர் ஜான் பாரா

4.  புயலால் பாதிக்கப்பட்ட பிலிப்பீன்ஸ் மக்களிடையே அவசரகாலப்பணிகளைத் துவக்கியுள்ளது காரித்தாஸ் அமைப்பு.

5.  தென்னிலங்கை தேவாலயம் ஒன்றின் மீது "பிக்குகள் தலைமையில் வந்த கும்பல் தாக்குதல்"

6.  சர்வதேச சமூகம் இலங்கையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும்!- கானடா நாட்டு  பாராளுமன்ற உறுப்பினர்.

7.  காங்கோ குடியரசில் மோதல்களால் 600 கல்விக்கூடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன‌

------------------------------------------------------------------------------------------------------

1.  புனித பூமியிலிருந்து கிறிஸ்தவர்கள் வெளியேறுவது நிறுத்தப்படவேண்டுமானால் நீடித்த நிலையான அமைதி தேவை

டிச.11,2012. இஸ்ராயேல் மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளிலிருந்து கிறிஸ்தவர்கள் வெளியேறுவது நிறுத்தப்படவேண்டுமானால் நீடித்த நிலையான அமைதி தேவைப்படுகின்றது என்றார் எருசலேமின் துணை ஆயர் வில்லியம் ஷொமாலி.
அமைதி என்பது இடம்பெறவில்லையெனில் பாதுகாப்பற்ற சூழல்கள் உணரப்பட்டு பொருளாதாரமும் பாதிக்கப்படுகின்றது என்ற ஆயர் ஷொமாலி, பாலஸ்தீனம் மற்றும் இஸ்ராயேலில் வாழும் கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் விசுவாசத்தின் சாட்சிகளாக இருக்க அழைப்புப் பெற்றுள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.
புனித பூமியில் கிறிஸ்தவர்களாகப் பிறப்பது என்பது சாதாரண நிகழ்வு அல்ல, மாறாக அது ஓர் அழைப்பு எனவும் எடுத்துரைத்தார் ஆயர்.
பாலஸ்தீனாவில் வாழும் கிறிஸ்தவர்கள் வேலைவாய்ப்புகள் இன்றியும், சுதந்திரமாக இயங்குவதற்கான கட்டுப்பாடுகளுடனும் வாழ்வது குறித்த கவலையையும் எருசலேமின் துணைஆயர் ஷொமாலி வெளியிட்டார்.

2.  லெபனன் மக்கள் பேச்சுவார்த்தைகளை நோக்கி உழைக்க ஆயர்கள் அழைப்பு

டிச.11,2012. லெபனன் நாட்டு மக்கள் அனைவரும் வன்முறைகளையும் போரையும் கைவிட்டு, பேச்சுவார்த்தைகளை வளர்க்க உழைக்கவேண்டும் என அழைப்புவிடுத்துள்ளனர் அந்நாட்டு கத்தோலிக்கத் தலைவர்கள்.
சிரியாவில் இடம்பெறும் உள்நாட்டுப்போர்களால் லெபனனின் அமைதி, பாதுகாப்பு, ஒன்றிப்பு ஆகியவைகளுடன் பொருளாதாரம், வியாபாரம், சுற்றுலா ஆகியவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக உரைக்கும் லெபனன் ஆயர்கள், நீதிக்காகவும் மாண்புக்காகவும் விடுதலைக்காகவும் போராடும் மக்களோடு ஒருமைப்பாட்டுணர்வை தெரிவிக்கும் அதேவேளை, வன்முறைகளையும் போரையும் கைவிடவேண்டும் என லெபனன் மக்களிடம் விண்ணப்பித்துள்ளனர்.
பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், குடும்பங்கள் என அனைத்து இடங்களிலும் கலந்துரையாடல் கலாச்சாரம் ஆழப்படுத்தப்படவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் மக்களுக்கு முன்வைத்துள்ளனர் லெபனன் ஆயர்கள்.

3.  சித்ரவதைகளால் கந்தமால் கிறிஸ்தவர்களின் விசுவாசத்தை அழிக்க முடியாது, பேராயர் ஜான் பாரா

டிச.11,2012. எவ்வித சித்ரவதைகளாலும் கந்தமால் கிறிஸ்தவர்களின் விசுவாசத்தை அழிக்க முடியாது, ஏனெனில் கந்தமால் என்பது மறைசாட்சிகளின் பூமி என்றார் கட்டாக் புபனேஸ்வர் பேராயர் ஜான் பாரா.
கந்தமால் அனுபவத்தைக் கொண்டுள்ள ஒவ்வொருவருக்கும் 'நம்பிக்கையின் ஆண்டு' என்பது ஒரு மிகப்பெரும் கொடை என்ற பேராயர், உடமைகள் சேதமாக்கப்பட்டு உறவினர்கள் கொல்லப்பட்டுள்ள போதிலும் மக்களின் விசுவாசம் எவ்விதத்திலும் குறையவில்லை என்றார்.
கந்தமால் பகுதி கிறிஸ்தவர்கள் இன்னும் தொடர்ந்து துன்பங்களையும், பாகுபாட்டு நிலைகளையும், ஏழ்மையையும், ஒதுக்கப்படல்களையும் அனுபவித்து வருகின்றபோதிலும், எந்த சித்ரவதைகளாலும் அவர்களின் விசுவாசத்தைத் தடைசெய்ய முடியாது என்பதே அவர்கள் உலகுக்கு வழங்கும் செய்தியாக உள்ளது என மேலும் கூறினார் பேராயர் பாரா.

4.  புயலால் பாதிக்கப்பட்ட பிலிப்பீன்ஸ் மக்களிடையே அவசரகாலப்பணிகளைத் துவக்கியுள்ளது காரித்தாஸ் அமைப்பு

டிச.11,2012. நூற்றுக்கணக்கான மக்களின் உயிரிழப்புக்குக் காரணமான புயலால் பாதிக்கப்பட்ட பிலிபீன்ஸ் மக்களிடையே அவசரகாலப்பணிகளைத் துவக்கியுள்ளது கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு.
ஒரு இலட்சத்து அறுபது ஆயிரம் பேர் தங்கள் சொந்த இடங்களை விட்டு குடிபெயரவேண்டியுள்ள நிலையில், அவர்களுக்கான படுக்கை விரிப்புகள், குடிநீர், தற்காலிகத் தங்குமிடங்கள் ஆகியவைகளை வழங்கி உதவிப்பணிகளை ஆற்றி வருகின்றது காரித்தாஸ் பிறரன்பு அமைப்பு.
கோவில்களிலும், திருஅவை நடத்தும் கல்விக்கூடங்களிலும் இம்மக்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ள பிலிப்பீன்ஸ் காரித்தாஸ் அமைப்பு, அரிசி போன்ற அன்றாட உணவுப்பொருட்களை வழங்குகின்றபோதிலும் இம்மக்களுக்கான நீண்டகாலத் தேவைகளை நிறைவேற்ற திட்டமிட்டு செயலாற்றி வருவதாகவும் தெரிவித்தது.

5.  தென்னிலங்கை தேவாலயம் ஒன்றின் மீது "பிக்குகள் தலைமையில் வந்த கும்பல் தாக்குதல்"

டிச.11,2012. இலங்கையின் தெற்கே அம்பாந்தோட்டை மாவட்டம் வீரகட்டிய பகுதியில் ஜீவனாலோக சபை என்ற கிறிஸ்தவப் பிரிவைச் சேர்ந்த தேவாலயம் ஒன்று புத்த பிக்குகள் தலைமையில் வந்த கூட்டம் ஒன்றினால் தாக்கப்பட்டுள்ளது.
ஞாயிறு காலையில் தேவாலயத்தில் வழிபாடு நடந்துகொண்டிருந்த நேரத்தில் புத்த பிக்குகள் சுமார் 80 பேர் தலைமையில் வந்த ஆயிரம் பேர் அடங்கிய கும்பல் ஒன்று தேவாலயத்துக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து அங்கிருந்த வாகனங்களுக்குத் தீவைத்தும், தேவாலயத்துக்குள் இருந்த கண்ணாடிகளையும் பிற பொருட்களையும் உடைத்தும் சேதப்படுத்தினர் என்று தேவாலய பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.
தாக்குதலின்போது தேவாலயத்தில் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தவர்கள் சிலர் காயமடைந்துள்ளதாகவும், பலர் உளரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரூபாய் 6 இலட்சம் அளவில் பொருட்சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
11 வருடங்களாக இத்தேவாலயம் வீரகட்டிய பகுதியில் இருந்துவருகிறது என்றாலும் புத்த பிக்குகளின் அனுமதி பெற்றே அது செயலாற்ற முடியும் என்பதுபோன்ற அழுத்தங்களை அது சமீபகாலமாக எதிர்கொண்டு வருகிறது என்று அந்த தேவாலயத்தின் பிரதிநிதி மேலும் குறிப்பிட்டார்.

6.  சர்வதேச சமூகம் இலங்கையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும்!- கானடா நாட்டு  பாராளுமன்ற உறுப்பினர்

டிச.11,2012. அனைத்துலக சமூகம் இலங்கையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என கானடா நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் வுட்வேர்த் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மனித உரிமைகள் சீர்கெட்டுச் செல்வது மிகுந்த கவலையளிப்பதாக கனடாவின் ஆளும் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் பேட்ரிக் பிரவுன் விடுத்த அறிக்கையைத் தொடர்ந்து, பிறிதொரு ஆளும் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் வுட்வேர்த்தும் தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார்.
தமிழர் தேசத்திற்கான போராட்டத்தில் இறந்தவர்களை அமைதியாக நினைவு கூர்ந்த மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மாணவர்கள் காயப்படுத்தப்பட்டது மற்றும் தடுத்து வைக்கப்பட்டது குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளியிடுவதாக வுட்வேர்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

7.  காங்கோ குடியரசில் மோதல்களால் 600 கல்விக்கூடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன‌

டிச.11,2012. காங்கோ குடியரசில் இடம்பெறும் மோதல்களால் இவ்வாண்டில் 600 கல்விக்கூடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் குழந்தைகள் நிதி அமைப்பு அறிவித்துள்ளது.
உள்நாட்டுச் சண்டைகளால் காங்கோ நாட்டில் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் முதல் இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் மாணவர்கள் கல்விக்கூடங்களுக்குச் செல்லமுடியா நிலை இருப்பதாகவும் யுனிசெஃப் அமைப்பு கவலையை வெளியிட்டுள்ளது.
உள்நாட்டு மோதலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், சில பள்ளிகளில் அடைக்கலம் தேடியுள்ளதாலும், சில பள்ளிகளில் இராணுவத் தளவாடங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாலும், நாட்டில் மாணவர்களின் கல்வி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. அமைப்பு கூறுகின்றது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...