Friday, 7 December 2012

சோழ வம்ச சொக்கத்தங்கம் மாமன்னர் ராஜ ராஜனை பற்றி சில துளிகள்!!!...

சோழ வம்ச சொக்கத்தங்கம் மாமன்னர் ராஜ ராஜனை பற்றி சில துளிகள்!!!...

தஞ்சையிலுள்ள பெரிய கோவிலில் இக்கல்வெட்டு இருக்கிறது. கோவில் கட்டியாகி விட்டது. நிர்வகிக்க யார
்? யார்?. அவருக்கென்று வீடு ஒதுக்கி, வீட்டு இலக்கம் சொல்லி, பெயர் எழுதி, கல்வெட்டாய் வெட்டியிருக்கிறது. இடது சிறகு மூன்றாம் வீடு, நக்கன் பரமிக்கு பங்கு ஒன்றும், இடது சிறகு நான்காம் வீட்டு எச்சுமண்டைக்கு பங்கு ஒன்றும் என்று பல நூறு பெயர்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. வீணை வாசிக்கும் ஆதிச்சன் இறந்தமையால், அவன் மகனுக்குப் பங்கு அரையும் என்று சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது. கோவில் பணியில் உள்ள எல்லா தொழிலாளர்கள் பெயரும், தொழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. இதோ தொடங்குகின்றது அந்த வரிகள், இது ஆயிரம் வருடங்களுக்கு முன் மாமன்னர் ராஜ ராஜனிடமிருந்து உதிர்ந்த வார்த்தைகள், இன்று அதை நாம் உச்சரிக்கும் போது, ஏதோ ஒரு கர்வம் நம்மை தொற்றிக் கொள்கிறது, அந்த வரிகள் இது தான்

" நாம் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்,கொடுப்பார் கொடுத்தனவும்..இந்த கல்லிலே வெட்டியருளுக "என்று திருவாய்மொழிஞ்சருளி ".

என்று தொடங்குகின்றது அந்த கல்வெட்டு, இவை வெறும் எழுத்துகளா? அல்ல, ஒரு மாமனிதனின் பறந்து விரிந்த எண்ணம், தான் எழுப்பும் அந்த கோயிலுக்காக யார் எந்தவிதமான காணிக்கைகள் கொடுத்தாலும் (அது சிறியதோ - பெரியதோ) கல்வெட்டில் பொறிக்கப்பட்டு விட வேண்டும்!. அவருடைய பதவி ஒரு பொருட்டல்ல, அவர் அரசனுக்கு அணுக்கமானவரா, இல்லையா என்பது பொருட்டல்ல, சோழ வம்சத்தை சேர்ந்தவரா, இல்லையா என்பதும் ஒரு பொருட்டல்ல, இறைவனுக்கு காணிக்கை கொடுத்தவர் என்கிற முறையில், அவர் பெயரும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுவிடவேண்டும் - அவ்வளவு தான்!. தான் மட்டும் இக்கோவிலைக் கட்டியதாய் ஒரு சிறு நினைப்பு கூட அந்த மாமனிதனுக்கு இல்லை. கோவில் கட்டிய இந்த மனிதர்கள் எப்படி இருப்பர்? எண்ணிப் பார்த்தேன், கொஞ்சம் தெரிய வருகிறது. அடடா, ராஜராஜா, நீ பிறந்த மண்ணில் பிறக்க, என்ன தவம் புரிந்தேன் !!

நமது இந்திய வரலாற்றில் தலைகீழாக புரட்டிப் பார்த்தாலும் இப்படி தன்னைச் சேர்ந்தவர்கள், தான் முனைந்த காரியத்திற்கு உறுதுணையாய் நின்றவர்கள் என்று அனைவரையும் " கொடுப்பார் கொடுத்தனவும் " என்ற ஒரே பதத்தில் ஒருசேர உயர்த்திப் பிடித்த இன்னொரு மன்னனை காண்பது மிக அரிது !.

காலகாலங்களை எல்லாம் தாண்டி இந்த ஒரு கோயில் அழியாமல் நின்றதற்கு காரணம் இராஜராஜன் என்கிற மாமன்னனின் உயர்ந்த இந்த எண்ணம் தான் என்று உணர்ச்சிபொங்கக் குறிப்பிடுவார் எழுத்துச் சித்தர் " பாலகுமாரன் "

No comments:

Post a Comment