Tuesday, 3 July 2012

Catholic News in Tamil - 30/06/12

1.   புதிய பேராயர்கள் மற்றும் அவர்களின் உற்றார் உறவினர்களுக்குத் திருத்தந்தை
வாழ்த்து
2. அருள்தந்தை லொம்பார்தி : Pallium ஒன்றிப்பின் அடையாளம்
3. 13வது உலக ஆயர்கள் மாமன்றத் தலைவர் பிரதிநிதிகள் நியமனம்
4. வருகிற அக்டோபர் 4ம் தேதி லொரேத்தோ செல்கிறார் திருத்தந்தை
5. Itangar மறைமாவட்டத்தில் பல புதுமைகள் இடம்பெற்று வருகின்றன : ஆயர் Kattrukudiyl
6. அர்ஜென்டினா அரசியல் தலைவர்களிடம் நேர்மை தேவை, பேராயர் வலியுறுத்தல்
7. உலகில் அழியும் ஆபத்திலுள்ள உலகப் பாரம்பரிய நினைவுச்சின்னப் பட்டியலில், பெத்லகேம் இயேசுவின் பிறப்பு பசிலிக்கா : யுனெஸ்கோ
8. பத்மாவதி நதியில் 300 கோடி டாலர் செலவில் பாலம் கட்டுவதற்கு மலேசியா தயார்
-------------------------------------------------------------------------------------------

1.புதிய பேராயர்கள் மற்றும் அவர்களின் உற்றார் உறவினர்களுக்குத் திருத்தந்தை வாழ்த்து

ஜூன்30,.2012. முக்கிய திருவழிபாடுகளின்போது பேராயர்கள் அணியும் Pallium என்ற கழுத்துப்பட்டை, கிறிஸ்துவோடும் பேதுருவின் வழித்தோன்றலோடும் அவர்கள் கொண்டிருக்கும் ஒன்றிப்பின் அடையாளமாக இருக்கின்றது, இத்தகைய ஒன்றிப்பானது ஒவ்வோர் உயர்மறைமாவட்ட விசுவாசிகளின் இதயங்களிலும் நிறைந்திருக்க வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
புனிதர்கள் பேதுரு பவுல் பெருவிழாவாகிய இவ்வெள்ளியன்று Pallium பெற்ற உலகின் 43 புதிய பேராயர்கள் மற்றும் அவர்களின் உற்றார் உறவினரை இச்சனிக்கிழமை வத்திக்கானில் சந்தித்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த போது இவ்வாறு கூறினார்  திருத்தந்தை.
பலமொழிகளில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த திருத்தந்தை, இப்புதிய பேராயர்களுக்காகத் தான் செபிப்பதாகவும் உறுதி கூறினார்.
உலகின் பல பகுதிகளிலிருந்து வந்திருக்கும் இப்பேராயர்கள் திருஅவையின் உலகளாவிய தன்மையை வெளிப்படுத்துபவர்களாக  இருக்கிறார்கள் என்றும், உலகின் அனைத்துக் கண்டங்களில் பல்வேறு மொழிகளில் கிறிஸ்துவை மக்கள் அறியச் செய்து அவரின் நற்செய்தியை அறிவிக்க அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் திருத்தந்தை கூறினார்.
இந்தியாவின் குவஹாத்தி பேராயர் John Moolachira, கொல்கத்தா பேராயர் Thomas D’Souza, பங்களாதேஷின் டாக்கா பேராயர் Patrick D’Rozario உட்பட 9 ஆசியர்கள்  இவ்வெள்ளியன்று திருத்தந்தையிடமிருந்து Pallium என்ற கழுத்துப் பட்டைகளைப் பெற்றனர்.
கடந்த ஓராண்டில் உலகின் பல பகுதிகளில் நியமனம் பெற்ற 46 பேராயர்களில் எஞ்சியுள்ள மூன்று பேராயர்கள் அவரவர் இடங்களில் இந்தக் கழுத்துப்பட்டையைப் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2. அருள்தந்தை லொம்பார்தி : Pallium ஒன்றிப்பின் அடையாளம்

ஜூன்30,2012. புதிய பேராயர்கள் திருத்தந்தையிடமிருந்து பெற்றுள்ள Pallium என்ற கழுத்துப்பட்டை, திருத்தூதர்களின் தலைவரைப் பின்செல்பவரோடு கொண்டிருக்கும் ஒன்றிப்பின் அடையாளமாக இருக்கின்றது என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
வத்திக்கான் தொலைக்காட்சியின் வார நிகழ்ச்சியில் இவ்வாறு பேசிய அருள்தந்தை லொம்பார்தி, திருத்தூதர்கள் பேதுரு, அந்திரேயா, பவுல் போன்று உரோமையிலிருந்து இப்பூமியின் இறுதி எல்லைவரை இப்புதிய பேராயர்கள் நற்செய்தி அறிவிக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
இவ்வெள்ளியன்று வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில் நடைபெற்ற இப்பெருவிழாத் திருப்பலி, கிறிஸ்தவ ஒன்றிப்பை வெளிப்படுத்துவதாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இத்திருப்பலியில், இலண்டன் Westminster ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபையின் பாடகர் குழு, வத்திக்கான் பாடகர் குழுவுடன் இணைந்து திருப்பலிப் பாடல்களைப் பாடியது. மேலும், Constantinople ஆர்த்தடாக்ஸ் சபை முதுபெரும் தலைவரின் பிரதிநிதிகளும் இத்திருப்பலியில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வுகள், கிறிஸ்தவ சபைகள், கிறிஸ்தவ ஒன்றிப்பில் வளர்வதற்கான ஆவலை வெளிப்படுத்துபவைகளாக இருந்தன என்று அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.

3. 13வது உலக ஆயர்கள் மாமன்றத் தலைவர் பிரதிநிதிகள் நியமனம்

ஜூன்30,2012. வருகிற அக்டோபரில் தொடங்கும் 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் தலைவர் பிரதிநிதிகளை இச்சனிக்கிழமை நியமித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
வருகிற அக்டோபர் 7 முதல் 28 வரை வத்திக்கானில் நடைபெறவிருக்கும் 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் தலைவர் பிரதிநிதிகளாக, Hong Kong ஆயர் கர்தினால் John Tong Hon, மெக்சிகோவின் Guadalajara பேராயர் கர்தினால் Francisco Robles Ortega, காங்கோ குடியரசின் Kinshasa பேராயர் கர்தினால் Laurent Monsengwo Pasinya ஆகியோரை நியமித்துள்ளார் திருத்தந்தை.
இந்த உலக ஆயர்கள் மாமன்றம், "கிறிஸ்தவ விசுவாசத்தைப் பரப்புவதற்கானப் புதிய நற்செய்திப்பணி" என்ற தலைப்பில் நடைபெறும். இதில் உலகெங்கிலுமிருந்து சுமார் 300 ஆயர்கள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

4. வருகிற அக்டோபர் 4ம் தேதி லொரேத்தோ செல்கிறார் திருத்தந்தை
ஜூன்30,2012. 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் பணிகளையும் விசுவாச ஆண்டையும் அன்னைமரியாவிடம் அர்ப்பணிக்கும் நோக்கத்தில், வருகிற அக்டோபர் 4ம் தேதி திருத்தந்தை லொரேத்தோ செல்வார் என்று, அந்நகர்ப் பேராயர் Giovanni Tonucci, இவ்வெள்ளி மாலை லொரேத்தோ பசிலிக்காவில் அறிவித்தார்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் ஆரம்பத்தையொட்டி அருளாளர் திருத்தந்தை 23ம் ஜான், லொரேத்தோவுக்கும் அசிசிக்கும் இரயிலில் திருப்பயணம் மேற்கொண்டதன் 50ம் ஆண்டின் நிறைவாக, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வருகிற அக்டோபர் 4ம் தேதியன்று லொரேத்தோ செல்லவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயினும், இம்முறை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கெலிகாப்டரில் செல்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கியதன் 50ம் ஆண்டின் நிறைவாக, வருகிற அக்டோபர் 11ம் தேதி ஆரம்பமாகும் விசுவாச ஆண்டு, 2013ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று நிறைவடையும். 
இத்தாலியிலுள்ள லொரேத்தோவில் புகழ்பெற்ற புனித இல்ல அன்னைமரியாத் திருத்தலம் அமைந்துள்ளது. 

5. Itangar மறைமாவட்டத்தில் பல புதுமைகள் இடம்பெற்று வருகின்றன : ஆயர் Kattrukudiyl

ஜூன்30,2012. இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள Itangar மறைமாவட்டத்தில் குணப்படுத்தும் பல புதுமைகள் இடம்பெற்றுவரும் அதேவேளை, அம்மறைமாவட்டத்தில் கத்தோலிக்கரின் எண்ணிக்கையும் 40 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று அம்மறைமாவட்ட ஆயர் John Kattrukudiyl கூறினார்.
ஜெர்மனியின் Aid to the Church in Need பிறரன்பு நிறுவனத்தில் நடந்த கூட்டத்தின்போது இவ்வாறு கூறிய ஆயர் Kattrukudiyl, வார்த்தையால் விவரிக்கப்படமுடியாத பல புதுமைகள் செபத்தினால் நடைபெறுகின்றன என்று பகிர்ந்து கொண்டார்.
இந்தியாவின் ஒதுக்குப்புறத்திலுள்ள இந்த மறைமாவட்டத்தில் கத்தோலிக்கரின் எண்ணிக்கை, கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக 40 விழுக்காடு அதிகரித்துள்ளதற்கு இந்த அற்புதங்கள் முக்கிய காரணம் என்று ஆயர் Kattrukudiyl கூறினார்.
திருஅவையின் மனிதாபிமானப் பணிகளைப் பாராட்டுவதற்கு  அரசியல்வாதிகள் ஒருபோதும் தவறியதில்லை என்பதையும் ஆயர் சுட்டிக்காட்டினார்.

6. அர்ஜென்டினா அரசியல் தலைவர்களிடம் நேர்மை தேவை, பேராயர் வலியுறுத்தல்

ஜூன்30,2012. ஒரு நாட்டில் அதிகாரத்தில் இருப்பவர்கள் பொய் சொல்லிக் கொண்டிருக்கும்போது அந்நாட்டிலுள்ள சமுதாயம் மிகக் கடுமையாய்ப் பாதிக்கப்படும் என்று அர்ஜென்டினா பேராயர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
நல்லதோர் உலகை அமைத்தல் என்ற தனது திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய அர்ஜென்டினாவின் La Plata பேராயர் Hector Aguer, பரஸ்பர நம்பிக்கையும் உண்மையும் இன்றி மக்கள் இணைந்து வாழ முடியாது என்ற புனித Thomas Aquinasன் கூற்றையும் சுட்டிக் காட்டினார்.
பொய்ப் பெருமளவில் சொல்லப்படும்பொழுது, அதிலும் குறிப்பாக, பெரும் பொறுப்பிலுள்ளவர்கள் கூறும்பொழுது அது சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் பெரும் கேட்டை விளைவிக்கும் என்றும் பேராயர் எச்சரித்தார்.
உண்மை, மறுதலிக்கப்படமுடியாத விழுமியம் என்றும், பொய் பேசுதல், கிறிஸ்தவ அறநெறிப்படி தன்னிலே பாவமாகும் என்றும் பேராயர் குறிப்பிட்டார்.

7. உலகில் அழியும் ஆபத்திலுள்ள உலகப் பாரம்பரிய நினைவுச்சின்னப் பட்டியலில், பெத்லகேம் இயேசுவின் பிறப்பு பசிலிக்கா : யுனெஸ்கோ

ஜூன்30,2012. உலகில் அழியும் ஆபத்திலுள்ள உலகப் பாரம்பரிய நினைவுச்சின்னப் பட்டியலில், பெத்லகேம் இயேசுவின் பிறப்பு பசிலிக்காவையும் இணைத்துள்ளது ஐ.நா.வின் யுனெஸ்கோ நிறுவனம்.
இரஷ்யாவின் St. Petersburg ல் நடைபெற்றுவரும் கூட்டத்தில் இவ்வெள்ளியன்று இவ்வாறு அறிவிக்கப்பட்டது.
பாலஸ்தீனாவின் West Bank ஐ இஸ்ரேல் ஆக்ரமிக்கத் தொடங்கிய 1967ம் ஆண்டிலிருந்து இந்த பெத்லகேம் பசிலிக்காவில் எந்தவிதப் பழுதுபார்க்கும் வேலை நடைபெறவில்லை என்று பாலஸ்தீனம், யுனெஸ்கோவிடம் கடந்த அக்டோபரில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
339ம் ஆண்டில் முதலில் கட்டி முடிக்கப்பட்ட இந்த பசிலிக்கா, பின்னர் 6ம் நூற்றாண்டில் ஏற்பட்ட தீ விபத்தால் அதன் கட்டிடம் மீண்டும் சீரமைக்கப்பட்டது.
மேலும், Israel, Palau, Indonesia, Morocco, China, Senegal , ஐவரி கோஸ்ட் ஆகிய நாடுகளிலும் அழியும் ஆபத்திலுள்ள உலகப் பாரம்பரிய நினைவுச்சின்னங்களைப் பட்டியலிட்டு உலக சமுதாயத்துக்கு அறிவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது யுனெஸ்கோ.
இஸ்ரேலின் கார்மேல் மலையில் 54 ஹெக்டேர் நிலப்பரப்பைக் கொண்டுள்ள Nahal Me’arot/Wadi el-Mughara குகைகளில் மனிதரின் பரிணாம வளர்ச்சியை வெளிப்படுத்தும் 5 இலட்சம் ஆண்டுகள் பழமையுடைய கலாச்சாரப் பதிவுகள் குறித்தும் யுனெஸ்கோ ஆய்வு செய்து வருகிறது. 

8. பத்மாவதி நதியில் 300 கோடி டாலர் செலவில் பாலம் கட்டுவதற்கு மலேசியா தயார்

ஜூன்30,2012. பங்களாதேஷில் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள இலட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கு உதவியாக, பத்மாவதி நதியில் 300 கோடி டாலர் செலவில் பாலம் கட்டுவதற்கு நிதி உதவி செய்வதற்குத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது மலேசியா.
6.15 கிலோ மீட்டர் நீளமுடைய பாலம் கட்டுவது குறித்த பரிந்துரையை மலேசியப் பிரதமரின் சிறப்புப் பிரதிநிதி எஸ்.சாமிவேலு, பங்களாதேஷ் ஊடகத்துறை அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளார்.
இந்தப் பாலத்தை பங்களாதேஷிடம் ஒப்படைப்பதற்கு முன்னர் 37 ஆண்டுகளுக்கு மலேசியா பயன்படுத்தும் என்றும் அந்தப் பரிந்துரையில் குறிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பத்மாவதி நதியில் பாலம் கட்டும் திட்டம் பங்களாதேஷின் சுமார் 3 கோடி ஏழை மக்கள் முன்னேறுவதற்கு உதவும் என்று உலக வங்கி கூறியுள்ளது.

No comments:

Post a Comment

வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை

  வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை வத்திக்கான் அப்போஸ்தலிக்க ஆவணக் காப்பகத்தையும், அப்போஸ்தலிக்க நூல...