Tuesday, 10 July 2012

Catholic News in Tamil - 09/07/12


1. “Ad Gentes”  மையத்தில் திருத்தந்தை

2. திருத்தந்தை : திறந்த இதயம் இறைவன் புதுமைகளைச் செய்வதற்கு அனுமதியளிக்கின்றது

3. பேராயர் Kaigama : நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதக் குழுவின் செயல்கள் இசுலாமுக்குப் புறம்பானவை

4. மங்கோலியா கத்தோலிக்கத் திருஅவை 20 ஆண்டுகளைச் சிறப்பிக்கின்றது

5. இலங்கையின் வடபகுதிக்கு உதவிகள் குறைகின்றன: ஐநா நிறுவனங்கள் கவலை

6. இலங்கையில் கடந்த 6 மாதங்களில் 650 பேர் கடத்தப்பட்டுள்ளனர்! சண்டே ரைம்ஸ்

7. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் மேற்கு வங்க மாநிலம் முதலிடம்

8. மியான்மார் எதிர்க்கட்சித் தலைவர் சு கி நாடாளுமன்றத்தில் உரை
-------------------------------------------------------------------------------------------

1. “Ad Gentes”  மையத்தில் திருத்தந்தை

ஜூலை09,2012. மறைஅறிவிப்புப்பணி குறித்த இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத் தீர்மானத் தொகுப்புத் தயாரிப்பு ஆணையம், 1965ம் ஆண்டு மார்ச் 29 முதல் ஏப்ரல் 3 வரை கூட்டம் நடத்திய “Ad Gentes” என்ற மையத்திற்கு இத்திங்களன்று சென்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இத்தாலியின் நேமி என்ற ஊரில் இறைவார்த்தை துறவு சபையினர் நடத்தும் இம்மையத்திற்கு காஸ்தெல் கந்தோல்போவிலிருந்து காரில் சென்ற திருத்தந்தை, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் மறைஅறிவிப்புப்பணி குறித்த தீர்மானத் தொகுப்புக்கென 47 ஆண்டுகளுக்கு முன்னர் தான் பணி செய்த இடத்தை மீண்டும் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார். 
இம்மையத்தில், இறைவார்த்தை துறவு சபையின் புதிய அதிபர் அருள்தந்தை Heinz Kulüke, முன்னாள் அதிபர் அருள்தந்தை Antonio Pernia உட்பட பொதுப் பேரவையில் கலந்து கொண்ட சுமார் 150 பேரைத் திருத்தந்தை சந்தித்தார்.
மறைஅறிவிப்புப்பணி குறித்த இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத் தீர்மானத் தொகுப்புத் தயாரிப்பு ஆணையத்தில் இளம் இறையியலாளராக திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பணி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
2. திருத்தந்தை : திறந்த இதயம் இறைவன் புதுமைகளைச் செய்வதற்கு அனுமதியளிக்கின்றது

ஜூலை09,2012. இறைவன் நிகழ்த்தும் புதுமைகளைப் பெற வேண்டுமெனில் அவர்மீது நம்பிக்கை கொண்டு அவருக்குத் திறந்தமனம் உள்ளவர்களாய் வாழ்வது அவசியம் என்பதை இயேசு நசரேத்தூரில் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வு கோடிட்டுக் காட்டுகின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார். 
இயேசு தமது சொந்த ஊராகிய நாசரேத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதை விவரிக்கும் இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து காஸ்தெல் கந்தோல்போ கோடை விடுமுறை இல்லத்தில், ஞாயிறு மூவேளை செப உரை நிகழ்த்திய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
உண்மையான விசுவாசத்தால் நாம் நிரப்பப்பட்டு, திறந்த மற்றும் எளிமையான இதயத்தோடு வாழ்ந்தால், நமது வாழ்க்கையில் இறைவனின் பிரசன்னத்தை உணர்ந்து அவரது விருப்பத்தைப் பின்செல்ல முடியும் என்று இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தில் இயேசு நமக்கு நினைவுபடுத்துகிறார் என்றும் திருத்தந்தை கூறினார்.
ஓர் இறைவாக்கினர் தமது சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் மதிப்புப் பெறுவார் என்று இயேசு நாசரேத் தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களிடம் கூறியது புரிந்து கொள்ளத்தக்கதே என்றும், மனித உறவு நிலையிலிருந்து நோக்குவது, அதையும் கடந்து இறையுண்மைகளுக்குத் திறந்த மனதாய் இருப்பதற்குத் தடையாய் இருக்கின்றது என்றும்  திருத்தந்தை கூறினார்.   
நாசரேத்தில், இயேசு மீது வெறுப்புணர்வு காட்டப்பட்டதால், சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர, வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை என்று புனித மாற்கு பதிவு செய்திருக்கிறார் என்றும் திருத்தந்தை கூறினார்.
இதனால் கிறிஸ்துவின் புதுமைகள் வல்லமையை வெளிப்படுத்துவதாக இல்லாமல், இறைவனின் அன்பின் அடையாளங்களாக இருக்கின்றன என்றும் மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

3. பேராயர் Kaigama : நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதக் குழுவின் செயல்கள் இசுலாமுக்குப் புறம்பானவை

ஜூலை09,2012. நைஜீரியாவில் வன்முறைகள் இடம்பெறும் போது வெளிநாட்டு அரசுகள் மௌனம் காக்கின்றன மற்றும் தங்கள் குடிமக்களை நைஜீரியாவுக்குப் பயணம் செய்ய வேண்டாமெனச் சொல்கின்றன என்று நைஜீரிய ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Ignatius Kaigama கவலை தெரிவித்தார்.
ஆயுதக்களைவு பொன் புறாக்கள் அமைதி விருதைப் பெறுவதற்காக உரோம் வந்திருக்கும் பேராயர் Kaigama வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.
நைஜீரியாவில் வன்முறைகள் இடம்பெறும் நேரங்களில் வெளிநாட்டவரின் ஒருமைப்பாட்டுணர்வும் அன்பும் ஆதரவும் காணக்கூடிய விதத்தில் தேவை என்பதை அவர்  வலியுறுத்தினார்.
நைஜீரியா குறித்து வெளிநாட்டவர் தங்கள் குடிமக்களுக்கு விடுக்கும் எச்சரிக்கை தன்னை மிகவும் புண்படுத்துவதாக இருக்கின்றது என்றுரைத்த பேராயர், நைஜீரியாவின்  ஜோஸ் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் போகோ ஹராம் அமைப்பின் குண்டுவைப்பு அச்சுறுத்தல்கள், அந்நாட்டில் நீண்ட காலமாக இடம்பெறும் மோதல்களை அதிகரிப்பதாக இருக்கின்றது என்று தெரிவித்தார்.
வன்முறை ஒரு நுண்கிருமி, அது கட்டுப்படுத்தப்படாவிட்டால் அது தொடர்ந்து பரவிக் கொண்டே இருக்கும், இது ஒரு புற்றுநோய் போன்றது என்றும் பேராயர் எச்சரித்தார்.
வட நைஜீரியாவில் ஜோஸ் நகரத்திற்கு அருகே ஆயுதம் தாங்கிய முஸ்லீம் தீவிரவாதக் கும்பல்கள் இச்சனிக்கிழமை காலை, கிறிஸ்தவக் கிராமங்களைச் சூறையாடியதில் குறைந்தது 37 பேர் இறந்தனர். இதில் இறந்தவர்களை அடக்கம் செய்து கொண்டிருந்த போது இரண்டு காவல்துறையினர் கொல்லப்பட்டனர்.

4. மங்கோலியா கத்தோலிக்கத் திருஅவை 20 ஆண்டுகளைச் சிறப்பிக்கின்றது

ஜூலை09,2012. மங்கோலியாவில் கத்தோலிக்கத் திருஅவை வேரூன்றப்பட்டதன் 20ம் ஆண்டு நிறைவு இஞ்ஞாயிறன்று Ulan Bator பேராலயத்தில் ஆடம்பரத் திருப்பலி மூலம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
விசுவாசப்பரப்புப் பேராயச் செயலர் பேரருட்திரு Savio Hon Tai Fai, தென் கொரியாவின் Daejeon ஆயர் Lazarus You Heung-sik உட்பட  அரசு மற்றும் சமய அதிகாரிகள் பலர் இத்திருப்பலியில் கலந்து கொண்டனர்.
மங்கோலியாவில் கத்தோலிக்கத் திருஅவையின் உறுப்பினர்கள் கடந்த 20 ஆண்டுகளில் பூஜ்யத்திலிருந்து 800 ஆக உயர்ந்துள்ளனர்.
வருகிற அக்டோபர் 7ம் தேதிவரை இடம்பெறும் இக்கொண்டாட்டங்களின் இறுதியில், இந்த இருபதாம் ஆண்டின் நிறைவாக மங்கோலியக் கத்தோலிக்கர் ஒரு மரத்தையும் நடவுள்ளனர். 
1991ம் ஆண்டில் மங்கோலியாவில் கம்யூனிச ஆட்சி வீழ்ந்த போது ஒரு கத்தோலிக்கர்கூட அங்கு இல்லை. 1992ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட புதிய அரசியல் அமைப்பு சமய சுதந்திரத்தை அங்கீகரித்தது. தற்போது 22 நாடுகளைச் சேர்ந்த 81 மறைப்பணியாளர்கள் அங்கு உள்ளனர்.

5. இலங்கையின் வடபகுதிக்கு உதவிகள் குறைகின்றன: ஐநா நிறுவனங்கள் கவலை

ஜூலை09, 2012. இலங்கையில் போர் முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், போர் இடம்பெற்ற பகுதிகளில் இன்னும் இயல்புநிலைத் திரும்பவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாட்டின் வடபுலத்திற்கான சர்வதேச உதவிகள் குறைந்துவருகின்றமை கவலையளிக்கின்றது என்று கூறும் ஐ.நா.வின் மனிதாபிமான உதவிகளுக்கான இணைப்பு அலுவலகம், வடபகுதியின் மனிதாபிமான உதவிப் பணிகளுக்கென ஐநா மற்றும் அதனுடன் இணைந்து உழைக்கும் நிறுவனங்களுக்கு 147 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி தேவைப்படுவதாக சனவரி மாதத்திலேயே கோரியிருந்த போதிலும்இதில் பதினேழரை விழுக்காடான 25 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே கிடைத்திருப்பதாகத் தெரிவிக்கின்றது.
அதேவேளை, வடபகுதியில் மூன்று இலட்சம் பேருக்கு நிவாரண உணவு உதவிகளை வழங்கும் உலக உணவுத் திட்டமும் நிதிப்பற்றாக்குறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

6. இலங்கையில் கடந்த 6 மாதங்களில் 650 பேர் கடத்தப்பட்டுள்ளனர்! சண்டே ரைம்ஸ்

ஜூலை09, 2012. இலங்கையில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 650 பேர் கடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை அறிக்கையொன்றை மேற்கோள்காட்டி சண்டே ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
நாளொன்றுக்கு ஏறத்தாழ 4 பேர் கடத்தப்பட்டுள்ளதாக இச்செய்தி மூலம் தெரிய வருகிறது.
கடந்த வருடத்தில் மட்டும் இலங்கையில் 15,000 பேர் காணாமல் போயுள்ளதாக அண்மையில் வெளியிடப்பட்ட சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆசிய-பசிபிக் வலயம் தொடர்பான 2011ம் ஆண்டு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இடம்பெற்றுவரும் கடத்தல்களுடன் பாதுகாப்புத் தரப்பினர் நேரடியாக தொடர்புபட்டிருக்கின்றனர் என அண்மையில் வெளியான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை தொடர்பான அறிக்கையிலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

7. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் மேற்கு வங்க மாநிலம் முதலிடம்

ஜூலை09, 2012. கடந்த ஆண்டில் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்  அதிக அளவில் நடந்த மாநிலங்களில், மேற்கு வங்கம் முதலிடத்தையும், ஆந்திர பிரதேசம் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன என்று, நாட்டின்  குற்ற ஆவணங்கள் பிரிவு தெரிவித்துள்ளது..
இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில், 7.5 விழுக்காட்டைக் கொண்டுள்ள மேற்கு வங்க மாநிலத்தில், கடந்த ஆண்டில், பெண்களுக்கு எதிராக, 29,133 குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இது, நாட்டில் பெண்களுக்கு எதிராக நடந்த மொத்த குற்றங்களில், 12.7 விழுக்காடாகும். இதற்கு அடுத்தபடியாக, ஆந்திர மாநிலத்தில், 28,246 குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இது, மொத்த குற்றங்களில், 12.4 விழுக்காடாகும்.
நாட்டில், மொத்தமுள்ள 53 பெரிய நகரங்களில், தலைநகரான டில்லியில், 17.6 விழுக்காடு கற்பழிப்பு வழக்குகளும், 31.8 விழுக்காடு ஆட்கடத்தல் வழக்குகளும், 14 விழுக்காடு அளவுக்கு வரதட்சணை கொடுமை இறப்புகளும் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில், டில்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், 13.3 விழுக்காடு அளவுக்கும் (4,489), பெங்களூரில் 5.6 விழுக்காடு (1,890) அளவுக்கும், ஐதராபாத்தில் 5.5 விழுக்காடு (1,860) அளவுக்கும், விஜயவாடாவில் 5.3 விழுக்காடு (1,797) அளவுக்கும் நிகழ்ந்துள்ளன. விஜயவாடா, கோடா, கொல்லம், ஜெய்ப்பூர், அசன்சால் நகரங்களில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், அதிக அளவில் நிகழ்ந்துள்ளன என்று  குற்ற ஆவணங்கள் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
8. மியான்மார் எதிர்க்கட்சித் தலைவர் சு கி நாடாளுமன்றத்தில் உரை

ஜூலை09,2012. மியான்மாரில் மக்களாட்சியைக் கொண்டு வருவதற்கு சுமார் 25 ஆண்டுகளாகப் போராடி வரும் அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சு கி, நாட்டுக்காகத் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்வதாக நாடாளுமன்றத்தில் உறுதி கூறினார்.
மியான்மார் நாடாளுமன்றத்தில் முதன்முறையாக உரையாற்றிய சு கி, தற்போதைய அரசுத் தலைவர் தெய்ன் செயினுக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதாகவும் கூறினார்.
1991ம் ஆண்டின் அமைதி நொபெல் விருதைப் பெற்ற சு கி, அதனை அண்மையில்தான் நேரடியாகப் பெற்றுக் கொண்டார்.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...