Tuesday, 10 July 2012

Catholic News in Tamil - 07/07/12


1. Penang மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பேரருட்திரு செபஸ்தியான் பிரான்சிஸ்

2. கப்பலில் வேலை செய்வோர் முதலில் மனிதர்கள் என்று அங்கீகரிக்கப்பட வேண்டும் திருப்பீட குடியேற்றதாரர் அவை

3. பேராயர் தொமாசி : சமய சுதந்திரத்தை மதிப்பதாக அளித்த வாக்குறுதிகளைப் பல நாடுகள் புறக்கணிக்கின்றன

4. அருள்தந்தை லொம்பார்தி : இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் பசுமையான நினைவுகள்

5. Bosnia-Herzegovina ஆயர் பேரவைத் தலைவர் : 1995ம் ஆண்டின் அமைதி ஒப்பந்தத்தில் மாற்றம் தேவை

6. இலங்கைக்குத் திரும்பும் அகதிகள் எண்ணிக்கை குறைகிறது

7. Golan Heights பகுதியில் போர் நிறுத்தத்தை கண்காணிக்கும் ஐ.நா.அமைதிகாப்புப் படைக்குத் தலைவராக இந்தியத் தளபதி நியமனம்

8. காந்தியின் அரிய கடிதங்களை விலைக்கு வாங்குகிறது இந்தியா

------------------------------------------------------------------------------------------------------

1. Penang மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பேரருட்திரு செபஸ்தியான் பிரான்சிஸ்

ஜூலை07,2012. மலேசியாவின் Penang மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்திரு செபஸ்தியான் பிரான்சிஸ் அவர்களை இச்சனிக்கிழமை நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
Penang மறைமாவட்டத்தின் ஆயராக இந்நாள்வரை பணியாற்றிய ஆயர் ஜோசப் அந்தோணி செல்வநாயகம் அவர்களின் பணி ஓய்வை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை,  அம்மறைமாவட்டத்திற்குப் புதிய ஆயரை நியமித்துள்ளார்.
மலேசியாவின் Melaka-Johor மறைமாவட்டத்தின் குருகுல அதிபராக இந்நாள்வரைப் பணியாற்றி வந்தவர் Penang மறைமாவட்டத்தின் புதிய ஆயர் செபஸ்தியான் பிரான்சிஸ். மலேசியாவின் Johor Bahru வில் 1951ம் ஆண்டு பிறந்த இவர், 1977ம் ஆண்டு குருவானார்.
1955ம் ஆண்டு உருவாக்கப்பட்ட Penang மறைமாவட்டத்தில் வாழும் சுமார் 65 இலட்சம் மக்களில் 66 ஆயிரம் பேர் கத்தோலிக்கர்.


2. கப்பலில் வேலை செய்வோர் முதலில் மனிதர்கள் என்று அங்கீகரிக்கப்பட வேண்டும் திருப்பீட குடியேற்றதாரர் அவை

ஜூலை07,2012. உலக அளவில் கப்பல்களில் வேலை செய்யும் 12 இலட்சத்துக்கு மேற்பட்ட பணியாளர்களுக்கு முழுப் பாதுகாப்பு அளிக்கப்பட்டு, அவர்களின் வேலையிடங்களில் தரமான சூழல்கள் உருவாக்கிக் கொடுக்கப்படுமாறு திருப்பீடம்  வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜூலை8, இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படும் கடல் ஞாயிறு தினத்தையொட்டி செய்தி வெளியிட்ட குடியேற்றதாரர் மற்றும் புலம் பெயர்வோர்க்கானத் திருப்பீட அவை, அனைத்து மக்களின் வாழ்க்கை மிகவும் வசதியாக அமைவதற்கு உதவும் கப்பலில் வேலை செய்வோர் முதலில் மனிதர்கள் என்று அங்கீகரிக்கப்பட்டு அவர்களின் வேலைகள் மற்றும் அவர்கள் செய்யும் தியாகங்களுக்காகக் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளது.
தங்கள் குடும்பங்கள் மற்றும் நண்பர்களைவிட்டுப் பல மாதங்கள் பிரிந்து வாழும் இவர்கள் செல்லும் நாடுகளில், நிறம், மதம், நாடு என்ற வேறுபாடின்றி வரவேற்கப்பட வேண்டுமென்றும் இச்செய்தி வலியுறுத்துகிறது.
தாராளமயமாக்கல் கொள்கை செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் உலகில் கப்பல் போக்குவரத்து மிக முக்கிய அங்கம் வகித்தது எனக் கூறும் இச்செய்தி, இன்றும்கூட உலகளாவிய வர்த்தகத்தில் 90 விழுக்காடு கப்பல் போக்குவரத்தால் நடத்தப்படுகின்றன என்றும், இலட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கப்பலில் பயணம் செய்கின்றனர் என்றும் சுட்டிக் காட்டுகிறது.
2006ம் ஆண்டின் கப்பல் தொழில் ஒப்பந்தம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்று அழைப்பு விடுக்கும் இச்செய்தி, கடல் சார்ந்த தொழில் செய்வோர்க்கென வருகிற நவம்பர் 19 முதல் 23 வரை வத்திக்கானில் நடைபெறவிருக்கும் 23வது அனைத்துலக மேய்ப்புப்பணி மாநாட்டில் கப்பல் பணியாளர்கள் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளது.
கடல்சார்ந்த உலகில் புதிய நற்செய்திப்பணி என்ற தலைப்பில் இம்மாநாடு நடைபெறும் என்று கூறும் இச்செய்தி, இத்தொழிலாளரின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு கடந்த 90 ஆண்டுகளுக்கு மேலாக இவர்களுக்கானச் சிறப்பான  மேய்ப்புப்பணியில் திருஅவை ஈடுபட்டுள்ளது என்றும் கூறுகிறது.
ஆண்டுதோறும் ஜூலை 2ம் ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படும் கடல் தினத்திற்கென வெளியிடப்பட்ட செய்தியில் குடியேற்றதாரர் மற்றும் புலம் பெயர்வோர்க்கானத் திருப்பீட அவைத் தலைவர் கர்தினால் Antonio Maria Vegliò மற்றும் அதன் செயலர் ஆயர் Joseph Kalathiparambil கையெழுத்திட்டுள்ளனர்.


3. பேராயர் தொமாசி : சமய சுதந்திரத்தை மதிப்பதாக அளித்த வாக்குறுதிகளைப் பல நாடுகள் புறக்கணிக்கின்றன

ஜூலை07,2012. சமய சுதந்திரத்தை மதிப்பதாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குப் பல நாடுகள் தவறியுள்ளன என்று திருப்பீட அதிகாரி ஒருவர் ஐ.நா.வில் குறை கூறினார்.
ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 20வது அமர்வில் சமய சுதந்திரம் குறித்து உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சில்வானோ தொமாசி இவ்வாறு கூறினார்.
சமய சுதந்திரம், பேச்சு சுதந்திரம், மனச்சான்றின் சுதந்திரம், அடிப்படை மனித உரிமைகள் போன்றவற்றை நடைமுறைப்படுத்துவதாக சர்வதேச சமுதாயம் ஏற்றுக்கொண்ட ஒப்பந்தத்திற்கும், அவற்றைச் செயல்படுத்துவதற்கும் இடையே இடைவெளி அதிகரித்து வருவதாகப் பேராயர் சுட்டிக் காட்டினார்.
உண்மையான சமய சுதந்திரம், வழிபாட்டுச் சுதந்திரத்தை மட்டும் உள்ளடக்கவில்லை, மாறாக, போதித்தல், கற்பித்தல், புதிய உறுப்பினர்களை ஏற்றல், அரசியல் சொற்பொழிவுக்குப் பங்களித்தல், பொதுவான நடவடிக்கைகளில் கலந்து கொள்ளல் ஆகியவற்றையும் கொண்டது என்றும் பேராயர் தொமாசி கூறினார்.
அரசின் கொள்கைகள் அல்லது சட்டங்களுக்கும், விசுவாசிகளின் மதநம்பிக்கைகளுக்கும் இடையே முரண்பாடாக இருப்பவைகளைத் தேர்ந்தெடுக்குமாறு மத நம்பிக்கையாளர்கள் கட்டாயப்படுத்தப்படக் கூடாது என்றும் திருப்பீட அதிகாரி பேராயர் தொமாசி ஐ.நா.வில் கேட்டுக்  கொண்டார்.


4. அருள்தந்தை லொம்பார்தி : இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் பசுமையான நினைவுகள்

ஜூலை07,2012. வருகிற அக்டோபரில் நாம் சிறப்பிக்கவிருக்கும் இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் 50ம் ஆண்டு நிறைவு, நாம் அனைவரும் ஆர்வமுடன் ஒன்றிணைந்து தூய ஆவிக்குச் செவிமடுக்கும் சூழலை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவதாக இருக்கும் என்று வத்திக்கான் தொலைக்காட்சி மைய இயக்குனர் கூறினார்.
வத்திக்கான் தொலைக்காட்சியின் வார நிகழ்ச்சியில் இவ்வாறு பேசிய அத்தொலைக்காட்சி மைய இயக்குனர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி, ஜூலை9ம் தேதி வருகிற திங்களன்று இத்தாலியின் நேமி என்ற ஊரில் இறைவார்த்தை சபையினரின் இல்லத்துக்குத் திருத்தந்தை செல்வதற்கான மற்றொரு காரணத்தையும் விளக்கினார்.
நேமியில் அத்துறவு சபைத் தலைவர்களையும் மற்றவர்களையும் வாழ்த்துவதோடு, 1965ம் ஆண்டில் இளம் இறையியலாளராக இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் குறித்த வேலைகளில் தான் ஈடுபட்டிருந்த அந்த இடத்தை மீண்டும் பார்ப்பதற்காகவும் திருத்தந்தை அங்குச் செல்கிறார் என்று கூறினார் அருள்தந்தை லொம்பார்தி.


5. Bosnia-Herzegovina ஆயர் பேரவைத் தலைவர் : 1995ம் ஆண்டின் அமைதி ஒப்பந்தத்தில் மாற்றம் தேவை

ஜூலை07,2012. பெரும் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்திய நான்கு ஆண்டு காலச் சண்டை முடிவுக்கு வரக் காரணமாக இருந்த அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைமையில் இடம்பெற்ற 1995ம் ஆண்டின் அமைதி ஒப்பந்தத்தில் மாற்றம் தேவை என்று Bosnia-Herzegovina ஆயர் பேரவைத் தலைவர் கூறினார்.
ஒன்றிணைந்த, இறையாண்மை பெற்ற, அமைதி நிறைந்த, சமயச் சார்பற்ற குடியரசாக Bosnia-Herzegovina மாறுவதற்கு, Dayton ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று Strasbourg லுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கூறினார் Banja Luka ஆயர் Franjo Komarica.
Dayton ஒப்பந்தம் சண்டையை நிறுத்தினாலும் சனநாயகத்தையும் அமைதியான ஒன்றிணைந்த வாழ்வையும் உருவாக்குவதற்கு உதவவில்லை என்று ஆயர் மேலும் கூறினார்.
ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களின் உயிர்களைக் காவு கொண்ட நான்காண்டு காலச் சண்டை முடிந்து 16 ஆண்டுகள் ஆகியும் Bosnia-Herzegovina வில் ஒரு திருப்தியற்ற சமூக, பொருளாதார, சட்ட மற்றும் அரசியல் சூழலையே காண முடிகின்றது என்று தெரிவித்தார் ஆயர்.
2008ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, Bosnia-Herzegovina குடியரசின் சுமார் 40 இலட்சம் மக்களில் சுமார் 15 விழுக்காட்டினர் கத்தோலிக்கர், 45 விழுக்காட்டினர் முஸ்லீம்கள், 36 விழுக்காட்டினர் செர்பிய ஆர்த்தடாக்ஸ் சபையினர் மற்றும் ஒரு விழுக்காட்டினர் பிரிந்த கிறிஸ்தவ சபையினர்.


6. இலங்கைக்குத் திரும்பும் அகதிகள் எண்ணிக்கை குறைகிறது

ஜூலை07,2012. வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்குத் திரும்பும் அகதிகளின் எண்ணிக்கை இவ்வாண்டு ஜூன் மாத இறுதி வரை, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில்  குறைந்திருப்பதாக ஐ.நா. அகதிகள் நிறுவனம் கூறியுள்ளது.
இந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களில், இதுவரை 662 அகதிகளே, தாங்களாக முன்வந்து திரும்ப வந்திருப்பதாகக் கூறும் ஐ.நா அகதிகள் நிறுவனம், இவ்வெண்ணிக்கை கடந்த ஆண்டு இதே காலத்தில் 962 ஆக இருந்தது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது.

2011ம் ஆண்டில் மொத்தம் 1,728 அகதிகள், ஐ.நா. அகதிகள் நிறுவனத்தின் உதவியுடன் நாடு திரும்பியதாகவும் கூறப்பட்டுள்ளது.
அகதிகள் திரும்புவது குறைந்திருப்பதற்கான காரணங்கள் என்னவென்று கூறுவது கடினம் என்று கூறும் அந்நிறுவன அதிகாரி Michael Zwack, நாடு திரும்புவது என்பது தனிப்பட்ட ஒவ்வொருவரின் தனிப்பட்ட முடிவு என்றார்.
UNHCR என்ற ஐ.நா. அகதிகள் நிறுவனம் 2011ம் ஆண்டின் இறுதியில் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, இந்தியாவின் தமிழ் நாட்டில் 112 அகதிகள் முகாம்களில் 68,152 இலங்கை அகதிகள் வாழ்ந்தனர். அகதிகள் முகாம்களுக்கு வெளியே, தமிழ்நாட்டில் 32,476 அகதிகள் இருக்கின்றனர் என்றும், உலகெங்கிலும் சுமார் 1,36,000 இலங்கைத் தமிழ் அகதிகள் 65 நாடுகளில் வாழ்வதாகவும் இந்நிறுவனம் கூறுகிறது.


7. Golan Heights பகுதியில் போர் நிறுத்தத்தை கண்காணிக்கும் ஐ.நா.அமைதிகாப்புப் படைக்குத் தலைவராக இந்தியத் தளபதி நியமனம்

ஜூலை 07,2012. இஸ்ரேலுக்கும் சிரியாவுக்கும் இடையேயான Golan Heights பகுதியில் போர் நிறுத்தத்தை கண்காணிக்கும் ஐ.நா.அமைதிகாப்புப் படைக்குத் தலைவராக இந்தியத் தளபதி Iqbal Singh Singhaவை நியமித்துள்ளார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்.
வருகிற ஆகஸ்டில் இந்தப் பொறுப்பை ஏற்கும் தளபதி Iqbal Singh Singha, தேசிய மற்றும் சர்வதேச அளவில் அமைதிகாப்புப் பணிகளைத் திறம்படச் செய்திருப்பவர் என்று பான் கி மூன் பேச்சாளர் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
இஸ்ரேலுக்கும் சிரியாவுக்கும் இடையே 1973ம் ஆண்டில் போர் முடிந்த பின்னர் அதற்கு அடுத்த ஆண்டில் ஐ.நா.பாதுகாப்பு அவை, UNDOF என்ற ஐ.நா.அமைதிகாப்பு அமைப்பை உருவாக்கியது.  
இந்த அமைப்பு இவ்வாண்டு டிசம்பர் 31ம் தேதிவரைப் பணியாற்றும் என்ற உடன்பாடு கடந்த வெள்ளியன்று ஏற்பட்டது.


8. காந்தியின் அரிய கடிதங்களை விலைக்கு வாங்குகிறது இந்தியா

ஜூலை07,2012. தென்னாப்ரிக்காவில் மகாத்மா காந்தி வாழ்ந்த போது எழுதிய அரிய கடிதங்கள், அவருடைய ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களை விலைக்கு வாங்குவதற்கு  ஏல நிறுவனத்துடன் இந்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
மகாத்மா காந்தியின் ஆயிரத்துக்கும் அதிகமான அரிய கடிதங்கள், ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களை சர்வதேச ஏல நிறுவனமான சோத்பி வரும் 10ம் தேதி ஏலம் விடுவதாக அறிவித்திருந்தது. ஆயினும் இந்திய அரசின் இந்த உடன்பாட்டால் இந்த ஏலம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தியின் அரிய கடிதங்கள் 5 இலட்சம் பவுண்ட் முதல் 7 இலட்சம் பவுண்ட் வரை விலை போகும் என்று ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்திய அரசு எவ்வளவு பணம் தரப்போகிறது என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
இந்த அரிய கடிதங்களில் காந்திஜியின் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் பற்றிய விவரங்கள் அடங்கி உள்ளன.
காந்தியின் அரிய கடிதங்கள் ஆராய்ச்சியாளர்களுக்கும் வரலாற்று ஆசிரியர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், இவை விலைமதிப்பற்றவை என்றும் இந்திய அரசு தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...