Tuesday, 10 July 2012

Catholic News in Tamil - 06/07/12

1. கர்தினால் அமாத்தோ : இந்திய மறைசாட்சி தேவசகாயம்பிள்ளை துன்புறும் கிறிஸ்தவர்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு

2. லிபியா நாட்டினரை நம்ப வேண்டும் - லிபியா அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Martinelli

3. சிரியாவில் எடுக்கப்பட்டு வரும் அமைதிக்கான அனைத்து முயற்சிகளும் போரை நிறுத்தும் நோக்கம் கொண்டவை -  திருப்பீடத் தூதர்

4. அமேசான் மழைக்காடுகளைச் சுரண்டுவதில்கூட காலனி ஆதிக்கப் போக்கு தெரிகின்றது - பிரேசில் ஆயர்கள் புகார்

5. மங்கோலியாத் திருஅவை தனது 20ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கின்றது

6. கென்ய முஸ்லீம் குழுக்கள் கிறிஸ்தவ ஆலயங்களைப் பாதுகாப்பதற்கு உறுதி

7. இந்தியாவில் இலட்சக்கணக்கான மக்களுக்கு இலவச மருந்துகள் வழங்குவதற்கு அரசு திட்டம்

-------------------------------------------------------------------------------------------

1.கர்தினால் அமாத்தோ : இந்திய மறைசாட்சி தேவசகாயம்பிள்ளை துன்புறும் கிறிஸ்தவர்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு

ஜூலை06,2012. இக்காலத்தில் அடக்குமுறைக்கு உள்ளாகும் கிறிஸ்தவர்களுக்கு 18ம் நூற்றாண்டு இந்திய மறைசாட்சி தேவசகாயம்பிள்ளை சிறந்ததோர் சுடர்விடும் எடுத்துக்காட்டு என்று புனிதர்நிலைக்கு உயர்த்துவதற்குப் பொறுப்பான பேராயத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ கூறினார்.
L'Osservatore Romano என்ற திருப்பீடச் சார்பு தினத்தாளுக்குப் பேட்டியளித்த கர்தினால் அமாத்தோ, தேவசகாயம்பிள்ளையின் வாழ்க்கை உண்மையிலேயே அசாதரணமானது என்று குறிப்பிட்டார்.
உயர்குல இந்துவாகிய தேவசகாயம்பிள்ளை கிறிஸ்தவத்திற்கு மனம் மாறியபொழுது அவர் தனது இந்துமதத்தினராலேயே கடும் அடக்குமுறைத் துன்பங்களுக்கு உள்ளாகி கைது செய்யப்பட்டு அனைத்துவிதமான சித்ரவதைகளுக்கும் உட்பட்டார், இறுதிவரை தனது திருமுழுக்கு விசுவாசத்தில் உறுதியாயிருந்தார் என்றும் கர்தினால் அமாத்தோ பாராட்டினார்.
இந்தியத் திருஅவை இக்காலத்தில் அடக்குமுறைகளுக்கு உள்ளாகி வருவதால், தேவசகாயம்பிள்ளை இந்தியாவுக்கு வியத்தகு மற்றும் மாபெரும் சான்றாகத் தற்போது திகழ்கிறார் என்றும் இத்திருப்பீட அதிகாரி தெரிவித்தார்.
1712ம் ஆண்டு உயர்சாதியில் பிறந்த இவர், 1745ம் ஆண்டு கோட்டாறு மறைமாவட்டத்தில் திருமுழுக்குப் பெற்று தேவசகாயம் என்ற பெயரை ஏற்றார். அவரது மனைவியும் மனம் மாறி ஞானப்பூ அம்மாள் என்ற பெயரை ஏற்றார். திருவிதாங்கூர் மன்னர் மாளிகையில் முக்கியப் பணியில் இருந்த இவர், 1749ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி கைது செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் ஒவ்வொரு நகரமாக இழுத்துச் செல்லப்பட்டு சித்ரவதைப்படுத்தப்பட்டார். கிறிஸ்தவத்துக்கு மதம் மாறினால் என்ன நடக்கும் என்பதை இதன் மூலம், மற்ற மக்களையும் அதிகாரிகள் அச்சுறுத்தினர். இறுதியில் ஆரல்வாய்மொழி என்ற ஊரில் 1752ம் ஆண்டு சனவரி 14ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார் தேவசகாயம்பிள்ளை. 
இறையடியார் தேவசகாயம்பிள்ளை இவ்வாண்டுக்குள் அருளாளர் என அறிவிக்கப்படவுள்ளார். இந்தியாவில் பிறந்த தமிழரான இவர், இந்நிலைக்கு உயர்த்தப்படும் இந்திய முதல் மறைசாட்சியாவார்.

2. லிபியா நாட்டினரை நம்ப வேண்டும் - லிபியா அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Martinelli

ஜூலை06,2012. லிபியா நாட்டு வரலாற்றில், உண்மையான சுதந்திரத் தேர்தல்கள் முதன்முறையாக நடைபெறவிருக்கும்வேளை, அத்தேர்தல் நேரத்தில் எதுவும் பிரச்சனைகள் எழுந்தால் அவை குறித்து உலக சமுதாயம் வியப்படையத் தேவையில்லை என்று Tripoli ன் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Giovanni Innocenzo Martinelli கூறினார்.
லிபியாவில் இச்சனிக்கிழமையன்று இடம்பெறும் பொதுத் தேர்தல்கள் குறித்து Fides செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த ஆயர் Martinelli, லிபிய மக்களை நாம் நம்ப வேண்டும் என்று கூறினார்.
ஜூலை 7ம் தேதி நடைபெறும் தேர்தலில் 200 பிரதிநிதிகள் லிபியாவின் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அவர்கள் புதிய இடைக்கால அரசையும், புதிய அரசியல் அமைப்பை எழுதுவதற்கான ஆணையத்தையும் அமைப்பார்கள். இந்தத் தேர்தலில் 600 க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட மூவாயிரத்துக்கு அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சுமார் 27 இலட்சம் பேர் ஓட்டுரிமை பெற்றுள்ளனர்.
மேலும், கடந்த நாற்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குப் பின்னர் லிபியாவில் இடம்பெறவிருக்கும் முதல் பொதுத் தேர்தலுக்குத் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்த ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், மக்களாட்சியை நோக்கிச் செல்லும் இந்த வட ஆப்ரிக்க நாட்டுக்கு ஐ.நா. தனது முழு ஆதரவை வழங்கும் என்று உறுதி கூறினார். 

3. சிரியாவில் எடுக்கப்பட்டு வரும் அமைதிக்கான அனைத்து முயற்சிகளும் போரை நிறுத்தும் நோக்கம் கொண்டவை -  திருப்பீடத் தூதர்

ஜூலை06,2012. சிரியா மக்களின் அமைதி மற்றும் ஒப்புரவுக்காக எடுக்கப்பட்டு வரும் அனைத்து முயற்சிகளுக்கும் அனைத்துலக சமுதாயம் ஆதரவு வழங்க வேண்டுமென்று அந்நாட்டுக்கானத் திருப்பீடத் தூதர் பேராயர் Mario Zenari கேட்டுக் கொண்டார்.
ஐ.நா.பாதுகாப்பு அவை, அரபுக் கூட்டமைப்பு மற்றும் சிரியாவின் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் ஜெனீவாவிலும் கெய்ரோவிலும் அண்மையில் நடத்திய கூட்டங்கள் குறித்துப் பேசிய பேராயர் Zenari, சிரியாவில் வன்முறைகள் தொடர்ந்து   இடம்பெறுவதால் நேரத்தை வீணாக்காமல் அமைதிக்கான முயற்சிகளில் ஈடுபடுமாறு உலக சமுதாயத்தை வலியுறுத்தினார்.
வன்முறையை நிறுத்தி உரையாடலைத் தொடங்குவதே இந்த முயற்சியின் முதல் நடவடிக்கையாக இருக்க வேண்டுமென்றும் பேராயர் கூறினார்.
ஹோம்ஸ் நகரில் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் பல வாரங்களாக முடங்கிக் கிடக்கின்றன, இக்குடும்பங்களுக்குத் தேவையான அடிப்படை மனிதாபிமான உதவிகளாவது வழங்கப்படுமாறும் பேராயர் கேட்டுக் கொண்டார். 

4. அமேசான் மழைக்காடுகளைச் சுரண்டுவதில்கூட காலனி ஆதிக்கப் போக்கு தெரிகின்றது - பிரேசில் ஆயர்கள் புகார்

ஜூலை06,2012. தென் அமெரிக்காவில் அமேசான் பருவமழைக் காடுகளைச் சுரண்டுவதில்கூட காலனி ஆதிக்கப் போக்கைத் தாங்கள் பார்ப்பதாக பிரேசில் ஆயர்கள் குறை கூறினர்.
அமேசான் பகுதியில் வெளிநாட்டவர் நுழைந்து வளங்களைச் சுரண்டி அப்பகுதி மக்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து எந்தக் கவலையுமின்றி அப்பகுதியை விட்டுச் செல்வதற்கு பிரேசில் அரசு அனுமதியளிக்கின்றது என்று Cameta ஆயர் Jesus Maria Berdonces கூறினார்.
அமேசான் பகுதியில் இடம்பெறும் கனிமவளச் சுரங்கங்கள் மற்றும் வேளாண்மையால் கிடைக்கும் இலாபங்கள் அப்பகுதியிலேயே முதலீடு செய்யப்பட வேண்டும் என்றும், இதில் அப்பகுதி மக்களும் ஈடுபடுத்தப்பட வேண்டுமென்றும் பிரேசில் ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.      
தென் அமெரிக்காவில் 170 கோடி ஏக்கர் நிலபரப்பைக் கொண்ட அமேசான் பகுதியில் 140 கோடி ஏக்கர், பருவமழைக் காடுகளைக் கொண்ட பகுதியாகும். இதில் 60 விழுக்காட்டுப் பகுதி பிரேசில் நாட்டைச் சேர்ந்தது. 13 விழுக்காட்டுப் பகுதி பெரு நாட்டையும், 10 விழுக்காட்டுப் பகுதி கொலம்பியாவையும், Venezuela, Ecuador, Bolivia, Guyana, Suriname மற்றும் French Guiana நாடுகள் இதில் சிறிய பகுதியையும் கொண்டுள்ளன.  

5. மங்கோலியாத் திருஅவை தனது 20ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கின்றது

ஜூலை06,2012. மங்கோலியாவில் கத்தோலிக்க சமுதாயம் மிகச் சிறியதாக இருந்தாலும், இறைவன் தனக்குச் செய்த மாபெரும் செயல்களை நினைத்து அச்சமுதாயம் நன்றி கூறுகின்றது என்று Ulaanbaatar அப்போஸ்தலிக்க முதல்வர் ஆயர் Wenceslao Padilla கூறினார்.
மங்கோலியாவில் முதல் கத்தோலிக்க மறைப்பணித்தளம் ஆரம்பிக்கப்பட்டதன் 20ம் ஆண்டைக் கொண்டாடுவதற்கானத்  தயாரிப்பின் போது இவ்வாறு கூறினார் அவர்.
இம்மாதம் 10, 11 தேதிகளில் நடைபெறவிருக்கும் இவ்விழாவில் விசுவாசப்பரப்புப் பேராயச் செயலர் பேரருட்திரு  Taifai Savio Hon, கொரியாவின் Daejeon ஆயர் Lazzaro You Heung-sik ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
மங்கோலியாவில் முதல் மறைப்பணித்தளம் 1992ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. மரியின் திருஇதய சபையின் இரண்டு சகோதரர்கள் முதலில் அங்குச் சென்றனர். தற்சமயம் அந்நாட்டில் 18 நாடுகளைச் சேர்ந்த 64 மறைப்பணியாளர்கள் உள்ளனர். கத்தோலிக்கரின் எண்ணிக்கையும் 415 ஐ எட்டியுள்ளது. 4 பங்குத்தளங்களும் உள்ளன.

6. கென்ய முஸ்லீம் குழுக்கள் கிறிஸ்தவ ஆலயங்களைப் பாதுகாப்பதற்கு உறுதி

ஜூலை06,2012. கென்யாவில் இஞ்ஞாயிறன்று முஸ்லீம் தீவிரவாதிகளால் கிறிஸ்தவ ஆலயங்கள் தாக்கப்பட்டதையடுத்து அந்நாட்டில் ஆலயங்களைப் பாதுகாப்பதற்கு முஸ்லீம் தலைவர்கள் உறுதி அளித்துள்ளனர்.
கென்யாவின் Garissaவில் ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் படுகொலைகள் நடத்தப்பட்டதற்கு எதிராக நடவடிக்கை எடுத்த உள்ளூர் முஸ்லீம் தலைவர்கள், அந்நாட்டில் பிற கிறிஸ்தவ ஆலயங்களைப் பாதுகாப்பதற்கு தன்னார்வக் குழுக்களை நியமனம் செய்வதற்கு உறுதி அளித்துள்ளனர்.
Garissa நகரத்தில் கிறிஸ்தவ ஆலயங்களில் இடம்பெற்ற வன்முறைகள் குறித்துப் பேசிய கென்ய முஸ்லீம்கள் உயர் அவைத் தலைவர் Adan Wachu, கென்யாவில் மதவாதப் பிரிவினைகள் ஏற்படுவதற்கு அந்நாட்டிலுள்ள முஸ்லீம் சமுதாயம் விரும்பவில்லை என்று அறிவித்தார்.
Garissa நகரத்தில் கிறிஸ்தவ ஆலயங்கள் தாக்கப்பட்டதற்கு, சொமாலியாவைச் சேர்நத al-Shabab என்ற இசுலாமிய தீவிரவாதக் குழுவே காரணம் என்று பொதுவாக நம்பப்படுகின்றது.

7. இந்தியாவில் இலட்சக்கணக்கான மக்களுக்கு இலவச மருந்துகள் வழங்குவதற்கு அரசு திட்டம்

ஜூலை06,2012. இந்தியாவில் இலட்சக்கணக்கான மக்களுக்கு இலவச மருந்துகள் வழங்குவதற்கு நடுவண் அரசு திட்டமிட்டு வருவதாக நலவாழ்வு அமைச்சக அதிகாரி ஒருவர் அறிவித்தார்.
மாநில அரசுகளுடன் சேர்ந்து நடுவண் அரசு எடுத்திருக்கும் இத்திட்டத்தில் 27,000 கோடி ரூபாய்ச் செலவில் இலட்சக்கணக்கான மக்களுக்கு இலவச மருந்துகள் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவ்வதிகாரி மேலும் கூறினார்.
இதற்கிடையே, இந்திய அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அனைவருக்கும் இலவச மருந்துகள் வழங்குவது இந்தியாவின் மிக முக்கியமான கொள்கை என்று பிரதமர் மன்மோகன் சிங் கடந்த ஜூனில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் அக்டோபர் மாதம் முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வழங்கப்படும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்திருந்தார்.
இந்தத் திட்டத்தின்கீழ் இந்தியாவில் உள்ள மக்கள்தொகையில் 22 விழுக்காட்டினர் பயன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...