Tuesday, 10 July 2012

Catholic News in Tamil - 04/07/12

1. இலங்கையில் மட்டக்கிளப்பு என்ற புதிய மறைமாவட்டத்தை உருவாக்கி, ஆயர் ஜோசப் பொன்னய்யா அவர்களை முதல் ஆயராக நியமித்தார் திருத்தந்தை

2. வத்திக்கானைப்பற்றி வெளியாகும் செய்திகள் நீதியற்ற முறையில் திருப்பீடச் செயலருக்குப் பிரச்சனைகளை உருவாக்கி வந்துள்ளன - திருத்தந்தை

3. நமது உடலுக்கும், ஆன்மாவுக்கும் புத்துயிர் அளிக்கும் தருணமாக கோடை விடுமுறை அமையட்டும் - திருத்தந்தை

4. செப்டம்பர் மாதம் லெபனான் நாட்டில் திருத்தந்தை மேற்கொள்ளவிருக்கும் அப்போஸ்தலிக்கப் பயணத்தின் விவரங்கள்

5. திருஅவையில் பொதிந்திருக்கும் விலைமதிப்பற்ற கருவூலங்களைக் கொண்டாட, விசுவாச ஆண்டு தகுந்ததொரு தருணம்

6. உரோம் நகரில் அனைத்துலக கத்தோலிக்கத் திரைப்பட விழா

7. குழந்தைகளின் விவிலியப் பிரதிகள் 5 கோடியைத் தாண்டியது

8. கிராமத்திற்குத் தேவையான முடிவெடுக்க பஞ்சாயத்து அமைப்புக்களுக்கு பொறுப்பும் அதிகாரமும் உண்டு - இந்தியாவின் உச்ச நீதி மன்றம்

------------------------------------------------------------------------------------------------------

1. இலங்கையில் மட்டக்கிளப்பு என்ற புதிய மறைமாவட்டத்தை உருவாக்கி, ஆயர் ஜோசப் பொன்னய்யா அவர்களை முதல் ஆயராக நியமித்தார் திருத்தந்தை

ஜூலை,04,2012. ஜூலை 3 இச்செவ்வாயன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இலங்கையில் மட்டக்கிளப்பு என்ற புதிய மறைமாவட்டத்தை உருவாக்கி, ஆயர் ஜோசப் பொன்னய்யா அவர்களை அம்மறைமாவட்டத்தின் முதல் ஆயராக நியமித்தார்.
திரிகோணமலை-மட்டக்களப்பு மறைமாவட்டத்திலிருந்து, தனியாகப் பிரிக்கப்பட்டுள்ள மட்டக்கிளப்பு மறைமாவட்டத்தில் மட்டக்கிளப்பு, அம்பாரா ஆகிய மாவட்டங்கள் அடங்கும்.
11 இலட்சத்துக்கும் அதிகமான மக்களைக் கொண்ட இந்த மறைமாவட்டப் பகுதியில் 55225 கத்தோலிக்கர்கள் உள்ளனர். 24 பங்குத்தளங்களை உள்ளடக்கிய இப்புதிய மறைமாவட்டத்தில் 35 மறைமாவட்ட குருக்களும், 97 இருபால் துறவியரும் பணி செய்கின்றனர்.
இப்புதிய மறைமாவட்டத்தின் முதல் ஆயராகப் பொறுப்பேற்கும் ஆயர் ஜோசப் பொன்னய்யா, 1952ம் ஆண்டு Thannamunai எனுமிடத்தில் பிறந்தார். 1980ம் ஆண்டு குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்ட இவர், 2008ம் ஆண்டு ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டு, திரிகோணமலை-மட்டக்கிளப்பு மறைமாவட்டத்தின் துணை ஆயராக திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் நியமிக்கப்பட்டார்.
ஜூலை 3, இச்செவ்வாயன்று ஆயர் ஜோசப் பொன்னையா, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மட்டக்கிளப்பு மறைமாவட்டத்தின் முதல் ஆயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டார்.


2. வத்திக்கானைப்பற்றி வெளியாகும் செய்திகள் நீதியற்ற முறையில் திருப்பீடச் செயலருக்குப் பிரச்சனைகளை உருவாக்கி வந்துள்ளன - திருத்தந்தை

ஜூலை,04,2012. திருஅவையை வழிநடத்துவதில் திருத்தந்தைக்குச் சிறப்பான ஆலோசனைகள் வழங்கி வந்துள்ள திருப்பீடச் செயலரின் பணிகளைப் பாராட்டி திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே அவர்களுக்கு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அண்மைய மாதங்களில் வத்திக்கானைப்பற்றி வெளியாகும் பல்வேறு செய்திகள் நீதியற்ற முறையில் திருப்பீடச் செயலருக்குப் பிரச்சனைகளை உருவாக்கி வந்துள்ளதைக் குறிப்பிட்டத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தான் விடுமுறை இல்லத்திற்குச் செல்வதற்கு முன் கர்தினால் பெர்தோனே அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இக்கடிதத்தை அனுப்பியுள்ளார்.
இவ்வாண்டு ஜனவரி மாதம் கர்தினால் பெர்தோனே அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் அவருக்குத் தன் முழு உறுதுணையும் உண்டு என்பதைக் கூறியத் திருத்தந்தை, அதே எண்ணங்களை மீண்டும் இக்கடிதத்தில் வெளிப்படுத்தி, திருப்பீடச் செயலருக்குத் தன் செபங்களையும் ஆசீரையும் இம்மடலின் மூலம் அனுப்பி வைத்தார்.


3. நமது உடலுக்கும், ஆன்மாவுக்கும் புத்துயிர் அளிக்கும் தருணமாக கோடை விடுமுறை அமையட்டும் - திருத்தந்தை

ஜூலை,04,2012. இயற்கையின் அழகு சூழ்ந்துள்ள கோடை விடுமுறை இல்லத்திற்கு நாம் வந்திருப்பது நமது உடலுக்கும், ஆன்மாவுக்கும் புத்துயிர் அளிக்கும் தருணமாக அமையட்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இச்செவ்வாயன்று வத்திக்கானிலிருந்து புறப்பட்டு, திருத்தந்தையர்களின் கோடை விடுமுறை இல்லமான Castel Gandolfoவுக்குச் சென்ற திருத்தந்தை, தன்னுடன் அந்த இல்லத்திற்கு வந்திருந்த வத்திக்கான் அதிகாரிகளிடம் இவ்வாறு கூறினார்.
திருத்தந்தை மக்களுக்கு வழங்கும் புதன் பொது மறைபோதகம் மற்றும் மூவேளை செப உரைகள் ஆகஸ்ட் மாதம் வரை நடைபெறாது. ஆயினும், ஜூலை மாதத்தில் திருத்தந்தையைச் சந்திக்க வரும் குழுக்களையும், மற்ற தனி நபர்களையும் அவர் சந்திப்பார்.
ஜூலை மாதம் 11ம் தேதி, திருத்தந்தை பெனடிக்ட் அவர்களின் பாதுகாவலரான புனித பெனடிக்ட் திருநாளன்று, மேற்கு-கிழக்கு Divan இசைக் குழவைச் சேர்ந்த இளைய இசைக் கலைஞர்கள் திருத்தந்தைக்கு ஒரு சிறப்பான இசை நிகழ்ச்சியை Castel Gandolfoவில் நடத்த உள்ளனர்.
ஜூலை 15ம் தேதி, ஞாயிறன்று திருத்தந்தை Frascati என்ற மறைமாவட்டத்தில் தன் அப்போஸ்தலிக்கப் பயணத்தை மேற்கொண்டு, அங்குள்ள புனித பேதுரு பேராலயத்தில் திருப்பலி நிகழ்த்துவார்.


4. செப்டம்பர் மாதம் லெபனான் நாட்டில் திருத்தந்தை மேற்கொள்ளவிருக்கும் அப்போஸ்தலிக்கப் பயணத்தின் விவரங்கள்

ஜூலை,04,2012. செப்டம்பர் மாதம் 14 முதல் 16 முடிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட் லெபனான் நாட்டில் மேற்கொள்ளவிருக்கும் அப்போஸ்தலிக்கப் பயணத்தின் விவரங்கள் இச்செவ்வாயன்று வெளியாயின.
2010ம் ஆண்டு வத்திக்கானில் நடைபெற்ற மத்திய கிழக்கு ஆயர்களின் சிறப்பு மாமன்றத்தின் தீர்மானங்களைத் திருத்தந்தை கையொப்பமிட்டு, அப்பகுதி ஆயர்களுக்கு வழங்கும் முக்கிய நிகழ்வுக்காக இப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
செப்டம்பர் 14 வெள்ளி காலை, உரோம் நகர் சம்பினோ விமான நிலையத்திலிருந்து புறப்படும் திருத்தந்தை, மதியம் 1.45 மணியளவில் லெபனான் தலைநகர் Beirut சென்றடைவார். விமானதளத்தில் அளிக்கப்படும் வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பின்னர், அவர் Harissa எனுமிடத்தில் உள்ள புனித பவுல் பசிலிக்காவிற்குச் சென்று, அங்கு ஆயர்கள் மாமன்ற தீர்மானங்களில் கையெழுத்திடுவார்.
ஜூலை 15 சனிக்கிழமையன்று லெபனான் அரசுத் தலைவர் மாளிகையில் அரசுத்தலைவர், பிரதமர் ஆகியோரைச் சந்தித்தபின், அந்நாட்டில் உள்ள இஸ்லாம் மதத் தலைவர்களையும் சந்திப்பார்.
இச்சந்திப்புக்களுக்குப் பின், அந்நாட்டின் அரசு அதிகாரிகள், மதத் தலைவர்கள், மற்றும் கலாச்சாரப் பிரதிநிதிகள் ஆகியோருக்கு திருத்தந்தை உரை வழங்குவார். அன்று மாலை 6 மணியளவில் Bkerke எனுமிடத்தில் உள்ள திறந்த வெளியரங்கில் இளையோரைச் சந்தித்து உரையாற்றுவார்.
செப்டம்பர் 16 ஞாயிறன்று Beirut பெருநகர் மையத்தில் அமைத்துள்ள மற்றொரு திறந்தவெளியரங்கில் காலை 10 மணிக்கு திருப்பலி ஆற்றும் திருத்தந்தை, அதன்பின் அங்கு கூடியிருப்போருக்கு மூவேளை செப உரை வழங்கி அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளிப்பார்.
அன்று மாலை 5 மணியளவில் அந்நகரில் கிறிஸ்துவ ஒன்றிப்பு கூட்டமொன்றில் கலந்து கொள்ளும் திருத்தந்தை, மாலை 7 மணியளவில் லெபனான் நாட்டை விட்டுக் கிளம்பி, இரவு 9.40 மணியளவில் உரோம் சம்பினோ விமான நிலையத்தை வந்தடைவார்.


5. திருஅவையில் பொதிந்திருக்கும் விலைமதிப்பற்ற கருவூலங்களைக் கொண்டாட, விசுவாச ஆண்டு தகுந்ததொரு தருணம்

ஜூலை,04,2012. அன்னையாம் திருஅவையில் பொதிந்திருக்கும் ஞானம், உண்மை ஆகிய விலைமதிப்பற்ற கருவூலங்களைக் கொண்டாட நாம் துவங்கவிருக்கும் விசுவாச ஆண்டு தகுந்ததொரு தருணம் என்று மும்பை உயர்மறைமாவட்டப் பொறுப்பாளர் ஒருவர் கூறினார்.
இச்செவ்வாயன்று கொண்டாடப்பட்ட புனித தோமாவின் திருநாளையொட்டி ஆசிய செய்தி நிறுவனத்திற்கு அளித்தப் பேட்டியொன்றில் மும்பை உயர் மறைமாவட்ட பாப்பிறை மறைபரப்புக் கழகங்களின் புதிய இயக்குனர் அருள்தந்தை Savio de Sales,  இவ்வாறு கூறினார்.
புனித தோமாவினால் இந்தியாவில் விதைக்கப்பட்ட விசுவாச விதைகள், புனித பிரான்சிஸ் சேவியர் போன்ற தலைசிறந்த புனிதர்களால் வளர்க்கப்பட்டது என்று கூறிய அருள்தந்தை Sales, இந்த விசுவாசத்தின் வெளி அடையாளமாக அருளாளர் அன்னை தெரேசா விளங்கினார் என்று கூறினார்.
இறை உணர்வைப் படிப்படியாக இழந்து வரும் இன்றைய உலகில் நமது விசுவாசத்தை மீண்டும் கண்டுணர புதிய நற்செய்திப் பணி என்ற கருத்தையும், விசுவாச ஆண்டையும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அறிவித்துள்ளது இவ்வுலகிற்கு வழங்கப்பட்டுள்ள ஓர் அரிய வாய்ப்பு என்று அருள்தந்தை Sales எடுத்துரைத்தார்.
இந்தியா போன்ற நாடுகளில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவே என்றாலும், சமுதாய அக்கறையாலும், பல்சமய உரையாடல்களாலும் இந்நாட்டில் விசுவாசத்தை வளர்க்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன என்று அருள்தந்தை Sales மேலும் கூறினார்.


6. உரோம் நகரில் அனைத்துலக கத்தோலிக்கத் திரைப்பட விழா

ஜூலை,04,2012. "சினிமாவும் புதிய நற்செய்திபரப்புப் பணியும்" என்ற தலைப்பில் இத்திங்கள் முதல் வியாழன் வரை உரோம் நகரில் அனைத்துலக கத்தோலிக்கத் திரைப்பட விழா ஒன்று நடைபெற்று வருகிறது.
திருப்பீடக் கலாச்சார அவையும், திருப்பீட புதிய நற்செய்திப் பணி அவையும் இணைந்து நடத்தும் இந்த விழாவில் உலகின் பல நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
கலைகள் புத்துயிர் பெற்ற Renaissance காலத்தில், ஓவியங்கள் வழியே கிறிஸ்தவம் பரவியதுபோல், இன்றையச் சூழலில் திரைப்படங்கள் வழியே கிறிஸ்தவ உண்மைகள் எளிதில் மக்களைச் சென்றடைய முடியும் என்று இந்த விழாவினை உருவாக்கிய Laura Marabini கூறினார்.
உரோம் நகரை அடுத்து, 2012, 2013 ஆகிய இரு ஆண்டுகளில், Vienna, Los Angeles, Toronto, Rio de Janeiro ஆகிய நகரங்களில் இவ்விழா நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


7. குழந்தைகளின் விவிலியப் பிரதிகள் 5 கோடியைத் தாண்டியது

ஜூலை,04,2012. அவரவர் தாய்மொழியில் வெளியிடப்பட்டுள்ள விவிலியம் பல இலட்சம் குழந்தைகளுக்குப் பெரும் பரிசாக அமைந்துள்ளது என்று Aid to the Church in Need என்ற கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பின் பொறுப்பாளர்களில் ஒருவர் கூறினார்.
Aid to the Church in Need அமைப்பின் முயற்சியால் குழந்தைகளும் புரிந்து கொள்ளும் வகையில் விவிலியங்கள் பல்வேறு மொழிகளில் அச்சிடப்பட்டன.
1979 ம ஆண்டு ஆரம்பமான இந்த முயற்சியால், 172 மொழிகளில் விவிலியங்கள் வெளியாகின.  இந்த முயற்சியின் ஒரு மைல்கல்லாக, இதுவரை வெளியான விவிலியங்கள் 5 கோடியை அண்மையில் தாண்டியது.
"இறைவன் தன் குழந்தைகளுடன் பேசுகிறார்" என்ற தலைப்பில் ஜெர்மன் மொழியில் முதன் முதல் வெளியான விவிலியம், நடப்பு ஆண்டில் மேலும் 23 புதிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு மேலும் 10 இலட்சம் பிரதிகள் பிரசுரமாகும் என்று Aid to the Church in Need அமைப்பு அறிவித்துள்ளது.


8. கிராமத்திற்குத் தேவையான முடிவெடுக்க பஞ்சாயத்து அமைப்புக்களுக்கு பொறுப்பும் அதிகாரமும் உண்டு - இந்தியாவின் உச்ச நீதி மன்றம்

ஜூலை,04,2012. ஒவ்வொரு கிராமத்திற்கும் தேவையானவைகளை முடிவெடுக்க பஞ்சாயத்து அமைப்புக்களுக்கு பொறுப்பும் அதிகாரமும் உண்டு என்று இந்தியாவின் உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவா மாநிலத்தில் உள்ள Calangute என்ற கிராமத்தில் தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்ட வர்த்தகத் திட்டங்களுக்கு எதிராக அக்கிராமத்தின் பஞ்சாயத்து தடைவிதித்தது. பஞ்சாயத்து விதித்த தடை செல்லாது என்று அங்கிருந்த அரசு அதிகாரிகள் கூறியதைத் தொடர்ந்து, அப்பஞ்சாயத்து மும்பை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது.
பஞ்சாயத்துக்கு தடை விதிக்க அதிகாரமில்லை என்று மும்பை உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, Calangute பஞ்சாயத்து உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த G.S.Singhvi, S.J.Mukhopadhya என்ற உச்ச நீதி மன்ற நீதிபதிகள் அடங்கியக் குழு, தங்கள் கிராமத்தின் நலத்திற்கென முடிவுகள் எடுக்க பஞ்சாயத்து அமைப்பிற்கு முழு உரிமை உண்டு. நல்ல முறையில் செயல்படும் பஞ்சாயத்துக்கள் இந்திய அதிகாரத் துறையின் முக்கிய ஓர் அங்கம் என்று தீர்ப்பளித்தது.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...