Tuesday, 10 July 2012

Catholic News in Tamil - 03/07/12


1. விசாகப்பட்டிணம் உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயர் ஆயர் Prakash Mallavarapu

2. ஒப்புரவு, நீதி மற்றும் அமைதியை ஊக்குவிப்பது காங்கோ திருஅவையின் முதன்மையான மறைப்பணியாக கர்தினால் - Filoni

3. கென்யாவில் இஞ்ஞாயிறன்று நடைபெற்ற தாக்குதல்களுக்குக் காரணம் அரசியல் நோக்கங்களே - Garissa ஆயர் Paul Darmanin

4. வியட்நாமில் ஞாயிறு திருப்பலிக்கென கூடியிருந்த கத்தோலிக்கர்கள் தாக்கப்பட்டனர்

5. இந்தியாவில் திருஅவை நிறுவனங்களை நடத்துவதற்குப் பொதுநிலையினர் ஆர்வம்

6. மாநில அரசுக்கு எதிராக மத்தியப்பிரதேசக் கத்தோலிக்கத் தலத் திருஅவை தொடுத்திருந்த வழக்கை மீண்டும் பெற்றுக்கொண்டது

7. பாதரசப் பயன்பாட்டைக் குறைப்பதற்கு முயற்சி

8. இலங்கைக்கு நிதியுதவி வழங்கிய நாடுகளில் இந்தியா முதலிடம்

------------------------------------------------------------------------------------------------------
1. விசாகப்பட்டிணம் உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயர் ஆயர் Prakash Mallavarapu

ஜூலை03,2012. இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள விசாகப்பட்டிணம் உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயராக ஆயர் Prakash Mallavarapu அவர்களை இச்செவ்வாயன்று நியமித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
விசாகப்பட்டிணம் உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றி பேராயர் Mariadas Kagithapu அவர்களின் பணி ஓய்வை, திருஅவை சட்ட எண் 401-1ன்படி ஏற்றுக்கொண்ட திருத்தந்தை, அவ்வுயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயராக, விஜயவாடா ஆயர் Prakash Mallavarapu அவர்களை நியமித்துள்ளார்.
ஹைதராபாத் உயர்மறைமாவட்டத்தின் Jadi-Jamalpur என்ற ஊரில் 1949ம் ஆண்டு பிறந்த ஆயர் Prakash Mallavarapu, 1979ம் ஆண்டில் குருவாகி, 1998ம் ஆண்டில் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
1886ம் ஆண்டில் மறைமாவட்டமாகவும், 2001ம் ஆண்டில் உயர்மறைமாவட்டமாகவும் உயர்த்தப்பட்ட விசாகப்பட்டிணத்தில் சுமார் 2 இலட்சத்து 47 ஆயிரத்துக்கு மேற்பட்ட கத்தோலிக்கர் உள்ளனர்.


2. ஒப்புரவு, நீதி மற்றும் அமைதியை ஊக்குவிப்பது காங்கோ திருஅவையின் முதன்மையான மறைப்பணியாக கர்தினால் - Filoni

ஜூலை03,2012. ஒப்புரவு, நீதி மற்றும் அமைதியை ஊக்குவிப்பது காங்கோ திருஅவையின் முதன்மையான மறைப்பணியாக இருக்கின்றது என்று திருப்பீட விசுவாசப்பரப்பு பேராயத் தலைவர் கர்தினால் Fernando Filoni கூறினார்.
ஆப்ரிக்க நாடான காங்கோவுக்கான அப்போஸ்தலிக்கச் சுற்றுப்பயணத்தை இஞ்ஞாயிறன்று தொடங்கியுள்ள கர்தினால் Filoni, தலைநகர்  Kinshasa அன்னைமரியா பேராலயத்தில் நிகழ்த்திய திருப்பலியில் இவ்வாறு கூறினார்.
காங்கோ மக்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்தி இம்மக்கள் மீது திருத்தந்தை கொண்டிருக்கும் ஒருமைப்பாட்டுணர்வை வெளிப்படுத்தும் நோக்கத்தில் இப்பயணத்தைத் தான் மேற்கொண்டுள்ளதாகவும் கர்தினால் கூறினார்.
சமூக அநீதிகள், மனித உரிமை மீறல்கள், முடிவடையாத சண்டையினால் பாகுபாடின்றி நடத்தப்படும் வன்முறைகள், பாதுகாப்பின்மை ஆகியவற்றுக்கு இந்நாட்டு மக்கள் பலர் பலியாகியுள்ளார்கள் என்றும் கூறினார் கர்தினால்.
வறுமை, நோய், வெறுப்பு, பிளவுகள் ஆகியவை குடும்பங்கள் மற்றும் தனிமனிதரின் துன்பங்களுக்குக் காரணங்களாக உள்ளன என்றும் உரைத்த கர்தினால் Filoni, ஒப்புரவு, நீதி மற்றும் அமைதியை ஊக்குவிப்பது காங்கோ திருஅவையின் முதன்மையான மறைப்பணியாக இருக்கின்றது என்று கூறினார்.


3. கென்யாவில் நடைபெற்ற தாக்குதல்களுக்குக் காரணம் அரசியல் நோக்கங்களே - Garissa ஆயர் Paul Darmanin

ஜூலை03,2012. கென்யாவின் Garissaவில் இஞ்ஞாயிறன்று நடைபெற்ற தாக்குதல்களை ஒரு சமயப் பிரச்சனையாக தான் கருதவில்லை என்று Garissa ஆயர் Paul Darmanin கூறினார்.
Garissaவில் இஞ்ஞாயிறன்று ஒரு கத்தோலிக்கக் கோவிலிலும், மற்றொரு கிறிஸ்தவக் கோவிலிலும் நிகழ்ந்த தாக்குதல்கள், சோமாலியாவில் Shabaab என்ற அடிப்படைவாதக் குழுவினரை அடக்க கென்யாவின் இராணுவம் மேற்கொண்டுள்ள முயற்சிகளின் எதிரொலியாக, Somali Shabaab என்ற அடிப்படைவாதக் குழுவினர் மேற்கொண்ட முயற்சியாக இருக்கலாம் என்று ஆயர் Darmanin, Fides செய்தி நிறுவனத்திடம் விளக்கினார்.
ஆறுதல்களின் அன்னை மரியா கத்தோலிக்கக் கோவிலை நோக்கி எறியப்பட்ட இரு குண்டுகளில் ஒன்று மட்டும் வெளியில் வெடித்தது என்றும், மற்றொரு கிறிஸ்தவக் கோவிலில் தாக்குதல்கள் தீவிரமாக அமைந்ததால், அங்கு 16 பேர் கொல்லப்பட்டனர், இன்னும் பலர் காயமடைந்தனர் என்றும் ஆயர் Darmanin கூறினார்.
இவ்வன்முறைகளுக்குக் காரணம் அரசியல் என்றால், ஏன் கோவில்கள் தாக்கப்பட வேண்டும் என்ற கேள்விக்குப் பதில் அளித்த ஆயர் Darmanin, கென்யா சோமாலியா எல்லைகளுக்கு அருகில் Garissa இருப்பதாலும், கோவில்களிலிருந்து எதிர் தாக்குதல்கள் இருக்காது என்பதாலும், கிறிஸ்தவக் கோவில்கள் வன்முறைகளைச் சந்தித்து வருகின்றன என்று விளக்கம் அளித்தார்.


4. வியட்நாமில் ஞாயிறு திருப்பலிக்கென கூடியிருந்த கத்தோலிக்கர்கள் தாக்கப்பட்டனர்

ஜூலை03,2012. வியட்நாமின் Con Cuong மாவட்டத்தில் ஜூலை 1ம் தேதி ஞாயிறு திருப்பலிக்கென கூடியிருந்த கத்தோலிக்கர்களை வியட்நாம் நாட்டுப்பற்றுக் கழகம் என்ற பெயர் தாங்கிய குழுவினர் வன்மையாகத் தாக்கினர்.
இஞ்ஞாயிறு மாலை அருள்தந்தை Nguyễn Đình Thuc திருப்பலியைத் துவக்கியதும் இந்த வன்முறை கும்பல் சிற்றாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த மக்களைக் கொடூரமாகத் தாக்கியதில் பலர் காயமுற்றனர். Maria Ngo Thi Thanh என்ற பெண் தலையில் பலத்த அடிபட்டு தற்போது மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
Con Cuong மாவட்டத்தில் கத்தோலிக்கர்கள் திருப்பலியையும், மற்ற வழிபாடுகளையும் நடத்துவதற்கு எதிராக அரசு அதிகாரிகள் எச்சரிக்கைகளை விடுத்து வந்துள்ளனர். கடந்த நவம்பர் மாதம் முதல் அங்கு கத்தோலிக்கர்களுக்கு எதிரான வன்முறைகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.
இஞ்ஞாயிறன்று வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் ஒவ்வொருவருக்கும் அரசு அதிகாரிகள் பணம் வழங்கினர் என்று பெயர் சொல்ல விரும்பாத சிலர் ஆசிய செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளனர்.
வியட்நாமில் நிலவும் மதச் சுதந்திரம் பற்றிய சட்டங்களைச் சரிவரத் தெரிந்துகொள்ளாத அரசு அதிகாரிகள் தவறாக நடந்து கொள்கின்றனர் என்று கூறும் கத்தோலிக்கர்கள், இந்த வன்முறைகளைத் தடுக்க Vinh மறைமாவட்ட ஆயர் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று தாங்கள் நம்புவதாகவும் கூறினர்.


5. இந்தியாவில் திருஅவை நிறுவனங்களை நடத்துவதற்குப் பொதுநிலையினர் ஆர்வம்

ஜூலை03,2012. இந்தியாவில் ஆயர்களும் அருட்பணியாளர்களும் ஆன்மீகப்பணியில் மட்டும் ஈடுபட வேண்டுமெனவும், பள்ளிகளையும், மற்ற திருஅவை நிறுவனங்களையும் பொதுநிலை விசுவாசிகள் நடத்துவதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டுமென்றும் இந்திய கத்தோலிக்கப் பொதுநிலை விசுவாசிகளின் முதல் மாமன்றத்தில் பரிந்துரைக்கப்பட்டது.
15 வட இந்திய மறைமாவட்டங்களிலிருந்து ஏறக்குறைய 100 பிரதிநிதிகள் புதுடெல்லியில் கலந்து கொண்ட மாமன்றத்தில் இவ்வாறு கூறப்பட்டது என UCA செய்தி நிறுவனம் கூறியது.
AICU என்ற அனைத்திந்திய கத்தோலிக்க கழகமும், டெல்லி உயர்மறைமாவட்ட கத்தோலிக்கக் கழக கூட்டமைப்பும் இணைந்து நடத்திய இந்த மாமன்றம், கத்தோலிக்கரின் உரிமைகள் மற்றும் கடமைகளைத் தெளிவுபடுத்தும் நோக்கத்தில் நடத்தப்பட்டது.
இந்த மாமன்றம் குறித்துப் பேசிய AICU கழகத்தின் உதவித் தலைவர் Eugene Gonsalves, அனைத்து மாநில ஆலோசனை அமைப்புகளில் கலந்து பேசப்பட்ட பின்னர் இறுதித் தீர்மானங்கள் எடுக்கப்பட்டு, அவை அந்தந்த மாநில ஆயர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறியுள்ளார். 
இந்த ஆலோசனை மாமன்றங்கள் 2013ம் ஆண்டு பிப்ரவரியில் முடிவடையும் என்றும் Gonsalves தெரிவித்தார்.


6. மாநில அரசுக்கு எதிராக மத்தியப்பிரதேசக் கத்தோலிக்கத் தலத் திருஅவை தொடுத்திருந்த வழக்கை மீண்டும் பெற்றுக்கொண்டது

ஜூலை03,2012. மத்தியப்பிரதேச மாநில அரசுக்கு எதிராக கத்தோலிக்கத் தலத் திருஅவை தொடுத்திருந்த வழக்கை மீண்டும் பெற்றுக்கொண்டதாக இச்செவ்வாயன்று அறிவித்தது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள மாணவ, மாணவியர் சூரிய வழிபாட்டில் ஈடுபட வேண்டுமென்று அரசு ஆணை பிறப்பித்ததை அடுத்து, தலத் திருஅவையும், இஸ்லாமிய அமைப்புக்களும் அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்திருந்தன.
மாநில அரசு இவ்வாணையை விலக்கிக் கொள்வதாகவும், விருப்பமுடையோர் மட்டுமே இந்த முயற்சியில் கலந்து கொள்ளலாம் என்று அறிவித்ததாலும், தலத் திருஅவை வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டது.
மாணவர்களின் உடல் நலனை வளர்ப்பதற்கு யோகா பயிற்சியும், சூரிய வழிபாடும் நடத்தவேண்டும் என்று 2007ம் ஆண்டு மாநில அரசு ஆணை பிறப்பித்தபோது, இஸ்லாமியர் இவ்வாணையை எதிர்த்து வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கைத் தொடர்ந்து, இந்த முயற்சிகள் ஒவ்வொருவரின் சொந்த விருப்பப்படி நடைபெறலாம் என்று அரசு அறிவித்தது.
தற்போது, ஒரே நாளில் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களும் சூரிய வழிபாட்டில் ஈடுபட்டனர் என்ற உலகச் சாதனையை நிகழ்த்தி, கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்று மாநில அரசு இந்த ஆணையைப் பிறப்பித்தது என்று UCA செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
சூரிய வழிபாடு தங்கள் மதக் கோட்பாடுகளுக்கு முரணானது என்று சிறுபான்மையினரான கத்தோலிக்க, கிறிஸ்தவ, இஸ்லாமியரின் பள்ளிகள் இந்த ஆணையை எதிர்த்தன.


7. பாதரசப் பயன்பாட்டைக் குறைப்பதற்கு முயற்சி

ஜூலை03,2012. மனிதரின் நலவாழ்வுக்குப் பெரும் ஆபத்தாக இருக்கும் பாதரசத்தின் பயன்பாட்டைக் குறைப்பதற்கு உலக அளவில் உடன்படிக்கை ஒன்று கொண்டுவரப்படுவதற்கு 500க்கும் மேற்பட்ட அரசு மற்றும் பொது நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன.
உருகுவாய் நாட்டின் Punta del Este வில் ஐ.நா.வின் ஆதரவுடன் 6 நாள் கூட்டம் நடத்தி வரும் இந்நிறுவனங்கள், தங்கச் சுரங்கங்களிலும் மற்ற தொழில்நுட்பங்களிலும் பாதரசம் பயன்படுத்தப்படுவதைக் குறைப்பதற்கு நடைமுறை வழிகாட்டிகளை உருவாக்குவதற்கு முயற்சித்து வருகின்றன.
அண்மை நிதிநெருக்கடிகளின் மத்தியிலும் தங்கத்தின் மதிப்பு அதிகரித்துள்ளவேளை, உலகில் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் 1 கோடியே 20 இலட்சம் முதல் 1 கோடியே 50 இலட்சம் பேர் வரை தங்கத்தைப் பரித்து எடுக்கும் ஆபத்தான பணியில் ஈடுபட்டுள்ளனர்.


8. இலங்கைக்கு நிதியுதவி வழங்கிய நாடுகளில் இந்தியா முதலிடம்

ஜூலை03,2012. இலங்கைக்கு நிதியுதவிகளை வழங்கிய நாடுகளில் கடந்த ஆண்டில் சீனா முன்னிலை வகித்தவேளை, தற்போது அந்த இடத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது என ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
2012ம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் இலங்கைக்கு மொத்தம் 101 கோடியே 50 இலட்சம் டாலர் வெளிநாட்டு நிதியுதவிகள் கிடைத்துள்ளதாக இலங்கையின் அதிகாரபூர்வப் புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
இதில் இந்தியா மட்டும் 74 கோடியே 8 இலட்சம் டாலரை இலங்கைக்கு வழங்கியுள்ளது. இதில் 27 கோடியே 51 இலட்சம்  டாலர் நன்கொடையாகும்.
இலங்கையின் அண்மைய வரலாற்றில் வழக்கத்துக்கு மாறாக கிடைத்துள்ள மிகப்பெரிய நன்கொடை இதுவாகும்.
இதன்மூலம் இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் 49,000 வீடுகள் கட்டப்படவுள்ளன.
12.6 மில்லியன் டாலர் நன்கொடை உள்ளிட்ட 175.3 மில்லியன் டாலர் நிதியுதவியை இலங்கைக்கு வழங்கியுள்ளது ஜப்பான்.
மூன்றாவது இடத்தில் நெதர்லாந்து உள்ளது. இந்த நாடு 102.5 மில்லியன் டாலரை நிதியுதவியாக அளித்துள்ளது.
கடந்த ஆண்டில் முதலிடத்தில் இருந்த சீனா இம்முறை நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. சீனா இந்த ஆண்டில் 32.5 மில்லியன் டாலரையே, இலங்கைக்கு வழங்கியுள்ளது.



No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...