Tuesday, 29 November 2011

Catholic News - hottest and latest - 29 November 2011

1.  அனைத்துலக மாணவர்களின் மேய்ப்புப்பணி அக்கறை குறித்த நான்கு நாள் உலக கருத்தரங்கு

2.  உலகின் தட்பவெப்ப நிலை மாற்றங்கள் குறித்த உடனடி நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர் தென் ஆப்ரிக்க ஆயர்கள்

3.  நீர் குறித்த மும்பை சர்வதேச கருத்தரங்கில் திருப்பீடப் பிரதிநிதி

4.  பங்களாதேசின் ஏழைக் குழந்தைகளுக்கு அடிப்படைக்கல்வி வழங்கும் காரித்தாஸின் திட்டத்திற்கு ஐரோப்பிய ஐக்கிய நாடுகள் உதவி

5.  புருண்டி நாட்டில் அருள்சகோதரி ஒருவரும், சுயவிருப்பப்பணியாளர் ஒருவரும் கொலைச் செய்யப்பட்டுள்ளனர்.

6.  அன்னை திரேசாவின் பிறரன்பு சபை சகோதரி பிணையத்தில் விடுவிக்கப்பட்டார்

7.  காணாமல் போதல் சம்பவங்கள் இடம்பெறும் நாடுகளில் இலங்கை இரண்டாம் இடம் வகிக்கிறது

------------------------------------------------------------------------------------------------------

1.  அனைத்துலக மாணவர்களின் மேய்ப்புப்பணி அக்கறை குறித்த நான்கு நாள் உலக கருத்தரங்கு

நவ.29,2011. அனைத்துலக மாணவர்களின் மேய்ப்புப்பணி அக்கறை குறித்த நான்கு நாள் உலக கருத்தரங்கு இப்புதன் முதல் சனிக்கிழமை வரை உரோம் நகரில் இடம்பெறுகிறது.
'அனைத்துலக நாடுகளின் மாணவர்களும் கலாச்சாரங்களின் சந்திப்பும்'  என்ற தலைப்பில் குடியேற்றதாரருக்கான திருப்பீட அவை ஏற்பாடு செய்துள்ள இக்கருத்தர‌ங்கில், அவ்வவையின் தலைவர் பேராயர் Antonio Maria Vegliò, அவ்வவை செயலர் ஆயர் ஜோசப் களத்திப்பரம்பில், கத்தோலிக்கக் கல்விக்கான திருப்பேராயத்தின் தலைவர் கர்தினால் Zenon Grocholewski ஆகியோருடன் பல கிறிஸ்தவ சபைகளின் உயர்மட்டப் பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர்.
' கலாச்சாரமும் நற்செய்தியும்', 'கலாச்சாரங்களின் சந்திப்பும், பள்ளி மற்றும் பல்கலைகழகங்களில் நற்செய்தி அறிவிப்பும்', 'கலாச்சாரமும் கல்வியும்', 'சர்வதேச மாணவர்களுக்கான மேய்ப்புப்பணி தேவை மற்றும் சவால்கள்'  'உலகமயமாக்கப்பட்ட சமுதாயத்தில் இளையத் தலமைத்துவத்தின் எடுத்துக்காட்டு'  போன்ற தலைப்புகளில் இந்த நான்கு நாள் கருத்தங்கில் விவாதங்கள் இடம்பெற உள்ளன.

2.  உலகின் தட்பவெப்ப நிலை மாற்றங்கள் குறித்த உடனடி நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர் தென் ஆப்ரிக்க ஆயர்கள்

நவ.29,2011. உலகின் தட்பவெப்ப நிலை மாற்றங்கள், மனிதனின் தவறான நடவடிக்கைகளால் வெகுவேகமாக இடம்பெறுவதை மனதிற்கொண்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர் தென் ஆப்ரிக்க ஆயர்கள்.
தென் ஆப்ரிக்காவின் டர்பனில் இத்திங்கள் முதல் டிசம்பர் 9ம் தேதி வரை இடம்பெறும் தட்பவெப்ப நிலை மாற்றங்கள் குறித்த ஐ.நா.வின் 17வது  மாநாட்டையொட்டி சுற்றுமடல் ஒன்றை வெளியிட்டுள்ள ஆயர்கள், எதிர்மறை தட்பவெப்ப நிலை மாற்றங்களுக்குக் காரணமான வாயுக்களை வெளியிடும் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள பணக்கார நாடுகள், அப்பாதிப்புகளை ஈடு செய்ய முன்வருவதோடு, பாதிப்பற்ற வழிகளைச் செயல்படுத்த வேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ளனர்.
பாதிப்புதரும் வாயுக்களைக் கட்டுப்படுத்துவது குறித்த 1997ன் Kyoto ஒப்பந்தம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, அனைவராலும் கட்டாயமாக கடைபிடிக்கப்படும் ஓர் ஒப்பந்தமாக மாற்றப்படவேண்டும் எனவும் தங்கள் மேய்ப்புப்பணி சுற்றறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளனர் தென் ஆப்ரிக்க ஆயர்கள்.

3.  நீர் குறித்த மும்பை சர்வதேச கருத்தரங்கில் திருப்பீடப் பிரதிநிதி

நவ.29,2011. தண்ணீர் குறித்த அனைத்துலகக் கருத்தரங்கு கடந்த வார இறுதியில் கர்தினால் பால் போப்பார்டின் பங்கேற்புடன் மும்பை புனித ஆன்ட்ரூ கல்லூரியில் இடம் பெற்றது.
கர்தினாலின் தலைமையில் 'தண்ணீர்: அமைதி மற்றும் இணக்க வாழ்வை முன்னேற்றுவதில் விவகாரங்களும் சவால்களும்' என்ற தலைப்பில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் அறிவியலாளர் நிரஞ்சன் பில்ஜி மற்றும் மகராஷ்ட்ராவின் முன்னாள் தலைமைச் செயலர் சங்கரன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
அமைதி மற்றும் இணக்க வாழ்வை ஊக்குவிப்பதிலும் நல ஆதரவிலும் தண்ணீரின் பங்கு குறித்து இக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.

4.  பங்களாதேசின் ஏழைக் குழந்தைகளுக்கு அடிப்படைக்கல்வி வழங்கும் காரித்தாஸின் திட்டத்திற்கு ஐரோப்பிய ஐக்கிய நாடுகள் உதவி

நவ.29,2011. பங்களாதேஷ் நாட்டில் ஏழைக்குழந்தைகளுக்கு அடிப்படைக்கல்வி வழங்கும் திட்டத்திற்கு நிதி உதவி வழங்க உள்ளதாக அந்நாட்டு கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்புடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது  ஐரோப்பிய ஐக்கிய நாடுகள் அவை.
ஒரு கோடியே 32 இலட்சம் டாலர்கள் மதிப்பு கொண்ட இத்திட்டம் காரித்தாஸ் பணியாற்றும் ஆறு மாநிலங்களில் உள்ள ஏழைச்சிறார்களுக்கு ஆறு ஆண்டு காலம் கல்வி வழங்க பயன்படுத்தப்படும்.
கத்தோலிக்கக் காரித்தாஸ் அமைப்பின் வழி செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தின் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

5.  புருண்டி நாட்டில் அருள்சகோதரி ஒருவரும், சுயவிருப்பப்பணியாளர் ஒருவரும் கொலைச் செய்யப்பட்டுள்ளனர்.

நவ.29,2011. புருண்டி நாட்டில் பணியாற்றி வந்த கத்தோலிக்க அருள்சகோதரி ஒருவரும், அவருடன் இணைந்து பணியாற்றி வந்த சுயவிருப்பப்பணியாளர் ஒருவரும் இஞ்ஞாயிறு இரவு திருடர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
குரவேசியா நாட்டைச் சேர்ந்த அருள்சகோதரி Lukrecija Mamica, அவருடன் பணியாற்றி வந்த இத்தாலிய சுய விருப்பப்பணியாளர் Francesco Bazzani ஆகியோர் தங்கியிருந்த இல்லத்திற்குள் இரவு புகுந்த திருடர்கள் இவர்களைக் கொலை செய்ததுடன், இத்தாலிய அருள்சகோதரி Carla Brianzaவைப் படுகாயப்படுத்தியுள்ளனர்.
இவர்கள் மூவரும் பணியாற்றிக் கொண்டிருந்த புருண்டியின் மேற்கு பகுதி மருத்துவ மனைக்கு அருகில் உள்ள இவர்களின் இல்லத்தில் புகுந்த திருடர்கள், அருள்சகோதரிகள் மமிக்கா மற்றும் பிரியான்சா ஆகியோரைத் துப்பாக்கியால் சுட்டதில் மமிக்கா உடனடியாக மரணமடைந்தார். இத்தாலிய சுயவிருப்பப்பணியாளர் Bazzaniயைக் கடத்த முயன்றபோது இடம்பெற்றப் போராட்டத்தில் அவரும் கொல்லப்பட்டார்.‌

6.  அன்னை திரேசாவின் பிறரன்பு சபை சகோதரி பிணையத்தில் விடுவிக்கப்பட்டார்

நவ.29,2011. குழந்தைகளை விற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த வெள்ளியன்று இலங்கை காவல் துறையால்  கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட அன்னை திரேசாவின் பிறரன்பு சபை அருள்சகோதரி மேரி எலிசா நீதிமன்றத்தால் பிணையத்தில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அருள்தந்தை சுனில் டி சில்வா மற்றும் இலங்கை காரித்தாஸ் அலுவலகத்தின் அருள்சகோதரி நிலாந்தி ஆகியோர் பிணையத் தொகையைச் செலுத்திய பின், அருள்சகோதரி எலிசாவை விடுவித்த நீதிபதி Yvonne Fernando, அவரின் பயணக்கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கக் கோரியதுடன், வழக்கு முடியும்வரை அவர் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது எனவும் கட்டளையிட்டார்.
அருள்சகோதரி எலிசா இதுவரைப் பணியாற்றிய இல்லத்தில் அல்லாமல்  வேறொரு இல்லத்தில் தங்குமாறும் நீதிபதி பணித்துள்ளார்.

7.  காணாமல் போதல் சம்பவங்கள் இடம்பெறும் நாடுகளில் இலங்கை இரண்டாம் இடம் வகிக்கிறது

நவ.29,2011. காணாமல் போதல் சம்பவங்கள் அதிகளவில் தீர்க்கப்படாத நாடுகளின் வரிசையில் இலங்கை இரண்டாம் நிலை வகிப்பதாக Amnesty International என்ற சர்வதேச மன்னிப்பு அமைப்பின் இலங்கைக்கான நிபுணர் Yolanda Foster தெரிவித்துள்ளார்.
காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பான ஆயிரக்கணக்கான விசாரணைகள் இன்னமும் பூர்த்தியாகவில்லை எனவும், இதனால் பல குடும்பங்கள் தொடர்ந்து பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதாகவும் சர்வதேச மன்னிப்பு அமைப்பின் நிபுணர் தெரிவித்தார்.
சித்திரவதை சம்பவங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் தொடர்பாக, அண்மையில் லண்டனில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது Foster இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கையில் இடம்பெறும் குற்றச் செயல்களுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற சர்வதேச நியதிக்கு மதிப்பளிக்க வேண்டுமாயின், சுதந்திர விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை விவகாரங்களை ஏனைய நாடுகள் தவறான முன்னுதாரணமாகக் கொள்ளாமல் இருப்பதற்காகவும் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் என Foster மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...