Tuesday, 22 November 2011

Catholic News - hottest and latest - 22 November 2011

1. புதிய நற்செய்திப்பணி என்பது கிறிஸ்தவ விசுவாச வாழ்வை வாழ்ந்து அதனைத் தொடர்ந்து அறிவிப்பதாகும் - திருப்பீடச் செயலர்

2. அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களின் போதனையின் ஒளியில், வாழ்வுக்கான நலவாழ்வு மேய்ப்புப்பணி பன்னாட்டுக் கருத்தரங்கு நவ.24-26

3. நவ.28-டிச.2 வத்திக்கானில் பன்னாட்டு இறையியல் ஆணைக்குழு கூட்டம்

4. நற்செய்திப்பணி அறிவிப்புப்பணிக்கு நவீன சமூகப் பன்வலை அமைப்புக்களின் முக்கியத்துவத்தை ஆசிய ஆயர்கள் வலியுறுத்தல்

5. அருள்சகோதரி வல்சா ஜான் கொல்லப்பட்டது தொடர்பாக, ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து தலத்திருச்சபை சந்தேகம்

6. எகிப்திய ஆர்ப்பாட்டங்களில், இளையோர் முக்கிய அங்கம் வகிக்கின்றனர் - கொம்போனி சபை குரு

7. நேபாளக் காரித்தாஸ் வளர்ச்சித்திட்டப் பணியாளருக்குப் பயிற்சி

8. 8. எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்கு உலக அளவில் எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் நல்ல பலனைத் தருகின்றன - ஐ.நா.

------------------------------------------------------------------------------------------------------
1. புதிய நற்செய்திப்பணி என்பது கிறிஸ்தவ விசுவாச வாழ்வை வாழ்ந்து அதனைத் தொடர்ந்து அறிவிப்பதாகும் - திருப்பீடச் செயலர்

நவ.22,2011. புதிய நற்செய்திப்பணி என்பது கிறிஸ்தவ விசுவாச வாழ்வை வாழ்ந்து அதனைத் தொடர்ந்து அறிவிப்பதாகும் என்று திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே கூறினார்.
புதிய நற்செய்திப் பணி என்பது கிறிஸ்துவின் நற்செய்தியில் பொதிந்து கிடக்கும் புதியனவற்றிற்கும் பழையனவற்றிக்கும் இடையே இருக்கும் உயிர்த்துடிப்புள்ள உறவைப் புரிந்து கொள்வதாகும் என்று மேலும் கூறினார் கர்தினால் பெர்த்தோனே.
CCEE என்ற ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் அவை உருவாக்கப்பட்டதன் நாற்பதாம் ஆண்டையொட்டி அந்த CCEE அவையும் புதிய நற்செய்திப்பணியை ஊக்குவிக்கும் திருப்பீட அவையும் சேர்ந்து வத்திக்கானில் நடத்திய கூட்டத்தில் இச்செவ்வாயன்று உரையாற்றிய கர்தினால் பெர்த்தோனே, புதிய நற்செய்திப்பணியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
தற்போதைய ஐரோப்பாவின் நிலைமையைக் குறிப்பிட்டுப் பேசிய கர்தினால், ஐரோப்பாவில் பாரம்பரிய விழுமியங்களும் சமூகக் கலாச்சாரமும் ஒருபுறம் அழிவை எதிர்நோக்கி வந்தாலும் மறுபுறம் சொந்த வாழ்க்கையில், குறிப்பாக இளையோர் மத்தியில் கடவுளைத் தேடும் முயற்சியையும் காண முடிகின்றது என்று கூறினார்.
எனவே, பழைய காட்டில் புதிய தளிர்கள் வெளிவருவது போல புதிய நற்செய்திப்பணியிலும் புதிய வசந்த காலம் வெளிப்படும் என்றும் திருப்பீடச் செயலர் கர்தினால் கூறினார்.


2. அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களின் போதனையின் ஒளியில், வாழ்வுக்கான நலவாழ்வு மேய்ப்புப்பணி பன்னாட்டுக் கருத்தரங்கு நவ.24-26

நவ.22,2011. மனித வாழ்வை அன்பு செய்து அதற்குச் சேவை செய்வதற்கு, குறிப்பாக நலிந்தவர்கள் மற்றும் துன்புறுவோருக்குத் தொண்டுபுரிவதற்கு நன்மனம் கொண்ட அனைவரும் அழைக்கப்படுகிறார்கள் என்று திருப்பீட நலவாழ்வுப் பணியாளர்க்கான அவைத் தலைவர் பேராயர் Zygmunt Zimowski கூறினார்.
வத்திக்கானில் திருப்பீட நலவாழ்வுப் பணியாளர்க்கான அவை வருகிற வியாழனன்று தொடங்கும் 26வது பன்னாட்டுக் கருத்தரங்கு குறித்து இச்செவ்வாயன்று நிருபர் கூட்டத்தில் பேசிய பேராயர் Zimowski, இந்தக் கருத்தரங்கானது மனித வாழ்வின் தூய்மையையும் அதன் மாண்பையும் எப்பொழுதும் மதித்துப் பாதுகாப்பதை வலியுறுத்துவதற்கு உதவுவதாக இருக்கும் என்று தெரிவித்தார்.
அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களின் போதனையின் ஒளியில், வாழ்வுக்கான நலவாழ்வு மேய்ப்புப்பணி என்ற தலைப்பில் இக்கருத்தரங்கு நடைபெறும் என்பதையும் பேராயர் குறிப்பிட்டார்.
இந்தியா, மியான்மார், சிங்கப்பூர் உட்பட பல நாடுகளின் 685 பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்வதற்குப் பெயர்களைப் பதிவு செய்துள்ளார்கள் என்றும் அவர் கூறினார்.
இந்தக் கருத்தரங்கு இம்மாதம் 24 முதல் 26 வரை நடைபெறும்.
மேலும், தலத்திருச்சபைகளில் நலவாழ்வுப் பணிக்குப் பொறுப்பான ஆயர்கள் கூட்டம் இப்புதனன்று நடைபெறும் எனவும், இதில் 39 நாடுகளின் 42 ஆயர்களும் இன்னும் இத்துறையில் தேர்ந்த வல்லுனர்களும் கலந்து கொள்வார்கள் எனவும் பேராயர் அறிவித்தார்.


3. நவ.28-டிச.2 வத்திக்கானில் பன்னாட்டு இறையியல் ஆணைக்குழு கூட்டம்

நவ.22,2011. இம்மாதம் 28 முதல் டிசம்பர் 2 வரை பன்னாட்டு இறையியல் ஆணைக்குழு வத்திக்கானில் கூட்டம் ஒன்றை நடத்தவிருப்பதாகத் திருப்பீடம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
திருப்பீட விசுவாசக் கோட்பாட்டுப் பேராயத் தலைவர் கர்தினால் வில்லியம் லெவாடா தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தை, அந்த ஆணையத்தின் புதிய பொதுச் செயலர் ஆயர் Charles Morerod வழி நடத்துவார். 
ஒரே கடவுள் கோட்பாடு, கிறிஸ்தவக் கோட்பாட்டுச் சூழலில் திருச்சபையின் சமூகக் கோட்பாட்டின் முக்கியத்துவம், நவீன இறையியலில் ஆராய்ச்சிகள் ஆகிய தலைப்புகள் இக்கூட்டத்தில் கலந்து ஆராயப்படும் என்று அவ்வறிக்கை மேலும் கூறுகிறது.
இந்த மூன்றாவது தலைப்பு குறித்த குறிப்பிடத்தக்கப் பங்களிப்புக்கள் 2004ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டுகளில் வழங்கப்பட்டுள்ளன என்றும் திருப்பீடம் அறிக்கை கூறுகிறது.


4. நற்செய்திப்பணி அறிவிப்புப்பணிக்கு நவீன சமூகப் பன்வலை அமைப்புக்களின் முக்கியத்துவத்தை ஆசிய ஆயர்கள் வலியுறுத்தல் 

நவ.22,2011. நற்செய்திப்பணி அறிவிப்புப்பணிக்கு நவீன சமூகப் பன்வலை அமைப்புக்களின் முக்கியத்துவத்தை அண்மையில் தாய்வானில் நடைபெற்ற கருத்தரங்கில் வலியுறுத்தியுள்ளனர் ஆசிய ஆயர்கள்.
இம்மாதம் 14 முதல் 19 வரை Hualienல் நடைபெற்ற கருத்தரங்கில், இந்தியா, மியான்மார், மங்கோலியா, மலேசியா, கொரியா, சிங்கப்பூர், புருனெய், தாய்வான், தாய்லாந்து, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளின் சமூகத்தொடர்பு ஆணைக்குழுக்களின் 30க்கு மேற்பட்ட ஆயர்கள், குருக்கள், துறவிகள் மற்றும் பொதுநிலையினர் கலந்து கொண்டனர்.
Facebook, Twitter, YouTube போன்ற நவீன சமூகப் பன்வலை அமைப்புக்களைப் பயன்படுத்தும் முறைகள் குறித்தும் இக் கருத்தரங்கில் கற்றுக் கொடுக்கப்பட்டது.
மேலும், திருச்சபைக்குள் நடக்கும் பாலியல் முறைகேடுகளைக் களைவது குறித்தும் ஆயர்கள் சிந்தித்ததாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.


5. அருள்சகோதரி வல்சா ஜான் கொல்லப்பட்டது தொடர்பாக, ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து தலத்திருச்சபை சந்தேகம்

நவ.22,2011. இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அருள்சகோதரி வல்சா ஜான் கொல்லப்பட்டது தொடர்பாக, அப்பகுதியிலுள்ள மாவோயிஸ்டுகளுக்கு நெருக்கமான ஏழு பேரைக் கைது செய்துள்ள காவல்துறை, இத்துடன் இக்கொலை வழக்கு விவகாரத்தை மூடிமறைக்க முயற்சிக்கிறது என்று தலத்திருச்சபை அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
காவல்துறையின் இந்தத் திடீர் நடவடிக்கை குறித்து சந்தேகத்தை எழுப்பியுள்ள சமூகநலப்பணி மைய இயக்குனர் இயேசு சபை அருள்தந்தை Tom Kavalatt, அப்பகுதியின் சக்திவாய்ந்த நிலக்கரி சுரங்க முதலாளிகளோடு தொடர்புடைய குற்றவாளிகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் நடவடிக்கையாக இது இருக்கின்றது என்று கூறினார்.
இந்த மாதம் 15ம் தேதி இரவு கொடூரமாய்க் கொல்லப்பட்ட அருள்சகோதரி வல்சாவுக்கும் அப்பகுதியின் நிலக்கரி சுரங்க முதலாளிகளுக்கும் இடையே பல தடவைகள் பிரச்சனைகள் ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, நிலக்கரி சுரங்கத் தொழில் குற்றக்கும்பல் குறித்த தனது விசாரணையைத் தலத்திருச்சபை தொடர்ந்து செய்து வருகின்றது என்று ஆசியச் செய்தி நிறுவனம் கூறியது.


6. எகிப்திய ஆர்ப்பாட்டங்களில், இளையோர் முக்கிய அங்கம் வகிக்கின்றனர் - கொம்போனி சபை குரு

நவ.22,2011. எகிப்தில் இராணுவ ஆட்சியை எதிர்த்து நடத்தப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்தில், இளையோர் முக்கிய அங்கம் வகித்துப் போராடுகின்றனர் என்று கெய்ரோவில் மறைப்பணியாற்றும் கொம்போனி சபை குரு Luciano Verdoscia தெரிவித்தார்.
பாதுகாப்புப் படையினருக்கும் பொது மக்களுக்கும் இடையே நடக்கும் மோதல்கள் இரவு நேரங்களிலும் தொடருகின்றன என்றுரைத்த குரு Verdoscia, இந்த மோதல்கள் இடம் பெறுவதற்கு இரண்டு விவகாரங்கள் முக்கியமானவை என்று கூறினார்.
எகிப்தில் அண்மை மாதங்களில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டங்களில் கைது செய்யப்பட்டு இராணுவ நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தற்போதைய ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன என்று அக்கரு கூறினார்.
கடந்த 3 நாள்களாக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் குறைந்தது 20 பேர் இறந்தனர் மற்றும் சுமார் 400 பேர் காயமடைந்துள்ளனர்.  
மேலும், இச்செவ்வாய்க்கிழமையும் இராணுவ ஆட்சியை எதிர்த்து இலட்சக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எகிப்தில், அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக், மக்களால் விரட்டப்பட்ட பின், தற்காலிக ஆட்சிப் பொறுப்பேற்ற இராணுவ உயர்மட்ட அவை, ஆறு மாதங்களுக்குள், நாடாளுமன்றத் தேர்தல் நடத்துவதாக வாக்களித்தது. ஆனால், இத்தேர்தல் உட்பட அந்த அவை சொன்ன எதுவும் நிறைவேற்றப்படவில்லை. மேலும், அண்மையில், புதிய அரசியல் அமைப்பின் வழிகாட்டு நெறிகள் அடங்கிய ஆவணம் ஒன்றையும் இராணுவ அவை சமர்ப்பித்தது. அதில், இராணுவத்துக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது. இந்த ஆவணத்தை முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்த்தன. ஆர்ப்பாட்டங்களும் தொடருகின்றன.


7. நேபாளக் காரித்தாஸ் வளர்ச்சித்திட்டப் பணியாளருக்குப் பயிற்சி

நவ.22,2011. நேபாளக் கத்தோலிக்கத் திருச்சபையின் காரித்தாஸ் அமைப்பு அந்நாட்டின் வளர்ச்சித்திட்டப் பணியாளருக்குப் பயிற்சியளித்து வருகிறது.
நேபாளக் காரித்தாஸ் நடத்திய 10 நாள் பயிற்சிப் பாசறையில் பங்கு கொண்ட 21 பேரில் பெரும்பாலானவர்கள் இந்துக்கள் மற்றும் புத்தமதங்களைச் சேர்ந்தவர்கள்.
கத்தோலிக்கச் சமூகப் போதனைகள், வேளாண்துறை வளர்ச்சி, தற்கொலைத் தடுப்பு நடவடிக்கை, எய்ட்ஸ் நோய்க் குறித்த விழிப்புணர்வு, கருக்கலைப்புக்கு எதிரான விவகாரங்கள் மற்றும் பிற சமூகத் தலைப்புகள் இப்பயிற்சியில் கற்றுக் கொடுக்கப்பட்டன.
நேபாளத்தைப் பாதிக்கும் பல சமூகப் பிரச்சனைகளைக் கையாள்வதற்கு இப்பயிற்சி உதவியதாக இதில் பங்கு கொண்டவர்கள் கூறியுள்ளனர்.


8. எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்கு உலக அளவில் எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் நல்ல பலனைத் தருகின்றன - ஐ.நா.

நவ.22,2011. எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்தி அதற்குச் சிகிச்சை அளிப்பதற்கு உலக அளவில் எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் நல்ல பலனைத் தருவதாக ஐ.நா.வெளியிட்ட புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.
உலக அளவில் எய்ட்ஸ் நோய் 2011என்ற தலைப்பில் ஐ.நா. எய்ட்ஸ் நோய்க் கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், 1997ம் ஆண்டில் இந்நோய்க் கிருமிகளால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உச்சநிலையை எட்டியிருந்தது, ஆனால் இவ்வெண்ணிக்கை குறைந்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
இளையோர், குறிப்பாக, ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த பகுதிகளில் வாழும் இளையோரின் பாலியல் நடவடிக்கைகள் மாறியிருப்பதே இதற்குக் காரணம் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
2010ம் ஆண்டில் சுமார் 27 இலட்சம் பேர் இந்நோய்க் கிருமிகளால் புதிதாகத் தாக்கப்பட்டனர் என்றும், இந்நோய் தொடர்பாக அவ்வாண்டில் 7 இலட்சம் பேர் இறந்தனர் என்றும் அவ்வறிக்கை மேலும் கூறுகிறது.
தற்போது உலகில் 3 கோடியே 40 இலட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர். டிசம்பர் ஒன்றாந் தேதி உலக எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு தினமாகும்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...