Sunday, 20 November 2011

Catholic News - hottest and latest - 19 November 2011

1. திருத்தந்தையின் 22வது வெளிநாட்டுத் திருப்பயணம்
  பெனின் நாட்டில் திருத்தந்தை 2ம் நாள் நிகழ்வுகள்

2. அன்னைமரியா வழியாக இயேசுவைத் தேடுமாறு திருத்தந்தை அழைப்பு

3. உங்கள் மக்களின் நம்பிக்கையை ஏமாற்றி விடாதீர்கள் - உலகத் தலைவர்களுக்குத் திருத்தந்தை விடுத்த அழைப்பு

4. குருக்கள், துறவியர், குருமட மாணவர்கள் மற்றும் விசுவாசிகளுக்கு திருத்தந்தை வழங்கிய உரை

5. ஆப்ரிக்க ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் அப்போஸ்தலிக்க ஏட்டை வெளியிடுகையில் திருத்தந்தை வழங்கிய உரை

------------------------------------------------------------------------------------------------------

திருத்தந்தையின் 22வது வெளிநாட்டுத் திருப்பயணம்
பெனின் நாட்டில் திருத்தந்தை 2ம் நாள் நிகழ்வுகள்

நவ.19,2011. மேற்கு ஆப்ரிக்க நாடான பெனின் நாட்டுக்கு மூன்று நாள் திருப்பயணமாக இவ்வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு அந்நாடு சென்ற திருத்தந்தை 16ம் பெனடிக்ட், ஆன்மீக மற்றும் ஒழுக்கநெறி அழிவுகளின் மத்தியில் ஆப்ரிக்கக் கண்டம் தனது தொன்மைமிகு விழுமியங்களைப் பாதுகாக்குமாறு அழைப்பு விடுத்தார். உரோமையிலிருந்து பெனின் நாட்டுக்குச் சென்ற ஆறுமணி நேர விமானப் பயணத்தில் நிருபர் சந்திப்பையும் நடத்தினார். ஆப்ரிக்கக் கண்டத்தில் திருச்சபையின் எதிர்காலம் குறித்த அப்போஸ்தலிக்க ஏட்டை வெளியிடுவதற்கு பெனின் நாடு தேர்ந்தெடுக்கப்பட்டதன் காரணத்தை முதலில் விளக்கினார். பெனின், அமைதியிலும் சனநாயகத்திலும் எனப் பல வகைகளில் மற்ற ஆப்ரிக்க நாடுகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருக்கின்றது. இந்நாட்டில் பல்வேறு மதங்கள் நல்லிணக்கத்துடன் வாழ்கின்றன என்றார். விமானம் முப்பதாயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது நிருபர்களுக்குப் பதில் அளித்துக் கொண்டு சென்ற திருத்தந்தை, ஆப்ரிக்கா வெறும் பிரச்சனைகளின் கண்டமாக மட்டும் நோக்கப்படக் கூடாது. ஆப்ரிக்காவின் பிரச்சனைகள் இன்னும் தீரவில்லை. ஆயினும் அக்கண்டத்தில் வாழ்க்கையை நேர்மறையாகப் பார்க்கும் புத்துணர்வு இருக்கிறது, நம்பிக்கை நிறைந்த இளமைத்துவம் இருக்கின்றது, அத்துடன் நகைச்சுவை உணர்வும் மகிழ்ச்சி உணர்வும் இருக்கின்றன. அன்றாட வாழ்க்கையில் கடவுள் பிரசன்னமாய் இருக்கிறார் என்ற ஒரு விழிப்புணர்வு இன்னும் ஆப்ரிக்கர்களிடம் இருக்கின்றது என்றார்.
53 நாடுகளைக் கொண்ட ஆப்ரிக்கக் கண்டத்தில் அமைதி நிலவும் இந்த பெனின் நாட்டில் கத்தோலிக்கர் குறைவாக இருந்தாலும் பல மதத்தலைவர்களும் திருத்தந்தைக்கு அமோக வரவேற்பு அளித்தனர். இப்பயணத்தின் முதல் நாள் மாலை 4.30 மணிக்கு இந்நாட்டின் மிகப் பெரிய நகரமான கொட்டுன்னு நகரின் இரக்கமுள்ள அன்னைமரியா பேராலயம் சென்றார் திருத்தந்தை. அங்கு சிறிது நேரம் திருநற்கருணையின் முன்பாகச் செபித்த அவர், அப்பேராலயத்திலுள்ள கொட்டுன்னு உயர்மறைமாவட்ட முன்னாள் இரண்டு பேராயர்கள் கிறிஸ்டோப், இசிதோர் ஆகியோரின் கல்லறைகள் முன்பாகவும் செபித்தார்.
அப்பேராலயத்தில் ஆற்றிய மறையுரையில், அன்னைமரியா வழியாக இயேசுவைத் தேடுமாறு கேட்டுக் கொண்டார். அங்குப்  பாடப்பட்ட தே தேயும்என்ற பழமையான நன்றிப் பாடலைச் சொல்லித் தனது மறையுரையைத் தொடங்கினார் திருத்தந்தை. தன் மறையுரைக்குப்பின் அனைவரையும் ஆசீர்வதித்து அங்கிருந்து திறந்த காரில் கொட்டுன்னு திருப்பீடத் தூதரகம் சென்று இரவு உணவருந்தி உறங்கச் சென்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இரண்டாம் நாள்

ஒப்புரவு, நீதி, அமைதி என்ற தலைப்பில் இடம் பெற்று வரும் திருத்தந்தையின் இந்தப் பெனின் நாட்டுத் திருப்பயணத்தின் இரண்டாவது நாளான இச்சனிக்கிழமை காலை கொட்டுன்னு திருப்பீடத் தூதரகத்தில் தனியாகத் திருப்பலி நிகழ்த்தினார். பின்னர் காலை 8.45 மணிக்கு கொட்டுன்னு அரசுத்தலைவர் மாளிகை சென்றார். அங்கு பெனின் அரசு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள், நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களைச் சந்தித்தார். முதலில் அரசுத்தலைவர் தாமஸ் Yayi Boni  யும் பெனின் தேசிய அவையின் தலைவர் Koubourath Osséni யும் உரையாற்றினர். திருத்தந்தை, ஆப்ரிக்காவின் மற்றும் ஆப்ரிக்கர்களின் உண்மையான நண்பர், இதற்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறோம் என்றார் Koubourath Osséni.
பின்னர் திருத்தந்தை ஆற்றிய உரையில் ஆப்ரிக்காவின் தற்போதைய இரண்டு விவகாரங்கள் பற்றிக் குறிப்பிட விரும்புவதாகத் தெரிவித்தார். ஒன்று ஆப்ரிக்காவின் சமூக-அரசியல் - பொருளாதாரம். இரண்டு பல்சமய உரையாடல்.
தனது உரையை நிறைவு செய்த திருத்தந்தை, அம்மாளிகையில் அரசுத்தலைவர் தாமஸ் யாயி போனியை மரியாதை நிமித்தம் சந்தித்தார். பின்னர் கொட்டுன்னுவிலிருந்து 43 கிலோ மீட்டரிலிருக்கின்ற குய்தா சென்றார் திருத்தந்தை. கடற்கரை நகரமான குய்தா புனித Gall  குருத்துவக் கல்லூரியில் அடக்கம் செய்யப்பட்டுள்ள கர்தினால் Bernardin Gantin கல்லறையில் செபித்தார். பெனின் நாட்டவரால் மிகவும் மதிக்கப்படும் இக்கர்தினால் திருப்பீடத்தில் கர்தினால்கள் அவையின் தலைவராகவும் ஆயர் திருப்பேராயத்தின் தலைவராகவும் பணியாற்றியவர். திருத்தந்தை 16ம் பெனடிக்டுக்கு மிகவும் நெருக்கமானவர்.
புனித Gall  குருத்துவக் கல்லூரியில் குருக்கள், குருத்துவ மாணவர்கள், துறவிகள் மற்றும் பொதுநிலையினரைச் சந்தித்தார் திருத்தந்தை. அப்போது உள்ளூர் நேரம் பகல் 11 மணி 25 நிமிடங்களாகும். இந்திய நேரம் மாலை 3 மணி 55 நிமிடங்களாகும். குருக்கள் உருவாக்கத்திற்குப் பொறுப்பான ஆயர் பாஸ்கால் முதலில் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். பின்னர் திருத்தந்தையும் உரையாற்றினார்.

இந்தச் சந்திப்புக்குப் பின்னர் குய்தா அமலமரி பசிலிக்காவுக்குத் திறந்த காரில் சென்றார். ஆப்ரிக்க ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் தீர்மானத் தொகுப்பான Africae munus என்ற அப்போஸ்தலிக்க ஏட்டில் கையெழுத்திடும் நிகழ்ச்சிக்காக அப்பசிலிக்கா சென்றார் திருத்தந்தை. பெனின் நாட்டுக்கான இத்திருப்பயணத்தின் நோக்கமே இவ்வேட்டில்  கையெழுத்திட்டு அதனை வெளியிடுவதாகும். இந்த நிகழ்ச்சியில் அரசுத்தலைவர், அவரது மனைவி உட்பட பலர் கலந்து கொண்டனர். முதலில் உலக ஆயர்கள் மாமன்றப் பொதுச் செயலர் முன்னுரை வழங்கினார். பின்னர் திருத்தந்தையும் உரை வழங்கினார்.   
Africae munus எனப்படும் ஆப்ரிக்காவின் அர்ப்பணம்என்ற அப்போஸ்தலிக்க ஏடு, 2009ம் ஆண்டில் வத்திக்கானில் நடைபெற்ற ஆப்ரிக்க ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தில் அந்த ஆயர்கள் முன்வைத்த 57 பரிந்துரைகளை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டதாகும். இரண்டு பாகங்களைக் கொண்ட இந்த ஏட்டின் முதல் பாகம், நீதி, அமைதி மற்றும் ஒப்புரவுப் பணியில், சிறப்பாக நற்செய்தி அறிவிப்புப் பணியின் வழியாக அப்பணியில் திருச்சபையின் அடிப்படை அமைப்பு முறையைக் கொண்டுள்ளது. இரண்டாவது பாகம், கல்வி, நலவாழ்வு மற்றும் சமூகத் தொடர்புச் சாதனங்கள் வழியாகச் சமுதாயத்துக்குத் திருச்சபை ஆற்றும் பணிகளைக் கொண்டுள்ளது. திருமறை நூல்களை வாசித்துச் செபித்தல், ஆப்ரிக்கக் கண்ட திருநற்கருணை மாநாடு, தலத்திருச்சபைகளிலிருந்து புதிய புனிதர்கள், ஒப்புரவு நாட்களை, ஒப்புரவு வாரங்களை, குறிப்பாக திருவருகை காலம் மற்றும் தவக்காலங்களில் ஊக்குவிப்பது போன்ற பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. இந்த ஏடானது, பல்சமய உரையாடலையும் கிறிஸ்தவ சபைகளுக்கிடையே ஒன்றிப்பையும் ஊக்குவிக்கின்றது. பகைவர்களை அன்பு செய்ய அழைக்கும் இயேசுவின் குரலைக் கேட்க வேண்டிய தேவை ஆப்ரிக்காவுக்கு உள்ளது என்று சொல்லிக் கடவுளோடும் அயலாரோடும் சமாதானமாக வாழ இது அழைப்பு விடுக்கிறது. மரபுவழி நடைமுறைப் பழக்கங்களில் தேர்ந்து தெளியவும் குடும்பம், பெண்கள், சிறார், மனித வாழ்வு ஆகியோர் பாதுகாக்கப்படவும் கேட்டுள்ளது. எழுத்தறிவின்மை களையப்படவும் வலியுறுத்துகிறது இவ்வேடு. நியாயமான சுதந்திரமானப் பொதுத் தேர்தல்களுக்கும், சுயேட்சையாக நடைபெறும் நீதித்துறைக்கும் ஒளிவுமறைவற்ற அரசு நிர்வாகத்துக்கும் இவ்வேடு அழைப்பு விடுக்கிறது. இயற்கை வளங்கள் சமமாகவும் சரியாகவும் கையாளப்பட வேண்டும் என்று கூறும் இவ்வேடு, அவ்வளங்கள் அநீதியாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்டிக்கிறது. திருச்சபை தனது நற்பணிகள் மூலம் கிறிஸ்துவுக்கு உண்மையான சான்று பகரத் தனது அர்ப்பணத்தைப் புதுப்பிக்கிறது என்றும் இந்த அப்போஸ்தலிக்க ஏடு கூறுகிறது. திருச்சபையில் ஒவ்வொரு நிலையில் இருப்பவர்களுக்கும் ஒருங்கிணைந்த தொடர் விசுவாசப் பயிற்சி தேவை எனவும் சுட்டிக் காட்டுகிறது இவ்வேடு.
இந்த அப்போஸ்தலிக்க ஏட்டில் கையெழுத்திட்ட நிகழ்ச்சியை நிறைவு செய்து அனைவரையும் ஆசீர்வதித்து கொட்டுன்னு திருப்பீடத் தூதகத்திற்குப் புறப்பட்டார் திருத்தந்தை. அங்கு பகல் 1.30 மணியளவில் மதிய உணவருந்தினார். இச்சனிக்கிழமை மாலையில் பிறரன்பு மறைபோதகர்கள், சிறார், ஆயர்கள் ஆகிய மூன்று குழுவினரைத் சந்திப்பது பயணத் திட்டத்தில் உள்ளது. பெனின் நாட்டுக்கான இந்த மூன்று நாள் திருப்பயணத்தை நிறைவு செய்து இஞ்ஞாயிறு இரவு உரோம் திரும்புவார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

2 - அன்னைமரியா வழியாக இயேசுவைத் தேடுமாறு திருத்தந்தை அழைப்பு

நவ.19,2011. தனிப்பட்டவர்கள் மற்றும் நாடுகளின் மீட்பு வரலாற்றில், இறை இரக்கம், நம் பாவங்களை மன்னிப்பதோடு, உண்மையும் ஒளியும் நிறைந்த பாதையில் நம்மை வழி நடத்துகிறது. ஏனெனில் நாம் தொலைந்து போவதை கடவுள்  விரும்பவில்லை. சிலவேளைகளில் இப்பாதையில் வேதனையும் உண்டு. இறை இரக்கத்தின் இந்தப் பண்பானது ஒவ்வொரு கிறிஸ்தவரின் திருமுழுக்கின் போது கடவுள் செய்து கொண்ட உடன்படிக்கையில் அவர் எவ்வளவு பிரமாணிக்கமாய் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகின்றது. அன்னை மரியா இறை இரக்கப் பேருண்மையை மிக அதிகமாக அனுபவித்தவர். அவர் இறையழைப்பிற்குச் சொன்ன ஆகட்டும் என்ற பதில் வழியாக, மனித சமுதாயத்தில் இறையன்பு வெளிப்படுத்தப்பட அவர் உதவியிருக்கிறார். இவ்வன்னை, தனது எளிமை மற்றும் தாய்க்குரிய இதயத்தோடு ஒரே ஒளியும் உண்மையுமான தமது மகன் இயேசுவை நமக்குக் காட்டுகிறார். எனவே பயப்படாமல் நம்பிக்கையுடன் அவரின் பரிந்துரையை வேண்டுவோம் என்று சொல்லி அன்னை மரியிடம் ஆப்ரிக்க மக்களுக்காகச் செபித்தார் திருத்தந்தை.
இரக்கமுள்ள தாயே, நம்பிக்கையின் அரசியே, அமைதியின் அரசியே, ஆப்ரிக்க அன்னையே, ஆப்ரிக்க இளையோரின் ஏக்கங்களை நிறைவேற்றும். நீதி, அமைதி மற்றும் ஒப்புரவுக்காக ஏங்கும் இதயங்களை நம்பிக்கையால் நிரப்பும். நோயாளிகள் குணம் பெறவும், துன்புறுவோர் ஆறுதலடையவும் பாவிகள் மன்னிப்பு அடையவும் உம் மகனின் அருளைப் பெற்றுத் தாரும். மனித சமுதாயத்துக்கு மீட்பையும் அமைதியையும் பெற்றுத்தாரும் தாயே, ஆமென்.

3 - உங்கள் மக்களின் நம்பிக்கையை ஏமாற்றி விடாதீர்கள் - உலகத் தலைவர்களுக்குத் திருத்தந்தை விடுத்த அழைப்பு

நவ.19,2011. ஆப்ரிக்கா, நம்பிக்கையின் கண்டம். இது எனது சொந்த மற்றும் திருச்சபையின் எண்ணமாகும். நம்பிக்கையின் அர்த்தம் கலாச்சாரத்திற்குக் கலாச்சாரம் வேறுபடுகின்றது. நமது மனதானது அடிக்கடி முற்சார்பு எண்ணங்கள் அல்லது தவறான பிம்பங்களால் தடைசெய்யப்படுகின்றது. இது ஆப்ரிக்காவின் உண்மைத்தன்மைகள் பற்றி எதிர்மறையான எண்ணத்தை உருவாக்குகின்றது. இது நடக்காது, முடியாது என்று சொல்லும் சோதனைகளுக்கும் ஆளாக்குகின்றது. செயலாக்கம் மிகுந்த வழிகளைச் சொல்வதற்குப் பதில், கண்டனக் குரலில் தீர்ப்புகள் வழங்குவது யாருக்கும் எளிது. ஆனால் இதனால் தீர்வுகள் கிடைக்காது. எனவே இதே மாதிரியான தீர்ப்புத் தொனியுடன்  வளர்ந்த நாடுகள் ஆப்ரிக்காவைத் தொடர்ந்து நோக்கக் கூடாது.
மனிதரின் குருட்டுத்தனத்தால், அதிகார ஆசையால், அரசியல் மற்றும் பொருளாதார இலாபங்கள் மீதான ஆசைகளால் பல மோதல்கள் தொடங்கின. இவை மனித மாண்பையும் இயற்கையையும் கேலி செய்வதாக இருந்தன. அண்மை மாதங்களில் பலர் சுதந்திரத்திற்கான, பொருளாதாரப் பாதுகாப்புக்கான, நல்லிணக்கத்தில் வாழ்வதற்கானத் தங்களது ஆவலை வெளிப்படுத்தியுள்ளனர். இக்கண்டத்தில் புதிய நாடு ஒன்று உருவாகியுள்ளது. மக்கள் மாண்புடன் வாழவும், ஒளிவு மறைவில்லாத அரசு நிர்வாகம் உருவாகவும், மொத்தத்தில் அமைதியிலும் நீதியிலும் வாழவும் விரும்புகின்றனர். அதேநேரம், துர்மாதிரிகைகளும், அநீதிகளும் ஊழல்களும் பேராசைகளும் தவறுகளும் பொய்களும் இறப்பைக் கொணரும் வன்முறைகளும் பெருகிக் காணப்படுகின்றன. இந்தத் தீமைகள் ஆப்ரிக்கக் கண்டத்தை நிச்சயமாகப் பாதித்துளளன. உலகின் பிற பகுதிகளையும் பாதித்துளளன. மக்கள் ஒவ்வொருவரும் நல்ல நிர்வாகத்தில் பங்கெடுக்க விரும்புகின்றனர். எந்த ஓர் அரசியல் ஆட்சியும் நேர்மையாக இல்லை. எந்த ஒரு பொருளாதாரமும் சமத்துவம் காக்கவில்லை என்பதை அறிவோம். ஆயினும் இவை எப்போதும் பொது நலனுக்குச் சேவை செய்ய வேண்டியவை. மனிதர் தங்களது மாண்பு மதிக்கப்பட்டு ஊக்கப்படுத்தப்பட விரும்புகின்றனர். எனவே ஆப்ரிக்க நாடுகளின் மற்றும் உலகின் பிற பகுதிகளின் அனைத்து அரசியல் பொருளாதாரத் தலைவர்களுக்கு இந்த இடத்திலிருந்து ஓர் வேண்டுகோளை முன்வைக்கிறேன். உங்கள் மக்களின் நம்பிக்கையை ஏமாற்றி விடாதீர்கள்.  அவர்களின் நிகழ்காலத்தை எதிர்காலத்திலிருந்து அவர்களைத் துண்டித்து விடாதீர்கள். உங்களது பொறுப்புகளை அறநெறிக் கூறுகளுடன் தைரியமாக அணுகுங்கள். நீங்கள் கடவுள் நம்பிக்கையாளராக இருந்தால் இதற்கான ஞானத்தை அருளுமாறு கடவுளிடம் கேளுங்கள். உங்கள் மக்களின் எதிர்காலத்தைச் சமைக்க வேண்டியவர்கள் என்ற வகையில், நம்பிக்கையின் உண்மையான பணியாளர்களாக மாற இந்த ஞானம் உதவும். பணியாளராக வாழ்வதென்பது எளிதான காரியம் அல்ல.

உலகத் தலைவர்களுக்கு திருத்தந்தை விடுத்த இந்த அழைப்பைக் குறிப்பிடாத ஊடகங்களே இல்லை. இந்த அழைப்புடன், பல மதங்கள் மத்தியில் உரையாடல் எவ்வளவு முக்கியம் என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புவதாகக் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். கடவுளின் பெயரால் அண்மையில் தொடங்கிய கலவரங்களையும் இறப்புக்களையும்  மீண்டும் நினைக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை எனக் கருதுகிறேன். ஒருவருக்குத் தனது மதத்தைப் பற்றிய அறிவும் ஆழமானப் புரிதலும், அம்மதத்தை நடைமுறைப்படுத்துவதும் உண்மையான பல்சமய உரையாடலுக்கு இன்றியமையாதவை. உரையாடல் நடத்த விரும்பும் ஒருவர், உண்மையாகவே செபம் செய்வதால் மட்டுமே இதனைத் தொடங்க முடியும். எனவே ஒவ்வொருவரும் கடவுள் மற்றும் மற்றவர் முன்பாக உண்மையாகவே தன்னை நிறுத்த வேண்டும்.

இவ்வாறெல்லாம் உரையாற்றிய திருத்தந்தை, அங்கு அமர்ந்திருந்த பல சமயத் தலைவர்களை வாழ்த்தினார். கத்தோலிக்கத் திருச்சபை நடத்தும் உரையாடல் இதயத்திலிருந்து வருவது என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன் என்று சொன்னார். பின்னர் ஒரு கையின் ஐந்து  விரல்களை உருவகமாகச் சொல்லி பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மக்கள் மத்தியில் புரிதலின் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், கடவுள் நிகழ்காலத்தில் பிரசன்னமாய் இருப்பது போல வருங்காலத்திலும் நம்பிக்கையாக இருக்கிறார். எனக்கு மிகவும் விருப்பமானவர்களாக இருக்கும் ஆப்ரிக்கர்களாகிய நீங்களும் உங்களது விசுவாசத்தையும் நம்பிக்கையையும் கடவுளில் வைக்க வேண்டுமென்பது எனது ஆவல். ஆப்ரிக்காவே, நம்பிக்கை கொள், எழுந்திரு. நம் ஆண்டவர் அழைக்கிறார். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக

4 - குருக்கள், துறவியர், குருமட மாணவர்கள் மற்றும் விசுவாசிகளுக்கு திருத்தந்தை வழங்கிய உரை:

நவ.19,2011. புனிதர்கள் Joan of Arc மற்றும் Gall ஆகியோரின் பாதுகாவலில் ஒப்படைக்கப்பட்டுள்ள இந்த குருத்துவப் பயிற்சி இல்லத்தில் உங்கள் மத்தியில் இருப்பது எனக்குப் பெரும் மகிழ்வைத் தருகிறது. திருமுழுக்கின் வழியாக நமக்குத் தரப்பட்டுள்ள கிறிஸ்தவ வாழ்வும், குருத்துவ வாழ்வும் நம்மிடம் எதிர்பார்ப்பதெல்லாம் அமைதி, நீதி மற்றும் ஒப்புரவு ஆகிய உயரிய பண்புகள். இம்மூன்றையும் உலகில் நிலைநிறுத்துவது குருக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியப் பொறுப்பு. ஒளிப்படிகங்கள் ஒளியைத் தங்களிடமே வைத்துக் கொள்ளாமல், பிரதிபலிப்பதைப் போல், குருக்களும் தங்கள் வாழ்வின் மேலான பண்புகளை உலகோர் அனைவரும் காணும் வண்ணம் பிரதிபலிக்க வேண்டும். இப்படி வாழ்வதற்கு கிறிஸ்து ஒருவரே உங்கள் எடுத்துகாட்டாக இருக்க வேண்டும். இந்த உலகம் காட்டும் மற்ற எடுத்துக்காட்டுகள் உங்களைத் திசைத் திருப்பாமல் காத்துக்கொள்ளுங்கள்.
துறவற வாழ்வைத் தேர்ந்துள்ள சகோதர, சகோதரிகளே, நிபந்தனை ஏதுமின்றி நீங்கள் கிறிஸ்துவைத் தேர்ந்துள்ளதுபோல், அயலவர் அன்பிலும் நிபந்தனைகள் ஏதுமின்றி செயல்படுங்கள். உலகை விட்டு விலகி துறவு மடத்தில் செபத்தில் ஈடுபடுவது உங்கள் அழைப்பாக இருந்தாலும், மக்கள் பணியில் ஈடுபடுவது உங்கள் அழைப்பாக இருந்தாலும், புனிதமான வாழ்வுக்கு நீங்கள் அழைக்கப்பட்டிருப்பதை உணர்ந்து வாழுங்கள்.
குருத்துவ பயிற்சியில் ஈடுபட்டுள்ள மாணவர்களே, குருத்துவ அழைப்பும் வாழ்வும் புனிதத்திற்கு உங்களை நடத்திச் செல்லும் வழிகள். புனிதம் என்ற கொள்கை இல்லாமல் நீங்கள் மேற்கொள்ளும் குருத்துவப்பணி வெறும் சமுதாயச் சேவையாக மட்டும் மாறும் ஆபத்து உண்டு. உங்கள் பயிற்சி காலத்தில் நீங்கள் சேகரிக்கும் அறிவுத் திறன், ஆன்மீகப் பயிற்சி, மக்கள்பணி பயிற்சிகள் அனைத்துமே உங்களுக்கு கட்டாயம் உதவியாக இருக்கும். அறுபது ஆண்டுகள் குருத்துவ வாழ்வை முடித்தவன் என்ற முறையில் நான் இதை உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
இங்கு கூடியிருக்கும் விசுவாசிகளே, நீங்கள் அனைவருமே உலகின் உப்பாக, ஒளியாக வாழ அழைக்கப்பட்டுள்ளீர்கள். நீதி, அமைதி, ஒப்புரவு ஆகியவற்றை வளர்ப்பதற்கு மீண்டும் ஒரு முறை நீங்கள் உறுதி கொள்ளுங்கள்.

5 - ஆப்ரிக்க ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் அப்போஸ்தலிக்க ஏட்டை வெளியிடுகையில் திருத்தந்தை வழங்கிய உரை

நவ.19,2011. ஆப்ரிக்க ஆயர்களின் சிறப்பு மாமன்றத்தின் எண்ணங்களைத் தொகுத்து, ‘Africae Munus’ என்ற தலைப்பில் நான் அளித்துள்ள அப்போஸ்தலிக்க ஏட்டில் கையோப்பமிட்டதுடன் இந்த மாமன்றத்தின் கொண்டாட்டம் நிறைவுக்கு வருகிறது. ஒப்புரவு, நீதி, அமைதி ஆகிய மையக் கருத்துக்கள் ஆப்ரிக்க மாமன்றத்தில் பேசப்பட்டன, செபிக்கப்பட்டன. இந்த மாமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளால் புனித பேதுருவின் வழித் தோன்றலுடன் ஆப்ரிக்கத் தலத்திருச்சபைகளுக்கு உள்ள ஒரு சிறப்பு உறவு வலுப்படுத்தப்பட்டுள்ளது.
அருளாளர் இரண்டாம் ஜான்பால் ஆப்ரிக்க நாட்டு ஆயர்களுக்கு முன்பு வழங்கிய 'Ecclesia in Africa' என்ற அப்போஸ்தலிக்க ஏட்டில், ஆப்ரிக்கக் கண்டத்தில் நற்செய்தி பணி தீவிரமாக வேண்டும் என்று கூறினார். இந்த நற்செய்திப் பணி மனித மேம்பாடு என்பதுடன் இணைந்து செல்ல வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். தற்போது நிகழ்ந்து முடிந்த இந்த மாமன்றத்தில் இதே எண்ணங்களின் தொடர்ச்சி எதிரொலித்தன.
ஒப்புரவு, நீதி, அமைதி ஆகியவை உலகெங்கும் இன்று மிகவும் தேவையான அம்சங்கள் எனினும், ஆப்ரிக்கக் கண்டத்தில் இவைகளின் தேவை இன்னும் அதிகம் உணரப்படுகிறது. இந்த ஆண்டில் மட்டும் ஆப்ரிக்க நாடுகளில் நடைபெற்றுள்ள வன்முறைகள் மற்றும் பதட்ட நிலைகள் இத்தேவைகளை நம் மனங்களில் ஆழமாகப் பதிக்கின்றன.
உலகில் ஒப்புரவை வளர்க்க விளையும் திருச்சபை முதலில் தனக்குள் அந்த ஒப்புரவு உள்ளதா என்று ஆய்வு செய்வது அவசியம். இவை யாவும் கடவுளின் செயலே. அவரே கிறிஸ்துவின் வாயிலாக நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்; ஒப்புரவாக்கும் திருப்பணியையும் நமக்குத் தந்துள்ளார்” (5:18) என்று புனித பவுல் அடியார் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்தில் சொல்லியிருப்பதுபோல், ஒப்புரவு அடைந்துள்ள திருச்சபை ஆப்ரிக்க கண்டத்திற்கும், இந்த உலகிற்கும் ஒப்புரவின் உன்னத அடையாளமாகத் திகழ முடியும்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...