Friday, 18 November 2011

Catholic News - hottest and latest - 17 November 2011

1. திருத்தந்தையை அவமதிக்கும் வகையில் வெளியான விளம்பரத்திற்கு திருப்பீடத்தின் வன்மையான கண்டனம்

2. ஆப்ரிக்காவில் கடவுள் பக்தியை வளர்க்கும் வகையில் திருத்தந்தையின் திருப்பயணம் அமையும் - வத்திக்கான் அதிகாரி

3. ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினர் உரிமைகளுக்காகப் போராடிவந்த அருள்சகோதரி கொல்லப்பட்டுள்ளார்

4. அமெரிக்க ஐக்கிய நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள ராகேல் பணிக்கு கர்தினால் Daniel DiNardoவின் பாராட்டு

5. கனடாவில் வாழும் கத்தோலிக்கர்கள் தங்கள் சமய உரிமைகளைக் காத்துக்கொள்வதில் இன்னும் விழிப்பாக இருக்க வேண்டும் - Vancouver பேராயர்

6. அகிலஉலக சகிப்புத்தன்மை நாளையொட்டி ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் வெளியிட்ட செய்தி

7. 3 மாதங்களில் இந்திய வேலைவாய்ப்பு 2.15 லட்சமாக அதிகரிப்பு: ஆய்வு

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையை அவமதிக்கும் வகையில் வெளியான விளம்பரத்திற்கு திருப்பீடத்தின் வன்மையான கண்டனம்

நவ.17,2011. வர்த்தகக் காரணங்களுக்காக திருத்தந்தையை அவமதிக்கும் வகையில் அவரது படத்தை விளம்பரம் ஒன்றில் பயன்படுத்தியுள்ள வர்த்தக நிறுவனத்தின் செயல்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை பெதெரிகோ லொம்பார்தி கூறினார்.
Benetton என்ற நிறுவனம் பல ஆண்டுகளாக சர்ச்சைகளை உருவாக்கும் வண்ணம் பல விளம்பரத் தொகுப்புக்களைப் பிரசுரித்து வருகின்றன. ஒவ்வொரு முறையும் இந்நிறுவனத்தின் விளம்பரங்கள் சர்ச்சைகளை எழுப்பி, பின்னர் அந்த விளம்பரங்களை இந்நிறுவனம் நீக்கியுள்ளது.
இப்புதனன்று இந்நிறுவனம் வெளியிட்ட ஒரு விளம்பரத் தொகுப்பில் பல்வேறு உலகத் தலைவர்களின் படங்கள் பிரச்சனைகளை எழுப்பும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்தொகுப்பில் திருத்தந்தையின் உருவமும் சர்ச்சைக்குரிய வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
திருத்தந்தையை இவ்வகையில் சித்தரித்திருப்பது முற்றிலும் கண்டனத்திற்குரியது என்று கூறிய திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை லொம்பார்தி, திருத்தந்தையையும் அவர்மீது மரியாதை கொண்டுள்ள கோடான கோடி மக்களையும் அவமதிக்கும் வண்ணம் அமைந்துள்ள இந்த விளம்பரம் மக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற ஒரே வர்த்தக நோக்கத்தை மட்டும் கொண்டு செய்யப்பட்டுள்ளதென்பது கேவலமான ஒரு திட்டம் என்று கூறினார்.
மேலும் திருத்தந்தையின் உருவத்தைப் பயன்படுத்துவதற்கு எந்த ஒரு நிறுவனமும் தகுந்த முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற அளவில் சட்டப்பூர்வமான வழிகளை திருப்பீடச் செயலரான கர்தினால் தர்சிசியோ பெர்தோனே ஆராய்ந்து வருகிறார் என்றும் திருப்பீடப் பேச்சாளர் செய்தியாளர்களிடம் கூறினார்.
திருப்பீடம் வெளியிட்ட இந்த கண்டனத்தை அடுத்து, Benetton நிறுவனம் திருத்தந்தையைத் தவறாகச் சித்தரித்துள்ள படத்தை தங்கள் விளம்பரத் தொகுப்பிலிருந்து நீக்கிவிட்டதாகத் தெரிவித்துள்ளது.


2. ஆப்ரிக்காவில் கடவுள் பக்தியை வளர்க்கும் வகையில் திருத்தந்தையின் திருப்பயணம் அமையும் - வத்திக்கான் அதிகாரி

நவ.17,2011. கடவுள் பக்தியற்ற ஒரு கலாச்சாரத்தை ஆப்ரிக்க மக்கள் மீது திணித்து வரும் மேற்கத்திய நாடுகளின் போக்கிற்கு ஒரு மாற்றாக மீண்டும் அந்நாட்டில் கடவுள் பக்தியை வளர்க்கும் வகையில் திருத்தந்தையின் திருப்பயணம் அமையும் என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
இவ்வெள்ளி முதல் ஞாயிறு முடிய ஆப்ரிக்காவின் பெனின் நாட்டில் திருத்தந்தை மேற்கொள்ளும் பயணம் குறித்து இப்புதனன்று பேசிய வத்திக்கான் பாப்பிறை கலாச்சாரக் கழகத்தின் செயலரான ஆயர் Barthélemy Adoukonou, மேற்கத்திய நாடுகள் காட்டும் தவறான பாதையை சீரமைக்கும் ஒரு வாய்ப்பை திருத்தந்தையின் திருப்பயணம் ஆப்ரிக்க மக்களுக்குத் தரும் என்ற தன் நம்பிக்கையை வெளியிட்டார்.
பெனின் நாட்டின் குடிமகன் என்ற முறையிலும், Rosenburg பல்கலைக்கழகத்தில் திருத்தந்தை பேராசிரியராகப் பணியாற்றியபோது அவரது மாணவர் என்ற முறையிலும் தான் இந்த நம்பிக்கையை வெளியிடுவதாக ஆயர் Adoukonou கூறினார்.
ஆப்ரிக்க நாட்டின் கலாச்சாரம், ஆன்மீகம் ஆகியவை உலகத்தின் ஆன்மீக மூச்சு என்று     2009ம் ஆண்டு உரோம் நகரில் நடைபெற்ற ஆப்ரிக்க ஆயர்களின் சிறப்பு மாமன்றத்தின்போது திருத்தந்தை கூறியதைச் சுட்டிக் காட்டிய ஆயர் Adoukonou, திருத்தந்தையின் இத்திருப்பயணம் இந்தக் கலாச்சாரத்தையும் ஆன்மீக பாரம்பரியத்தையும் மீண்டும் விழித்தெழச் செய்யும் என்ற தன் நம்பிக்கையை வெளியிட்டார்.
கர்தினால் Bernardin Gantinம், திருத்தந்தையும் 25 ஆண்டுகள்  திருப்பீடத்தில் இணைந்து உழைத்தனர் என்பதைச் சுட்டிக் காட்டிய ஆயர் Adoukonou, கர்தினால் Gantinன் கல்லறைக்குத் திருத்தந்தை செல்வது அவர்கள் இருவருக்கும் இடையே உருவாகியிருந்த ஆழ்ந்த நட்பைக் காட்டுகிறது என்றார்.


3. ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினர் உரிமைகளுக்காகப் போராடிவந்த அருள்சகோதரி கொல்லப்பட்டுள்ளார்

நவ.17,2011. ஏழைகளின் பேரில் அதிக அன்புகொண்ட அருள்சகோதரி Valsa John அவர்களுக்காகப் போராடி தன் உயிரை வழங்கியுள்ளார் என்று சீரோ மலபார் ரீதி உயர் பேராயர் ஜார்ஜ் ஆலஞ்சேரி கூறினார்.
அருள் சகோதரி Valsa Johnன் வாழ்வும் மரணமும், நம்மை மீண்டும் நம் விசுவாச வாழ்வில் வேரூன்றி நிற்கவும், ஏழைகளுக்கு பணிகள் செய்வதில் துணிவையும் தந்துள்ளன என்று லத்தீன் ரீதி பேராயர் Maria Calist Soosapakiam கூறினார்.
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் பல ஆண்டுகளாக பழங்குடியினர் உரிமைகளுக்காகப் போராடிவந்த அருள்சகோதரி Valsa John இச்செவ்வாய் இரவு கொல்லப்பட்டுள்ளார்.
இந்தக் கொலைக்குக் காரணமானவர்கள் குறித்து சரியான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை என்று தும்கா மறைமாவட்ட ஆயர் ஜூலியஸ் மாராண்டி கூறினார்.
ஜார்கண்ட் மாநிலத்தின் Pakur மாநிலத்தில் Pachuara என்ற கிராமத்தில் வாழும் பழங்குடியினர் அங்கு ஆரம்பமாகவிருக்கும் நிலக்கரி சுரங்கப் பணிகளால் தங்கள் வீடுகளையும் நிலங்களையும் இழக்கும் நிலையில் இருந்தனர். இவர்கள் சார்பில் கடந்த சில ஆண்டுகளாக போராட்டங்களை மேற்கொண்டு பணியாற்றியவர் அருள் சகோதரி Valsa John. இந்தப் போராட்டங்களின் காரணமாக இவர் 2007ம் ஆண்டு சிறைப்படுத்தப்பட்டார் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இந்தக் கொலை குறித்து அரசு தீர விசாரிக்க வேண்டும் என்றும் குற்றம் புரிந்தவர்கள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு, நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும்  சீரோ மலபார் ரீதி உயர் பேராயர் ஆலஞ்சேரி கூறினார்.
பேராயர் ஆலஞ்சேரி மற்றும் ஆயர் போஸ்கோ புத்தூர் இருவரும் அருள்சகோதரி Valsa John குடும்பத்தினரை கேரளாவின் வழகளா என்ற இடத்தில் சந்தித்து அவர்களுக்குத் தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தனர்.
அருள்சகோதரி Valsa Johnன் அடக்கச் சடங்கு இவ்வியாழன் நடைபெற்றதாக UCAN செய்தி கூறுகிறது.


4. அமெரிக்க ஐக்கிய நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள ராகேல் பணிக்கு கர்தினால் Daniel DiNardoவின் பாராட்டு

நவ.17,2011. கருக்கலைப்பு செய்துகொண்ட பெண்களுக்கு ஆலோசனைகள் வழங்கும் வகையில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள ராகேல் பணி என்ற கத்தோலிக்க முயற்சியைப் பாராட்டினார் அந்நாட்டின் கர்தினால் Daniel DiNardo.
இப்புதன் நிறைவுற்ற அமெரிக்க ஆயர்கள் பேரவையின் மூன்று நாள் ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றிய கர்தினால் DiNardo, திருத்தந்தையால் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் புதிய மறைபரப்புப் பணியின் ஒரு முக்கிய அங்கமாக ராகேல் பணி அமையும் என்று கூறினார்.
கருகலைப்பு செய்துகொள்ளும் பெண்கள் தாங்கள் கடவுளால் இனி மன்னிப்பே பெறப்போவதில்லை என்ற விரக்தி நிலையை அடைகின்றனர் என்பதைச் சுட்டிக் காட்டிய கர்தினால் DiNardo, இறைவனின் அளவற்ற அன்பிலும் அவர் அளிக்கும் மன்னிப்பிலும் இப்பெண்களை நம்பிக்கை கொள்ளச் செய்வது திருச்சபையின் கடமை என்று கூறினார்.
கருகலைப்பு என்ற நிகழ்வினால் பாதிக்கப்படுவது கருகலைப்பு செய்துகொள்ளும் பெண்கள் மட்டுமல்ல, மாறாக, அப்பெண்ணின் குடும்பம், அப்பெண்ணின் கணவன், மற்றும் கருகலைப்பு செய்யும் மருத்துவர் என்ற ஒரு குழுவே பாதிப்புக்கு உள்ளவதால், ராகேல் பணியின் மூலம் இவர்கள் அனைவருக்குமே தகுந்த  ஆலோசனைகள் வழங்கப்படும் என்று கர்தினால் DiNardo இப்பணியைக் குறித்து விளக்கினார்.


5. கனடாவில் வாழும் கத்தோலிக்கர்கள் தங்கள் சமய உரிமைகளைக் காத்துக்கொள்வதில் இன்னும் விழிப்பாக இருக்க வேண்டும் - Vancouver பேராயர்

நவ.17,2011. அரசியலுக்கும் மதங்களுக்கும் இடையே சுமுகமான உறவுகள் கனடா நாட்டில் நிலவி வந்தாலும், அந்நாட்டு கத்தோலிக்கர்கள் தங்கள் சமய உரிமைகளைக் காத்துக்கொள்வதில் இன்னும் விழிப்பாக இருக்க வேண்டும் என்று Vancouver பேராயர் Michael Miller கூறினார்.
மத உரிமைகளைத் தனிப்பட்டவர்களின் விருப்பு வெறுப்புக்கள் என்றும், ஒருவரது தனி கருத்து என்றும் குறுக்கி விடுவது ஆபத்தான போக்கு என்று பேராயர் Miller  எச்சரித்தார்.
கத்தோலிக்கப் படிப்பினைகளுக்கு எதிரான கொள்கைகளைப் பள்ளிப் பாடங்களில் புகுத்துவது; தங்கள் மத கோட்பாடுகளைப் புறந்தள்ளிவிட்டு, அரசு அதிகாரிகள் ஒரே பாலினத் திருமணங்களை நடத்த வேண்டும் என்று வற்புறுத்துவது; பெண்களை கருகலைப்பு செய்து கொள்வதற்கு நலத்துறையில் பணிபுரியும் அலுவலர்கள் ஆலோசனை தர வேண்டும் என்று வற்புறுத்துவது போன்ற அரசின் ஒரு சில புதிய போக்குகளைச் சுட்டிக்காட்டிய பேராயர் Miller இவைகளெல்லாம் கத்தோலிக்கர்களின் அடிப்படை மத உரிமைகளைப் பாதிக்கும் வழிகள் என்று கூறினார்.
மத உரிமைகளும், மனச்சான்றின் உரிமைகளும் கடவுளிடமிருந்து வருபவை என்றும், இவைகளை வழங்கவோ எடுத்துக் கொள்ளவோ அரசுகளுக்கு உரிமையில்லை என்றும் பேராயர் Miller வலியுறுத்திக் கூறினார்.


6. அகிலஉலக சகிப்புத்தன்மை நாளையொட்டி ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் வெளியிட்ட செய்தி

நவ.17,2011. சகிப்புத்தன்மை என்பது செயலற்ற நிலை அல்ல, மாறாக, செயலாக்கம் மிகுந்த ஒரு முயற்சி என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் கூறினார்.
நவம்பர் 16 இப்புதனன்று கடைபிடிக்கப்பட்ட அகிலஉலக சகிப்புத்தன்மை நாளையொட்டி செய்தி வெளியிட்ட பான் கி மூன், பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றில் பெருமளவு மாற்றங்கள் உருவாகிமக்கள் நாடுவிட்டு நாடுசெல்லும் சூழல்கள் அதிகமாகியுள்ள இவ்வுலகில், சகிப்புத் தன்மை மக்களிடையே ஆக்கப்பூர்வமான வழிகளில் வளர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
முன்பு எப்போதும் காணாத வகையில் நமது உலகம் இப்போது ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்கும் நிலையில் உள்ளதால், சகிப்புத்தன்மை என்பது இனி ஒருவரது விருப்பு வெறுப்புக்களுக்கு உட்பட்டதல்ல, மாறாக, இது உலகெங்கும் நிலவ வேண்டிய ஒரு கட்டாயச் சூழல் என்று பான் கி மூன் தெளிவுபடுத்தினார்.
சகிப்புத்தன்மையின் மூலம் உலகில் வளரும் கலாச்சாரங்கள் மக்களை இன்னும் செறிவு நிறைந்த எண்ணங்களிலும், மன நிலையிலும் வளர்க்கும் என்று UNESCO நிறுவனத்தின் இயக்குனர் Irina Bokova கூறினார்.


7. இந்திய வேலைவாய்ப்பு 3 மாதங்களில் 2.15 லட்சமாக அதிகரிப்பு: ஆய்வு

நவ.17,2011. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாதங்களில் இந்திய நாட்டின் வேலைவாய்ப்பு 2.15 இலட்சம் அதிகரித்திருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
இவற்றில் தகவல் தொழில் நுட்பத் துறைகளில் 1.64 லட்சம் வேலைவாய்ப்புக்களும், உலோகத்துறையில் 0.53 லட்சம் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இதே போன்று வாகன உற்பத்தித் துறையில் 0.18 இலட்சம், கற்கள் மற்றும் நகை தயாரிப்பு தொழிலில் 0.13 இலட்சம் ஏற்றுமதி துறையில் 0.67 இலட்சம், ஏற்றுமதி அல்லாத துறைகளில் 1.48 இலட்சம் என வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை பணியாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே, பிரிட்டனில் வேலையில்லாத் திண்டாட்டம், இதுவரை இல்லாத அளவில் அதிகரித்துள்ளது என்றும், கடந்த மூன்று மாதங்களில் மட்டும், ஒரு லட்சத்து 29 ஆயிரம் பேர், வேலையில்லாத் திண்டாட்டப் பட்டியலில் சேர்ந்துள்ளனர் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.
ஒட்டு மொத்தமாக, பிரிட்டனில் வேலையின்மை 8.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. பிரிட்டனில் கடந்த செப்டம்பர் மாதத்தோடு முடிந்த மூன்றாவது காலாண்டில், வேலையில்லாத் திண்டாட்டம், 26 லட்சத்து 20 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இது, கடந்த 19 ஆண்டுகளைப் பார்க்கும் போது மிக அதிகம் என்று ஊடகங்கள் கூறுகின்றன.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...