Monday, 14 November 2011

Catholic News - hottest and latest - 14 November 2011

1. திருத்தந்தை : நமக்கு வழங்கப்பட்டுள்ள கொடைகள் நமது தனிச் சொத்து என்று எண்ணுவது தவறு

2. மதங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளை சரிவர புரிந்து கொள்ளாமல் வாழ்வதே நம் மத்தியில் பிரச்சனைகளை உருவாக்குகின்றது - கர்தினால் Jean-Louis Tauran

3. பாகிஸ்தானிலேயே மிகப்பெரும் கத்தோலிக்க ஆலயம் திறந்து வைக்கப்பட்டது

4. சுனாமியால் பாதிக்கப்பட்ட Sendai நகரில் கொரியா மற்றும் ஜப்பான் நாட்டு கத்தோலிக்க ஆயர்களின் ஆண்டு கூட்டம்

5. உலகெங்கும் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்கு செபிக்கும் நாளையொட்டி சிறப்பு செபங்கள்

6. போதைப் பொருட்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்த பிலிப்பின்ஸ் ஆயர் மரணம்

7. அரபு உலக அரசியல் நெருக்கடியில் மாம்பழக் கூழ் வியாபாரம் பாதிப்பு

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : நமக்கு வழங்கப்பட்டுள்ள கொடைகள் நமது தனிச் சொத்து என்று எண்ணுவது தவறு

நவ.14,2011. கடவுள் மனிதர்களுக்கு வாழ்வையும் திறமைகளையும் அளித்து, அவர்கள் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட பணிகளையும் ஒப்படைக்கிறார் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தில் கூடியிருந்த விசுவாசிகளுடன் பகிர்ந்து கொண்ட இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில், நமக்கு வழங்கப்பட்டுள்ள கொடைகள் நமது தனிச் சொத்து என்று எண்ணுவது தவறு என்று திருத்தந்தை கூறினார்.
இஞ்ஞாயிறு திருப்பலிக்கென தரப்பட்டிருந்த தாலந்து உவமையை  தன் உரையின் மையப்பொருளாகக் கொண்டு திருத்தந்தை சிந்தனைகளை வழங்கியபோதுமண்ணுலகில் நாம் அனைவருமே பயணிகள் என்பதையும் இந்தப் பயணத்தில் நமக்கு வழங்கப்பட்டுள்ள கொடைகளை சரியான முறையில் பயன்படுத்துவதே அனைவரின் கடமை என்றும் திருத்தந்தை சுட்டிக் காட்டினார்.
மனிதர்களுக்கு இறைவன் தந்துள்ள கொடைகளிலேயே மிக உயர்ந்த கொடை அன்பு என்றும், இந்த நற்கொடையைத் தவற விடுபவர்கள் வெளி இருளில் தள்ளப்படுவர் என்றும் திருத்தந்தை பெரிய கிரகரி கூறிய வார்த்தைகளை தன் உரையில் நினைவுபடுத்தியத் திருத்தந்தை, பிறரன்பு என்ற கொடையை தவறாமல் பயன்படுத்துவதன் மூலமே நாம் இறைவனின் முழு மகிழ்வில் பங்கேற்க முடியும் என்று கூறினார்.
இஞ்ஞாயிறன்று ஜெர்மனியில் அருளாளராக உயர்த்தப்பட்ட மறைசாட்சியும் குருவுமான Carl Lampert, இருள் நிறைந்த சோசியலிச நாட்களில் ஓர் அணையா விளக்காகத் திகழ்ந்தார் என்று மூவேளை செபத்தின் இறுதியில் திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.


2. மதங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளை சரிவர புரிந்து கொள்ளாமல் வாழ்வதே நம் மத்தியில் பிரச்சனைகளை உருவாக்குகின்றது - கர்தினால் Jean-Louis Tauran

நவ.14,2011. மதங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் நம்மிடையே சச்சரவுகளை வளர்ப்பதில்லை, மாறாக, இவ்வேறுபாடுகளை நாம் சரிவர புரிந்து கொள்ளாமல் வாழ்வதே நம் மத்தியில் பிரச்சனைகளை உருவாக்குகின்றது என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
கடந்த நான்கு நாட்களாக இந்தியாவில் பயணங்களை மேற்கொண்டுள்ள திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran, இஞ்ஞாயிறு மாலை புது டில்லியில் நடந்த ஒரு பல்சமய கூட்டத்தில் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
உண்மை ஒன்றே, அதை ஞானிகள் பல வகையில் காண்கின்றனர் என்று இந்திய வேதங்களில் சொல்லப்பட்டிருப்பதை தன் உரையில் குறிப்பிட்டுப் பேசிய கர்தினால் Tauran, இந்த வேறுபாடுகள் நம் தினசரி வாழ்வை அழகுறச் செய்கின்றன என்றும், இந்த வேறுபாடுகள் முழு உண்மையைக் காண நம்மை அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் கூறினார்.
காந்தி தன் வாழ்வில் கடைபிடித்த அகிம்சை என்பது வெறும் வன்முறையற்ற ஒரு வழி அல்ல என்று கூறிய கர்தினால் Tauran, அந்த அகிம்சை வழி இன்னும் உயர்ந்த, பொருள் நிறைந்த வாழ்வை காட்டும் வழி என்று எடுத்துரைத்தார்.
25 ஆண்டுகளுக்கு முன் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அசிசியில் உலக அமைதிக்கென துவக்கி வைத்த பல் சமய முயற்சிகளின் ஒரு தொடர்ச்சியாகவே இன்றைய முயற்சியும் அமைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நாம் அனைவருமே ஒரு பொதுவான முடிவை நோக்கிச் செல்லும் பயணிகள் என்பதால், அமைதியை கட்டியெழுப்பும் கருவிகளாக நாம் மாற வேண்டும் என்று புது  டில்லி பேராயர் Vincent Concessao கூறினார்.
இந்தியாவின் திருப்பீடத் தூதர், பேராயர் Salvatore Pennacchio, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் Oswald Gracias, சீரோ மலபார் ரீதி உயர் பேராயர் George Alencherry ஆகியோர் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், இந்து, சீக்கியம், புத்தம், சமணம் ஆகிய பல மதங்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.


3. பாகிஸ்தானிலேயே மிகப்பெரும் கத்தோலிக்க ஆலயம் திறந்து வைக்கப்பட்டது

நவ.14,2011. பாகிஸ்தானில் உள்ள மிகப்பெரும் கத்தோலிக்க ஆலயம் ஒன்றை அந்நாட்டின் திருப்பீடத்தூதர் பேராயர் Edgar Penna அண்மையில் திறந்து வைத்து அர்ச்சித்தார்.
இத்திறப்பு விழாவுக்கென குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் கத்தோலிக்கர்கள், திருப்பீடத் தூதரையும், கராச்சி உயர்மறை மாவட்டப் பேராயர் எவரிஸ்ட் பின்டோவையும் மலர் தூவி வரவழைத்தனர் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இந்த ஆலய அர்ச்சிப்பின்போது, திருத்தந்தை அம்மக்களுக்கு வழங்கிய ஆசீர் அடங்கிய செய்தியை திருப்பீடத்தூதர் மக்களுடன் பகிர்ந்து கொண்டார்.
நம்மிடையே வளர்ந்து வரும் விசுவாசத்தின் ஓர் அடையாளமே இந்த மாபெரும் ஆலயம் என்று கராச்சி பேராயர் பின்டோ கூறினார்.
கராச்சியில் இதுவரை 2000 பேர் அமரும் வண்ணம் அமைந்திருந்த புனித பேட்ரிக் பேராலயமே பெரிய கோவில் என்று கருதப்பட்டது. தற்போது அர்ச்சிக்கப்பட்டுள்ள புனித பேதுரு ஆலயம் 5000 பேர் அமரும் வசதி கொண்டதாய் 1858 சதுர மீட்டர் அளவில் கட்டப்பட்டுள்ளது.


4. சுனாமியால் பாதிக்கப்பட்ட Sendai நகரில் கொரியா மற்றும் ஜப்பான் நாட்டு கத்தோலிக்க ஆயர்களின் ஆண்டு கூட்டம்

நவ.14,2011. ஜப்பானில் நிலநடுக்கம், மற்றும் சுனாமியால் பேரழிவுகளைச் சந்தித்த Sendai நகரில் கொரியா மற்றும் ஜப்பான் நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் தங்கள் ஆண்டு கூட்டத்தை அண்மையில் நடத்தினர்.
ஜப்பான் நாட்டுக்கென புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திருப்பீடத் தூதர் பேராயர் Joseph Chennoth மூன்று நாட்கள் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு, பின்னர் சுனாமியால் பாதிக்கப்பட்டப் பகுதிகளைச் சென்று பார்வையிட்டார்.
ஆயர்களின் இந்த ஆண்டு கூட்டத்தின் இரண்டாம் நாளன்று, திருப்பீடத் தூதர் பேராயர் Chennoth, Sendai நகர மேயர் Emiko Okuyamaவைச் சந்தித்து, ஒரு மில்லியன் யென், அதாவது, 13,000 டாலர்கள் நிதியை வழங்கினார்.
20 கொரிய ஆயர்களும், 17 ஜப்பானிய ஆயர்களும் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் உதவிகள், அணுசக்தி பயன்பாடு, மற்றும் கொரியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நான்கு நதித் திட்டம் ஆகியவை குறித்த விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


5. உலகெங்கும் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்கு செபிக்கும் நாளையொட்டி சிறப்பு செபங்கள்

நவ.14,2011. கிறிஸ்துவை விசுவசிப்பதற்காக, உலகின் பல நாடுகளில் துன்புறுத்தப்படும் மக்களுக்காக கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களும் சிறப்பு செபங்கள் எழுப்பப்பட்டன.
நவம்பர் 12, கடந்த சனிக்கிழமை உலகெங்கும் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்கு செபிக்கும் நாள் கடைபிடிக்கப்பட்டதையொட்டி, இந்தியாவில் உள்ள அனைத்து கிறிஸ்துவ சபைகளும் இணைந்து சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களிலும் இந்தியாவின் பல பகுதிகளில் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்குச் சிறப்பாகச் செபிக்கும்படி அழைப்பு விடுத்திருந்தன.
"Global Council of Indian Christians" (GCIC) என்று அழைக்கப்படும் இந்திய கிறிஸ்தவர்களின் உலகக்கழகம், FIDES செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள குறிப்புக்களின்படி, 2006ம் ஆண்டு முதல் இந்தியாவில் 1556 இடங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக கடுமையான வன்முறைகள் வெளியாகியுள்ளன என்றும், 2008ம் ஆண்டு மட்டும் 100 கிறிஸ்தவத் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் தெரிகிறது.


6. போதைப் பொருட்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்த பிலிப்பின்ஸ் ஆயர் மரணம்

நவ.14,2011. பிலிப்பின்ஸ் நாட்டின் வடபகுதிகளில் பரவி இருந்த சட்ட விரோதமான போதைப் பொருட்கள், மற்றும்  அதிகாரப்பூர்வமற்ற மருந்துகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்த பிலிப்பின்ஸ் ஆயர் ஒருவர் இஞ்ஞாயிறு திருப்பலிக்குப் பின், சுவாசக் கோளாறு காரணமாக உயிரிழந்தார்.
இறை வார்த்தைச் சபையைச் சேர்ந்த 69 வயதான ஆயர் Artemio Rillera தூய இதய குருமடத்தில் இஞ்ஞாயிறு திருப்பலியை நிறைவேற்றிய பின், ஆஸ்த்மா தாக்குதலால், மூச்சுத் திணறினார். மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் வழியில் இறந்தார்.
பிலிப்பின்ஸ் ஆயர் பேரவையின் ஓர் உறுப்பினராக 18 ஆண்டுகள் பணி புரிந்த ஆயர் Rilleraவின் மரணம் ஒரு பெரும் அதிர்ச்சி என்று ஆயர் பேரவையின் சார்பில் பேசிய குருமுதல்வர்  Pedro Quitorio கூறினார்.
1993ம் ஆண்டு ஆயராக திருநிலைப்படுத்தப்பட்ட Rillera போதைப் பொருள் விற்பனைக்கு எதிராக பல போராட்டங்களை மேற்கொண்டுள்ளார் என்றும், இவரது பல சமுதாயப் பணிகளை கௌரவிக்கும் விதமாக, 2009ம் ஆண்டு இவருக்கு Saranay என்ற மிக உயர்ந்த ஒரு விருது வழங்கப்பட்டது என்றும் UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


7. அரபு உலக அரசியல் நெருக்கடியில் மாம்பழக் கூழ் வியாபாரம் பாதிப்பு

நவ.14,2011. பல மத்தியகிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் மற்றும் நிலையற்றத் தன்மை காரணமாக தமிழகத்தில் மாம்பழம் சாகுபடி செய்யும் விவசாயிகள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதாக தமிழக விவசாயிகள் சங்கம் கூறுகிறது.
இந்தியாவிலேயே அதிகப்படியாக மாம்பழ உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் மையங்களான கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி போன்ற பகுதிகளில் இதன் காரணமாக சுமார் ஒரு லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலர் இராம கவுண்டர் தெரிவித்ததாக BBC செய்தியொன்று கூறுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 56 மாம்பழக் கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளதாகவும், அவை ஆண்டு தோறும் 500 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் செய்யும் எனவும், தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக தொழில் நொடித்து போகும் நிலை ஏற்படக்கூடும் என்கிறஅச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
தமிழகத்தின் தொழிற்சாலைகளில் தயாராகவுள்ள மாம்பழக் கூழை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவோ, அல்லது பிரச்சினைகளில் சிக்கியுள்ள அரசுகளிடம் பேசி ஏற்றுமதிகளுக்கு வழிசெய்து பிரச்சினைகளை தீர்க்கவோ அரச தரப்பில் போதிய ஆதரவு இல்லை எனவும, இது விவாசயிகளை மிகவும் கலக்கமடையச் செய்துள்ளது எனவும் தமிழநாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலர் சுட்டிக்காட்டுகிறார்.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...