1. ஜெர்மனியில் மத சுதந்திரம் மற்றும் தலத்திருச்சபையின் பணிகள் குறித்து திருத்தந்தை மகிழ்ச்சி
2. திருத்தந்தையின் மூவேளை செப உரை
3. இந்திய பல்சமயத் தலைவர்களுடன் திருப்பீட அதிகாரிகளின் கூட்டம்
4. மீண்டுமொரு இத்தாலிய நகரிலிருந்து திருத்தந்தைக்கு கௌரவ குடியுரிமை
5. மதங்களிடையே கருத்து பரிமாற்ற அவை ஒன்று உருவாக்கப்பட அழைப்பு விடுத்துள்ளார் இலங்கை கர்தினால்
6. பாகிஸ்தான் நாட்டில் பாலர்கள் கடத்தப்படுவது குறித்து தலத்திருச்சபை கவலை
7. இலங்கையில் இணையத்தளங்களின் தடைக்கு ஊடக அமைப்புகள் கண்டனம்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
ஜெர்மனியில் மத சுதந்திரம் மற்றும் தலத்திருச்சபையின் பணிகள் குறித்து திருத்தந்தை மகிழ்ச்சி
நவ.07,2011. கடந்த செப்டம்பரில் தான் ஜெர்மனியில் மேற்கொண்ட திருப்பயணம் தன் எதிர்பார்ப்புகளையெல்லாம் தாண்டி இருந்ததாகவும், அந்நிகழ்வுகள் இன்னும் பசுமையாக தன் நினைவில் இருப்பதாகவும் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருப்பீடத்திற்கான ஜெர்மனியின் புதிய தூதுவர் Reinhard Schweppeஇடமிருந்து இத்திங்களன்று திருப்பீடத்தில் நம்பிக்கைச் சான்றிதழ்களைப் பெற்ற வேளையில் உரையாற்றிய திருத்தந்தை, திருப்பீடமும் தலத்திருச்சபையும் ஆற்றிவரும் பணிகள் குறித்து ஆழ்ந்து நோக்க தன் ஜெர்மன் பயணம் நல்லதொரு வாய்ப்பாக இருந்தது எனவும் எடுத்துரைத்தார்.
ஒரு சமூகத்தின் வாழ்வு முறையை அமைப்பதிலும் நல்ல கலாச்சாரத்திற்கு உதவி வடிவமைப்பதிலும் மதங்கள் ஆற்றும் பங்கு குறித்தும் எடுத்துரைத்தார் திருத்தந்தை. திருப்பீடத்திற்கான ஜெர்மனியின் புதிய தூதுவருடன் திருத்தந்தை மேற்கொண்ட இச்சந்திப்பின் போது, இரண்டாம் உலகப்போருக்குப்பின் 1949ம் ஆண்டு ஜெர்மனியில் மனித உரிமைகளுக்கான மதிப்புடன் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு பற்றியும் எடுத்துரைத்த திருத்தந்தை, மனித உரிமை அல்லது மனித மாண்பை மதிப்பது என்பது, கருவில் உருவானது முதல் இயற்கை மரணம் வரை மனித வாழ்வை பாதுகாப்பதில் அடங்கியுள்ளது என்றார்.
இன்றைய உலகில் பெண்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படுவது மனித குலத்திற்கு எதிரான குற்றம் என்பதையும் சுட்டிக்காட்டினார் பாப்பிறை.
ஜெர்மனியில் கத்தோலிக்கத் திருச்சபை முழுச் சுதந்திரத்துடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது மற்றும் அதன் சிறப்புப்பணிகள் ஆகியவை குறித்து தான் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும் தன் உரையில் மேலும் குறிப்பிட்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருத்தந்தையின் மூவேளை செப உரை
நவ.07,2011. நாம் கடவுளை அகற்றிவிட்டால், இயேசு கிறிஸ்துவை இவ்வுலகிலிருந்து எடுத்து விட்டால், இந்த உலகம் இருளிலும் ஒன்றுமில்லாமையிலும் வீழ்ந்து விடும் என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இஞ்ஞாயிறு வாசகத்தின் பத்துத் தோழியர் உவமை குறித்து தன் ஞாயிறு மூவேளை செப உரையில் எடுத்துரைத்தத் திருத்தந்தை, நம் பிறரன்பு நடவடிக்கைகளுக்குத் தேவைப்படும் அன்பு இறைவனின் கொடை என்றும், மரணத்திற்குப் பின் நம்மைச்சூழும் இருளை வென்று, வாழ்வின் கொண்டாட்டத்திற்கு அழைத்துச் செல்லும் விளக்கு என்றும் கூறினார்.
எண்ணெயைக் கொண்டுசெல்ல மறந்த கன்னியர்களைப் பற்றி தன் செப உரையில் திருத்தந்தை குறிப்பிடும்போது, அந்த எண்ணெய் அன்பிற்கான உருவகம், அந்த எண்ணெய் வாங்கப்படமுடியாதது, மாறாக கொடையாகப் பெற்று, பாதுகாக்கப்பட்டு நற்செயல்களில் வெளிப்படுத்தப்பட வேண்டியது என்றார்.
தன் மூவேளை செப உரையின் இறுதியில், நைஜீரியாவில் இடம்பெறும் வன்முறைகள் குறித்த தன் ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டார் திருத்தந்தை. வன்முறைகளால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக செபிக்கும் அதேவேளை, வன்முறைகள் நிறுத்தப்பட அழைப்பு விடுப்பதாகவும் உரைத்த பாப்பிறை, வன்முறைகள் எப்பிரச்னைக்கும் தீர்வு காண்பதில்லை, மாறாக அவைகளை அதிகரிக்கவே உதவுகின்றன என்றார்.
இந்திய பல்சமயத் தலைவர்களுடன் திருப்பீட அதிகாரிகளின் கூட்டம்
நவ.07,2011. திருத்தந்தையின் அண்மை அசிசி பல்சமய கூட்டம் ஏற்படுத்தியுள்ள நல்விளைவுகள் குறித்து ஆய்வு செய்யும் நோக்கில் இந்தியாவில் பயணம் மேற்கொண்டு வருகிறார் கர்தினால் Jean-Louis Tauran.
மதங்களிடையே கருத்துப் பரிமாற்றங்களை ஊக்குவிக்கும் திருப்பீட அவையின் செயலர் பேராயர் Pierluigi Celataவுடன் இந்தியாவில் பயணத்தை மேற்கொண்டுள்ள இவ்வவையின் தலைவர் கர்தினால் தவ்ரான், இத்திங்கள் முதல் வியாழன் வரை பூனாவில் இந்து சமயத்தவருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகிறார்.
இம்மாதம் 11 மற்றும் 12 தேதிகளில் சீக்கிய தலைவர்களுடன் அமிர்தசரஸிலும், 13ம் தேதி டெல்லியில் சமண மதத்தவருடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் கர்தினால் தவ்ரான் மற்றும் பேராயர் செலாத்தா, இந்திய இஸ்லாமியர்களுடனும் கலந்துரையாடல்களில் ஈடுபடுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டுமொரு இத்தாலிய நகரிலிருந்து திருத்தந்தைக்கு கௌரவ குடியுரிமை
நவ.07,2011. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு கௌரவ குடியுரிமையை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது அவரின் தாய்வழி பாட்டியின் பிறப்பிட நகர் Naz-Sciaves.
திருத்தந்தையின் பாட்டி பிறந்த ஊர் அமைந்துள்ள இத்தாலியின் Alto Adige பகுதி மக்கள், இப்புதனன்று உரோம் நகர் வந்து திருத்தந்தையிடம் கௌரவக் குடியுரிமை சான்றிதழை வழங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தந்தையின் தாய்வழி மூதாதையர் பிறந்த இத்தாலியின் ராஸா என்ற கிராமத்திலிருந்து 5 கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ள Bressanone நகர் 2008ம் ஆண்டிலேயே திருத்தந்தைக்கு கௌரவ குடியுரிமையை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மதங்களிடையே கருத்து பரிமாற்ற அவை ஒன்று உருவாக்கப்பட அழைப்பு விடுத்துள்ளார் இலங்கை கர்தினால்
நவ.07,2011. இலங்கையில் இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ குழுக்களின் நடவடிக்கைகளால் அந்நாட்டின் புத்த மதத்தினருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே இடம்பெறலாம் என அஞ்சப்படும் மோதல்களைக் களையும் நோக்கில், இவ்விரு மதங்களிடையே கருத்து பரிமாற்ற அவை ஒன்று உருவாக்கப்படவேண்டும் என அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளார் இலங்கை கர்தினால் மால்கம் இரஞ்சித்.
அமெரிக்க ஐக்கிய நாட்டைப் போல் பல்வேறு இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவக் குழுக்கள் இலங்கைத் தலைநகர் கொழும்புவைச் சுற்றியுள்ள இடங்களில் வழிபாட்டு நிகழ்ச்சிகளை நடத்தி வருவது மக்களை மதம் மாற்றுவதற்கான ஒரு முயற்சி என அந்நாட்டு புத்த மதத்தினர் அஞ்சி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
தாங்கள் சார்ந்திருக்கும் கிறிஸ்தவ சபைக்கு மதம் மாறி வரும்படி புத்தமதத்தினருக்கும் கத்தோலிக்கர்களுக்கும் சில இவாஞ்சலிக்கல் குழுக்கள் பணத்தாசைக் காட்டி வருவதாக குற்றம் சாட்டினார் கர்தினால் இரஞ்சித்.
மதங்களிடையே உரையாடல்களை வளர்க்க ஓர் அவை உருவாக்கப்படுவதன் மூலம் மத மோதல்களை தவிர்க்க உதவ முடியும் என்று கூறிய கர்தினால் இரஞ்சித், இத்தகைய அவை மூலம் பல மதக்குழுக்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட முடியும் என்றார்.
மத மோதல்கள் உருவாகாமல் தடுக்கும் நோக்கில், மதஉரையாடல்கள் அவை ஒன்றை உருவாக்க விழையும் கர்தினால் இரஞ்சித்தின் பரிந்துரைக்கு, புத்தமத குரு Kamburugamuwe Wajira Thero தன் ஆதரவையும் பாராட்டையும் வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டில் பாலர்கள் கடத்தப்படுவது குறித்து தலத்திருச்சபை கவலை
நவ.07,2011. பாகிஸ்தான் நாட்டில் பாலர்கள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது தலத்திருச்சபை.
அண்மையில் ஆலய பீடச்சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டு தப்பி வந்துள்ளது பற்றிக் குறிப்பிட்ட லாகூர் மறை மாவட்ட முதன்மை குரு ஆண்ட்ரூ நிசாரி, குழந்தைகளைக் கடத்தும் குற்றக்கும்பல், அவர்களை முடமாக்கி பிச்சையெடுக்க வைக்கின்றது அல்லது விற்கின்றது என்ற கவலையை வெளியிட்டார்.
பாகிஸ்தானில் குழந்தைகள் கடத்தப்படுவது என்பது கிறிஸ்தவர்களை மட்டும் பாதிக்கும் பிரச்சனையல்ல, மாறாக இஸ்லாமியக் குடும்பங்களையும் பாதிக்கிறது என்று கூறிய அந்நாட்டு காரித்தாஸ் அமைப்பின் தேசிய ஒருங்கமைப்பாளர் அமீர் இர்ஃபான், குழந்தைகள் கடத்தப்படுவதற்கு எதிராக, கடுமையானச் சட்டங்கள் கொண்டு வரப்படவேண்டும் என அரசுக்கு அழைப்பு விடுத்தார்.
இலங்கையில் இணையத்தளங்களின் தடைக்கு ஊடக அமைப்புகள் கண்டனம்
நவ.07,2011. உலக நடைமுறை ஊடக முறைமைக்கு எதிராக இலங்கை அரசு செயற்பட்டு, இணையத்தளங்களைத் தடைசெய்ய முனைவதாக ஊடக அமைப்புகள் கண்டித்துள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரப்பூர்வ லங்கா வே நியூஸ், லங்கா கார்டியன் ஆகிய இணையத்தளங்களை முடக்கியுள்ளதுடன், இலங்கை தொடர்பான செய்தி இணையத்தளங்கள் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று இலங்கையின் ஊடக அமைச்சகம் அறிவித்துள்ளது பற்றிக் குறிப்பிட்ட சுதந்திர ஊடக அமைப்பின் அமைப்பாளர் சுனில் ஜெயசேகர, இது குறித்து இலங்கை அரசு ஊடக அமைப்புக்களுடன் கலந்துரையாடவேண்டும் என்று கேட்டுள்ளார்.
இலங்கையில் செய்தி இணையத்தளங்கள் தடைசெய்யப்படுவதை எதிர்த்து, அமெரிக்கத் தூதரகம் அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment