Thursday, 6 November 2014

செய்திகள் - 05.11.14

செய்திகள் - 05.11.14
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை - திருஅவையிலிருந்து நீதியைப் பெற காத்திருக்கும் எளிய மக்கள், பலவேளைகளில் மனம் சோர்ந்து போகின்றனர்

2. லூர்து திருத்தலத்தில் கூடியிருக்கும் பிரான்ஸ் நாட்டு ஆயர்களுக்கு திருத்தந்தையின் வாழ்த்து

3. "கிழக்குக் கிறிஸ்தவர்கள்" என்ற தலைப்பில் உரோம் நகரில் கண்காட்சி

4. திருமணத்தில் இணையும் ஆணும், பெண்ணும் என்ற கருத்தை மையப்படுத்திய ஒரு பன்னாட்டு கருத்தரங்கு - திருப்பீடம் ஏற்பாடு

5. ஈராக்கில் வாழும் கிறிஸ்தவர்களை அரசு பாதுகாக்கும் - ஈராக் பிரதமர் வழங்கிய உறுதி

6. இத்தாலிய ஆயர் பேரவை உறுப்பினர்கள் காசாப் பகுதியில் பயணம்

7. தேவ நிந்தனை என்ற பொய்க்குற்றம் சுமத்தி, பாகிஸ்தானில் இளம் கிறிஸ்தவ தம்பதியர் உயிரோடு எரிப்பு

8. இந்திய அரசு, கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை கேள்விகேட்காமல் இருப்பது வேதனை தருகிறது - அருள்பணி சார்ல்ஸ் இருதயம்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை - திருஅவையிலிருந்து நீதியைப் பெற காத்திருக்கும் எளிய மக்கள், பலவேளைகளில் மனம் சோர்ந்து போகின்றனர்

நவ.05,2014. திருஅவையின் சட்ட வழிமுறைகள் வழியே நீதியைப் பெறுவதற்குக் காத்திருக்கும் எளிய மக்கள், பலவேளைகளில் மனம் சோர்ந்து போகும்படி, இவ்வழிமுறைகள் தாமதமாகின்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
திருஅவைச் சட்டங்களும், வழிமுறைகளும் என்ற பாடங்களைப் பயில, உரோம் நகர் வந்திருக்கும் 300க்கும் அதிகமான அருள் பணியாளர்களை, இப்புதன் காலை, முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை ஆறாம் பால் அரங்கத்தில் சந்தித்தத் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
தன்னைச் சந்திக்கவந்திருக்கும் மாணவர்களுக்கு தயாரித்து வைத்த எந்த உரையையும் வழங்காமல், தன் உள்ளத்தில் எழும் கருத்துக்களைப் பகிர்வதாகக் கூறியத் திருத்தந்தை, பொதுவாகவே திருஅவையின் சட்ட வழிமுறைகள் நீண்டகாலம் தொடர்வதால் எளிய மக்கள் மனம் தளர்ந்து போகின்றனர் என்பதை, தன் பணி வாழ்வில் நிகழ்ந்த எடுத்துக்காட்டுகளுடன் எடுத்துரைத்தார்.
உலக வழிமுறைகள், குறிப்பாக, வர்த்தக உலகின் வழிமுறைகளிலிருந்து மாறுபட்டு, நீதியையும், உண்மையையும் நிலைநிறுத்துவது, திருஅவைச் சட்ட வழிமுறைகளின் அடிப்படைப் பண்பாக அமையவேண்டும் என்பதையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.
நலமான மனசாட்சியுடன் இந்தக் கடினமானப் பணியில் எவ்விதம் ஈடுபடுவது என்பதை, அருள் பணியாளர்கள் கவனமாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தன் ஆவலை வெளியிட்டு, திருத்தந்தை தன் உரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. லூர்து திருத்தலத்தில் கூடியிருக்கும் பிரான்ஸ் நாட்டு ஆயர்களுக்கு திருத்தந்தையின் வாழ்த்து

நவ.05,2014. மறைபரப்புப் பணிகளில் ஆர்வம் கொண்டிருந்த பிரான்ஸ் நாட்டு மறைமாவட்டங்கள், தொடர்ந்து விவிலிய மகிழ்வை பரப்பும் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும் என்பதை தான் விரும்புவதாகத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
நவம்பர் 4, இச்செவ்வாயன்று, பிரான்ஸ் நாட்டு ஆயர் பேரவையின் ஆண்டுக் கூட்டம் லூர்து மாநகரில் துவங்கியுள்ள வேளையில், அந்த ஆண்டுக் கூட்டத்திற்கு தன் வாழ்த்துக்களை அனுப்பியத் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
பிரான்ஸ் ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் Georges Pontier அவர்களுக்கு, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் சார்பில் இச்செய்தியை அனுப்பியுள்ளார்.
விரைவில் துவங்கவிருக்கும் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டு’, ஆயர்கள், குருக்கள், துறவியர் இவர்களுக்கு நம்பிக்கையும், மகிழ்வும் அளிக்கும் வேளையில், இறைமக்களுக்கும் இவ்வாண்டு நம்பிக்கையைத் தரவேண்டும் என்று திருத்தந்தை இச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு நாடுகளுக்கும், குறிப்பாக, மத்தியக் கிழக்குப் பகுதி நாடுகளுக்கு பிரான்ஸ் நாட்டு ஆயர்கள் அளித்து வரும் ஆதரவைப் பாராட்டியுள்ள திருத்தந்தை, பிரான்ஸ் ஆயர் பேரவை தன் பிறரன்புப் பணியைத் தொடர்ந்து ஆற்ற வேண்டுமென்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
லூர்து திருத்தலத்தில் கூடியிருக்கும் ஆயர்களையும், இன்னும் பிரான்ஸ் நாட்டின் அனைத்து மறைமாவட்டங்களிலும் பணியாற்றும் அனைவரையும், லூர்து அன்னையும், புனித பெர்னதெத் அவர்களும் தங்கள் பரிந்துரையால் காத்தருள தன் ஆசீரை வழங்குவதாகக் கூறி, திருத்தந்தை தன் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. "கிழக்குக் கிறிஸ்தவர்கள்" என்ற தலைப்பில் உரோம் நகரில் கண்காட்சி

நவ.05,2014. "கிழக்குக் கிறிஸ்தவர்கள்" என்ற தலைப்பில், மத்தியக் கிழக்குப் பகுதிகளில் வாழும் கிறிஸ்தவர்களின் வரலாறு, இன்றைய நிலை ஆகியவற்றைச் சித்திரிக்கும் ஒரு கண்காட்சியை, இச்செவ்வாயன்று உரோம் நகரில் துவக்கிவைத்த கீழைவழிபாட்டு முறை பேராயத்தின் தலைவர், கர்தினால் லியோனார்தோ சாந்த்ரி அவர்கள், மத்தியக் கிழக்குப் பகுதிகளில் வாழும் கிறிஸ்தவர்களின் உறுதி, நம்பிக்கை, அவர்கள் படும் வேதனைகள், எதிர்நோக்கும் சவால்கள் ஆகிய அனைத்தும் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன என்று கூறினார்.
"கிறிஸ்தவர்கள் அற்ற மத்தியக் கிழக்குப் பகுதி என்ற அவநம்பிக்கை உணர்வுகளுக்கு நாம் உள்ளாகப் போவதில்லை" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிய வார்த்தைகள், இந்தக் கண்காட்சியின் நுழைவில் வைக்கப்பட்டிருப்பதை கர்தினால் சாந்த்ரி அவர்கள் பாராட்டினார்.
1916ம் ஆண்டு முதல் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டளவாய் மத்தியக் கிழக்குப் பகுதியில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
இப்பகுதிகளில் பல ஆண்டுகள் பணியாற்றிவரும் தொமினிக்கன், மற்றும் பிரான்சிஸ்கன் துறவுச் சபையைச் சார்ந்தவர்கள் பாதுகாத்து வைத்துள்ள பல அரிய படங்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெறுவதைக் குறித்தும் கர்தினால் சாந்த்ரி அவர்கள் குறிப்பிட்டு, பாராட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருமணத்தில் இணையும் ஆணும், பெண்ணும் என்ற கருத்தை மையப்படுத்திய ஒரு பன்னாட்டு கருத்தரங்கு - திருப்பீடம் ஏற்பாடு

நவ.05,2014. திருமணத்தில் இணையும் ஆணும், பெண்ணும் எவ்வாறு ஒருவருக்கொருவர் துணையாளர்களாக உள்ளனர் என்ற கருத்தை மையப்படுத்திய ஒரு பன்னாட்டு கருத்தரங்கை திருப்பீடம் ஏற்பாடு செய்துவருகிறது.
விசுவாசக் கோட்பாட்டு பேராயமும், குடும்பங்கள், பல்சமய உரையாடல், கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆகிய பணிகளில் ஈடுபட்டுள்ள திருப்பீட அவைகளும் இணைந்து நவம்பர் 17 முதல் 19 முடிய நடத்தவிருக்கும் இந்தக் கருத்தரங்கை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் துவக்கி வைக்கிறார்.
திருமணத்தில் இணையும் ஆணும், பெண்ணும் ஒருவருக்கொருவர் துணையாளர்கள் என்ற கருத்து உலகின் பல்வேறு மதங்களில் காணப்படுகிறது என்பதை இக்கருத்தரங்கு வெளிப்படுத்தும் என்று கருத்தரங்கின் அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.
23 நாடுகளிலிருந்து வருகைதரும் 14 மதங்களைச் சேர்ந்தவர்கள், இந்த கருத்தரங்கில் கலந்துகொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண் பெண் உறவின் உன்னதம், திருமண உறவின் நிலையற்ற போக்கு, குடும்ப உறவுகள் காணாமற் போவதால் சமுதாயத்தில் உருவாகும் விளைவுகள் ஆகிய கருத்துக்கள் இக்கருத்தரங்கில்  விவாதிக்கப்படும் என்று Zenit செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
மேலும், இக்கருத்தரங்கின் ஒவ்வோர் அமர்விலும் திருமணம், குடும்பம் ஆகிய கருத்துக்களை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள ஆறு குறும்படங்கள் திரையிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : Zenit

5. ஈராக்கில் வாழும் கிறிஸ்தவர்களை அரசு பாதுகாக்கும் - ஈராக் பிரதமர் வழங்கிய உறுதி

நவ.05,2014. ஈராக் நாட்டில் வாழும் கிறிஸ்தவர்களை அந்நாட்டு அரசு பாதுகாக்கும் என்று ஈராக் பிரதமர் Haider al Abadi அவர்கள், கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை முதலாம் இரபேல் லூயிஸ் சாக்கோ அவர்களிடம் கூறினார்.
கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து, முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் தலைமையில், ஈராக் பிரதமர் Abadi அவர்களை, பாக்தாத் நகரில் அண்மையில் சந்தித்தபோது பிரதமர் இந்த வாக்குறுதியை வழங்கினார்.
40 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பில், ஈராக் நாட்டை விட்டு கிறிஸ்தவர்கள் பெருமளவில் வெளியேறி வருவதற்கு தன் வருத்தங்களைத் தெரிவித்த பிரதமர் Abadi அவர்கள், கிறிஸ்தவர்களைக் காப்பது தன் கடமை என்பதை இச்சந்திப்பில் அடிக்கடி வெளிப்படுத்தினார் என்று Fides செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.
இராணுவ நடவடிக்கைகள் மட்டுமே இந்தப் பிரச்னைக்கு வழியல்ல என்பதைக் கூறிய பிரதமர் Abadi அவர்கள், கிறிஸ்தவரும், இஸ்லாமியரும் நல்லுறவு கொள்வதற்கு வேறுபல வழிகளையும் மேற்கொள்வது அவசியம் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
பிரதமர் Abadi அவர்கள், வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர் என்ற கருத்து மக்களிடையே உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், கிறிஸ்தவர்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர் தந்த வாக்குறுதியைக் கேட்டு, தனக்கு நம்பிக்கை பிறந்திருப்பதாக எடுத்துரைத்தார்.

ஆதாரம் : Fides / Zenit

6. இத்தாலிய ஆயர் பேரவை உறுப்பினர்கள் காசாப் பகுதியில் பயணம்

நவ.05,2014. இத்தாலியத் தலத்திருஅவை புனித பூமியுடன் கொண்டுள்ள ஆழ்ந்த உறவை வலியுறுத்தும் வண்ணம், இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் ஆஞ்செலோ பஞாஸ்கோ அவர்களும் ஏனைய ஆயர்களும் காசாப் பகுதியில் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
காசாப் பகுதியில் இஸ்ரேல் படையினரின் தாக்குதல்களால் அழிந்துபோன பல கோவில்களையும், ஏனைய கிறிஸ்தவக் கட்டிடங்களையும் நவம்பர் 4, இச்செவ்வாயன்று பார்வையிட்ட இக்குழுவினர், தொடர்ந்து, Sderot என்ற நகரையும் பார்வையிட்டனர்.
இப்பகுதிகளில் துன்புறும் மக்களின் அனுபவங்களை நேரடியாகக் கேட்டு, அவற்றைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் இவ்வியாழனன்று பகிர்ந்துகொள்ளப் போவதாக கர்தினால் பஞாஸ்கோ அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
பல ஆண்டுகளாக போரையும், அதன் அழிவுகளையும் மட்டுமே கண்டுவரும்  இம்மக்களிடம், குறிப்பாக, இங்குள்ள குழந்தைகளிடம் காணப்படும் புன்முறுவல் தன்னை ஆழமாகப் பாதித்ததாகவும், தனக்கு நம்பிக்கை தந்ததாகவும் கர்தினால் பஞாஸ்கோ அவர்கள் எடுத்துரைத்தார்.
இத்தாலியின் பல்வேறு மறைமாவட்டங்கள் புனித பூமியில் திருப்பயணங்களை மேற்கொள்ளவிருப்பதாகவும், ஒவ்வொரு திருப்பயணமும் இம்மக்களுக்கு ஆறுதலாகவும், உதவியாகவும் இருக்கும் என்று தான் நம்புவதாகவும் கர்தினால் பஞாஸ்கோ அவர்கள் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. தேவ நிந்தனை என்ற பொய்க்குற்றம் சுமத்தி, பாகிஸ்தானில் இளம் கிறிஸ்தவ தம்பதியர் உயிரோடு எரிப்பு

நவ.05,2014. பொய்க்குற்றம் சுமத்தி, அப்பாவி மக்கள் இருவரை எரித்துக் கொன்றது, பாகிஸ்தானின் சட்டத்தை எள்ளி நகையாடும் கொடுமை என்று இஸ்லாமாபாத் - ராவல்பிண்டி ஆயர் ரூபின் அந்தோனி அவர்கள் கூறினார்.
தேவ நிந்தனை குற்றம் புரிந்தனர் என்ற பொய்க்குற்றம் சுமத்தி, 28 வயதான Shazad Masih என்பவரும், அவரது மனைவி, 25 வயதான Shama என்பவரும் இச்செவ்வாயன்று உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர்.
லாகூருக்கு அருகே, Kasur மாவட்டத்தின், Chak என்ற கிராமத்திற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் செங்கல் சூளையில் உழைப்பதற்கு, தன் குடும்பத்தோடு வந்தவர், Shazad. 
பிழைப்பு தேடி வந்த Shazad அவர்களின் மனைவி, தன் வீட்டிலிருந்த பழைய காகிதங்களை எரித்தபோது, அதில் திருக்குரானின் பக்கங்கள் இருந்தன என்று யாரோ ஒருவர் கூறிய ஆதாரமற்ற குற்றச்சாட்டினால் திரண்டு வந்த 300க்கும் அதிகமான மக்கள், Shazad மற்றும் Shamaவை இழுத்துச் சென்று முதலில் கற்களால் எறிந்தனர் என்றும், இறுதியில் செங்கல் சூளையில் எரித்துக் கொன்றனர் என்றும் ஆசிய செய்திக்குறிப்பு கூறுகிறது.
பாகிஸ்தானின் கறுப்புச் சட்டம் என்றழைக்கப்படும் தேவ நிந்தனை சட்டத்தால் வன்முறையாளர்கள் நாட்டின் சட்டங்களை மதிக்காமல் இவ்விதம் தங்கள் விருப்பத்திற்கு கொலைகளைச் செய்வதும், குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் இருப்பதால் இத்தகைய வன்முறைகள் வளர்வதும் வேதனை தருகிறது என்று லாகூரில் 'அமைதி மையம்' என்ற அமைப்பை நடத்தி வரும் தொமினிக்கன் துறவி, James Channan அவர்கள் Fides செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.

ஆதாரம் : AsiaNews

8. இந்திய அரசு, கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை கேள்விகேட்காமல் இருப்பது வேதனை தருகிறது - அருள்பணி சார்ல்ஸ் இருதயம்

நவ.05,2014. இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் உருவாகியுள்ள அரசு, சிறுபான்மை கிறிஸ்தவர்களுக்கு எதிராக வெளிப்படையாக எதுவும் செய்யவில்லை என்றாலும், கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை கேள்விகேட்காமல் இருப்பது வேதனை தருகிறது என்று இந்திய ஆயர் பேரவையின் அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி, மனித முன்னேற்றம் பணிக்குழுவின் செயலர், அருள்பணி சார்ல்ஸ் இருதயம் அவர்கள், Fides செய்திக்கு அண்மையில் அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறினார்.
அடிப்படைவாத இந்துக்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிராக சத்தீஸ்கர் மாநிலத்தில் அண்மையில் மேற்கொண்ட வன்முறைகளை கண்டனம் செய்யாமலும், கேள்விகள் எழுப்பாமலும் இருக்கும் மத்திய அரசின் மௌனம் நல்லதொரு அடையாளம் அல்ல என்று அருள்பணி இருதயம் அவர்கள் கூறினார்.
நீதியையும், அமைதியையும் நிலைநாட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்டு வரும் செபங்கள் வழியே துன்புறும் இந்திய கிறிஸ்தவர்களோடு அவர் இணைகிறார் என்பதை உணரும் நாங்கள், தொடர்ந்து, இந்திய மண்ணில் நீதியும், சமய நல்லுணர்வும் உருவாக வன்முறையற்ற, ஆன்மீக வழிகளைத் தேடுவோம் என்றும் அருள்பணி இருதயம் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவைத் தூய்மைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மத்திய அரசு, மக்கள் மனங்களில் நிலவும் அநீதி, கொடுமை ஆகிய அழுக்குகளையும் அகற்றும் முயற்சிகளில் ஈடுபடுவது அவசியம் என்று நீதி, அமைதி, மனித முன்னேற்றம் பணிக்குழுவின் செயலர், அருள்பணி சார்ல்ஸ் இருதயம் அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : Fides
 

No comments:

Post a Comment