செய்திகள் - 01.11.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை : இப்பூமியில் பயணம் செய்யும் திருஅவையும், விண்ணக எருசலேமும் ஒரே மாபெரும் குடும்பம்
2. திருத்தந்தை : எருசலேம் புனித நகரின் அமைதிக்காகச் செபிப்போம்
3. கடந்த ஆண்டில் இறந்த பேராயர்கள், ஆயர்களின் நினைவாக திருத்தந்தை திருப்பலி
4. கத்தோலிக்கத் திருஅவையும், லூத்தரன் கிறிஸ்தவ சபையும் இணைந்து புதிய அறிக்கை ஒன்றை வெளியிடும், கர்தினால் Koch நம்பிக்கை
5. புர்கினோ ஃபாசோ நாடு வரலாற்றில் ஒரு திருப்புமுனையைச் சந்தித்துள்ளது, தலத்திருஅவை
6. புலம்பெயர்வோர் மீட்புப்பணிகளுக்கு வழங்கிவந்த ஒத்துழைப்பைக் கைவிடும் பிரிட்டனுக்கு ஆயர் எதிர்ப்பு
7. நகர்ப்புறங்கள் நன்கு திட்டமிட்டு அமைக்கப்பட வேண்டும், ஐ.நா.
8. இந்தியாவில் கருவில் உள்ள குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை : இப்பூமியில் பயணம் செய்யும் திருஅவையும், விண்ணக எருசலேமும் ஒரே மாபெரும் குடும்பம்
நவ.01,2014. புனிதர்களுடனான ஒன்றிப்பு, திருமுழுக்கால் கிறிஸ்துவுக்கு உரியவர்களாக மாறியிருக்கும் எல்லாரையும் ஒன்றிணைக்கின்றது, இந்த ஆன்மீகப் பிணைப்பு மரணத்தால் உடைக்கப்படாது, ஆனால் அது மறுவாழ்விலும் தொடரும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
அனைத்துப் புனிதர்கள் பெருவிழாவாகிய இச்சனிக்கிழமை நண்பகலில் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பூமியில் பயணம் செய்யும் திருஅவையும், விண்ணக எருசலேமும் ஒரே மாபெரும் குடும்பம் என்பது பற்றி விளக்கினார்.
இப்பெருவிழா திருவழிபாடு இந்த ஆன்மீகப் பிணைப்புப் பற்றிப் பேசுகின்றது என்றும், எல்லாக் காலங்களின் எண்ணற்ற தூய ஆண்கள் மற்றும் பெண்களுக்காக இன்று நாம் இறைவனைப் புகழ்கின்றோம், இவர்கள் சிலவேளைகளில் உலகுக்குக் கடைசியானவர்களாகவும், அதேநேரம் இறைவனுக்கு முதன்மையானவர்களாகவும் இருந்துள்ளனர் என்றும் கூறினார் திருத்தந்தை.
விண்ணகத்திற்கும்
மண்ணகத்திற்கும் இடையேயுள்ள இந்த அழகான பிணைப்பு திருவழிபாட்டில் மிக
உயர்ந்த மற்றும் மிக ஆழமான விதத்தில் இடம்பெறுகின்றது, சிறப்பாக, திருஅவையின்
அங்கத்தினர்களுக்கிடையே ஆழமான ஒன்றிப்பை வெளிப்படுத்தி நிறைவடையச்
செய்யும் திருநற்கருணைக் கொண்டாட்டத்தில் இது வெளிப்படுகின்றது என்றும்
உரைத்தார் திருத்தந்தை.
நவம்பர் மாதத்தின் முதல் இரண்டு நாள்கள், நம் அனைவருக்கும் வாழ்வின் இறுதிக் காரியங்கள் பற்றிய விசுவாசத்தின், செபத்தின், சிந்தனையின் ஆழமான நேரங்களாகும், உண்மையில் புனிதர்களின் பெருவிழாவையும், இறந்த அனைத்து விசுவாசிகளின் நினைவையும் நாம் திருவழிபாட்டில் சிறப்பிக்கும்போது, இவ்வுலகில் வாழும் திருஅவைக்கும், விண்ணில் வாழும் திருஅவைக்கும் உள்ள பிணைப்பை உணருகின்றோம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை : எருசலேம் புனித நகரின் அமைதிக்காகச் செபிப்போம்
நவ.01,2014. விண்ணக எருசலேமின் மகிமை பற்றி அனைத்துப் புனிதர்கள் பெருவிழாத் திருவழிபாடு குறிப்பிடும் இவ்வேளையில், யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள்
ஆகிய மூன்று மதத்தவருக்கும் புனித நகரமாக விளங்கும் எருசலேம் நகருக்காகச்
செபிக்குமாறு இம்மூவேளை செப உரையின் இறுதியில் அனைவரிடமும்
கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அண்மை நாள்களில் பல்வேறு பதட்டநிலைகளை எதிர்கொண்டுள்ள எருசலேம் புனித நகரம், மனிதக் குடும்பம் அனைத்திற்கும் இறைவன் வழங்க விரும்பும் அமைதிக்கு அடையாளமாகவும், முன்சுவையாகவும் இருக்கட்டும் எனவும் கூறினார் திருத்தந்தை.
மேலும், இஸ்பெயினின் வித்தோரியாவில் இச்சனிக்கிழமையன்று அருளாளராக அறிவிக்கப்பட்டுள்ள மறைசாட்சி அருள்பணியாளர் Peter Asúa Mendía அவர்கள் பற்றியும் குறிப்பிட்டார் திருத்தந்தை.
ஏழைகள் மற்றும் உதவிகள் தேவைப்படும் மக்களுக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த இந்த அருள்பணியாளர், இயேசுவுக்கும் திருஅவைக்கும் விசுவாசமாக இருப்பதற்குத் தனது விருப்பத்தைத் தெரிவித்ததால், கைது செய்யப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாகி கொல்லப்பட்டார் என்றும் கூறினார் திருத்தந்தை.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. கடந்த ஆண்டில் இறந்த பேராயர்கள், ஆயர்களின் நினைவாக திருத்தந்தை திருப்பலி
நவ.01,2014. ஒரு நல்ல எடுத்துக்காட்டான வாழ்வு மிகுந்த நன்மையைக் கொண்டுவரும், ஆனால் வெளிவேடத்தனமான வாழ்வு மிகுந்த தீமையைக் கொண்டுவரும் என்ற வார்த்தைகளை, இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டர் செய்தியாக வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இறந்த திருத்தந்தையருக்காக, இஞ்ஞாயிறு மாலையில் வத்திக்கான் கெபியில் செபிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஆண்டில் இறந்த கர்தினால்கள், பேராயர்கள் மற்றும் ஆயர்களின் நினைவாக, நவம்பர் 3ம் தேதி காலை 11.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில் திருப்பலி நிறைவேற்றுவார்.
2013ம் ஆண்டு நவம்பர் 11 முதல் 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 20 வரை பத்து கர்தினால்களும், 2013ம் ஆண்டு அக்டோபர் 30 முதல் 2014ம் ஆண்டு அக்டோபர் 26 வரை, 111 பேராயர்கள் மற்றும் ஆயர்களும் இறந்துள்ளனர்.
இன்னும், நவம்பர் 01, இச்சனிக்கிழமை மாலை 4 மணிக்கு உரோம் வெரானோ கல்லறைத் தோட்டத்தில் திருப்பலி நிகழ்த்தி, அங்குள்ள அன்னைமரியா திருவுருவத்தின் முன்பாக, புனித திருத்தந்தையர் 23ம் ஜான், 2ம் ஜான் பால் ஆகிய இருவரின் திருப்பண்டங்களை வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
1835ம் ஆண்டில் தொடங்கப்பட்ட உரோம் வெரானோ கல்லறைத் தோட்டம், 2ம் உலகப் போரின்போது 1943ம் ஆண்டில் நேச நாடுகளின் குண்டுவீச்சால் சேதமடைந்து மீண்டும் சீரமைக்கப்பட்டது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. கத்தோலிக்கத் திருஅவையும், லூத்தரன் கிறிஸ்தவ சபையும் இணைந்து புதிய அறிக்கை ஒன்றை வெளியிடும், கர்தினால் Koch நம்பிக்கை
நவ.01,2014.
2017ம் ஆண்டில் சிறப்பிக்கப்படவிருக்கும் லூத்தரன் கிறிஸ்தவ சபையின்
ஐந்தாம் நூற்றாண்டுக் கொண்டாட்டங்களின்போது கத்தோலிக்கத் திருஅவையும், லூத்தரன்
கிறிஸ்தவ சபையும் இணைந்து புதிய அறிக்கை ஒன்றை வெளியிடும் என்ற தனது
நம்பிக்கையைத் தெரிவித்தார் வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர்.
திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவைத் தலைவர் கர்தினால் Kurt Koch அவர்கள், லூத்தரன் கிறிஸ்தவக் கூட்டமைப்புக் கூட்டத்தில் உரையாற்றியபோது இந்நம்பிக்கையைத் தெரிவித்தார்.
திருஅவை, திருநற்கருணை, திருப்பணி
ஆகியவை குறித்து இவ்விரு சபைகளும் இணைந்து புதிய அறிக்கை ஒன்றை வெளியிட
வேண்டும் என்ற தனது எதிர்பார்ப்பையும் குறிப்பிட்டார் கர்தினால் Koch.
இவ்விரு சபைகளும், 1999ம் ஆண்டில் ஏற்புடைமை கோட்பாடு பற்றி வெளியிட்ட அறிக்கையையும் சுட்டிக்காட்டினார் கர்தினால் Koch.
1517ம் ஆண்டில் மார்ட்டின் லூத்தர் அவர்களால் மேற்கத்திய திருஅவையில் ஏற்பட்ட பெரும் பிளவால் லூத்தரன் கிறிஸ்தவ சபை உருவானது.
1947ம் ஆண்டில் இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், சுவிட்சர்லாந்தின் Lund
நகரில் லூத்தரன் கிறிஸ்தவக் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. இதில் 79
நாடுகளின் 144 சபைகள் உறுப்புக்களாக உள்ளன. அக்கூட்டமைப்பில் 7 கோடியே 20
இலட்சத்துக்கு மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
ஆதாரம் : CWN
5. புர்கினோ ஃபாசோ நாடு வரலாற்றில் ஒரு திருப்புமுனையைச் சந்தித்துள்ளது, தலத்திருஅவை
நவ.01,2014. மேற்கு அப்ரிக்க நாடான புர்கினோ ஃபாசோவில் கடந்த 27 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அரசுத்தலைவர் Blaise Campaore
அவர்கள் பதவி விலகியுள்ளது அந்நாட்டின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக
உள்ளது என்று அந்நாட்டுக் கத்தோலிக்கத் திருஅவை கருத்து தெரிவித்துள்ளது.
அரசுத்தலைவர் Blaise Campaore அவர்கள், மூன்றாவது
முறையாக அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு வழியமைக்கும் வகையில்
அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டுவருவதற்கு ஓட்டெடுப்பு நடத்துவதற்கு
நாடாளுமன்றம் தயாரித்துவந்தது. இச்சூழலில், இவ்வியாழனன்று ஆயிரக்கணக்கான மக்கள் நாடாளுமன்றத்தின் முன்னர் கூடி போராட்டத்தை நடத்தினர். இதனால், இவ்வெள்ளியன்று அரசுத்தலைவர் Blaise Campaore அவர்கள் பதவி விலகினார்.
இந்நிலையில், நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து ஃபீதெஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய தலத்திருஅவை அதிகாரிகள், தலைநகரில் மட்டுமன்றி, பிற முக்கிய நகரங்களிலும் போராட்டங்களும், சூறையாடல்களும் இடம்பெற்று வருகின்றன என்று தெரிவித்துள்ளனர்.
தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, நாடு இராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது என்றும், அரசுத்தலைவர்
தேர்தல் நடைபெறும் வரையில் அடுத்த 12 மாதங்களுக்கு நாட்டை ஆளும் இடைக்கால
அரசு அமைப்பதில் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன என்றும் தலத்திருஅவை
தெரிவித்துள்ளது.
உலகில் வளர்ச்சி குன்றிய நாடுகளில் ஒன்றான புர்கினோ ஃபாசோவில், 46.4 விழுக்காட்டினர் 15 வயதுக்கும், 59.1 விழுக்காட்டினர் 20 வயதுக்கும் உட்பட்டவர்கள் என்று கடந்த ஆண்டில் ஆயர்கள் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
ஆதாரம் : Fides
6. புலம்பெயர்வோர் மீட்புப்பணிகளுக்கு வழங்கிவந்த ஒத்துழைப்பைக் கைவிடும் பிரிட்டனுக்கு ஆயர் எதிர்ப்பு
நவ.01,2014.
மத்திய தரைக்கடல் வழியாக பிற நாடுகளிலிருந்து ஐரோப்பாவுக்குள் நுழையும்
ஆபத்தான கடல் பயணத்தில் இறப்பவர்களைத் தேடும் மற்றும் அவ்வாறு
வருகிறவர்களைக் கண்காணிக்கும் ஐரோப்பிய ஒன்றியப் பணிகளுக்கு உதவிசெய்வதைப்
பிரித்தானிய அரசு நிறுத்திக்கொள்வதாக அறிவித்திருப்பதற்கு எதிர்ப்புத்
தெரிவித்துள்ளார் அந்நாட்டு ஆயர் ஒருவர்.
பிரிட்டனின் கடற்படை அமைப்பு ஐரோப்பாவில் இன்னும் முன்னிலையில் உள்ளது என்றும், ஐரோப்பிய ஒன்றியத்தின் மத்தியதரைக் கடல் கண்காணிப்புப் பணிகளில் சேரவும், கடலில் இறந்தவர்களைத் தேடவும் ஒத்துழைப்பு தர மறுப்பது, போர்
மற்றும் அடக்குமுறைகளால் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறும் ஆயிரக்கணக்கான
மனிதர்களைக் காப்பாற்றும் பொறுப்பிலிருந்து விலகுவதாக உள்ளது என்றும் ஆயர்
பேட்ரிக் லின்ச் கூறியுள்ளார்.
ஆபத்தை எதிர்கொள்ளும் நம் சகோதர சகோதரிகளுக்கு உதவும் கடமையிலிருந்து விலகுவது குறித்து திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் எச்சரித்துள்ளது பற்றிக் குறிப்பிட்டுள்ளார்
பிரித்தானிய ஆயர் பேரவையின் குடியேற்றதாரர் ஆணைக்குழுத் தலைவர் ஆயர்
லின்ச்.
ஒரு வசதியான கலாச்சாரத்தில் நம் கடமைகளை மறக்கின்றோம் மற்றும் இக்கலாச்சாரம், மற்ற மக்களின் அழுகுரல்களைக் கேட்கவிடாமல் செய்கின்றது என்ற திருத்தந்தையின் உரையையும் ஆயர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்தியதரைக்
கடல் பகுதியில் ஈடுபட்டுள்ள கண்காணிப்பு மற்றும் மீட்புப்பணிகளிலிருந்து
இத்தாலி விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளது. இச்சூழ்நிலையில் இப்பணிகளுக்கு
வழங்கிவந்த ஒத்துழைப்பை பிரிட்டனும் கைவிடுவதாகக் கூறியுள்ளது.
மத்தியதரைக்
கடல் பகுதியில் கடந்த ஆண்டில் கிட்டத்தட்ட மூவாயிரம் பேர் கடலில் மூழ்கி
உயிரிழந்துள்ளனர். இத்தாலிய கடற்படை ஏறக்குறைய ஒன்றரை இலட்சம் பேரைக்
காப்பாற்றியிருக்கிறது.
ஆதாரம் : CCN
7. நகர்ப்புறங்கள் நன்கு திட்டமிட்டு அமைக்கப்பட வேண்டும், ஐ.நா.
நவ.01,2014. உலகின் நகர்ப்புறப் பகுதிகள் அளவிலும், மக்கள் தொகையிலும் தவிர்க்க இயலாத நிலையில் வளர்ந்துவரும்வேளை, இப்பகுதிகள் சுற்றுச்சூழல் வசதிகளுடன் நன்கு திட்டமிட்டு அமைக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் நிறுவனம் கூறியுள்ளது.
உலக நகரங்கள் தினம் முதன்முறையாக இவ்வெள்ளியன்று(அக்.31) கடைப்பிடிக்கப்பட்டபோது இவ்வாறு உரைத்த ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அவர்கள்,
உலகில் மாநகரங்கள் மற்றும் நகரங்களின் உறுதியான வளர்ச்சியை ஊக்குவிக்கும்
நோக்கத்தில் இவ்வுலக தினம் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்
உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பாகத்துக்கு மேற்பட்டோர், அதாவது 500 கோடிப்பேர் 2030ம் ஆண்டுக்குள் நகரங்களில் வாழ்வார்கள் என்றும், இந்நிலை, நகரங்களின் சுற்றுச்சூழல், குடியிருப்புகள், வளங்கள், இன்னும் பிற வசதிகளை மேம்படுத்தவேண்டியதன் அவசியத்தை முன்வைக்கின்றது என்றும் பான் கி மூன் கூறியுள்ளார்.
அத்துடன், நகர மக்கள் தொகையில் 60 விழுக்காட்டுக்கு அதிகமானோர் 18 வயதுக்கு உட்பட்டவர்களாக இருப்பார்கள் என்றும் பான் கி மூன் கூறியுள்ளார்.
ஆதாரம் : UN
8. இந்தியாவில் கருவில் உள்ள குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை
நவ.01,2014. இந்தியாவில் முதல் முறையாக, கருவில் உள்ள குழந்தைக்கு, இதய அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டு உள்ளது.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்த 25 வயது கர்ப்பிணியான சிரிஷாவின் கருவில் வளரும் குழந்தையின் இதயத்தில், மகாதமனியில் அடைப்பு ஏற்பட்டதால், இதயத்தின் வலது பகுதிக்கு இரத்த ஓட்டம் குறைந்தும், வளர்ச்சியின்றியும் காணப்பட்டது. குழந்தை பிறந்தபின், இந்தக் குறைபாட்டை சரிசெய்ய முடியாது என்பதால் கருவில் இருக்கும்போதே அறுவை சிகிச்சை செய்துள்ளனர் மருத்துவர்கள்.
மருத்துவர் நாகேஸ்வர ராவ் தலைமையில், 12 நிபுணர்கள் கொண்ட குழு, தாயின் வயிற்றின் வழியாக, கருவில் உள்ள குழந்தையின் இதயத்திற்கு, மெல்லிய வயருடன் கூடிய ஊசி மூலம் பலூனைச் செலுத்தி அடைப்பை நீக்கியுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கருவில் இருந்த குழந்தை, இடம் மாறி இருந்ததால், அறுவை சிகிச்சை முதலில் செய்ய முடியாமல் கைவிடப்பட்டது. ஒரு வாரத்திற்குப்பின், தாய்க்கும், கருவில் உள்ள குழந்தைக்கும் மயக்க மருந்து அளித்து, குழந்தை நகராமல் இருக்கும்படி செய்யப்பட்டது. பின், தாயின் வயிற்றின் மூலம், குழந்தையின் இதய மகாதமனிக்கு, மெல்லிய வயருடன் கூடிய ஊசி மூலம் சிறிய பலூனை செலுத்தி, அடைப்பை நீக்கி, இரத்தக் குழாயை விரிவடையச் செய்தனர் மருத்துவர்கள்.
அறுவை சிகிச்சை முடிந்து, இரண்டு வாரங்களுக்குப்பின் பரிசோதித்தபோது, குழந்தையின் இதயம் வளர்ச்சியடைந்து, நன்கு செயல்பட்டதுடன், எடையும், 830 கிராமில் இருந்து, 1,200 கிராமாக உயர்ந்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment