Monday, 20 October 2014

செய்திகள் - 18.10.14

செய்திகள் - 18.10.14
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ், வியட்னாம் பிரதமர் சந்திப்பு

2. திருத்தந்தை மாணவர்களிடம் : அரைகுறை உண்மைகளில் திருப்தியடைந்து விடாதீர்கள்

3. திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள் அருளாளராக உயர்த்தப்படும் திருப்பலியில்  திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

4. உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் 14வது பொது அமர்வு

5. குடும்பங்களின் உரிமைகள் ஊக்குவிக்கப்பட அரசுகளுக்கும், அனைத்துலக நிறுவனங்களுக்கும் மாமன்றத்தந்தையர் அழைப்பு

6. நைஜீரீயாவில் Boko Haram இஸ்லாமிய அமைப்பு பள்ளிச் சிறுமிகளை விடுவிக்க ஒப்புதல்

7. குடும்பங்கள் இல்லாமல் சிறார் தனித்துவிடப்படுவது புதிய மனிதாபிமானப் பேரிடர்

8. ஆசியா பீபியின் மரணதண்டனை குறித்து இந்திய, பாகிஸ்தானியத் திருஅவைத் தலைவர்கள் கண்டனம்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ், வியட்னாம் பிரதமர் சந்திப்பு

அக்.18,2014. வியட்னாம் கம்யூனிசக் குடியரசின் பிரதமர் Nguyen Tan Dung அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இச்சனிக்கிழமையன்று வத்திக்கானில் சந்தித்து உரையாடினார்.
இச்சந்திப்புக்குப் பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி ஆகிய இருவரையும் சந்தித்தார் வியட்னாம் பிரதமர் Nguyen Tan Dung.
மேலும், “உலகை மாற்ற வேண்டுமானால், நாம் செய்யும் காரியங்களுக்குத் திருப்பிச் செய்ய இயலாதவர்களுக்கு நன்மைகள் செய்ய வேண்டும் என்று, இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டரில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்னும், தென் கொரிய அரசுத்தலைவர் Park Geun-hyen-hye அவர்களை இவ்வெள்ளியன்று வத்திக்கானில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படும் திருத்தந்தையின் "நம்பிக்கை ஒருபோதும் நம்மை ஏமாற்றாது" என்ற வார்த்தைகள் தன்னை மிகவும் கவர்ந்ததாகப் பத்திரிகையாளர்களிடம் கூறினார் தென் கொரிய அரசுத்தலைவர்.
இவர் 13 பேருடன் திருத்தந்தையைச் சந்தித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை மாணவர்களிடம் : அரைகுறை உண்மைகளில் திருப்தியடைந்து விடாதீர்கள்

அக்.18,2014. அரைகுறையான உண்மைகளுடனும் அல்லது உறுதியளிக்கும் மாயைகளுடனும் திருப்தியடைந்து விடாமல், மெய்மைகளை முழுமையாய்ப் புரிந்துகொள்ளும் பண்புகளில் வளருமாறு, இத்தாலிய பல்கலைக்கழக மாணவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
FUCI என்ற இத்தாலிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகக் கூட்டமைப்பினருக்குச் செய்தி  அனுப்பியுள்ள திருத்தந்தை, பல்கலைக்கழக வாழ்வின் முக்கிய அம்சங்கள் பற்றிக் குறிப்பிட்டு, உண்மைக்கானத் தணியாத தாகத்தில் மாணவர்களின் ஆய்வுகள் இருக்கவேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிட்டுள்ளார்.
திருத்தந்தை ஆறாம் பவுல் பற்றிய தேசிய சிறப்புக் கருத்தரங்கை நடத்தவுள்ள FUCI கூட்டமைப்பினருக்கு அனுப்பியுள்ள செய்தியில், மக்கள் மத்தியில் இடம்பெறும் மோதல்களை வெற்றிகொண்டால் மட்டுமே, சந்திப்பு மற்றும் உடன்பிறந்தோர்  உணர்வுக் கலாச்சாரத்தைப் பேணிக் காப்பதில் வெற்றியடைய முடியும் என்று கூறியுள்ளார்  திருத்தந்தை.
கல்வியில் ஆர்வம், ஆய்வு, கலாச்சாரச் சந்திப்பு, உடன்பிறந்தோர் பண்பு ஆகியவை பற்றி இச்செய்தியில் விளக்கியுள்ளார் திருத்தந்தை.
இறையடியார் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள், 1925ம் ஆண்டு முதல் 1933ம் ஆண்டுவரை FUCI கூட்டமைப்புக்கு முக்கிய உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள் அருளாளராக உயர்த்தப்படும் திருப்பலியில்  திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

அக்.18,2014. இஞ்ஞாயிறன்று வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இறையடியார் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள் அருளாளராக உயர்த்தப்படும் திருப்பலியில்  முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் கலந்துகொள்வார் என்று திருப்பீடம் அறிவித்துள்ளது.
இஞ்ஞாயிறு காலை 10.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிகழ்த்தும் திருப்பலியில் இறையடியார் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள் அருளாளராக அறிவிக்கப்படவுள்ளார்.
Giovanni Battista Montini என்ற இயற்பெயரைக் கொண்ட திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள், 1954ல் மிலான் உயர்மறைமாவட்ட பேராயராக நியமிக்கப்பட்டார். 1963ம் ஆண்டு முதல் 1978ம் ஆண்டுவரை திருஅவையின் தலைமைப் பொறுப்பை வகித்த இவர், 1978ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி காஸ்தெல் கந்தோல்ஃபோவில் காலமானார். வட இத்தாலியின் பிரேஷா மாவட்டத்தில் 1897ம் ஆண்டில் பிறந்த திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள் 1920ல் குருவானார். 1963ம் ஆண்டில் புனித திருத்தந்தை 23ம் யோவான் அவர்கள் இறந்த பின்னர் பாப்பிறையான திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள் 2ம் வத்திக்கான் பொதுச்சங்கத்தை மீண்டும் கூட்டி அதனை நிறைவு செய்தார். இவர், இந்தியாவுக்குத் திருப்பயணம் மேற்கொண்ட முதல் திருத்தந்தையாவார்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் 14வது பொது அமர்வு

அக்.18,2014. குடும்பம் பற்றிய உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் 14வது பொது அமர்வு இச்சனிக்கிழமை காலை 9 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிரசன்னத்தில் செபத்துடன் தொடங்கியது.
இக்காலை செபத்தை வழிநடத்திய வியட்னாம் நாட்டின் Thành-Phô Hô Chí Minh பேராயர் Paul Bùi Văn Đoc அவர்கள், இயேசுவில் நம்பிக்கை வைத்தால் அவர் நமக்குச் சொல்லும் இறையன்பை வரவேற்போம், நாம் நற்செய்தி பற்றி வெட்கமடையக் கூடாது என்று கூறினார்.
இறைவன் கருணையுள்ளவர், ஏனெனில் அவர் எல்லாம் வல்லவர், இறைவனின் வல்லமை அழிக்கும் வல்லமை அல்ல, ஆனால் அது வாழவைக்கும் வல்லமை என்றுரைத்த வியட்னாம் பேராயர் Văn Đoc அவர்கள், நாம் இறைவனின் வல்லமையில் நம்பிக்கை வைக்கிறோமா அல்லது உலகின் வல்லமையிலா என்ற கேள்வியையும் எழுப்பினார்.
உலகின் வல்லமை, வாழ்வையும், அன்பையும், மனிதக் குடும்பங்களையும் என அனைத்தையும் அழித்துக்கொண்டிருக்கிறது, ஆனால் விசுவாச வாழ்வு, மகிழ்வின் ஊற்றாகிய அன்பு வாழ்வில் அமைந்துள்ளது என்றும் மறையுரையாற்றினார் பேராயர் Văn Đoc.
இந்த 14வது பொது அமர்வில் உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் இறுதித் தொகுப்பு குறித்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இம்மாதம் 5ம் தேதி திருப்பலியுடன் தொடங்கி வைத்த, குடும்பம் பற்றிய உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தை, இஞ்ஞாயிறன்று திருப்பலி நிகழ்த்தி நிறைவுசெய்கிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. குடும்பங்களின் உரிமைகள் ஊக்குவிக்கப்பட அரசுகளுக்கும், அனைத்துலக நிறுவனங்களுக்கும் மாமன்றத்தந்தையர் அழைப்பு

அக்.18,2014. பொது நன்மைக்காக, குடும்பங்களின் உரிமைகள் ஊக்குவிக்கப்பட வேண்டுமென்று உலகின் அரசுகளுக்கும், அனைத்துலக நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர் மாமன்றத்தந்தையர்.
குடும்பம் பற்றிய உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் இறுதி நாளான இச்சனிக்கிழமையன்று மாமன்றத்தந்தையர் வெளியிட்டுள்ள செய்தியில், ஏழைக் குடும்பங்கள், எவ்வித நம்பிக்கையுமின்றி அலைந்து திரியும் புலம்பெயர்ந்தோர், கடினமான பயணம் மேற்கொண்டு கரையை அடையும் குடியேற்றதாரர், விசுவாசம், மனித மற்றும் ஆன்மீக விழுமியங்களுக்காக நசுக்கப்படும் மக்கள் ஆகிய அனைவரையும் நினைவுகூர்ந்துள்ளனர்.
வன்முறை, தவறாகப் பயன்படுத்தல், மனித வணிகம் போன்றவற்றால் துன்புறும் பெண்களையும் நினைவுகூர்ந்துள்ள மாமன்றத்தந்தையர், உரிமை மீறல்களை எதிர்நோக்கும் சிறார் பாதுகாக்கப்பட்டு முன்னேற்றப்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஒவ்வொருவரையும் வரவேற்பதற்குத் தனது கதவுகளை எப்போதும் திறந்து வைத்திருக்கும் ஓர் இல்லமாக தமது திருஅவை இருக்குமாறு கிறிஸ்து விரும்புகிறார்  என்று அச்செய்தியில் கூறியுள்ள மாமன்றத்தந்தையர், தம்பதியரோடும், குடும்பங்களோடும் உடனிருந்து அவர்களின் காயங்கள் குணமடைவதற்கு உதவும் மேய்ப்பர்கள், பொதுநிலை விசுவாசிகள், சமூகங்கள் ஆகிய அனைவருக்கும் தங்களின் நன்றியையும் தெரிவித்துள்ளனர். 
இறைவனோடும் அடுத்திருப்பவரோடும் உறவை இணைப்பது ஞாயிறு திருப்பலி என்பதால் அதில் பங்கெடுப்பதன் அவசியம், இன்னும், திருமண முறிவில் வாழ்வோர், மறுதிருமணம் செய்துகொண்டோர் ஆகியோர் அருளடையாளங்களில் பங்கெடுப்பது குறித்து சிந்தித்ததாகவும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளனர் மாமன்றத்தந்தையர்.
இம்மாதம் 5ம் தேதி தொடங்கிய இரு வார மாமன்றத்தில், உலகின் அனைத்துக் கண்டங்களிலிருந்தும் 253 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. நைஜீரீயாவில் Boko Haram இஸ்லாமிய அமைப்பு பள்ளிச் சிறுமிகளை விடுவிக்க ஒப்புதல்

அக்.18,2014. நைஜீரீயாவின் Boko Haram இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு, போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குக் கையெழுத்திட்டுள்ளவேளை, இந்தப் போர் நிறுத்தம் நிலைத்து இருக்கும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார் அந்நாட்டுக் கர்தினால் John Onaiyekan.
இவ்வொப்பந்தம் குறித்து வத்திக்கான் வானொலியில் கருத்து தெரிவித்த, நைஜீரீயக் கத்தோலிக்கத் திருஅவைத் தலைவரான கர்தினால் Onaiyekan அவர்கள், கடந்த சில ஆண்டுகளாக நைஜீரீயா அனுபவித்துவரும் அறிவற்ற செயல்கள் உண்மையிலேயே முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார்.
வன்முறையையும் பதட்டநிலைகளையும் எவருமே விரும்பவில்லை என்பதை இப்போர் நிறுத்த ஒப்பந்தம் Boko Haram அமைப்புக்கு உணர்த்த வேண்டுமென்றும் அபுஜா பேராயரான கர்தினால் Onaiyekan அவர்கள் கூறினார்.
Boko Haram இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு நைஜீரீய இராணுவத்துடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குக் கையெழுத்திட்டுள்ளதோடு, ஆறு மாதங்களுக்கு முன்னர் கடத்திய 200 பள்ளிச் சிறுமிகளை விடுவிக்கவும் ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை நைஜீரீய பாதுகாப்புத்துறையின் Alex Badeh, இவ்வெள்ளி பிற்பகலில் அறிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. குடும்பங்கள் இல்லாமல் சிறார் தனித்துவிடப்படுவது புதிய மனிதாபிமானப் பேரிடர்

அக்.18,2014. உலக அளவில் பெருமளவான குழந்தைகள் குடும்பங்கள் இல்லாமல் தனித்துவிடப்படுவது ஒரு புதிய மனிதாபிமானப் பேரிடர் என்றுரைத்த அதேவேளை, இப்பேரிடரை அகற்றுவதற்குத் திருஅவை நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறினார் உக்ரேய்ன் பேராயர் Sviatoslav Shevchuk.
இன்றைய உலகில், ஒரு தந்தை, தாயால் அமைந்துள்ள குடும்பங்களில் ஏறக்குறைய 70 விழுக்காட்டுப் பிள்ளைகள் வளர்வதில்லை, இது ஒருவகையான மனிதாபிமானப் பேரிடர் என்று கூறினார் பேராயர் Shevchuk.
இச்சவாலை எதிர்கொள்ளும் திருஅவை, குடும்பங்கள் இல்லாமல் வாழ்கின்ற இளையோர் வளர்வதற்கு அவர்களுடன் இருந்து உதவி செய்வதோடு, இந்த இளையோர் தங்களின் சொந்தக் குடும்பங்களை உருவாக்குவதற்கும் உதவ வேண்டுமெனக் கூறினார்  பேராயர் Shevchuk.
குடும்பம் பற்றிய உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தில் கலந்துகொள்ளும் உக்ரேய்ன் கிரேக்க கத்தோலிக்கத் திருஅவைத் தலைவரான பேராயர் Shevchuk அவர்கள் வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.
திருமணம் என்னும் அருளடையாளத்தில் தூய ஆவியாரின் பங்கு கண்டுணரப்பட வேண்டுமென்றும், தம்பதியர் தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் காயங்களைக் குணப்படுத்தி, திருமணத்தைப் பயனுள்ள வகையில் வாழ்வதற்கு உதவிகள் வழங்கப்பட வேண்டுமென்றும் கூறினார் உக்ரேய்ன் பேராயர் Shevchuk.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

8. ஆசியா பீபியின் மரணதண்டனை குறித்து இந்திய, பாகிஸ்தானியத் திருஅவைத் தலைவர்கள் கண்டனம்

அக்.18,2014. பாகிஸ்தானில் தெய்வநிந்தனைக் குற்றத்தின்பேரில் 2010ம் ஆண்டில் ஆசியா பீபி என்ற கிறிஸ்தவத் தாய்க்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை மீண்டும் உறுதிசெய்யப்பட்டுள்ளது குறித்த தங்களின் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர் இந்திய மற்றும் பாகிஸ்தானியத் திருஅவைத் தலைவர்கள்.
இறைவாக்கினர் முகமது அவர்களை அவமதித்தார் என்று 50 வயதான ஆசியா பீபி குற்றம் சாட்டப்பட்டு, 2010ம் ஆண்டு நவம்பரில் லாகூர் மாவட்ட நீதிமன்றம் அவருக்கு மரணதண்டனை தீர்ப்பளித்தது. இவ்வழக்கு குறித்து விசாரித்த லாகூர் உயர் நீதிமன்றம் இவ்வியாழனன்று அத்தண்டனையை உறுதிசெய்துள்ளது.
இது குறித்து தனது கண்டனத்தை வெளியிட்ட பூனே ஆயர் தாமஸ் தாப்ரே அவர்கள், இத்தீர்ப்பு, அனைத்துவிதமான மனித மற்றும் அனைத்துலகச் சட்டங்களுக்கு எதிரானது என்று ஆசிய செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
இத்தண்டனையும், தெய்வநிந்தனை குறித்த சட்டங்களும் இரத்துசெய்யப்படுவதற்கு அனைத்துலக அதிகாரிகள் பாகிஸ்தான் அரசுக்கு அழுத்தம் கொடுப்பார்கள் என்ற தனது நம்பிக்கையையும் தெரிவித்தார் ஆயர் தாப்ரே.
மேலும், பாகிஸ்தான் இராணுவ சர்வாதிகாரி முகமது சியா-உல்-ஹக் அவர்கள், 1980களில் அமல்படுத்திய தெய்வநிந்தனை குறித்த சட்டங்கள் திருத்தியமைக்கப்படுமாறு அனைத்துலக மற்றும் பாகிஸ்தானிய மனித உரிமைக் குழுக்கள் வலியுறுத்தி வருகின்றன.
ஐந்து குழந்தைகளுக்குத் தாயான ஆசியா பீபிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக, பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் இஞ்ஞாயிறன்று செபம் மற்றும் உண்ணாநோன்பை கடைப்பிடிக்கவுள்ளனர்.

ஆதாரம் : AsiaNews

No comments:

Post a Comment