செய்திகள் - 17.10.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை : இறைவனின் விண்ணக வாக்குறுதி
2. திருத்தந்தை : மக்கள் மத்தியிலும், நாடுகளுக்கு இடையேயும் ஒற்றுமை மிகவும் தேவை
3. உலகளாவியப் பசியை அகற்றுவதில் விவசாயக் குடும்பங்களின் பங்குக்குப் பாராட்டு
4. ஆயர்கள் மாமன்றம் : திருமணத்தின் அழகு, குடும்பம் பற்றியப் போதனைகளுக்கு முக்கியத்துவம்
5. ஆசியா பீபியின் விடுதலைக்காக பாகிஸ்தானில் செபம்,உண்ணாநோன்பு
6. உலகில் வறுமையை ஒழிப்பதற்கு ஒன்றிணைந்து செயல்படுவோம், பான் கி மூன்
7. எபோலா நிதியுதவிக்கு ஐநா அவசர வேண்டுகோள்
8. விடுதலைப்புலிகள், பயங்கரவாத அமைப்பென்ற ஐரோப்பிய முடிவு இரத்து
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை : இறைவனின் விண்ணக வாக்குறுதி
அக்.17,2014. கிறிஸ்தவத் தனித்துவத்தின் "முத்திரையாகிய" தூய ஆவியாரின் செயல்களுக்கு கிறிஸ்தவர்கள் எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டும், தூய ஆவியார் வழியாகவே இறைவன் நமக்கு விண்ணகத்தை வாக்குறுதி செய்துள்ளார் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆயினும், வெளிவேடத்தால் மின்னும் போலியான ஒளியில் வாழ்வதைக் கிறிஸ்தவர்கள் தேர்ந்தெடுப்பதால், ஒளியின் முத்திரையாகிய தூய ஆவியாரைத் தவிர்க்கின்றனர் என்றும் எச்சரித்தார் திருத்தந்தை.
இவ்வெள்ளி
காலை வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய
திருப்பலி மறையுரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவி எனும் கொடையால் இறைவன் நம்மைத் தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்ல, நமக்கொரு வாழ்வுமுறையையும் தந்துள்ளார், இது நமது தனித்துவமாகவும் அமைந்துள்ளது என்று கூறினார்.
மீட்பளிக்கும்
நற்செய்தியில் நம்பிக்கை கொண்டு வாக்களிக்கப்பட்ட தூய ஆவியால்
முத்திரையிடப்பட்டுள்ளீர்கள் என்று பவுலடிகளார் எபேசு கிறிஸ்தவர்களிடம்
கூறும் இந்நாளைய முதல் வாசகத்தை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
கிறிஸ்தவர்களின் தனித்துவமே இந்த முத்திரைதான், நாம் எல்லாரும் திருமுழுக்கில் பெற்றுள்ள தூய ஆவியாரின் இந்த வல்லமைதான் நமது தனித்துவம் என்றுரைத்த திருத்தந்தை, தூய ஆவியார் நம் இதயங்களில் முத்திரையிடப்பட்டுள்ளார், இவர் நம்மோடு உடன் நடக்கிறார் என்றும் கூறினார்.
அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் ஆகிய தூய ஆவியாரின் கனிகளே விண்ணகத்திற்கான நம் பாதை, இந்த நம் பாதையில் விண்ணகம் தொடங்குகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை : மக்கள் மத்தியிலும், நாடுகளுக்கு இடையேயும் ஒற்றுமை மிகவும் தேவை
அக்.17,2014. உலகில் நிலவும் பிரிவினைகளையும் சண்டைகளையும் தவிர்க்கும்பொருட்டு மக்கள் மத்தியிலும், நாடுகளுக்கு இடையேயும் ஒற்றுமை மிகவும் தேவைப்படுகின்றது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
உலகில் இடம்பெறும் பிரச்சனைகளின் சுமை ஏழைகளின்மீதே அதிகம் விழுவதால், எக்காலத்தையும்விட இக்காலத்தில் மக்கள் மத்தியிலும், நாடுகளுக்கு இடையேயும் ஒற்றுமை மிகவும் அவசியம் என்று கூறினார் திருத்தந்தை.
அக்டோபர் 16, இவ்வியாழனன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக உணவு தினத்தை முன்னிட்டு, ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனமான FAOஇயக்குனர் José Graziano da Silva அவர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இரத்தம் சிந்தும் மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள எல்லா வயது மக்களின் துன்பங்களையும் நினைத்துப் பார்க்குமாறு கேட்டுள்ள திருத்தந்தை, உலகில் பசிப்பிணியைப் போக்குவது மட்டும் போதாது, மாறாக, வேளாண்மைப்
பொருள்களின் உற்பத்தி மற்றும் அவற்றை வணிகம் செய்வதில் உலகளாவிய
சட்டங்களில் மாற்றம் தேவை என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. உலகளாவியப் பசியை அகற்றுவதில் விவசாயக் குடும்பங்களின் பங்குக்குப் பாராட்டு
அக்.17,2014. உலக உணவு தினத்திற்கென செய்தி வெளியிட்ட ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அவர்கள்,
உலகளவில் பசியை அகற்றுவதற்கான நடவடிக்கைகளில் முக்கிய அங்கம் வகிக்கும்
விவசாயக் குடும்பங்கள் தங்களின் இப்பணியை மேலும் அதிகரிக்குமாறு
வலியுறுத்தியுள்ளார்.
நலவாழ்வு வசதிகள், சத்துணவு போன்றவை கிடைக்காமல் இன்னும் 80 கோடிக்கு மேற்பட்ட மக்கள் துன்புறும்வேளை, உறுதியான எதிர்காலத்தை அமைக்கும் புதிய திட்டத்தை வடிவமைப்பதற்கு விவசாயக் குடும்பங்கள் உதவ முடியும் எனக் கூறியுள்ளார் பான் கி மூன்.
இவ்வாண்டின் இவ்வுலக தின மையப்பொருள், அனைத்துலக குடும்ப விவசாய ஆண்டோடு ஒத்திணங்கி வருவதைக் குறிப்பிட்டுள்ள பான் கி மூன் அவர்கள், உலகில் பசியை முற்றிலும் அகற்றுவதற்குக் கடும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
1945ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதியன்று ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனமான FAO தொடங்கப்பட்டது. இந்நாளை நினைவுகூரும்விதமாக, அக்டோபர் 16ம் தேதியன்று ஆண்டுதோறும் உலக உணவு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஆதாரம் : UN
4. ஆயர்கள் மாமன்றம் : திருமணத்தின் அழகு, குடும்பம் பற்றியப் போதனைகளுக்கு முக்கியத்துவம்
அக்.17,2014. நற்செய்தி அறிவிப்பிலும், விசுவாசத்தைப் பிறருக்கு வழங்குவதிலும் குடும்பங்கள் முக்கியமான பங்கைக் கொண்டிருக்கின்றன என்று, குடும்பம் பற்றிய சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றத்தந்தையர் கூறினர்.
கடந்த திங்கள்கிழமையிலிருந்து மொழிவாரியாக, பத்து சிறு குழுக்களாகப் பிரிந்து கருத்துப் பரிமாற்றம் செய்த பின்னர், இவ்வியாழன்
காலையில் நடந்த 12வது பொது அமர்வில் அக்குழுக்கள் சமர்ப்பித்த
அறிக்கைகளின் சுருக்கம் பத்திரிகையாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிரசன்னத்தில் நடந்த இப்பொது அமர்வில் 178 மாமன்றத்தந்தையர் பங்கெடுத்தனர்.
குடும்பங்களுக்கு ஆதரவான கொள்கைகளின் முக்கியத்துவம், குடும்பங்களில் வயதானவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியதன் அவசியம், கடும் வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு ஆதரவு போன்றவை இச்சிறு குழுக்களில் பேசப்பட்டன.
விபசாரம், பெண்களின் உறுப்புகள் முடமாக்கப்படுதல், பாலியல் மற்றும் பிற தொழில்களில் சிறார் பயன்படுத்தப்படல் போன்ற விவகாரங்களுக்கு எதிரான கண்டனத்தையும் இக்குழுக்கள் வெளியிட்டன.
மேலும், பிரச்சனைகளை எதிர்நோக்கும் குடும்பங்களுக்கு உதவிகள் அவசியம் என்பதை வலியுறுத்திய இக்குழுக்கள், திருமணம் என்பது, கடவுளிடமிருந்து பெறும் ஒரு கொடை என்பதற்கு அழுத்தம் கொடுத்து, திருமணம் குறித்த விசுவாசக் கோட்பாடுகள் தெளிவாகக் கோடிட்டுக் காட்டப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளன.
திருமணத்தின் கிறிஸ்தவக் கண்ணோட்டத்தின் அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றும், திருஅவையின் கருணைப் பண்பின் அணுகுமுறையானது, தனது
மக்களை பாவத்திலிருந்து மனந்திரும்பி வாருங்கள் என்று திருஅவை தனது
மக்களை அழைக்கவேண்டிய கடமையை விஞ்சிச்செல்வதாய் இருக்கக்கூடாது என்றும்
இச்சிறு குழுக்கள் பரிந்துரைத்துள்ளன.
2015ம்
ஆண்டில் நடைபெறவுள்ள குடும்பம் பற்றிய உலக ஆயர்கள் மாமன்றத்திற்கான
தயாரிப்பு ஏடாகவே இந்தச் சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றத் தொகுப்பு அமையும்
என்பதையும் இச்சிறு குழுக்களின் 35 பக்க அறிக்கை கூறியுள்ளது.
இம்மாதம் 5ம் தேதி தொடங்கிய இந்த உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றம், வருகிற ஞாயிறன்று நிறைவடையும்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. ஆசியா பீபியின் விடுதலைக்காக பாகிஸ்தானில் செபம், உண்ணாநோன்பு
அக்.17,2014.
பாகிஸ்தானில் தெய்வநிந்தனைக் குற்றத்தின்பேரில் 2010ம் ஆண்டில் ஆசியா பீபி
என்ற கிறிஸ்தவத் தாய்க்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை மீண்டும்
உறுதிசெய்யப்பட்டுள்ளதை முன்னிட்டு அப்பெண்ணுக்காகச் செபிக்குமாறு
கேட்டுள்ளார் பாகிஸ்தான் ஆயர் ஒருவர்.
ஐந்து குழந்தைகளுக்குத் தாயான ஆசியா பீபிக்கு, 2010ம்
ஆண்டு நவம்பரில் லாகூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்த மரணதண்டனையை
இவ்வியாழனன்று விசாரித்த லாகூர் உயர் நீதிமன்றம் உறுதிசெய்துள்ளதையடுத்து
அப்பெண்ணுக்குத் தங்களின் தோழமையுணர்வைச் செபத்தின் வழியாகக் காட்டுமாறு
கேட்டுள்ளார் இஸ்லாமபாத் ஆயர் ரூஃபின் அந்தோணி.
இத்தீர்ப்பு வெளியானதையடுத்து பல்வேறு மனித உரிமை ஆர்வலர்களும், பொது மக்களும், கிறிஸ்தவர்களும் ஆசியா பீபிக்கு நீதி கிடைக்க வேண்டுமெனப் போராடி வருவதோடு, தங்களின் ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, ஆசியா பீபியின் வழக்கறிஞர்கள் இவ்வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச்செல்லத் தீர்மானித்துள்ளனர்.
மேலும், ஆசியா பீபிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக, பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் வருகிற ஞாயிறன்று, செபம் மற்றம் உண்ணாநோன்பை கடைப்பிடிக்கவுள்ளனர். இதே கருத்துக்காக, ஏற்கனவே பல தடவைகள் செபம் மற்றும் உண்ணாநோன்பை அவர்கள் கடைப்பிடித்துள்ளனர்.
ஆதாரம் : AsiaNews
6. உலகில் வறுமையை ஒழிப்பதற்கு ஒன்றிணைந்து செயல்படுவோம், பான் கி மூன்
அக்.17,2014. ஒரு சிலருக்கு மட்டுமல்லாமல், உலகினர் எல்லாருக்கும் வளமை என்ற நோக்கத்துடன்,
உலகில் நிலவும் கடும் வறுமைக்கெதிரான நடவடிக்கையில் அனைவரும் ஒன்றிணைந்து
செயல்படுவோம் எனக் கூறியுள்ளார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன்.
அக்டோபர் 17, இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக வறுமை ஒழிப்பு தினத்திற்கென வெளியிட்டுள்ள செய்தியில், ஐ.நா.வின் வறுமை ஒழிப்புத் திட்டத்தில் அனைவரும் ஈடுபடுமாறு கேட்டுள்ளார் பான் கி மூன்.
“ஒருவர்கூட வறுமையில் இருக்கக்கூடாது : வறுமைக்கு எதிரான நடவடிக்கை குறித்துச் சிந்தித்து, தீர்மானித்து ஒன்றிணைந்து செயல்படுதல்” என்ற மையக்கருத்துடன் இவ்வாண்டு இவ்வுலக தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இத்தினம் 1993ம் ஆண்டிலிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
உலகில் எய்ட்ஸ், மலேரியா, ஷயரோகம், போன்ற நோய்களால் உயிரிழப்பவர்களைவிட வறுமையினால் இறப்பவர்களே அதிகம்.
உலகில் ஏறக்குறைய 80 கோடியே 50 இலட்சம் பேர், அதாவது ஒன்பது பேருக்கு ஒருவர் வீதம் பசியினால் துன்புறுகின்றனர், எனினும், கடந்த
பத்தாண்டுகளில் உலக அளவில் பசியாய் இருக்கும் மக்களின் எண்ணிக்கை பத்து
கோடிக்குமேல் குறைந்துள்ளது என்று ஐ.நா. அறிக்கை ஒன்று கூறுகிறது.
ஆதாரம் : UN
7. எபோலா நிதியுதவிக்கு ஐ.நா. அவசர வேண்டுகோள்
அக்.17,2014. மேற்கு ஆப்ரிக்க நாடுகளான கினி, சியெரா லியோன், மற்றும் லைபீரியாவில் எபோலா கொள்ளை நோய்ப் பாதிப்பு தொடர்ந்து மோசமடைந்துவருவதால், இந்நோயை
ஒழிப்பதற்கான முயற்சிகளுக்கு அனைத்துலக சமுதாயம் தனது ஆதரவை
அதிகரிக்குமாறு பான் கி மூன் அவர்கள் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நோயை
மேலும் பரவாமல் தடுத்து நிறுத்துவதற்கு கடந்த செப்டம்பரில் ஆரம்பிககப்பட்ட
நூறுகோடி டாலர் நிதி திரட்டும் திட்டத்திற்கு இதுவரை ஒரு இலட்சம் டாலர்களே
சேர்ந்துள்ளன என்று கூறியுள்ளார் பான் கி மூன்.
எபோலாவால் பாதிக்கப்பட்ட மக்களில் குறைந்தது 70 விழுக்காட்டினராவது வருகிற டிசம்பருக்குள் போதிய சிகிச்சை பெறவும், இந்நோயால்
இறந்தவர்களைப் புதைப்பதில் தொற்றுக் கிருமிகள் பரவாமல் இருப்பதை 70
விழுக்காடாவது தடைசெய்யவும் நிதி உதவிகள் தேவைப்படுகின்றன எனவும்
கூறியுள்ளார் பான் கி மூன்.
எபோலா நோயால் இதுவரை ஏழு நாடுகளில்(கினி, சியெரா லியோன், லைபீரியா, நைஜீரியா, செனெகல், இஸ்பெயின், அமெரிக்க ஐக்கிய நாடு) 8,997 பேர் தாக்கப்பட்டுள்ளனர், இவர்களில் 4,493 பேர் இறந்துள்ளனர் என ஐ.நா.வின் உலக நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது.
ஆதாரம் : UN
8. விடுதலைப்புலிகள், பயங்கரவாத அமைப்பென்ற ஐரோப்பிய முடிவு இரத்து
அக்.17,2014.
ஐரோப்பிய ஒன்றியத்தினால் பயங்கரவாத அமைப்பாக கருதப்படும் அமைப்புக்களின்
பட்டியலில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு சேர்க்கப்பட்டிருந்த முடிவை
நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது ஐரோப்பிய நீதிமன்றம்.
லக்சம்பேர்க்கிலுள்ள ஐரோப்பிய நீதிமன்றம் இவ்வியாழனன்று இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.
விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் இணைத்ததில் கையாளப்பட்டிருந்த நடைமுறையில் தவறுகள் இருக்கின்ற காரணத்தால், இந்த முடிவை எடுத்துள்ளதாக ஐரோப்பிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய
ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து 2011ம் ஆண்டில் லக்சம்பேர்க்கில் உள்ள
ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை
கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வந்தது.
ஆதாரம் : தமிழ்வின்
No comments:
Post a Comment