Monday, 13 October 2014

செய்திகள் - 13.10.14

செய்திகள் - 13.10.14
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : காலத்தின் அறிகுறிகளைக் கண்டுகொள்ள வேண்டிய பயணிகள் நாம்

2. இக்காலச் சவால்களை எதிர்கொள்ள குடுமபங்களுக்கு இயேசு மீதான நம்பிக்கை உதவுகிறது

3. திருத்தந்தை : இறைவனின் நன்மைத்தனத்திற்கு எல்லையுமில்லை, பாகுபாடுமில்லை

4. திருத்தந்தை : மறைப்பணியாளர்களின் தியாகம் திருஅவைக்கு உரமாகின்றது

5. குடும்பம் குறித்த ஆயர் மாமன்ற டுவிட்டர் செய்திகள் பிரபலம்

6. இறம்பைக்குளம் புனித அந்தோணியார் ஆலயத்தேர் தீயிட்டுச் சேதம்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : காலத்தின் அறிகுறிகளைக் கண்டுகொள்ள வேண்டிய பயணிகள் நாம்

அக்.13,2014. நாம் நம் கொள்கைகளையும், நம் உலகப் பொருள்களையும் பற்றிக்கொண்டு நமக்குள்ளேயே வாழ்ந்துகொண்டிருக்கிறோமா? அல்லது நம் பாதையில் இறைவன் காட்டும் வழிகளுக்குத் திறந்தவர்களாகச் செயல்படுகிறோமா? என்பது குறித்து சிந்திக்க வேண்டுமென அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தான் தங்கியிருக்கும் வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இத்திங்கள்  காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை, காலத்தின் அடையாளங்களைக் கண்டுகொள்ளவும், இறைவனின் குரலுக்கு விசுவாசமாக இருக்கவும் நாம் தயாராக இருக்கிறோமா? என்பது குறித்தும் சிந்திக்க அழைப்புவிடுத்தார்.
எங்களுக்கு அறிகுறியொன்றைக் காட்டும் என சட்டவல்லுனர்கள் இயேசுவிடம் கேட்ட கேள்வியைக் குறித்து தனது மறையுரையில் விவரித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாமும் நம் எண்ணங்களையே உயர்வாகக் கருதி அதிலேயே முடங்கிப்போகாமல், காலத்தின் அறிகுறிகளைக் கண்டு, இயேசுவோடு இணைந்து நடைபோட வேண்டும் என்று கூறினார்.
இயேசு வழங்கிய அறிகுறிகளைப் புரிந்துகொள்ளாமல், காலம் கனிந்துள்ளது  என்பதைத் தெரிந்துகொள்ளாமல் புதியதொரு அறிகுறியைக் கேட்ட அக்கால மக்கள் தாங்கள் மறுவுலகம் நோக்கிய பயணத்தில் உள்ளோம் என்பதையும் புரிந்துகொள்ளவில்லை என மேலும் கூறினார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. இக்காலச் சவால்களை எதிர்கொள்ள குடுமபங்களுக்கு இயேசு மீதான நம்பிக்கை உதவுகிறது

அக்.13,2014. இன்றையக் கலாச்சார மாற்றங்களும், அதன் வழியான, தனித்துவங்களின் அதிகப்படியான முக்கியத்துவமும், தனித்துவ சுதந்திரமும் குடும்பங்களுக்கு ஊறுவிளைவிப்பவைகளாக உள்ளன என கடந்த வார ஆயர்கள் மாமன்றத்தின் கருத்துத் தொகுப்பில் கூறப்பட்டுள்ளது.
குடும்பங்கள் தனிமைப்படுத்தப்படுவது, திருமணங்களுக்கான செலவுச் சுமைகள், சில கலாச்சாரங்களில் பலதாரத் திருமணம், வேறுபட்ட மதநம்பிக்கையாளர்களிடையே திருமணங்கள், திருமணத்திற்கு வெளியே பிறக்கும் குழந்தைகள், மணமின்றி சேர்ந்து வாழ்தல் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டதாக இத்திங்களன்று காலையில் ஆயர் மாமன்றத்தில் வாசிக்கப்பட்ட கருத்துக்கோப்பு கூறியது.
இத்தகைய நிலைகள், வருங்காலம் குறித்த நம்பிக்கையை இழக்கவைக்கின்றன  எனக்கூறும் இந்த அறிக்கை, நவீனகாலச் சவால்களை எதிர்கொள்ள இயேசுவின் மீதான நம்பிக்கை உதவுகிறது என உரைக்கிறது.
தாய்க்குரிய பாசத்துடனும் ஆசிரியருக்குரிய தெளிவுடனும் குடும்பம் எனும் நற்செய்தியை எடுத்துரைத்து அதனைப் புதிய நற்செய்தி அறிவித்தலின் அவசரப் பகுதியாக ஏற்க வேண்டியதையும் வலியுறுத்துகிறது இந்த கருத்துத்தொகுப்பு அறிக்கை.
திருமணம் குறித்தவைகளில் சமூகத்தின் கடமையும் இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருமண விலக்குப்பெற்று, அதேவேளை மறுமணம் புரியாமல் வாழ்வோர், நற்கருணை எனும் அருளடையாளம்வழி தங்கள் பலத்தைப் பெறும்வகையில் வழிநடத்தப்படவேண்டும் என்பதும் உரைக்கப்பட்டுள்ளது.
மேலும், 2015ம் ஆண்டு அக்டோபர் 4 முதல் 25 வரை உலக ஆயர்கள் மாமன்றம் நடைபெறும், திருஅவையிலும் நவீன உலகிலும் குடும்பத்தின் அழைப்பும் மறைப்பணியும் என்பது இதன் தலைப்பாக இருக்கும் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டது.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை : இறைவனின் நன்மைத்தனத்திற்கு எல்லையுமில்லை, பாகுபாடுமில்லை

அக்.13,2014. இறைவனின் நன்மைத்தனத்திற்கு எல்லைகள் என்பது இல்லை, அங்குப் பாகுபாடுகள் பார்க்கப்படுவதில்லை என இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஞாயிறு நற்செய்தி வாசகமான திருமண விருந்திற்கு அழைக்கப்பட்டோர் குறித்த இயேசுவின் உவமை குறித்து மூவேளை செப உரையின்போது எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிலரால் நற்செய்தி ஏற்றுக்கொள்ளப்படாதிருப்பினும், அது பலரால் மனமகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார்.
இயேசுவின் நற்செய்தியை ஏற்றுக்கொண்டவர்கள் அது தங்களுக்கே உண்மையானது என்றோ, தாங்கள் மட்டுமே தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் என்றோ வீண்பெருமை படுதல் கூடாது என்று கூறிய திருத்தந்தை, அனைத்து எல்லைகளையும் தாண்டி இந்நற்செய்தியை பிறருடன் பகிர வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்றும் கூறினார்.
இறைவனின் தாராள உள்ளத்தின் கருவிகளாக இருக்கவேண்டிய நாம் இறையரசை ஒரு குட்டித் திருஅவையாக மாற்றிவிடாமல், அதன் எல்லைகளை விரிவுபடுத்தி வளமாக்க வேண்டுமெனவும் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசு வழங்கும் இலவசமான அழைப்பை அழைக்கப்பட்டோர் புறக்கணித்தாலும், ஏனையோர் மனமுவந்து ஏற்றுக்கொள்கின்றனர் என்றுரைத்த திருத்தந்தை, இறைவனின் நன்மைத்தனம் எல்லையற்றதாய், பாகுபாடு காணாததாய் உள்ளது என மேலும் உரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தை : மறைப்பணியாளர்களின் தியாகம் திருஅவைக்கு உரமாகின்றது

அக்.13,2014. திருஅவை தொடர்ந்து தன் மறைபோதகப்பணியை ஆற்ற வேண்டும், இல்லையெனில் அது முடங்கியதாக, நோயில் வீழ்ந்துவிடும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருஅவைக்குப் புதிதாகக் கிடைத்த புனிதர்கள் François de Laval மற்றும் Marie de l'Incarnation குறித்து, இஞ்ஞாயிறு காலை தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் நன்றித் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்திக்குப் பணிபுரியும் மறைபோதகர்கள் குறைந்துவரும் இந்நாள்களில் கடந்த காலங்களில் மறைப்பணியாற்றியவர்களின் நினைவுகள் நமக்கு உரமூட்டுகின்றன என்று கூறினார்.    
இன்றையக் காலத்திலும் நற்செய்தியைப் பரப்புவதில் தங்கள் உயிரையும் கையளிக்கப் பலர் தயாராக இருப்பதையும், பலர் நற்செய்திக்காகக் கொல்லப்படுவதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இத்தகையோரின் எடுத்துக்காட்டான வாழ்வே திருஅவையை உயிர்த்துடிப்புடன் வைத்திருக்கிறது என்று கூறினார்.
ஒவ்வொருவரும் துணிச்சலைக் கைவிடாமல் செயல்படுவோம், அதேவேளை மேலும் மறைபோதகர்களைத் தருமாறு இறைவனிடம் தொடர்ந்து மன்றாடுவோம் என தனது மறையுரையில் கேட்டுக்கொண்டார்  திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. குடும்பம் குறித்த ஆயர் மாமன்ற டுவிட்டர் செய்திகள் பிரபலம்

அக்.13,2014. தற்போது திருப்பீடத்தில் இடம்பெற்றுவரும் குடும்பம் குறித்த ஆயர்கள் மாமன்றக் கூட்டத்தில் கடந்தவாரத்தில் மட்டும் உடனுக்குடன் 1400 டுவிட்டர் செய்திகள் வெளியிடப்பட்டதாக திருப்பீட தகவல் தொடர்பு அலுவலகம் அறிவிக்கிறது.
மாமன்றக் கூட்டத்தில் திருஅவைத் தந்தையர்கள் வெளியிட்ட கருத்துக்கள் குறித்து உடனுக்குடன் டுவிட்டர் தளம் வழி ஆங்கிலம், இஸ்பானியம், இத்தாலியம் என மூன்று மொழிகளில் 1,400 செய்திகள் வெளியிடப்பட்டதாகவும், இதைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து 17 இலட்சத்தைத் எட்டியுள்ளதாகவும் கூறியது இந்த அலுவலகம்.
மாமன்றம் கூடுவதற்கு முன்னர் இருந்த எண்ணிக்கையைவிட தற்போது 6,390 பேர் அதிகமாகியுள்ளதாகவும், 6,077 பேர் பதில் வழங்கியுள்ளதாகவும் கூறும் திருப்பீட தகவல் தொடர்பு அலுவலகம், இதில் 27 விழுக்காட்டினர் அமெரிக்க ஐக்கிய நாட்டினர் எனவும், 14 விழுக்காட்டினர் இத்தாலியர் எனவும், 7 விழுக்காட்டினர் இஸ்பானியர் எனவும் கூறுகிறது.
இங்கிலாந்து, மெக்சிகோ, அர்ஜன்டீனா, கானடா, பிரான்ஸ், வெனெசுவேலா ஆகிய நாடுகளிலிருந்தும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையினோர் மாமன்றத் தந்தையர்களின் டுவிட்டர் செய்திகளைப் பார்த்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. இறம்பைக்குளம் புனித அந்தோணியார் ஆலயத்தேர் தீயிட்டுச் சேதம்

அக்.13,2014. இலங்கையின் வவுனியா மாவட்டத்திலுள்ள இறம்பைக்குளம் புனித அந்தோணியார் ஆலயத்தேர் தீயிட்டுச் சேதமாக்கப்பட்டுள்ளது குறித்து தலத்திருஅவைத் தலைவர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
ஆலயத்தின் பின்புறம் பாதுகாப்பான முறையில் கட்டிடமொன்றினுள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தேர், ஞாயிறு அதிகாலை தீயிட்டுக் கொளுத்தப்பட்டதைக் கண்ட மக்கள் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தன் கண்டனத்தை வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மக்களுக்கிடையே பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இச்செயல் குறித்தும், ஆலயங்கள்மீதும், மசூதிகள்மீதும் இடம்பெறும் தாக்குதல்கள் குறித்தும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வேண்டுகோள்விடுத்துள்ளார்.

ஆதாரம் : தமிழ்வின்

No comments:

Post a Comment