Saturday, 7 June 2014

செய்திகள் - 06.06.’14

 செய்திகள் - 06.06.’14
 ------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : காவல்துறையினரின் பணி பிறர் சேவையில் வெளிப்படுத்தப்பட வேண்டும்

2. காவல்துறையினர் உண்மைக்குப் பணி செய்து ஊழலுக்கு எதிராய்ச் செயல்பட வேண்டுகோள்

3. திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்துவே முதலில் அன்பு செய்யப்பட வேண்டியவர்  என்பதை அருள்பணியாளர்கள் ஒருபோதும் மறக்கக் கூடாது

4. திருத்தந்தை பிரான்சிஸ், ஜப்பான் பிரதமர் சந்திப்பு 

5. திருத்தந்தை பிரான்சிஸ் - செபத்திலும் செயலிலும் அமைதியின் மக்களாக இருப்போம்

6. இஞ்ஞாயிறன்று, அமைதிக்காக, வத்திக்கானில் மேற்கொள்ளப்படும் செபமுயற்சி நல்ல பலன்களை அளிக்க, அர்ஜென்டீனா நாட்டில் பல்சமய சிறப்பு செப வழிபாடுகள்

7. பொருளாதாரம், மனிதர்களுக்காக உருவாக்கப்பட்டதே தவிர, மனிதர்கள் பொருளாதாரத்திற்காக அல்ல - கர்தினால் Maradiaga

8. ஆவணங்கள் ஏதுமின்றி, அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குள் நுழையும் குழந்தைகள், ஒரு மனிதாபிமான சவால் - அமெரிக்க ஐக்கிய நாட்டு கத்தோலிக்க ஆயர்கள்

9. மறைசாட்சி புனித ஜான் ஒகில்வி அவர்களின் 400வது ஆண்டு நிறைவு விழாவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொள்ள ஸ்காட்லாந்து பேராயர் அழைப்பு

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : காவல்துறையினரின் பணி பிறர் சேவையில் வெளிப்படுத்தப்பட வேண்டும்

ஜூன்,06,2014. காவல்துறையினர் பணிபுரிவதற்காகவே அழைக்கப்பட்டுள்ளனர்; இவர்களின் பணி பிறர்சேவையில் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலிய இராணுவ காவல்துறை உருவாக்கப்பட்டதன் 200ம் ஆண்டையொட்டி, இந்தக் காவல்துறை உறுப்பினர்கள், அவர்களின் குடும்பத்தினர் என ஏறக்குறைய ஐம்பதாயிரம் பேரை, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இவ்வெள்ளி நண்பகலில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவர்களின் அழைப்பு குறித்து விளக்கினார்.
காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடையே தோழமை, நம்பிக்கை, அர்ப்பணிப்பு என்ற தொடர்பு இருக்கின்றது என்று கூறிய திருத்தந்தை, காவல்துறையினர், ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்டோரிடம் அக்கறை காட்டுமாறு கேட்டுக்கொண்டார்.
இந்தப் பணிக்கு, எப்பொழுதும் தயாராக இருப்பதும், பொறுமையும், தியாகமும், கடமையுணர்வும் அவசியம் என்றும் உரைத்த திருத்தந்தை, நாத்சி வன்கொடுமையிலிருந்து அப்பாவி மக்களைக் காப்பாற்றுவதற்குத் தனது வாழ்வைத் தியாகம் செய்த 23 வயது இறையடியார் Salvo d'Acquisto அவர்களின் வாழ்வு எடுத்துக்காட்டாய் இருக்கின்றது என்றும் கூறினார்.
இந்தக் காவல்துறையினர் தேசிய எல்லைகளைக் கடந்து வெளிநாடுகளில் அமைதியை நிலைநாட்டவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், மனித மாண்பையும் மனித உரிமைகளையும் பாதுகாக்கவும் உழைப்பதையும் பாராட்டி, அவற்றைத் தொடர்ந்து செய்யுமாறும் ஊக்கப்படுத்தினார் திருத்தந்தை.
எண்ணற்ற கொடூரம் நிறைந்த முதல் உலகப் போர் நடந்ததன் நூறாம் ஆண்டை முன்னிட்டு, Gorizia மாநிலத்தின் Redipuglia இராணுவ நினைவிடத்துக்கு வருகிற செப்டம்பர் 13ம் தேதி சென்று, போரில் இறந்த வீரர்களுக்காகச் செபிக்கவிருப்பதாகவும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலிய இராணுவ காவல்துறை, 1814ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி உருவாக்கப்பட்டது. இதில் 1,17,943 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். முதலில் சர்தீனிய அரசில் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பு, பெனித்தோ முசோலினியின் வீழ்ச்சிக்கும் காரணமானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 

2. காவல்துறையினர் உண்மைக்குப் பணி செய்து ஊழலுக்கு எதிராய்ச் செயல்பட வேண்டுகோள்

ஜூன்,06,2014. இத்தாலிய இராணுவ காவல்துறையின் உறுப்பினர்கள், அவர்களின் குடும்பத்தினர் என ஏறக்குறைய ஐம்பதாயிரம் பேருக்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இவ்வெள்ளி காலை திருப்பலி நிகழ்த்திய பேராயர் Santo Marciano அவர்கள், காவல்துறையினர் உண்மைக்குப் பணி செய்து ஊழலுக்கு எதிராய்ச் செயல்படுமாறு கேட்டுக்கொண்டார்.
இத்தாலிய இராணுவத்தினரின் ஆன்மீக வழிகாட்டியான பேராயர் Marciano அவர்கள் ஆற்றிய மறையுரையில், தொடர்புறவுக் கோட்பாடும், அறிவு சார்ந்த கோட்பாடும் நிறைந்த இவ்வுலகில் உண்மைக்குப் பணி செய்வது ஒரு சவாலாக உள்ளது என்றும் கூறினார்.
200 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த இராணுவ அமைப்பு உருவாக்கப்பட்டபோது, உண்மைக்குப் பணி செய்யவும், ஊழலை எதிர்க்கவுமான நோக்கத்தைக் கொண்டிருந்ததையும் பேராயர் Marciano அவர்கள் நினைவுபடுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 

3. திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்துவே முதலில் அன்பு செய்யப்பட வேண்டியவர்  என்பதை அருள்பணியாளர்கள் ஒருபோதும் மறக்கக் கூடாது

ஜூன்,06,2014. அருள்பணியாளர்கள் முதலில் மேய்ப்புப்பணியாளர்கள், இரண்டாவதாக, அவர்கள் வல்லுனர்கள் என்றும், கிறிஸ்துவே முதலில் அன்பு செய்யப்பட வேண்டியவர்  என்பதை அருள்பணியாளர்கள் ஒருபோதும் மறக்கக் கூடாது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உங்களின் முதல் அன்பு எப்படி இருக்கின்றது? முதல் நாள்போன்று இன்றும் தொடர்ந்து அந்த அன்பு நீடிக்கிறதா? உங்கள் அன்பில் அவர்கள் மகிழ்வாக இருக்கின்றார்களா? அல்லது அவர்கள் உங்களைப் புறக்கணிக்கின்றார்களா? என்பன போன்று எல்லா இடங்களிலும் கேட்கப்படும் இந்தக் கேள்விகளை, தம்பதியர் போல் இல்லாமல், அருள்பணியாளர்களாக, ஆயர்களாக நாம் இயேசுவின் முன்னால் கேட்க வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை.
யோவானின் மகன் சீமோனே! நீ என்னை அன்பு செய்கிறாயா? என, பேதுருவிடம் ஒருநாள் இயேசு கேட்டது போல நம்மிடமும் இயேசு கேட்பார் என்று, வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இவ்வெள்ளி காலை நிகழ்த்திய திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
யோவானின் மகன் சீமோனே! நீ என்னை அன்பு செய்கிறாயா? என, பேதுருவிடம் இயேசு மூன்றுமுறை கேட்ட நற்செய்திப் பகுதியை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தக் கேள்வியைக் கேட்ட பின்னர் இயேசு பேதுருவிடம், என்னைப் பின்தொடர் என்று கூறியதை வைத்தும் விளக்கினார்.
நாம் பாதையை தொலைத்தால் அல்லது அன்புக்கு பதிலளிப்பது குறித்து தெரியாமல் இருந்தால், மேய்ப்பர்களாக எப்படி பதிலளிப்பது என்பதை நாம் அறியாமல் இருப்போம், நோயிலும், வாழ்வின் இக்கட்டான நேரங்களிலும் ஆண்டவர் கைவிடமாட்டார் என்ற உறுதியைக் கொண்டிருக்கமாட்டோம் என்றுரைத்த திருத்தந்தை, இயேசுவின் அடிச்சுவடுகளை நாம் பின்தொடர வேண்டும் என்றும் கூறினார்.
அருள்பணியாளர்களும், ஆயர்களும் தங்களது முதல் அன்பைக் கண்டுகொள்ளவும், அதை நினைவில் கொள்ளவும் ஆண்டவர் அருள்பொழிவாராக என, தனது மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.       

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 

4. திருத்தந்தை பிரான்சிஸ், ஜப்பான் பிரதமர் சந்திப்பு 

ஜூன்,06,2014. ஜப்பான் பிரதமர் Shinzō Abe அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இவ்வெள்ளியன்று வத்திக்கானில் சந்தித்தார்.
இச்சந்திப்புக்குப் பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட நாடுகளுக்கிடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் ஜப்பான் பிரதமர் Shinzō Abe.
ஜப்பானுக்கும், திருப்பீடத்துக்கும் இடையே நிலவும் நல்உறவுகள், ஜப்பானில் கல்வி, நலவாழ்வு, சமூக வாழ்வு ஆகியவற்றில் தலத்திருஅவைக்கும், அரசுக்கும்   இடையே நிலவும் ஒத்துழைப்பு ஆகியவை இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என, திருப்பீட பத்திரிகை அலுவலகம் கூறியது.
மேலும், ஆசியக் கண்டத்தில் அமைதியையும், நிலையான தன்மையையும் ஊக்குவித்தல், நாடுகளின் வளர்ச்சிக்கு, குறிப்பாக ஆப்ரிக்காவின் வளர்ச்சிக்கு ஜப்பான் வழங்கிவரும் ஒத்துழைப்பு, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் அணு ஆயுதங்களைக் களைவதற்கும் ஜப்பான் எடுத்துவரும் முயற்சிகள் போன்ற பன்னாட்டு விவகாரங்களும் இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என, திருப்பீட பத்திரிகை அலுவலகம் மேலும் கூறியது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 

5. திருத்தந்தை பிரான்சிஸ் - செபத்திலும் செயலிலும் அமைதியின் மக்களாக இருப்போம்

ஜூன்,06,2014. அமைதி இறைவனின் கொடை. ஆயினும், இதற்கு நமது முயற்சிகள் தேவை. செபத்திலும் செயலிலும் அமைதியின் மக்களாக இருப்போம். அமைதிக்காகச் செபிப்போம் என, இவ்வெள்ளியன்று தனது டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், சிங்கப்பூரின் ஜோசப் யுவராஜ் பிள்ளை உட்பட நான்கு சிறந்த வல்லுனர்களை, வத்திக்கானின் நிதி சார்ந்த தகவல் குழுவுக்கு நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 
வத்திக்கானின் நிதி அமைப்பில் ஒளிவுமறைவற்ற நிலையை உருவாக்குவதற்கென திருத்தந்தை நியமித்துள்ள புதிய குழுவில், சுவிட்சர்லாந்தின் Marc Odendall, சிங்கப்பூரின் ஜோசப் யுவராஜ் பிள்ளை, Harvard சட்டக்கல்விப் பேராசிரியர் Juan Zarate, இத்தாலியின்  Maria Bianca Farina ஆகியோர் உள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 

6. இஞ்ஞாயிறன்று, அமைதிக்காக, வத்திக்கானில் மேற்கொள்ளப்படும் செபமுயற்சி நல்ல பலன்களை அளிக்க, அர்ஜென்டீனா நாட்டில் பல்சமய சிறப்பு செப வழிபாடுகள்

ஜூன்,06,2014. ஜூன் 8, இஞ்ஞாயிறன்று, பாலஸ்தீனா அரசுத் தலைவர் மஹ்முத் அப்பாஸ் அவர்களும், இஸ்ரேல் அரசுத்தலைவர் ஷிமோன் பெரெஸ் அவர்களும், வத்திக்கானில் சந்தித்து, அமைதிக்காகச் செபிக்கும் வேளையில், இம்முயற்சி நல்ல பலன்களை அளிக்கவேண்டும் என்று அர்ஜென்டீனா நாட்டில் பல்சமய சிறப்பு செப வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
"அமைதியைக் கட்டியெழுப்புவது கடினம்தான்; ஆனால், அமைதியின்றி வாழ்வது பெரும் கொடுமை" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் அண்மையப் புனிதப் பூமிப் பயணத்தில் கூறிய வார்த்தைகளை உந்துதலாகக் கொண்டு, அர்ஜென்டீனா நாட்டின் பல்சமய அமைப்புக்கள் ஒன்றிணைந்து, "un minuto por la paz", அதாவது, "அமைதிக்காக ஒரு நிமிடம்" என்ற செப வழிபாட்டு முயற்சியில் ஈடுபட உள்ளனர்.
அமைதி மற்றும் நீதிக்கான அமைப்பு முன்மொழிந்த இந்த ஏற்பாட்டிற்கு, அர்ஜென்டீனா நாட்டின் பல்சமய அமைப்புக்கள் ஆர்வத்துடன் ஆதரவு தெரிவித்துள்ளதாக, Zenit கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.
இதற்கிடையே, இத்தாலியில் உள்ள அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும், ஜூன் 7, இச்சனிக்கிழமை மாலை, அமைதிக்கான செப வழிபாடுகளை மேற்கொள்ள, இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவரான, கர்தினால் Angelo Bagnasco அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார் என்றும் Zenit செய்தி மேலும் கூறுகிறது.

ஆதாரம் : Zenit

7. பொருளாதாரம், மனிதர்களுக்காக உருவாக்கப்பட்டதே தவிர, மனிதர்கள் பொருளாதாரத்திற்காக அல்ல - கர்தினால் Maradiaga

ஜூன்,06,2014. உலகப் பொருளாதார வழிமுறைகள், புதுவகையான பொய் தெய்வ வழிபாடாக மாறிவருகிறது என்று Honduras நாட்டுக் கர்தினால், Oscar Rodriguez Maradiaga அவர்கள் கூறியுள்ளார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் வாஷிங்டன் நகரில், அமெரிக்கக் கத்தோலிக்கப் பல்கலைக் கழகம் ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கில் அண்மையில் உரையாற்றிய கர்தினால் மரதியாகா அவர்கள், இவ்வாறு கூறினார்.
பொருளாதாரம் குறித்து, கத்தோலிக்கத் திருஅவை தெளிவான எண்ணங்கள் கொண்டிருக்கவில்லை என்று கூறப்படும் கருத்தைச் சுட்டிக்காட்டிப் பேசிய கர்தினால் மரதியாகா அவர்கள், மனிதம் என்ற அடிப்படை உண்மையின் மீது எழுப்பப்படும் பொருளாதாரமே பொருளுள்ளது என்பதை, கத்தோலிக்கத் திருஅவை உணர்ந்துள்ளது என்று பதிலிறுத்தார்.
பொருளாதாரம், மனிதர்களுக்காக உருவாக்கப்பட்டதே தவிர, மனிதர்கள் பொருளாதாரத்திற்காக அல்ல என்பதை, உலகப் பொருளாதார அறிஞர்கள் உணர்வதற்கு, அவர்கள் மக்களை நெருங்கிவந்து, மக்களோடு மக்களாக இருக்கவேண்டும் என்ற சவாலையும், கர்தினால் மரதியாகா அவர்கள், தன் உரையில் முன்வைத்தார்.

ஆதாரம் : CNS 

8. ஆவணங்கள் ஏதுமின்றி, அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குள் நுழையும் குழந்தைகள், ஒரு மனிதாபிமான சவால் - அமெரிக்க ஐக்கிய நாட்டு கத்தோலிக்க ஆயர்கள்

ஜூன்,06,2014. அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு, ஆவணங்கள் ஏதுமின்றி வந்து சேரும் சிறுவர், சிறுமியரை, அரசுத் தலைவர் ஒபாமா அவர்களும், அவரது அரசும் பாதுகாக்க வேண்டும் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
ஆவணங்கள் ஏதுமின்றி, அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குள் நுழையும் குழந்தைகள், மனிதாபிமான கண்ணோட்டத்துடன் கருதப்பட வேண்டிய ஒரு சவாலாக மாறிவருகின்றனர் என்று ஆயர்களின் விண்ணப்பம் கூறியுள்ளதாக Fides செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் மத்திய அரசும், இச்சிறுவர், சிறுமியர் புகலிடம் தேடிச் செல்லும் மாநில அரசுகளும் இணைந்து, இந்தச் சவாலை எதிர்கொள்ளவேண்டும் என்று, அமெரிக்க ஆயர் பேரவையின் புலம்பெயர்ந்தோர் பணிக்குழுவின் தலைவரான, ஆயர் Eusebio Elizondo Almageur அவர்கள் கூறியுள்ளார்.
இம்மாதம் 3ம் தேதியன்று, அமெரிக்க ஐக்கிய நாட்டின் எல்லைக் கண்காணிப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், கடந்த 20 மாதங்களில், ஆவணங்கள் ஏதுமின்றி, நாட்டிற்குள் நுழைந்துள்ள 17 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியரின் எண்ணிக்கை, 71,000த்துக்கும் அதிகம் என்று கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : Fides

No comments:

Post a Comment