1. திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் கல்வி வழியாக ஒருவர் ஒருவருடன் நன்மதிப்பை வளர்க்க அழைப்பு
2. கத்தோலிக்கத் திருஅவை பிற சமயத்தவருடன் நல்லிணக்கத்தில் வாழ்வதற்கு ஆவல் கொண்டுள்ளது
3. அசிசி மன்னிப்புக் கொண்டாட்டங்கள்
4. இஸ்ரேல்-பாலஸ்தீன அமைதிப் பேச்சுவார்த்தைக்கு எருசலேம் காரித்தாஸ் இயக்குனர் வரவேற்பு
5. அமெரிக்க இளையோர் ஆப்ரிக்காவுக்கு ஒரு இலட்சம் உணவுப் பொட்டலங்கள்
6. தாய்ப்பால் கொடுக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்கு யுனிசெப் வலியுறுத்தல்
7. எவரெஸ்ட் மலையில் ஏறுவோர்க்கான விதிமுறைகளில் கடும் கட்டுப்பாடுகள்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் கல்வி வழியாக ஒருவர் ஒருவருடன் நன்மதிப்பை வளர்க்க அழைப்பு
ஆக.,02,2013. கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் ஒருவர் ஒருவருடன் நன்மதிப்பையும், நட்பையும் வளர்க்க வேண்டும், குறிப்பாக, இவற்றை கல்வி வழியாக வளர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
'இத் ஆல்-ஃபித்ரு'(Id al-Fitr) பண்டிகையை முன்னிட்டு உலகின் அனைத்து முஸ்லீம்களுக்கும் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், ஒவ்வோர் ஆண்டும் திருப்பீட பல்சமய உரையாடல் அவை இப்பண்டிகையை முன்னிட்டு செய்தியை அனுப்புவது வழக்கமாக இருந்து வருகிறது, ஆயினும், இவ்வாண்டு, தனது தலைமைப்பணியின் முதல் ஆண்டு என்பதால், இச்செய்தியினை தான் கையொப்பமிட்டு அனுப்ப முடிவு செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
அனைத்து முஸ்லிம் மக்கள் மீதும், சிறப்பாக, இஸ்லாமிய
மதத்தலைவர்கள் மீதும் தான் கொண்டுள்ள மதிப்பை உணர்த்தவே இவ்வாறு
செய்துள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் கல்வி வழியாக, ஒருவர் ஒருவர் மீது மதிப்பை வளர்ப்பது குறித்து இணைந்து சிந்திப்பதற்கு இவ்வாண்டில் தான் சிறப்பாக அழைப்பதாகக் கூறியுள்ளார்.
நாம் ஒருவர் ஒருவரைப் புரிந்துகொள்ளவும், மதிக்கவும்
கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தவே இதனை நமது இணைந்த சிந்தனையின்
கருவாகத் தேர்ந்தேன் என்றும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், ஒவ்வொருவரையும் மதிப்பது என்பது, ஒருவரது வாழ்வை மதிப்பதில், அவரது உடலுக்கு ஆபத்து விளைவிக்காமல் காப்பதில், அவருக்குரிய மரியாதையை வழங்குவதில் ஆரம்பமாகிறது என்றும் கூறியுள்ளார்.
இரமதான் நோன்பு மாதம், இம்மாதம் 8ம் தேதிக்கும் 9ம் தேதிக்கும் இடைப்பட்ட இரவில் முடிக்கப்படுகின்றது.
'இத் ஆல்-ஃபித்ரு'(Id al-Fitr) பண்டிகை இம்மாதம் 9ம் தேதி கொண்டாடப்படுகிறது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. கத்தோலிக்கத் திருஅவை பிற சமயத்தவருடன் நல்லிணக்கத்தில் வாழ்வதற்கு ஆவல் கொண்டுள்ளது
ஆக.,02,2013. கத்தோலிக்கத் திருஅவை பிற மதத்தவரின் விழாக்களையொட்டி வாழ்த்துச் செய்தி அனுப்புவது, வெறும் வாழ்த்தோடு நின்றுவிடாமல், அம்மதத்தவருடன் நல்லிணக்கத்தில் வாழ்வதற்கான ஆவலை வெளிப்படுத்துவதாய் உள்ளது என, திருப்பீட பல்சமய உரையாடல் அவை தெரிவித்துள்ளது.
இரமதான் நோன்பு மாதத்தின் இறுதியில் கொண்டாடப்படும் 'இத் ஆல்-ஃபித்ரு'(Id al-Fitr) பண்டிகையை
முன்னிட்டு உலக முஸ்லீம்களுக்கு கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகத்
திருப்பீடம் வாழ்த்துச் செய்தி அனுப்பி வருவது பற்றிக் குறிப்பிட்ட
திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் செயலர் அருள்பணி Miguel Àngel Ayuso Guixot இவ்வாறு கூறியுள்ளார்.
புதிய உலகைக் கட்டியெழுப்புவோம் என்ற தலைப்பில் 1967ம் ஆண்டில் முதன்முறையாக 'இத் ஆல்-ஃபித்ரு'(Id al-Fitr) பண்டிகைக்கு
வாழ்த்துச் செய்தி அனுப்பிய திருப்பீட பல்சமய உரையாடல் அவை தொடர்ந்து
இப்பண்டிகைக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பி வருவதாகவும், வளைகுடாச் சண்டை ஏற்படுத்திய பெரும் அழிவுகள் மற்றும் துன்பங்களுக்குப் பின்னர் 1991ம் ஆண்டில் இப்பண்டிகைக்கு, திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களே வாழ்த்துச் செய்தி அனுப்பியதாகவும் கூறியுள்ளார் அருள்பணி Guixot.
2013ம் ஆண்டின் 'இத் ஆல்-ஃபித்ரு'(Id al-Fitr) பண்டிகையை முன்னிட்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களே வாழ்த்துச் செய்தி அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. அசிசி மன்னிப்புக் கொண்டாட்டங்கள்
ஆக.,02,2013.
உலகளாவிய பிரான்சிஸ்கன் சபையினர் உரோம் திருத்தந்தையுடன் கொண்டிருக்கும்
மிகச் சிறப்பான உறவின் அசாதாரண அடையாளங்களில் ஒன்றான அசிசி மன்னிப்புக்
கொண்டாட்டங்கள் இவ்வியாழன் மாலை அசிசியின் புனித தூதர்களின் மரியா
பசிலிக்காவில் தொடங்கியுள்ளன.
புனித பிரான்சிஸ், பிரான்சிஸ்கன் சபையைத் தோற்றுவித்த Portiuncula
என்ற சிற்றாலயத்தை மையத்தில் வைத்து எழுப்பப்பட்டுள்ள அசிசியின் புனித
தூதர்களின் மரியா பசிலிக்காவில் தொடங்கியுள்ள இக்கொண்டாட்டங்களில், இத்தாலியின் உம்பிரியா மாநிலத்தின் கலை மற்றும் கலாச்சாரக் கொண்டாட்டங்களும் இடம்பெறுகின்றன.
திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் வருகிற அக்டோபரில் அசிசி செல்லவிருப்பதற்கு மக்களைத்
தயாரிக்கும் நோக்கத்தில் இவ்வாண்டு அசிசி மன்னிப்புக் கொண்டாட்டங்கள்
நடத்தப்படுகின்றன.
அசிசி மன்னிப்புக் கொண்டாட்டங்கள் குறித்து வத்திக்கான் வானொலியில் பேசிய பிரான்சிஸ்கன் சபை அருள்பணி David-Maria Jaeger, பிரான்சிஸ்கன் சபையே, திருத்தந்தைக்குப் பணிந்து நடப்பதாக வாக்குறுதி எடுத்த முதல் துறவு சபை என்று கூறினார்.
திருத்தந்தைக்குப் பணிந்து நடப்பதை, தங்களின் சபை ஒழுங்குகளுக்கும் ஆன்மீகத்துக்கும் முக்கியமானதாகப் பிரான்சிஸ்கன் சபையினர் கருதினர் என்றும், புனித
இலொயோலா இஞ்ஞாசியாரும் இயேசு சபையும் பிரான்சிஸ்கன் சபையினரின்
எடுத்துக்காட்டைப் பின்பற்றித் திருத்தந்தையரோடு மிகச் சிறப்பானப் பிணைப்பை
ஏற்படுத்தினர் என்றும் அருள்பணி Jaeger தெரிவித்தார்.
ஆகஸ்ட் 2ம் தேதி Portiuncula
சிற்றாலயத்தைத் தரிசிப்பவர்களுக்குப் பரிபூரணபலன் வழங்கப்படுவதாகத் தொடக்க
காலத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்நாளில் உலகில் எந்த
இடத்திலும் இருக்கும் பிரான்சிஸ்கன் ஆலயங்களைத் தரிசிப்பவருக்குப்
பரிபூரணபலன் வழங்கப்படுகிறது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. இஸ்ரேல்-பாலஸ்தீன அமைதிப் பேச்சுவார்த்தைக்கு எருசலேம் காரித்தாஸ் இயக்குனர் வரவேற்பு
ஆக.,02,2013. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனாவுக்கும் இடையே மீண்டும் இடம்பெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகளை வரவேற்றுள்ள அதேவேளை, இதனால்
அதிகப் பலன்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தனக்கு இல்லை எனத்
தெரிவித்துள்ளார் எருசலேம் காரித்தாஸ் நிறுவன இயக்குனர் அருள்பணி Raed Abusahliah.
மூன்று ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இடம்பெற்றுள்ள இந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து Fides செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்துள்ள அருள்பணி Abusahliah, இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனாவுக்கும் இடையேயுள்ள பிரச்சனைகளுக்கு உரையாடல் மூலம் மட்டுமே தீர்வு காண முடியும், ஆயினும் தற்போதைய பேச்சுவார்த்தைகளினால் நிறையப் பலன்கள் கிடைக்கும் என, தான் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.
பாலஸ்தீனப் பகுதிகளில் இஸ்ரேலின் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் ஏற்கனவே உள்ளன, இன்னும் புதிதாகத் தொடர்ந்து குடியிருப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன என்றுரைத்த அக்குரு, இரு நாட்டவர், இரு நாடு என்ற நிலை இயலாததாகவே தெரிகின்றது என்றும் கூறினார்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனாவுக்கும் இடையே மீண்டும் இடம்பெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுச் செயலர் John Kerryயின் முயற்சியினால் வாஷிங்டனில் நடத்தப்பட்டது.
இதற்கிடையே, இந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளது.
ஆதாரம் : Fides
5. அமெரிக்க இளையோர் ஆப்ரிக்காவுக்கு ஒரு இலட்சம் உணவுப் பொட்டலங்கள்
ஆக.,02,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வேண்டுகோளை நிறைவேற்றும் விதமாக, அமெரிக்க ஐக்கிய நாட்டின் Atlantaவில் இளையோர் கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்ட இளையோர் ஆப்ரிக்காவுக்கு ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட உணவுப் பொட்டலங்களைத் தயார் செய்து அனுப்பியுள்ளனர்.
மேற்கு ஆப்ரிக்காவின் Burkina Faso நாட்டில் பசியால் வாடும் மக்களுக்கென 1,00,386 சத்துணவுப் பொட்டலங்களைத் தயார் செய்து அனுப்பியுள்ளனர் Atlanta இளையோர்.
2,500க்கு மேற்பட்ட இளையோர் இரண்டு மணி நேரத்தில் இந்த உணவுப் பொட்டலங்களைத் தயார் செய்தனர் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டின் CRS என்ற கத்தோலிக்க பிறரன்பு நிறுவனத்தின் உதவித் தலைவர் Joan Rosenhauer கூறினார்.
திருஅவை ஏழைகளுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டுமென்று திருத்தந்தை பிரான்சிஸ் விரும்புகிறார் என்றுரைத்த Rosenhauer,
நாம் அனைவரும் உலகளாவியத் திருஅவையின் அங்கங்கள் என்பதை நினைவுபடுத்தும்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் போதனைகளும் மரபுகளும் அனைத்து
எல்லைகளையும் கடந்து செல்கின்றன என்று கூறினார்.
ஆதாரம் : CNA
6. தாய்ப்பால் கொடுக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்கு யுனிசெப் வலியுறுத்தல்
ஆக.02,2013. "தாய்ப்பால், ஒரு
குழந்தையின் முதல் நோய்த்தடுப்பு மற்றும் மிகவும் பயனுள்ள மலிவான
உயிர்காக்கும் பொருள்" என்று ஐக்கிய நாடுகள் அவை குழந்தைகள் நிதி அமைப்பான
யுனிசெப் நிறுவன துணை நிர்வாக இயக்குனர் கீதா ராவ் குப்தா கூறினார்.
ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்ற மிகச்சிறந்த மற்றும் மலிவான வழி தாய்ப்பாலூட்டுதல்; அதனை ஊக்குவிக்கவும், செயல்படுத்தவும்
திறமையான தலைவர்கள் தேவை என்று ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் குழந்தைகள்
நிதியமான யுனிசெப் இவ்வாண்டுக்கான அழைப்பை அதன் செய்திக்குறிப்பில்
வெளியிட்டுள்ளது.
உலக நல்வாழ்வு நிறுவனமும் யுனிசெப் நிறுவனமும் இணைந்து 1990ம் ஆண்டு ஆகஸ்டு முதல் தேதியன்று, குழந்தைகளுக்குத் தாய்பால் கொடுப்பதை ஊக்குவிக்கவும், அவர்களின் நலனை மேம்படுத்தவும் ‘innocenti’ என்ற அறிக்கையை வெளியிட்டன.
ஒவ்வோர் ஆண்டும் அந்த அறிக்கையின் நினைவாக ஆகஸ்டு 1 முதல் 7 முடிய உலகெங்கிலும் 170க்கும் மேற்பட்ட நாடுகளில் தாய்ப்பால் உலக வாரமாக கொண்டாடப்படுகிறது.
உலக நல்வாழ்வு நிறுவனமும் யுனிசெப் நிறுவனமும் அதன் ‘innocenti’ அறிக்கையில் ஒரு குழந்தைக்கு முதல் 6 மாதத்திற்கு முதன்மையான உணவாகத் தாய்ப்பால் கொடுக்கவும் அதை 2 வருடங்கள்வரை நீட்டிக்கவும் பரிந்துரைக்கிறது.
தாய்ப்பால் ஊட்டப்படுகின்ற குழந்தைகள், தாய்பால் ஊட்டப்படாத குழந்தைகளைவிட 14 மடங்கு
உயிர்பிழைக்கும் ஆற்றல் பெற்றுள்ளனர். குழந்தையின் கற்றுணரும் திறமையை
வளர்க்க உறுதுணையாகவும் உடல் அளவுக்கதிகமாக பருமனாவதைத் தடுக்கவும் மற்றும்
வயதுமுதிர்ந்த காலத்தில் நீண்டகால நோய்களிலிருந்து விடுபடவும் தாய்ப்பால் பயனளிக்கிறது.
2012ம் ஆண்டில் 6 மாத வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 39 விழுக்காட்டினரே தாய்ப்பால் ஊட்டபட்டுள்ளதாய ஒரு புள்ளி விவரம் குறிப்பிடுகின்றது.
மேலும், தமிழகத்தில், 60 விழுக்காட்டுப் பெண்கள், குழந்தைகளுக்குச் சரியாகத் தாய்ப்பால் கொடுப்பதில்லை, என, சென்னை மருத்துவ கல்லூரி முதல்வர் கனகசபை கூறியுள்ளார்
ஆதாரம் : UN
7. எவரெஸ்ட் மலையில் ஏறுவோர்க்கான விதிமுறைகளில் கடும் கட்டுப்பாடுகள்
ஆக.,02,2013.
எவரெஸ்ட் மலையில் ஏறுவோர் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளில் கடும்
கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவதற்கு நேபாள அரசு திட்டமிட்டு வருகிறது.
சுற்றப்புறச் சூழலைப் பாதுகாக்கவும், மலையேறும் குழுக்களுக்கு உதவவும், அவர்களைக் கண்காணிக்கவும், மீட்புப்பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் திட்டமிட்டு வருகிறது நேபாள அரசு.
எவரெஸ்ட் மலையில் ஏறுவோர் அடுத்த ஆண்டிலிருந்து மிகவும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுவார்கள் என்றும், நேபாள அரசின் கண்காணிப்புக் குழு, முதன்முறையாக மலையின் அடிவாரத்தில் முகாமை அமைக்கும் என்றும் பிபிசி செய்தி கூறுகின்றது.
எவரெஸ்ட் மலையில் ஏறுவோர் விதிமுறைகளை மீறுவதால் இப்புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment