Wednesday 28 August 2013

‘எனக்கொரு கனவு உண்டு’ (I have a dream) உரையின் பொன் விழா

எனக்கொரு கனவு உண்டு’ (I have a dream) உரையின் பொன் விழா

1963ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி, 2,50,000க்கும் அதிகமானோர் பங்கேற்ற ஓர் ஊர்வலம், அமெரிக்க ஐக்கிய நாட்டின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
கறுப்பின மக்களும், அவகளது விடுதலையை வரவேற்ற வேற்றின மக்களும் இணைந்து, மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அவர்களின் தலைமையில் மேற்கொண்ட இந்த ஊர்வலத்தின் பொன் விழா ஆண்டு இது.
இந்த ஊர்வலத்தின் இறுதியில், அமெரிக்கக் குடியுரிமை இயக்கத்தின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர், வாஷிங்க்டன் மாநகரில், லிங்கன் நினைவுத்திடலில் (Lincoln Memorial) வழங்கிய 'எனக்கு ஒரு கனவு உண்டு' (I have a dream) என்ற உரை, உலகப் புகழ்பெற்ற உரைகளில் ஒன்றாக இன்றளவும் விளங்குகிறது. புகழ்பெற்ற இவ்வுரையின் பொன்விழா நாளன்று, இவ்வுரையின் ஒரு பகுதியை மீண்டும் நம் சிந்தனைகளில் ஒலிக்கச் செய்வோம்:
எனக்கொரு கனவு உண்டு. அமெரிக்கக் கனவில் வேரூன்றிய ஒரு கனவு இது.
"எல்லா மனிதரும் சமமாகப் படைக்கப்பட்டனர் என்பது நமக்கு மிகவும் தெளிவாகத் தெரியும் ஓர் உண்மை" என்று இந்நாடு உலகிற்குப் பறைசாற்றியுள்ள உறுதிமொழியை, ஒருநாள் முழுவதும் வாழும் என்ற கனவு எனக்கு உண்டு.
முன்னாள் அடிமைகளின் பிள்ளைகளும், முன்னாள் அடிமை முதலாளிகளின் பிள்ளைகளும் ஜார்ஜியாவின் சிவந்த குன்றுகளில் ஒருநாள் சரிசமமாய் அமர்ந்து விருந்துண்பர் என்ற கனவு எனக்கு உண்டு.
அடக்குமுறை வெப்பத்தில் இன்னும் வெந்துகொண்டிருக்கும் மிசிசிபி மாநிலம் என்ற பாலைவனம், நீதியும், அமைதியும் கொண்ட சோலையாக ஒருநாள் மாறும் என்ற கனவு எனக்கு உண்டு.
தங்கள் தோல் நிறத்தைக் கொண்டல்ல, மாறாக தங்கள் குணநலன்களைக் கொண்டு மக்களை எடைபோடும் ஒரு நாட்டில் என்னுடைய நான்கு குழந்தைகளும் ஒருநாள் வாழ்வார்கள் என்ற கனவு எனக்கு உண்டு.
ஒவ்வொரு பள்ளத்தாக்கும் உயர்த்தப்படும், ஒவ்வொரு மலையும், குன்றும் தாழ்த்தப்படும், கரடு முரடான பகுதிகள் சம நிலமாக்கப்படும், கோணலான பாதைகள் நேராக்கப்படும் இறைவனின் மகிமை தெளிவாகும், இதை அனைவரும் ஒருசேரக் காண்பர். எனக்கொரு கனவு உண்டு...

ஆதாரம் : Wikipedia / The Guardian
 

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...