Wednesday, 21 August 2013

வகுப்புவாத சக்திகளை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்:பிரதமர் மன்மோகன்சிங் அழைப்பு

வகுப்புவாத சக்திகளை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்:பிரதமர் மன்மோகன்சிங் அழைப்பு

Source: Tamil CNN
வகுப்புவாத சக்திகளை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று, பிரதமர் மன்மோகன்சிங் அழைப்பு விடுத்தார்.
பிரபல சரோட் இசைக்கலைஞர் உஸ்தாத் அம்ஜத் அலிகானுக்கு ராஜீவ் காந்தி சமாதான விருது வழங்கும் விழா, டெல்லியில் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் இந்த விருதை வழங்கினார்கள். பிரதமர் மன்மோகன்சிங் விழாவில் பேசும்போது கூறியதாவது-
“இந்தியா பரந்து விரிந்த நவீன நாடு. பல்வேறு மதங்களுடன், பல மொழிகள் மற்றும் சமய உட்பிரிவுகளை இந்தியா கொண்டுள்ளது. பல சமயங்களில் இந்த வேற்றுமையைப் பயன்படுத்தி நம்மிடையே பிளவை ஏற்படுத்த சிலர் முயல்கிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நமது நாட்டில் வகுப்புவாத வன்முறை சம்பவம் நடைபெற்றது. இதன் மூலம் வகுப்புவாத சக்திகளை தடுத்து நிறுத்தும் முயற்சிகளில் நாம் ஒருபோதும் தளர்வாக இருந்துவிடக்கூடாது என்ற படிப்பினையை பெற வேண்டும்.
அதுபோன்ற வகுப்புவாத சக்திகளை எல்லா சமயங்களிலும், அனைத்து மட்டத்திலும், நமது அன்றாட வாழ்க்கையிலும் தேர்தலிலும் நாம் எதிர்க்க வேண்டும். அதுபோன்ற சக்திகளை தோற்கடிப்பது அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூகத்தின் அனைத்து பிரிவினரின் பொறுப்பு ஆகும்”.
இவ்வாறு மன்மோகன்சிங் கூறினார்.
பிரதமர் மன்மோகன்சிங் தனது பேச்சில் யாரையும் குறிப்பிட்டு மேற்கண்ட கருத்துகளை சொல்லவில்லை என்றாலும், பா.ஜனதாவையும், அந்த கட்சி சார்பில் அடுத்த தேர்தலில் முன்நிறுத்தப்படவுள்ள நரேந்திர மோடியையும் மனதில் வைத்து இவ்வாறு கூறியதாக கருதப்படுகிறது.
காஷ்மீர் மாநிலம் ஜம்மு பகுதியில் உள்ள கிஸ்த்வார் மாவட்டத்தில் சமீபத்தில் இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதை சூசகமாக குறிப்பிட்டு, வகுப்புவாத சக்திகளை தடுத்து நிறுத்துவதில் தளர்வு காட்டக்கூடாது என்ற படிப்பினையை பெறவேண்டும் என்று மன்மோகன்சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.
விழாவில் மன்மோகன்சிங் தொடர்ந்து பேசும்போது சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்த தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
“சமூக நல்லிணக்கம் மேம்பட்டால் ஒருவருக்கொருவர் நம்பிக்கையின்மை ஏற்படாது. நமக்கு இடையே யாராலும் பிரிவினையை ஏற்படுத்த முடியாது. இதுதான் நாம் ராஜீவ்காந்திக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்” என்றும், மன்மோகன்சிங் குறிப்பிட்டார்.
man

No comments:

Post a Comment

Pope prays for global peace and for all victims of religious persecution

  Pope prays for global peace and for all victims of religious persecution Pope Francis calls for peace in conflict zones, solidarity with t...