Wednesday, 28 August 2013

Catholic News in Tamil / கத்தோலிக்கச்செய்திகள் - 26/08/13

 
1. திருத்தந்தை : அன்புவழி வாழ்வதும், நீதியை நிலைநாட்டுவதுமே  கிறிஸ்தவ வாழ்வுக்கான அடிப்படைச் சான்றுகள்

2. சிரியாவுக்காக செபிக்க திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு

3. டுவிட்டரில் திருத்தந்தை பிரான்சிஸ் : நம்மை மன்னிப்பதில் இறைவன் எந்நாளும் சோர்வடைவதில்லை

4. கிறிஸ்தவ சபைகளின் உடைமைகள் மீது அரசின் புதிய கட்டுப்பாட்டு முயற்சிக்கு எதிர்ப்பு

5. சிரியாவில் புலம் பெயர்ந்தோர் மத்தியில் பாதிபேர் குழந்தைகள்

6. மத உரிமை மீறல்களில் ஈடுபடும் சவுதி அரேபியாவை கண்டிக்க அழைப்பு

7. 17,000 டன் உணவுதானியம் வீண்

8. இரயில்வே தண்டவாளம்: தினமும் 39 பேர் பலி

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : அன்புவழி வாழ்வதும், நீதியை நிலைநாட்டுவதுமே  கிறிஸ்தவ வாழ்வுக்கான அடிப்படைச் சான்றுகள்

ஆக.26,2013. அன்பு வழி வாழ்வதும், நீதியை நிலைநாட்டுவதுமே  கிறிஸ்தவ வாழ்வுக்கான அடிப்படைச் சான்றுகள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை வாசகங்களுக்கு விளக்கமளித்த திருத்தந்தை அவர்கள், இயேசுவே நிலைவாழ்வுக்கான வாயில், அவரே நம்மை தந்தையிடம் அழைத்துச் செல்பவர் என்று கூறியதுடன்,  நாம் பாவிகள் என்பதனால் அவர் நம்மை வெறுப்பதும் இல்லை, விலக்குவதும்  இல்லை, மாறாக, அவர் எப்பொழுதும் எல்லாருக்கும் வாயிலைத் திறந்தே வைத்திருக்கிறார் எனவும் எடுத்துரைத்தார்.
இயேசு இடுக்கமான வாயிலாக இருக்கிறார், ஆனால் அது கொடுமைகளைக் கொடுக்கின்ற அறையின் கதவுகள் போன்றது அல்ல. மாறாக, அது நம் இதயங்களை அவருக்காக திறக்கவும்,. நாம் பாவிகள் என்று உணரவும், நமக்கு அவரின் விடுதலை, அன்பு, தேவை என்பதை உணரவும், மனத்தாழ்ச்சியோடு அவரின் இறை இரக்கத்தை பெற்றுக்கொள்ளவும் அதன் வழியாக அவரில் புது பிறப்படையவும் நம்மை அழைக்கின்ற வாயில் என்று கூறினார் திருத்தந்தை.
இவ்வுலகில் நிலையற்ற அமைதியைக் கொடுக்கின்ற, நம்முடைய சுயநலத்தையும், குறுகிய மனப்பான்மையையும், பாகுபாடுகளையும் களைந்துநிலையான அமைதியைக் கொடுக்கும் இயேசுவை நம்மில் ஏற்றுக்கொள்வோம், அவர் நம் வாழ்க்கை முழுவதையும் ஒளிர்விப்பார். அவர் கொடுக்கின்ற ஒளி வாணவேடிக்கையின் ஒளியைப் போன்றது அல்ல, மாறாக மனதிற்கு  அமைதியையும், நிம்மதியையும் கொடுக்கின்ற ஒளி என்று கூறினார்.
மேலும் கிறிஸ்தவ வாழ்க்கை என்பது நம்மை வெளிப்படுத்துகின்ற முத்திரை அல்ல, மாறாக, விசுவாசத்தின் வாயிலாக உண்மைக்கு சாட்சியம் கூறுகின்ற வாழ்க்கை என்று திருத்தந்தை  எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. சிரியாவுக்காக செபிக்க திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு

ஆக.26,2013. சிரியாவில் அமைதி திரும்ப மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். அளவுகடந்த துயரத்தோடும், கவலைகளோடும், சிரியாவில் நடந்துகொண்டிருக்கும் துயரமான நிகழ்வுகளை தான் கவனித்துகொண்டிருப்பதாக இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் கூறிய திருத்தந்தை, அங்கு போர் ஆயுதங்களின் சப்தம் ஓய்ந்து, அமைதி திரும்ப அழைப்பு விடுத்தார்.
எதிர்த்து நின்று பலத்தைக் காட்டுவதில் அல்ல, மாறாக, சந்திப்பின் மூலமாகவும், பேச்சுவார்த்தைகள் மூலமாகவுமே  பிரச்சனைகளைத் தீர்க்கமுடியும் என்ற திருத்தந்தை அவர்கள், மேலும் உயிரிழப்புகளையும், அழிவுகளையும்   ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இத்துயரமான சூழ்நிலைக்கு தீர்வு காண, உலகநாடுகள் முன்வரவேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
இப்போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக,  புனித பேதுரு வளாகத்தில் மூவேளை செப உரைக்காக கூடியிருந்தவர்களோடு இணைந்து செபித்த திருத்தந்தைதன்னுடைய அனுதாபங்களையும்  தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. டுவிட்டரில் திருத்தந்தை பிரான்சிஸ் : நம்மை மன்னிப்பதில் இறைவன் எந்நாளும் சோர்வடைவதில்லை

ஆக.26,2013. கடவுளிடம் மன்னிப்பு கேட்க அஞ்சவேண்டாம். நம்மை மன்னிப்பதில் அவர் எந்நாளும் சோர்வடைவதில்லை. இறைவன் களங்கமில்லாக் கருணையின் இருப்பிடம், என்று தனது டுவிட்டர் பக்கத்தில் இத்திங்கள்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலியம், இலத்தீன், ஆங்கிலம், இஸ்பானியம், ஜெர்மானியம், போர்த்துக்கீசியம், ப்ரெஞ்ச், போலந்து, அரபு ஆகிய ஒன்பது மொழிகளில் ஏறக்குறைய தினமும் டுவிட்டரில் எழுதிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், களங்கமில்லாக் கருணையின் இருப்பிடமாக இருக்கும் இறைவனிடம்  நாம் மன்னிப்பு கேட்க அஞ்ச வேண்டியதில்லை என எழுதியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. கிறிஸ்தவ சபைகளின் உடைமைகள் மீது அரசின் புதிய கட்டுப்பாட்டு முயற்சிக்கு எதிர்ப்பு

ஆக.26,2013. ஆந்திர மாநிலத்தின் கிறிஸ்தவ சபை சொத்துக்கள் மீதும் கல்விக்கட்டிடங்கள் மீதும் புதிய சட்டங்களைக் கொண்டுவருவது குறித்து ஆராயும் நோக்கில் அமைச்சர்கள் கொண்ட குழு ஒன்றை ஆந்திர முதல்வர்  உருவாக்கியிருப்பதற்கு தன் எதிர்ப்பை வெளியிட்டுள்லது ஆந்திர கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு.
கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்போடு விவாதிக்காமல், தனக்கு வேண்டியவர்களை மட்டும் வைத்து  கிறிஸ்தவ சொத்துக்கள் மீதான புதிய சட்டங்களை கொண்டுவர முயல்வது ஏற்றுக்கொள்ளப்படமுடியாதது என முதல்வர் கிரண் குமார் ரெட்டிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது இக்கூட்டமைப்பு.
கிறிஸ்தவ சபைகளின் சில உடைமைகள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது குறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, அவற்றை மீட்டுத்தரவேண்டும் எனவும் முதல்வரை விண்ணப்பித்துள்ளது ஆந்திர கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு.
தங்கள் உடைமைகளை நிர்வகிப்பதற்கு கிறிஸ்தவ சபைகளுக்கு இருக்கும் உரிமையை கட்டுப்படுத்தும் நோக்கில் அவற்றை அரசு அமைப்பின் புதிய சட்ட திட்டங்களூக்கு உட்படுத்த முயல்வது ஏற்றுக்கொள்ளப்படமுடியாதது எனவும் ஆந்திர கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஆதாரம் : UCAN

5. சிரியாவில் புலம் பெயர்ந்தோர் மத்தியில் பாதிபேர் குழந்தைகள்

ஆக.26,2013. சிரியாவில் மோதல்களால் பாதிக்கப்பட்டு புலம் பெயர்ந்தோர் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள பாலகர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தை எட்டியுள்ளதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
இவ்வாறு புலம் பெயர்ந்தோர் நிலைக்கு உள்ளான குழ‌ந்தைக‌ளுள் 7இல‌ட்ச‌த்து 40 ஆயிர‌ம் பேர், 11 வ‌ய‌திற்குட்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் என‌வும் தெரிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.
எவ்வித முடிவும் தெரியாமல் கடந்த இரு ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் மோதல்களால் குழந்தைகளும் பெருமெண்ணிக்கையில் புலம் பெயர்ந்தோர் நிலைக்கு உள்ளாகியிருப்பது கவலை தருவதாக உள்ளது என்கிறது Catholic Online என்ற செய்தி நிறுவனம்.
சிரியாவிலிருந்து வெளியேறி, த‌ங்க‌ளை புலம் பெயர்ந்தோராக ப‌திவுச்செய்திருப்போருள் பாதிபேர் குழ‌ந்தைக‌ள் என‌க்கூறும் இக்க‌த்தோலிக்க‌ செய்தி நிறுவ‌ன‌ம், ம‌ன‌த‌ள‌வில் இக்குழ‌ந்தைக‌ள் பெரும‌ள‌வாக‌ப் பாதிக்க‌ப்ப‌ட்டிருப்ப‌தாக‌வும் தெரிவிக்கிற‌து.
பாலர் தொழிலாளர் முறை, பாலர் திருமணம், பாலினவகை வன்கொடுமை போன்ற ஆபத்துக்களையும் இக்குழந்தைகள் எதிர்நோக்குவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.
சிரியாவின் உள்நாட்டு மோதல்களில் உயிரிழந்ததுள்ள ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டுள்ளோருள் ஏறத்தாழ 7,000 பேர் குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : Catholic Online   

6. மத உரிமை மீறல்களில் ஈடுபடும் சவுதி அரேபியாவை கண்டிக்க அழைப்பு

ஆக.26,2013. மத உரிமை மீறல்களில் ஈடுபட்டுவரும் சவுதி அரேபிய அரசை கண்டிக்க அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு முன்வரவேண்டும் என உலக எவாஞ்செலிக்கல் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
மக்களின் மத உரிமைகளை மீறும் அரசுகளின் மீது பொருளாதாரக் கட்டுப்பாடுகளை விதித்துவரும் அமெரிக்க ஐக்கிய நாடு, சவுதி அரேபியாவைப் பொறுத்தவரையில் மௌனம் காப்பதாக எவாஞ்செலிக்கல் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
மதச்சுதந்திரம் தொடர்பாக தொடர்ந்து மக்கள் சிறைத்தண்டனைகளையும் கசையடிகளையும் பெற்றுவருவதாகக் கூறும் இக்கூட்டமைப்பு, அண்மையில் 46 பெண்கள் உட்பட 53 எத்தியோப்பிய கிறிஸ்தவர்கள் சவுதி காவல்துறையால் மத காரணங்களுக்காக கைதுச்செய்யப்பட்டதையும் சுட்டிக்காட்டுகிறது.
சவுதி அரேபியாவில் பணிபுரியும் வெளிநாட்டவர்களுள் 15 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கிறிஸ்தவர்கள். இவர்கள் தங்கள் வீட்டுக்குள் மட்டுமே வழிபட அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். சவுதி அரேபியாவில் கிறிஸ்தவ கோவில்களே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : AP

7. 17,000 டன் உணவுதானியம் வீண்
ஆக.26,2013. இந்திய உணவு பாதுகாப்பு சட்டவரைவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டிவரும் வேளையில், கடந்த 3 ஆண்டுகளில் ஏறத்தாழ 17,546 டன் உணவு தானியங்கள் வீணடிக்கப்பட்டுள்ள விபரம் தெரிய வந்துள்ளது.
இந்திய உணவுக் கழக சேமிப்புக் கிடங்குகளில் இருந்து, 2012ம் ஆண்டு, ஜூலை வரையான மூன்றாண்டுகளில் இந்த உணவு தானியங்கள் வீணடிக்கப்பட்டிருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலில் தெரிய வந்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 44,000 கோடி ரூபாய் மதிப்பிலான பழங்கள், தானியங்கள், காய்கறிகள் உள்ளிட்டவைகள் வீணடிக்கப்படுவதாக கடந்த வாரம் பாராளுமன்றத்தில் மத்திய உணவுத்துறை அமைச்சர் சரத் பவார் தெரிவித்துள்ளது குறிப்பித்தக்கது.

ஆதாரம் : Dinamalar

8. இரயில்வே தண்டவாளம்: தினமும் 39 பேர் பலி
ஆக.26,2013. நாட்டின் பல பகுதிகளிலும், இரயில்வே தண்டவாளங்களை சட்ட விரோதமாக கடப்பதால், தினமும், 39 பேர் பலியாகின்றனர்  என்ற தகவலை இந்திய இரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
மக்களின் வசதிக்காகவும், விபத்துகளை தடுக்கவும், இரயில்நிலையங்களிலும், சாலைகளில் தண்டவாளங்கள் குறுக்கிடும் இடங்களிலும், பாலங்கள் மற்றும் இரயில்வே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளபோதிலும், இரயில்வே தண்டவாளங்களை, சட்ட விரோதமாக கடப்பதால், 2009 முதல் 2012 வரையான  மூன்று ஆண்டுகளில், 50 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.
ஆண்டுக்கு சராசரியாக, 14 ஆயிரம் பேருக்கு மேல் பலியாகி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : Dinamalar

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...