Wednesday, 28 August 2013

Catholic News in Tamil / கத்தோலிக்கச்செய்திகள் - 21/08/13

1. உரையாடல் வழியாக மட்டுமே நாம் உலகில் அமைதியைக் கொணரமுடியும் ஜப்பான் மாணவர்களிடம் திருத்தந்தை

2. திருத்தந்தையர் 23ம் ஜான் அவர்களையும், இரண்டாம் ஜான் பால் அவர்களையும் புனிதர்களாக உயர்த்தும் நாள் செப்டம்பர் 30ம் தேதி அறிவிக்கப்படும்

3. திருத்தந்தையின் தலைமையில் அக்டோபர் 12, 13ம் தேதிகளில் மரியன்னையின் நாட்கள்

4. இளையோர் என்ற நிலத்தை, பெரும் அறுவடைக்கு ஏற்ற நிலமாக திருத்தந்தை மாற்றியுள்ளார் - கர்தினால் Turkson

5. Croatiaவில் Milan அரசக் கட்டளை வெளியிடப்பட்டதன் 1700வது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள்

6. ஆஸ்திரேலியத் தலத்திருஅவை கொண்டாடிவரும் புலம்பெயர்ந்தோர் வாரம்

7. எகிப்தின் Luxorல் மக்கள் உணவு தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளனர் - ஆயர் Zakaria

8. வாழும் ஆர்வத்தை இழந்த நான், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தபின், வாழும் ஆர்வம் பெற்றுள்ளேன் - புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்

------------------------------------------------------------------------------------------------------

1. உரையாடல் வழியாக மட்டுமே நாம் உலகில் அமைதியைக் கொணரமுடியும் ஜப்பான் மாணவர்களிடம் திருத்தந்தை

ஆக.21,2013. ஏனையக் கலாச்சரங்களுடனும் மதங்களுடனும் நாம் கொள்ளும் உரையாடல் நம்மை நலமான வழிகளில் வளர்க்கும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
ஜப்பானின் Tokyo நகரில் உள்ள Gauken Bunri Seibu உயர்நிலைப் பள்ளியின் 200 மாணவர்களையும், 15 ஆசிரியர்களையும் இப்புதனன்று வத்திக்கானில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வேற்று நாடுகளுக்குப் பயணங்கள் மேற்கொள்வதன் வழியாக, வளரும் வாய்ப்புக்களை இளையோர் பெறுகின்றனர் என்று கூறினார்.
உரையாடல் வழியாக மட்டுமே நாம் உலகில் அமைதியைக் கொணரமுடியும் என்று கூறியத் திருத்தந்தை, வந்திருந்த மாணவர்களும் ஆசிரியர்களும் உரையாடல்கள் நிறைந்த பயணத்தை மேற்கொள்ள தான் வாழ்த்துவதாகக் கூறினார்.
மேலும், மலைப்பொழிவில் இயேசு கூறிய பேறுபெற்றோர் வார்த்தைகளும், மத்தேயு நற்செய்தியின் 25ம் பிரிவில் காணப்படும் இறுதித் தீர்ப்பு பகுதியும் நம் வாழ்வுக்கு தலைச்சிறந்த திட்டத்தை வகுக்கின்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதனன்று தன் Twitter செய்தியில் கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தையர் 23ம் ஜான் அவர்களையும், இரண்டாம் ஜான் பால் அவர்களையும் புனிதர்களாக உயர்த்தும் நாள் செப்டம்பர் 30ம் தேதி அறிவிக்கப்படும்

ஆக.21,2013. செப்டம்பர் மாதம் 30ம் தேதியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் ஜான் அவர்களையும், முத்திப்பேறு பெற்ற இரண்டாம் ஜான் பால் அவர்களையும் புனிதர்களாக உயர்த்தும் நாளை அறிவிப்பார் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
புனிதர் நிலை படிகளுக்கான திருப்பீடப் பேராயத்தின் தலைவர் கர்தினால் Angelo Amato அவர்கள், அண்மையில் வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் இதனை அறிவித்தார்.
நடைபெறும் நம்பிக்கை ஆண்டிலேயே இவ்விரு திருத்தந்தையரும் புனிதர்களாக்கப்படும் நிகழ்வு நடைபெறும் வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக ஒரு சில செய்திகள் வெளிவந்தாலும், இந்நிகழ்வு வருகிற ஆண்டில் நடைபெறும் என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முன்பு அளித்த பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார் என்பதையும் கர்தினால் Amato அவர்கள் எடுத்துரைத்தார்.
இரண்டாம் வத்திக்கான் சங்கத்தை ஆரம்பித்து, திருஅவையில் புத்துணர்ச்சியைக் கொணர்ந்தவர் திருத்தந்தை 23ம் ஜான் என்றும், இந்தப் புத்துணர்ச்சியை நடைமுறை வாழ்வில் அறிமுகப்படுத்தியது திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் என்றும் கர்தினால் Amato தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தையின் தலைமையில் அக்டோபர் 12, 13ம் தேதிகளில் மரியன்னையின் நாட்கள்

ஆக.21,2013. நடைபெறும் நம்பிக்கை ஆண்டின் ஒரு சிறப்பு நிகழ்வாக, வருகிற அக்டோபர் மாதம் 12, மற்றும் 13ம் தேதிகளில் மரியன்னையின் நாட்கள் வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கொண்டாடப்படும் என்று புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவை அறிவித்துள்ளது.
1917ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ம் தேதி பாத்திமா நகரில் மரியன்னை இறுதி முறையாகத் தோன்றியதை நினைவுகூரும் வகையில் இந்நிகழ்வுகள் அமைக்கப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாத்திமா நகர் திருத்தலத்தில் வணங்கப்படும் அன்னை மரியாவின் திருஉருவம், அக்டோபர் 12, சனிக்கிழமையன்று வத்திக்கானை அடையும். அன்று மாலை 5 மணியளவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அன்னை மரியின் திரு உருவத்திற்கு முன் செபமாலை சொல்லி, மறையுரையும் வழங்குவார்.
இதைத் தொடர்ந்து, உலகெங்கும் உள்ள மரியன்னை திருத்தலங்களை நினைவுகூர்ந்து பசிலிக்கா வளாகத்தில் செபமாலையும், முழு இரவு செப வழிபாடும் நடைபெறும்.
அக்டோபர் 13, ஞாயிறன்று, காலை 10 மணிக்கு மீண்டும் செபமாலையும், அதைத் தொடர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றும் திருப்பலியும் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. இளையோர் என்ற நிலத்தை, பெரும் அறுவடைக்கு ஏற்ற நிலமாக திருத்தந்தை மாற்றியுள்ளார் - கர்தினால் Turkson

ஆக.21,2013. உலக இளையோர் நாளையொட்டி, ரியோ தெ ஜனெய்ரொ நகரில் கூடியிருந்த இளையோர் என்ற நிலத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் பிரசன்னத்தாலும், உரைகளாலும் தகுந்த முறையில் பண்படுத்தி, பெரும் அறுவடைக்கு ஏற்ற நிலமாக மாற்றியுள்ளார் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
நீதி மற்றும் அமைதி திருப்பீட அவையின் தலைவரான கர்தினால் Peter Turkson அவர்கள், வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவுக்கு அளித்த பேட்டியொன்றில், உலக இளையோர் நாள் நிகழ்வுகளின்போது தான் அடைந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
'விளம்பரம்' என்ற வார்த்தை நமக்குள் சரியான எண்ணங்களை உருவாக்குவது இல்லையெனினும், அந்த வார்த்தைக்குப் பின் பொதிந்துள்ள 'அறிவித்தல்' என்ற எண்ணத்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இளையோர் உள்ளங்களில் ஆழப்பதித்துள்ளார் என்பதை உணர முடிகிறது என்று கூறினார் கர்தினால் Turkson.
மழை, காற்று, குளிர் என்ற இயற்கை இடையூறுகளையும், வசதிகள் குறைவு என்ற நிலையையும் பொருட்படுத்தாமல் திருத்தந்தையைச் சந்திக்க இளையோர் கூடியிருந்தது, நம்பிக்கையற்ற இந்த உலகில் நம்பிக்கை தரும் அடையாளங்களாக இருந்தன என்று கர்தினால் Turkson தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.
இளையோர் தகுந்த முறையில் வளர்வதற்கு உரிய சூழலை உருவாக்குவது வயதில் முதிர்ந்தவர்களின் கடமை என்பதையும் திருத்தந்தை எடுத்துரைத்தது உலகிற்கு வழங்கப்பட்டுள்ள ஒரு சவால் என்றும் கர்தினால் Turkson கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. Croatiaவில் Milan அரசக் கட்டளை வெளியிடப்பட்டதன் 1700வது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள்

ஆக.21,2013. கிறிஸ்துவின் சிலுவையை ஏறெடுத்து நோக்குவதாலும், சிலுவையில் அறையுண்ட இயேசுவுடன் தொடர்பு கொள்வதாலும் உலகையும், வாழ்வையும் புதிய கண்ணோட்டத்துடன் காண முடியும் என்று Zagreb பேராயர் கர்தினால் Josip Bozanić கூறினார்.
பேரரசர் Constantine அவர்களின் தாய் புனித Helena அவர்களின் தூண்டுதலால், 313ம் ஆண்டு மதச் சுதந்திரத்தை அறிவித்த Milan அரசக் கட்டளை வெளியிடப்பட்டதன் 1700வது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள், Croatia வின் தலைநகரான Zagrebல் புனித Helena அவர்களின் திருநாளான ஆகஸ்ட் 18ம் தேதி சிறப்பிக்கப்பட்டது.
இவ்விழாவையொட்டி நடைபெற்ற திருப்பலியின்போது, Croatia ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் Bozanić அவர்கள் வழங்கிய மறையுரையில், கிறிஸ்தவ வாழ்வில் சிலுவை அடையாளம் ஆற்றும் மாற்றங்கள் குறித்து பேசினார்.
மதச்சுதந்திரம் குறித்து, 1700 ஆண்டுகளுக்கு முன் விடுக்கப்பட்ட Milan அரசக் கட்டளை, கிறிஸ்துவ சமுதாயத்திற்கு மட்டுமல்ல, மனித சமுதாயத்திற்கே நல்ல விளைவுகளை உருவாக்கியுள்ளது என்று கர்தினால் Bozanić அவர்கள் குறிப்பிட்டார்.
பேரரசர் Constantine காலத்திய விளக்கு என்று கருதப்படும் ஓர் எண்ணெய் விளக்கை, கர்தினால் Bozanić அவர்கள், திருப்பலியின் இறுதியில், Milan தலத் திருஅவைக்கு, பரிசாக வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. ஆஸ்திரேலியத் தலத்திருஅவை கொண்டாடிவரும் புலம்பெயர்ந்தோர் வாரம்

ஆக.21,2013. ஆகஸ்ட் 19, இத்திங்கள் முதல் 25, வருகிற ஞாயிறு முடிய புலம்பெயர்ந்தோர் வாரத்தை ஆஸ்திரேலியத் தலத்திருஅவை கொண்டாடிவருகிறது.
"புலம்பெயர்தல்: நம்பிக்கை, எதிர்நோக்கு இவற்றின் திருப்பயணம்" என்ற தலைப்பில் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் புலம்பெயர்ந்தோர் வாரத்திற்கென சென்ற ஆண்டு வெளியிட்ட செய்தியினை மையப்படுத்தி இந்த வாரம் கொண்டாடப்படுகிறது.
நாடுவிட்டு நாடு பயணம் மேற்கொள்வோரும், புலம்பெயர்வோரும் தங்கள் பயணங்களை மேற்கொள்ளும்போது, இறைவன் மீது முழு நம்பிக்கை கொண்டே செல்கின்றனர்; குறிப்பாக, புலம்பெயர்ந்தோர் மீண்டும் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்புவோம் என்ற நம்பிக்கையிலேயே தங்கள் பயணத்தை மேற்கொள்ளத் துணிகின்றனர் என்று ஆஸ்திரேலிய புலம்பெயர்ந்தோர் பணி இயக்குனரான ஆயர் Gerard Hanna அவர்கள், Zenit செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.
1914ம் ஆண்டு புலம்பெயர்ந்தோர் உலக நாளை திருத்தந்தை புனித பத்தாம் பயஸ் அவர்கள் நிறுவியதைத் தொடர்ந்து, இவ்வாண்டு 99வது புலம்பெயர்ந்தோர் உலக நாள் ஆகஸ்ட் 25ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

ஆதாரம் : Zenit

7. எகிப்தின் Luxorல் மக்கள் உணவு தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளனர் - ஆயர் Zakaria

ஆக.21,2013. எகிப்தில் ஒவ்வோர் ஆண்டும், ஆகஸ்ட் 22ம் தேதி கொண்டாடப்படும் அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழா, இவ்வாண்டு பாதுகாப்புக் கருதி கொண்டாடப்படப் போவதில்லை என்று அந்நாட்டு ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 16ம் தேதி முதல் Luxorல் உள்ள தன் இல்லத்தில் காவல்துறையாலும், இராணுவத்தாலும் பாதுக்காக்கப்பட்டு வரும் காப்டிக் கத்தோலிக்க வழிபாட்டு முறை ஆயர் Youhannes Zakaria அவர்கள் Fides செய்திக்கு அனுப்பியுள்ள ஒரு குறிப்பில்  இவ்வாறு கூறியுள்ளார்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட அரசுத்தலைவர் Morsi அவர்களின் ஆதரவாளர்களால் கொலை மிரட்டல் விடப்பட்டுள்ள ஆயர் Zakaria அவர்கள், Luxor பகுதி, Cairo நகரைப் போல் பேராபத்திற்கு உள்ளாகவில்லையெனினும், அங்கு வாழும் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் ஒவ்வொரு நாளும் மரண பயத்தில் வாழ்கின்றனர் என்று கூறினார்.
மேலும், வீடுகளை விட்டு வெளியேற முடியாத சூழல், கடைகள் எதுவும் திறக்கபாடாத நிலை ஆகியவற்றால், இங்குள்ள மக்கள் உணவு தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளனர் என்றும் ஆயர் Zakaria அவர்கள், தான் அனுப்பியுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : Fides

8. வாழும் ஆர்வத்தை இழந்த நான், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தபின், வாழும் ஆர்வம் பெற்றுள்ளேன் - புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்

ஆக.21,2013. கடந்த பத்து ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, வாழும் ஆர்வத்தை இழந்துவந்த தான், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தபின், வாழும் ஆர்வம் பெற்றுள்ளதாக ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் கூறியுள்ளார்.
ஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகரில் வாழும் Elena Alba என்ற 58 வயதான பெண், கடந்த 10 ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அறுவைச் சிகிச்சைகளையும், கதிர் வீச்சு மருத்துவத்தையும் மேற்கொண்டு வருபவர்.
தான் உயிரோடு இருக்கும்போது, எப்படியாவது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திக்க வேண்டும் என்று விரும்பியதால், மிகுந்த சிரமத்துடன், அருள் சகோதரிகள் சிலருடைய உதவியால் வத்திக்கானுக்கு பயணமாகி, திருத்தந்தையைச் சந்தித்தார்.
தன் நிலையைக் கண்ட திருத்தந்தை கண் கலங்கியதாகவும், அவரிடம் தான் ஸ்பானிய மொழியில் எழுதிய ஒரு மடலை அளித்ததாகவும், அம்மடலுக்கு திருத்தந்தை பதில்தர உறுதியளித்ததாகவும் Alba அவர்கள் CNA கத்தோலிக்க செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்துத் திரும்பியதிலிருந்து தான் மன அமைதியோடும், நன்றியோடும், மகிழ்வோடும் வாழ்வதாகவும் Alba அவர்கள் கூறினார்.

ஆதாரம் : CNA
 

No comments:

Post a Comment

Pope prays for global peace and for all victims of religious persecution

  Pope prays for global peace and for all victims of religious persecution Pope Francis calls for peace in conflict zones, solidarity with t...